தொடர்கள்
விளையாட்டு
உலகக் கோப்பைக்கு ரெடியா ?? -லண்டனிலிருந்து கோமதி

20260207060943536.jpg

இறுதிப் போட்டியில் விளையாட நாங்க ரெடி ! பார்க்க நீங்க ரெடியா ???

20260206234930136.jpeg

உலகக்கோப்பை டி20 விளையாட்டு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற அறை இறுதிக் கட்டத்தின் இரு ஆட்டங்களும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்திருந்தன.

"எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம்!" என்று சொல்லும் விதத்தில், தென் ஆப்பிரிக்க அணி மீண்டும் ஒரு முறை நாக் அவுட் ஆட்டத்தில் தோல்வியுற்று, உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவற விட்டது.

இந்தத் தொடரின் முந்தைய அனைத்து போட்டிகளிலும் வென்று, வழக்கம் போல், அறை இறுதிச் சுற்றில் முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்துக்கு எதிராக, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணியை 169 ரங்களுக்கு சுருட்டியது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி வீரர் பின் ஆலென், 33 பந்துகளில் சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் தனது அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

20260206234953575.jpeg

அனைவரும் எதிர்பார்த்த இரண்டாவது அரையிறுதி போட்டி இங்கிலாந்து இந்திய அணிகளுக்கு இடையே மார்ச் 5ஆம் தேதி நடைபெற்றது. இரு அணிகளும் சேர்ந்து கிட்டத்தட்ட 500 ரன்கள் அடித்து, இறுதி கட்டத்திற்கு செல்ல கடைசி வரை போராடினர்.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் ஹாரி புரூக் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார். சஞ்சு சாம்சன் இந்தப் போட்டியிலும் அமைதியாகவும், நிதானமாகவும் விளையாடி 42 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து வலுவானதொரு துவக்கத்தை அளித்தார்.

சஞ்சு, 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஹாரி புரூக் இலகுவாக வந்த கேட்சை கோட்டை விட்டது, அதிர்ஷ்டம் சஞ்சு மற்றும் இந்திய அணியின் பக்கம் இருப்பதை உறுதி செய்தது. சிவம் துபே 25 பந்துகளில் 49 ரன்கள், இஷான் கிஷன் 18 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி பெற 254 ரன்கள் தேவை என்னும் இலக்கை இந்திய அணி நிர்ணயித்தது.

20260206235202496.jpg

இந்த இமாலய இலக்கை எந்த அணியாலும் தொட இயலாது என எண்ணிய அனைவரது எண்ணத்தையும் தவிடு பொடியாகும் விதத்தில் விளையாடியது இங்கிலாந்து அணி.

38/2 என்ற நிலையில் களமிறங்கிய ஜேக்கப் பெத்தல், தனது திறமையான ஆட்டத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இந்த விளையாட்டை எவ்வளவு ரசித்து விளையாடினர் என்பதற்கு 48 பந்துகளில் அவர் அடித்த 105 ரன்களே சான்று.

பெத்தலின் சதம் மற்றும் வில் ஜாக்சின் 35 ரன்கள் முதல், ஜெப்ரி ஆர்ச்சர் கடைசி இரண்டு பந்துகளில் அடித்த இரு சிஸேர்கள் வரை, இறுதி கட்டம் வரை போராடிய இங்கிலாந்து அணி, 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பல நாட்கள் கழித்து நல்லதொரு கிரிக்கெட் விளையாட்டை இந்த இரு அணியினரும் நமக்கு வழங்கினர்.

இந்தியாவின் பீல்டிங் பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். ஹாரி புரூக் விக்கெட்டை வீழ்த்திய அக்ஸர் படேலின் கேட்ச், வில் ஜாக்ஸ் விக்கெட் வீழ்த்த அவர் செய்த யுக்தி பாராட்டுதலுக்குரியது.

ஹர்திக் பாண்டியாவின் திறனையும் வியக்காமல் இருக்க முடியாது.

அவரது பந்து வீச்சு மற்றும் பெத்தலின் ரன் அவுட், நம்மை பலே பாண்டியா என கூற வைத்தது. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா இந்த முறையும் வேகம், துல்லியம் மற்றும் தனது யார்க்கர் பந்துகள் மூலம் இங்கிலாந்து அணிக்கு அழுத்தத்தை உருவாக்கினார்.

இந்திய அணிக்கு ஆதரவாக இருக்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், உலக கிரிக்கெட் அரங்கில் இந்தியா தனக்கென உருவாகியிருக்கும் இடம் என்பனவற்றை நியாயப்படுத்தும் பல தருணங்களை இந்தப் போட்டியில் நம்மால் உணர முடிந்தது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் இந்த வெற்றி நம் ஒவ்வொருவரையும் மகிழ்ச்சிப்படுத்தியது என்றாலும் கூட, இங்கிலாந்து அணி சென்றிருக்கலாம் என ஒரு கணமாவது நம்மால் நினைக்காமல் இருக்க இயலவில்லை.

(கட்டுரையாளர் லண்டனில் இருக்கிறார் கவனிக்கவும் - ஆர்)

அணித்தலைவர் ஹாரி புரூக் இந்த ஆட்டம் பற்றி பேசும்பொழுது , தான் சஞ்சு சாம்சன் கேட்சை விட்டது மிகப் பெரிய தவறு என உருக்கமாகக் கூறியிருந்தார்.வெற்றி இலக்கை நோக்கி சிறிதும் தளராமல், தரமானதொரு கிரிக்கெட் விளையாடிய இரு அணியினருக்கும் வாழ்த்துகள்.

மார்ச் 8ஆம் தேதி இந்தியா நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி அஹமதாபாத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்லும் அந்தத் தருணம் வெகு தொலைவில் இல்லை.