ராகு ஸ்தலம் - திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில்

பிரசித்தி பெற்ற சனி ஸ்தலம் - திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலைப் பற்றி இதற்கு முன் உள்ள பதிவில் பார்த்தோம். நவகிரக ஸ்தலங்களில் எட்டாவது ஸ்தலமாக விளங்குவது தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோவில். இங்குச் சிவபெருமான் நாகநாதராகவும், நாகேஸ்வரசுவாமி (சுயம்பு மூர்த்தி) அம்பாள் கிரிஜகுஜாம்பிகை பிறையணி வாணுதலாள் (பிறையணி அம்மை) எனவும் அருள்பாலிக்கின்றனர்.
ராகு பகவான் இத்தலத்தில் சிவபெருமானை வேண்டி தன் சாபம் நீங்கப் பெற்றதால், இத்தலம் திருநாகேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. இது ராகுவிற்கு உரியப் பரிகார ஸ்தலம் இக்கோயிலில் ராகு பகவான் மங்கள ராகுவாக தனது இருதேவியருடன் தென்மேற்கு மூலையில் பூரணத்திருமேனியுடன் அருள்பாலிக்கிறார்.
கிரகங்களில் ராகு பகவான் யோககாரகன் ஆவார். இவரை வணங்கிட யோகம், பதவி, தொழில், வளமான வாழ்வு, எதிர்ப்புகளைச் சமாளிக்கும் திறன், வறுமை, நோய் நீக்கம், கடன், வெளிநாட்டுப் பயண யோகம் ஆகியவற்றை அருள்வார். சர்ப்ப தோஷம், ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடத் தோஷங்கள் நீங்கும்.

அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய சமயக்குரவர்கள் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். காவிரித் தென்கரை தலங்களில் இக்கோயில் 29-வது சிவஸ்தலமாகும்.
இக்கோயில், சோழர்களால், குறிப்பாக ஆதித்திய சோழனால் 9-10 ஆம் நூற்றாண்டில் கட்டத் தொடங்கப்பட்ட ஒரு பழமையான சிவாலயமாகும். இக்கோயிலின் கருவரை மற்றும் பல மண்டபங்கள் சோழர் கால கட்டிடக்கலைக்குச் சான்றாக இருந்தாலும், பிற்காலத்தில் நாயக்கர்கள் உள்ளிட்ட அரசர்களால் பல மண்டபங்கள் மற்றும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.
ஸ்தல புராணம்:

திருநாகேஸ்வரம், செண்பக மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இந்தப் பகுதி சண்பகாரண்ய க்ஷேத்திரம் என்று அழைக்கப்பட்டு வந்தது.இங்குச் சிவபெருமான் லிங்க வடிவில் செண்பக மரத்தின் கீழ் எழுந்து அருளினார். அதனால் இறைவனது பெயர் செண்பகாரண்யேஸ்வரர் எனப்பட்டது. இத்தல அம்பாளின் பெயர் குன்றுமாமுலைக்குமரி (கிரிகுஜாம்பாள்). ஒரு சமயம் பிருங்கி முனிவர் பார்வதிதேவியை வணங்காமல் சிவபெருமானை மட்டும் வணங்கி வந்ததால் கோபம் கொண்ட பார்வதிதேவி, இத்தலத்தில் இலட்சுமி, சரஸ்வதி, விநாயகர் மற்றும் பாலசுப்பிரமணியர், பால சாஸ்தா ,சங்கநிதி, பதுமநிதியுடன் தபசு மேற்கொண்டு இறைவனிடத்தில் வலப்பக்கம் பெற்றார். அதனால் இறைவன் மங்கை பங்கர் ( அர்த்தநாரீஸ்வரர்) பெயர் பெற்றார்.

ராகு பகவான், சுசீல முனிவரால் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க இத்தலத்துச் சிவனை வழிபட்டார். அதனால் இத்தல இறைவனை நாகநாதர் என்றும் இவ்வூர் திருநாகேஸ்வரம் என்று பெயர் பெற்றது. ராகு பகவான் தினமும் சிவதரிசனம் பெற வேண்டி இங்கேயே மனைவியருடன் தங்கி விட்டார். பிற்காலத்தில், ராகுவுக்கு இங்குத் தனி சந்நிதி எழுப்பப்பட்டது. இவர் அனுக்கிரகம் புரியும் "மங்கள ராகு"வாக அருளுவது விசேஷம். புராண வரலாற்றின்படி இத்தலத்தில் இராகு பகவான் நாகநாத சுவாமியை வழிபட்டதோடு, இத்தலத்தில் தன்னையும் வழிபடுபவர்களுக்கு பல நலன்களையும் அருளும் வரமும் பெற்றுத் திகழ்கின்றார்.
திருத்தொண்டர் புராணம் தந்த தெய்வ சேக்கிழார் பெருமானுக்குத் திருவடி ஞானம் கைவரப்பெற்றதும், விநாயகர், சூரியன், சந்திரன், பிரம்மா, அம்பிகை முதலிய தேவர்களாலும், கௌதமர் அத்ரி முதலிய ரிஷிகளாலும், மார்க்கண்டேயர், பராசரர், பரசுராமர் முதலிய முனிவர்களாலும், நளன், பகீரதன், சந்திரவர்மன் ஜம்புமாலி முதலிய தேவ மன்னர்களாலும், ராகு, தட்சகன், கார்கோடகன், ஆதிசேஷன், வாசுகி முதலான நாகங்களாலும் பூஜிக்கப்பெற்ற ஸ்தலம் என்ற பெருமைக்குரியது. மற்றும் கண்டராதித்தர், செம்பியன்மாதேவி, ராஜராஜசோழர், ராஜேந்திரசோழர், மூன்றாம் குலோத்துங்கன் போன்ற சோழ மன்னர்களும் வழிபட்ட ஸ்தலம் என்ற சிறப்புப் பெற்றது.
ஸ்தல அமைப்பு:

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில், இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மற்ற மூன்று திசைகளில் கோபுரங்களையும் மூன்று பிராகாரங்களையும் கொண்டுள்ளது. கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே வந்ததும் நிருத்த கணபதி, பலிபீடம், நந்திதேவர், த்வஜஸ்தம்பம், இடது பக்கம் சூரிய புஷ்கரணியும், புஷ்கரணியின் வலப் பக்கத்தில் நூற்றுக்கால் மண்டபம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுவதோடு, ஒரு தேரின் மீது இம்மண்டபம் அமைந்திருப்பது போலவும், மண்டபத்தின் கீழே கற்களால் ஆன சக்கரங்களுடன், சுற்றிலும் நாட்டியமாடுவது போன்ற பாவங்களில் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
புஷ்கரணி அருகில் மழுப் பொறுத்த விநாயகர்(கோடரி ஏந்திய விநாயகர்) அருளுகின்றார். கருவறையில் மூலவர் நாகநாதசுவாமி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். கருவறையின் சுற்றுப் பிராகாரத்தில் அறுபத்து மூவர், நடராஜர் சந்நிதி, நால்வர் சந்நிதி ஆகியவை அமைந்துள்ளன. பெரியபுராணம் பாடிய சேக்கிழார், அவரது தம்பி பாலறாவாயர், அவர் தாயார் அழகாம்பிகை மூவருக்கும் இத்திருக்கோவிலில் தனித் தனி சந்நிதிகள் உள்ளன. இத்தலத்தில் அம்பாளுக்கு இரண்டு சந்நிதிகள்.

நாகநாதசுவாமி சந்நிதிக்கு அருகில் பிறையணி வாணுதலாள் சந்நிதி. இது தவிர, தனிக்கோயிலில் மற்றொரு அம்பாள் கிரிஜகுஜாம்பிகை சந்நிதியும் உள்ளது. இங்கு அம்பாள் தவக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இவர் உருவம் சுதையால் ஆனதால் அபிஷேகம் செய்வதில்லை. புனுகுச்சட்டம் மட்டுமே சார்த்துகிறார்கள். கிரிஜகுஜாம்பிகை அம்பாளுக்கு வலதுபுறம் வீணையைக் கையில் தாங்கி சரஸ்வதியும், இடதுபுறம் கரங்களில் தாமரை மலரைத் தாங்கி லட்சுமிதேவியும் இருக்கின்றனர். கிரிஜகுஜாம்பிகை சந்நிதியில் விநாயகரும், அருகில் ராகுபகவான், “யோகராகு’ என்ற பெயரிலும் இருக்கின்றனர். எனவே, இவர் இப்பெயரில் அழைக்கப்படுகிறார். கேதுவிற்கு அதிபதி விநாயகர். இந்த விநாயகரையும், யோக ராகுவையும் வணங்கினால் ராகு,கேது தோஷம் நிவர்த்தியாவதாக நம்பிக்கை. மற்றும் தனி சந்நிதியில் பாலசுப்பிரமணியர் காட்சி தருகிறார்.
இங்குள்ள விஷ்ணு துர்கை சந்நிதி வெள்ளிக்கவச தரிசனத்தில் மனநிறைவை அளிக்கும். மற்றும் வைத்தீஸ்வரர், சூரியன், சோமாஸ்கந்தர், சண்டேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன. வைத்தீஸ்வரர் சந்நிதி கோஷ்டத்தில் ஜுரகரவிநாயகர் இருப்பதால் இங்குத் தரிசனம் செய்பவர்கள் நோய் நீங்கி நலமடைவதாகப் பலர் வழிபட்டு வருகின்றனர்.
வெளிப்பிரகாரத்தின் தென்புறத்தில் நடராஜர் மண்டபமும், வடக்குப்புறத்தில் நடராஜர் பேரம்பலம் ரத வடிவில் இருபுறமும் கல்தேர் சக்கரங்களுடன் உள்ளது. அந்த சக்கரங்களில் 12 ராசிகளும் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் பிரம்மாண்டமான இரு குதிரைகளும், நான்கு யானைகளும் பாகர்களுடன் இழுக்கும் நிலையில் தேர் போன்ற விமானத்துடன் அமைந்துள்ளது. எதிரே நடராஜ மண்டபத்துடன் மேற்கூரை மரத்தால் தேரின் விமானம் போல் அமைந்து, அதில் நடராஜமூர்த்தி தாண்டவ கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளது சிறப்பு.

ராகு பகவான் இரண்டாவது பிரகாரம் தென்மேற்கு மூலையில் நாகவல்லி, நாகக் கன்னி ஆகிய தன் இரு தேவியருடன் மங்கள ராகுவாகத் தனிக்கோயில் கொண்டு காட்சி அளிக்கின்றார். இத்தலத்தில் ராகுபகவான் உருவாக்கிய நாக தீர்த்தம், சூரிய தீர்த்தம், எம தீர்த்தம் உள்ளிட்ட 12 தீர்த்தங்கள் இருக்கின்றன.
ஸ்தல தீர்த்தம் : சூரிய தீர்த்தம் உட்பட பன்னிரு தீர்த்தங்கள்
ஸ்தல விருட்சம் : செண்பக மரம்
ஸ்தல பெருமை:

ராகு பகவான் எல்லா கோயில்களிலும் மனித தலை, நாக உடலுடன்தான் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் மனித வடிவில் மங்கள ராகுவாகத் தனது இருதேவியருடன் பூரணத்திருமேனியுடன் காட்சி தருகிறார். ராகுவை, இந்த கோலத்தில் காண்பது அபூர்வம். இவருக்கு உகந்த நிறம் நீலம் என்பதால், அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும்போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தையும் பார்க்கலாம்.
1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக இராகு பகவானுக்கு அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது. இது இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்களின் பார்வைக்குக் காட்சிப் பொருளாகக் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் உள்ள பிறையணி வாணுதலாள் (பிறையணி அம்மை) சந்நிதியில் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் அம்பாளின் பாதத்தில் நிலவு ஒளிபட்டுப் பாதத்தில் இருந்து சிரசிற்குச் செல்லும் காட்சி அற்புதமாகும்.
கிரிஜகுஜாம்பிகை அம்பாள், இங்கு அர்த்தநாரீஸ்வர வடிவில் சிவ பார்வதியாகக் காட்சியளிப்பது சிறப்பம்சம்.
திருவிழாக்கள்:

கார்த்திகை மாதத்தில் பத்து நாட்கள் இங்குப் பிரம்மோத்சவம் சிறப்பாக நடைபெறும்.
சிவராத்திரி தினத்தன்று இத்தல சிவனை வழிபட்டு ராகு நிவாரணம் பெற்றதால் சிவராத்திரி விழா முக்கிய விழாவாக நடத்தப்படுகிறது.
ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை ராகு பெயர்ச்சி விழா நடத்தப்படுகின்றன.
சேக்கிழாரின் ஈடுபாடு கண்டு இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசிப் பூச நன்னாளில் சேக்கிழார் திருவிழா நடைபெறுகிறது.
கந்தசஷ்டி விழா ஆண்டுதோறும் பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இது தவிர
சித்திரை சிங்காரவேலர் புறப்பாடு, விசாகப்பெருவிழா, ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பூரம், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, மார்கழி – திருவாதிரை, தை கிரிஜகுஜாம்பாள் புனுகு காப்புத் திருவிழா, சிவராத்திரி, பங்குனி உத்திரம். மற்றும் பிரதோஷம் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பிரதி ஞாயிறு மாலை, ராகு கால நேரத்தில் ராகுவுக்குப் பாலாபிஷேகம் நடைபெறுவது மிகவும் சிறப்பு.
பிரார்த்தனை:
திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறக்க இத்தலத்தில் வழிபடுகின்றனர். ராகு பரிகார தலம் என்பதால் களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்க ராகு பகவானுக்குப் பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். வேண்டுதல் நிறைவேறியவர்கள் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் வேண்டுதல் நிறைவேற்றுகிறார்கள்.

கோயில் திறந்திருக்கும் நேரம்:
இந்த கோயில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12.45 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும்
திறந்திருக்கும். இராகு கால நேரங்களில் நடை திறந்திருக்கும், தனுர்(மார்கழி) மாதத்தில் மட்டும் காலை 5.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு நடை சாற்றப்படும். மாலை 4.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை சாற்றப்படும். விழாக் காலங்களில் நேரம் மாறுதலுக்குட்பட்டது.

எப்படிச் செல்வது:
இக்கோயில் கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. திருநாகேஸ்வரத்தில் இருந்து தெற்கே 1 கி.மீ. தொலைவில் உப்பிலியப்பன் கோவில் என்கிற திவ்யதேச ஸ்தலம் உள்ளது.
ராகு தோஷங்கள் நீங்கி, நல்ல வாழ்க்கை அமைய திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலுக்குச் சென்று வழிபடுவோம்..!!

Leave a comment
Upload