ஏலோர் எம்பாவாய்
கவிஞர் : குடந்தை அனிதா
ஆண்டாளின் கொண்டை, மாலை மற்றும் கிளியுடன் இருந்த கோலம் கொண்ட முகப்பு அட்டை தான் என்னை இந்த நூலை வாங்கத் தூண்டியது. கோலம் போடும் பெண்களின் மனதை சொல்லும் கவிதைத் தொகுப்பென்றதும் கூடுதல் மகிழ்ச்சி ஏற்பட்டது. எனக்கு கோலம் போடுவதில் பெரிய ஆர்வமெல்லாம் கிடையாது,
********************************************************
இன்றைக்கு
அவளுக்கிருக்கும்
வேலைப் பளுவையும்
திட்டங்களையும்
புள்ளி விபரங்களோடு சொல்கிறது
வாசலின் சின்னஞ்சிறு கோலம்
********************************************************
என்ற கலாப்ரியாவின் கவிதையை படிக்கும் போதெல்லாம் அது எனக்காக எழுதப்பட்டது போல் எனக்கு ஒரு பூரிப்பு எழும். சின்ன வயதில் மார்கழி மாதங்களில் அதிகாலையில் எழுந்து என் சித்தியும் அம்மாவும் வாசலடைக்க போடும் கோலங்களில் வண்ணப் பொடிகளை தூவும் வேலை எனக்கு. அப்போது தான் நைட் ஷிப்ட் வேலை முடிந்து சைக்கிளில் வீடு திரும்பி வரும் அண்ணன்கள் தங்களுக்கு பிடித்த அக்காமாரின் கோலங்களை ஒற்றைக் காலை ஊன்றி சைக்கிளில் நின்று ரசித்துவிட்டு போவதை கண்டிருக்கிறேன். கோலத்தில் வைக்க பூசணிப் பூவை தேடும் வயது தான் எனக்கு என்றாலும் எந்த அக்காவை எந்த அண்ணன் நோட்டம் பார்க்கிறார் என்பதெல்லாம் சரியாகவே தெரியும். இந்த என் மார்கழி நினைவுகளை மீட்டுக் கொண்டுவந்தது அனிதா எழுதி இருக்கும் ஏலோர் எம்பாவாய் நூல்.
********************************************************
மூன்று புள்ளிக்
கோலம் போடும் அவள்
அவன் பார்க்கிறானென்று
அவளையுமறியாமல்
புள்ளிகளை அதிகரித்து வைக்கிறாள்
மார்கழிப் பனி அவர்களை
தொந்தரவு செய்வதில்லை !
********************************************************
அவன் பார்க்கிறான் என்பதற்காகவே இன்னும் கொஞ்ச நேரம் நின்று கோலம் போட எத்தனிக்கும் அவள் மனதில் அவன் மேல் காதல் இல்லாமல் இருந்தாலும் ஒரு குறுகுறுப்பு இருக்கவே செய்யுமல்லவா ! அது பின்னாளில் காதலாகவும் மாறக் கூடும்.

ஸ்டிக்கர் பொட்டுகள் சகஜமாகாத அந்த நாட்களில் சாந்தை எடுத்து புருவங்களுக்கு நடுவில் இடும் போது ஒரு நாள் செவ்வகமாக வரும், ஒரு நாள் முக்கோணம், வட்டமாய் வைத்த நாளில் காயும் முன்பு இழுவி விடும்.... அனிதாவிற்கு அம்மாவின் நெற்றியில் இருக்கும் சாந்துப் பொட்டும் கூட ஒரு கோலமாய் தெரிகிறது, அற்புதமான படிமம் அது.
********************************************************
நான் பார்த்த முதல் கோலம்
அம்மாவின் நெற்றியில்
இட்டிருந்த சாந்துப்பொட்டு
இரு புருவங்களுக்கு மத்தியில்
ஒருபுள்ளிக் கோலம் அது !
****************************
என்னதான் ஸ்டிக்கர் பொட்டுக்கள் இப்போது கோலோச்ச தொடங்கி இருந்தாலும் சாந்து போட்டுக்களுக்கு ஒரு தனி மவுசு உண்டல்லவா !
நாளெல்லாம் குடும்பத்திற்காக பாடுபடும் பெண்கள் வேண்டுவது மலையை புரட்டிப் போடும் பெரிய விஷயங்களை அல்ல, சின்னச் சின்ன கரிசனைகளையே, உதிரப் போக்கு அதிகமாயிருக்கும் நாட்களில் கணவன் வாசலில் கோலம் போடுவது என்பது அந்த கணவனுக்கு மனைவி பால் இருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறதல்லவா! அந்த தருணம் தான் வாழ்க்கை மீதான அச்சங்களை தகர்த்து நமபிக்கையை விதைக்கிறது.
********************************************************
உதிரப்போக்கு
அதிகமான நாட்களில்
குனிந்து நிமிரும் அசௌகரியம்
எல்லாப் பெண்களுக்கும் என்றாலும்
சௌகரியம் கொடுக்கும் கணவன்
வரம்தானே
என்ன பெரிய கோலம் என்று
விரலிரண்டைத் தூரிகையாக்கி
வரைந்த ஓவியம் யாதென்றால்
பெரிய வட்டத்திற்குள்
இரண்டு தோசைச் சுற்று
அவ்வ்ளவு தான்
போதுமே
நாளை விடியாமலா போய்விடும்
அவளுக்கு
இரண்டு நாள் ஓய்வு
போதுமானதாகும் !
********************************************************
பழனிபாரதியின் அணிந்துரை அவரின் கவிதைகளை போலவே கச்சிதமாக இருந்தது. கணித ஆசிரியர் சரஸ்வதியின் வாழ்த்துரை மிக அழகாக இருந்தது, கோலம் இடப்படட்ட இடத்தை சங்க இலக்கியத்தில் களம் எனக் குறிப்பிடுகிறது. களமெழுத்து என்பது தூய்மை செய்யப்பட்ட இடத்தில் வரையப்பட்ட கோலத்தை குறிக்கின்றது.
பெண்ணின் சுதந்திரம் குறித்து பேசும் கவிதைகளும் இங்கே இருக்கின்றன,
********************************************************
சில வீட்டுப் பெண்களின்
சுதந்திரம்
வீட்டு வாசலில்
கோலம் போடும் வரை மட்டுமே
வீட்டுக்குள் இருக்கு அவள்
கோலத்தில்கூட
பறவைகளுக்குக்
கூண்டு வரையமாட்டாள்
வேண்டுமானால்
பறந்து செல்ல
நான்கு சிறகுகள்
வரைந்து வைப்பாள் !
********************************************************
கோலமென்பது பெண்களின் அன்றாடங்களில் ஒன்று என்பதால் அது சுலபமானது என்று நாம் நினைத்துவிட கூடாது, அது எவ்வளவு சிக்கலானது என்பதை கவிஞர் ணாயாமாய் கூறுகிறார்,
********************************************************
பொங்கும் பாலுக்குச்
சிறிதும் சளைத்தவையல்ல
முற்றத்துக் கோலங்கள்
கவனம் சிதறினால்
அலங்கோலமாகிவிடும்
********************************************************
கோலத்திற்கு மதங்கள் இல்லை என்பதையும் ஒரு கவிதையில் சொல்கிறார் அனிதா,
********************************************************
வாடகை வீட்டைக்
காலி செய்துகொண்டு போனவர்கள்
ஸ்டிக்கர் கோலத்தை மட்டும்
விட்டுச் சென்றுவிட்டனர்
புதிதாக குடி வந்த
பாயம்மாவோ மேரியம்மாவோ
கோலத்தை புறக்கணிக்கவில்லை
********************************************************
என்ற வரிகள் அற்புதமானவை. பெண்ணின் வாஞ்சையான மனதைச் சொல்லும் அற்புதமான கவிதைகள் இரண்டுண்டு, இந்த தொகுப்பிலேயே என்னை மிகவும் கவர்ந்த கவிதைகள் அவை :
********************************************************
வண்ணத்துப்பூச்சிக் கோலத்திற்கு
வண்ணம் சேர்க்கும் அவள்
அருகிலேயே பூக்களையும்
வரைந்து வைக்கிறாள்
பசித்தால் தேனருந்தட்டுமென
பிள்ளைப்பேறுக்கு முன்
அண்னையாகும் பாக்கியம்
மகளீர்க்கு மட்டுமுண்டு !
********************************************************
வண்ணத்துப்பூச்சிகளுக்கு அருகில் பூக்களை வரையும் அவளிடம் இருப்பது தாய்மை மட்டுமல்ல ஒரு குழந்தைத் தனமும் தான். அவள் வரைநது முடித்த கோலத்தை அவளே தள்ளி நின்று ரசிக்கும் கணத்தில் அவளே ஒரு கவிதையாகிறாள்.
********************************************************
முழு கோலத்தையும்
தன் குழந்தை போல்
வாஞ்சையுடன் பார்த்துத்
திருப்தியடையும் அவர்கள்
தாய்மையின் அகராதி !
*********************************************************
அழகியலை மட்டும் சொல்லாமல் பெண்களின் உள்ளக் கிடக்கைகளையும் சொன்னதாலேயே இந்த தொகுப்பு மிளிர்கிறது. மிகவும் சுவாரஸ்யமான கவிதைகள். நிறைவான வாசிப்பனுபவம்.
பக்கங்கள் : 68
வெளியீடு : கொட்டாரம்
அனைவருக்கு இனிய மகளீர் தின நல்வாழ்த்துக்கள் !

Leave a comment
Upload