கணையாழியின் கடைசி பக்கங்கள்
1965-லிருந்து 1998 வரை சுஜாதா எழுதிய கணையாழி கடைசி பக்கங்கள் தொகுக்கப்பட்டு புத்தக வடிவில் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. முதல் படிப்பு 2006 ஆண்டு வெளிவந்தது. சுஜாதாவின் மனதிற்கு பிடித்த சிஷ்யபிள்ளையும், எனது நண்பரும் ஆன ‘சுஜாதா’ தேசிகன் இதனைத் தொகுத்து வழங்கியுள்ளார். மிகவும் கடினமான இந்த பணி, வாத்தியாரே சொல்வது போல “நான் எழுதிய அத்தனை கடைசி பக்கங்களையும் தொகுத்து முடித்து விட்டார். பிரமிக்கத்தக்க சாதனை! எழுத்தாளன்பால் அளவில்லாத வாத்சல்யமும் நிறைய பொறுமையையும் கொண்ட ஒரு வாசகனால் தான் சாத்தியம். என் இணைய நண்பர் தேசிகனுக்கு முதலில் நன்றி சொல்லவேண்டும். எனக்கே என் கதைகளை எப்போது எழுதினேன், எந்த இதழில் எழுதினேன் என்று சந்தேகம் வரும்போது நான் அவரைத்தான் கேட்பேன். அந்த அளவுக்கு நான் எழுதியது அனைத்தையும் ஆராய்ந்து ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார்.”
192 தலைப்புகளில் சுஜாதா அவர்கள் எழுதி இருக்கிறார். 30 வருட இந்திய, தமிழக நிகழ்வுகளும் இதில் அடங்கி இருப்பது இதன் சிறப்பு. தேசிகன் அவர்கள் சொல்வது போல “சுஜாதாவின் எல்லை எது என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை” என்பது நிருபிக்கப்பட்ட ஒன்று இதன் மூலம்.
சுஜாதாவின் தேடலின் வீச்சையும், பன்முகத்தன்மையையும் அறிந்துகொள்ள விரும்புவோர் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. ஹைக்கூ, தமிழ் சினிமா, எழுத்தாளர்கள், தமிழ் இலக்கியம், சந்தித்த மனிதர்கள், இசை, தொழில்நுட்பம், அரசியல், அறிவியல், கவிதை, நாடகம், புத்தகங்கள், அனுபவங்கள், தமிழ் மொழியின் வளர்ச்சி, உலக சினிமா மற்றும் தான் தெரிந்துகொண்டவை என அவர் எழுதிய அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளது.
அவரின் தேடலின் எல்லை இதுதான் என அளவுகோல்களை வகுப்பது கடினம். பல விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டுமென ஆர்வமாக உள்ளவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்.
மணிரத்தினத்தின் அஞ்சலி படத்தை பற்றி தைரியமாக “அஞ்சலி அல்லது பவர்கட்” என்று பெயர் வைத்திருக்கவேண்டும். படத்தில் என்னைக் கவர்ந்தது இளையராஜாவின் பின்னணி இசை என்று எழுதினார்.
சுஜாதாவிடம் காணப்பெறும் மற்றொரு நல்லா குணம், நல்லதை பாராட்டுவது. மூன்று புத்தகங்களை விமர்சித்து சிபாரிசும் செய்கிறார். சிவகாமியின் “ஆனந்தாயி” ரவீந்திரனின் “ஈரம் கசிந்த நிலம்” ,சுந்தரபாண்டியனின் “ஆராரோ”, ஆராரோ நாவலைப்பற்றி சொல்லும்போது, “சுந்தரபாண்டியன் உபத்திரவமில்லாத நாவல்கள் எழுதி வந்த இவர் வட்டார நாவல்களில் கிடைக்கும் சுதந்திரத்தை கவனித்து” தாளி ஒதுங்குங்கடா, நானும் பூர்றேன் என்று ஒரு வேகமான சுவாரஸ்யமான நாவலை எழுதி விட்டார். “ஆராரோவில்” நான் கவனித்த இரண்டு விஷயங்கள் நாவல் முழுவதும் லேசான கொச்சையில் எழுதப்பட்டிருந்தாலும் இலக்கிய மதிப்பில் தாழ்வில்லை. இரண்டாவது நாவல் முழுவதும் விரவியுள்ள மலர்ச்சியான நகைச்சுவை. அண்மையில் நான் என்னை அறியாமல் வாய்விட்டு சிரித்த, ரசித்த பகுதிகள் இந்த நாவலில் உள்ளன. (நினைவிருக்கட்டும் ஒரு எழுத்தாளனை சிரிக்க வைப்பது ரொம்ப கஷ்டம்). அது தான் வாத்தியார்.!!
கணையாழி கடைசிப்பக்கங்கள் - சுஜாதா ரசிகர்கள் முதலில் படிக்கவேண்டியது.
Leave a comment
Upload