தொடர்கள்
Daily Articles
வந்தார்கள்... வென்றார்கள்... - 42 - மதன்

ஷாஜஹான்

20210503200436487.jpeg

அவளுக்காக

தந்தை ஜஹாங்கீர், நூர்ஜஹானைச் சந்தித்துக் காதல் வயப்பட்ட மென்மையான அனுபவம் போன்றதொரு சூழ்நிலை மகன் ஷாஜஹானுக்கும் நிகழ்ந்தது!

ஆக்ரா அரண்மனை வளாகத்துக்குள் ஆண்டுதோறும் அரசகுலப் பெண்கள் ஏற்பாடு செய்யும் ஒரு ‘சந்தை’யில் கண்ணாடிப் பொருட்கள் அடங்கிய ஒரு ‘ஸ்டாலில்’ பணியிலிருந்தார் பேரழகி அர்ஜுமான் பானு பேகம். ஒரு மாலை நேரம். நெருங்கிய நண்பர்களுடன் ஷாஜஹான் அங்கே வருகை தர, அர்ஜுமான் பானுவைப் பார்த்த விநாடியில், இளவரசரின் இதயம் மெல்லிசை பாடியது. கால்கள் ‘ஷாம்பெய்ன்’ அருந்தியதைப் போல் தள்ளாடின. சமாளித்துக் கொண்டு, கடைசியில் இருந்த ஒரு சிறு கண்ணாடிக் கோப்பையைச் சுட்டிக்காட்டி விலை என்னவென்று வினவினார் ஷாஜஹான். அது வெறும் வினா அல்ல - வியூகம் என்பதைப் புரிந்து கொண்ட அர்ஜுமான் பேகம், வேண்டுமென்றே குறும்பாக “இது கண்ணாடி அல்ல... வைரத்தால் செய்யப்பட்டது. விலை பல்லாயிரக்கணக்கில் ஆகுமே... சமாளிக்க முடியுமா?” என்றவாறு தன் பார்வையை மின்னலாகச் செலுத்தினார். “உன்னைப் போன்ற ஒரு பேரழகியின் கைப்பட்டுவிட்ட பிறகு, அது எப்படி வெறும் கண்ணாடியாக இருக்க முடியும்ட? இந்நேரம் வைரமாக மாறியிருக்கும்!” என்ற ஷாஜஹான், புன்சிரிப்போடு உடனே பணத்தைத் தந்துவிட்டுக் கோப்பையை எடுத்துக் கொண்டார். பணத்தோடு இளவரசரின் இதயமும் பறிபோனது!

திருமணம் என்று ஒன்று ஆனபிறகு, அரசர்கள் நிதானமாக அந்தப்புரத்தில் ஆரணங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வது வேறு விஷயம். ஆனால், ஒரு பட்டத்து இளவரசருக்கு முதலாவதாக நிகழும் திருமணம், முன்கூட்டியே சிந்திக்கப்பட வேண்டிய விஷயமாக அப்போது இருந்தது. சில சமயங்களில் ஒரு திருமணத்தின் பின்னணியில் சாம்ராஜ்ய எல்லைகளை விஸ்தரிக்கும் திட்டமும் பின்னிப் பிணைந்திருக்கும். ஆனால், ஜஹாங்கீரிடம் சென்று வெளிப்படையாக ஷாஜஹான் தன் காதலைத் தெரிவித்தவுடன், பாதுஷா ஒரு மறுப்பும் சொல்லாமல், கையை உயர்த்தி அனுமதி தந்தார் - மகாராணி நூர்ஜஹானின் சொந்த சகோதரரும் முதலமைச்சருமான அஸஃப்கானின் மகள் அர்ஜுமான் பானு என்பது குறிப்பிடத்தக்கது!

1612-ம் ஆண்டு... ஷாஜஹான் - அர்ஜுமான் பானு பேகம் திருமணம் நடந்தது. மணமகள் பேரரசர் ஜஹாங்கீரை வணங்கி எழுந்தவுடன், “இன்றிலிருந்து நீ மும்தாஜ் (அரண்மனையில் முதன்மையானவள்) என்று அழைக்கப்படுவாய்!” என்று அறிவித்தார் பாதுஷா.

‘காதலின் முடிவு திருமணம் எனில், அதோடு காதலும் முடிவு பெறுகிறது....’ என்று சொல்லப்படுவது உண்டு. உலகரீதியில் இன்றளவும் உன்னதமாக உயர்ந்து நிற்கும் காதல் காவியங்கள், மணப்பந்தலில் முடியாதவை என்பதை நாம் மறுக்க முடியாது. இதை அடியோடு பொய்ப்பித்துக் காட்டினார் ஷாஜஹான். இளவரசரின் பதினெட்டு வருட இல்லற வாழ்க்கை, பிரமிப்பூட்டும் ஒரு காதல் காவியத்தின் இரண்டாம் பாகமாகத் தொடர்ந்தது.

வயதில்கூட வித்தியாசமில்லாமல், இருவரும் ஒரே வயது வேறு! மும்தாஜிடம் ஷாஜஹான் உள்ளத்தாலும் உடலாலும் வயப்பட்டுக் கிடந்தார் எனலாம். அதற்கேற்ப, தம்பதிக்குப் பிறந்த குழந்தைகள் மொத்தம் பதினாலு (அவற்றில் ஏழு குழந்தைகள் பிற்பாடு இறந்துவிட்டன.)!

உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் உருவாகக் காரணமாக இருந்த காதல் ராணியைச் சற்றேனும் உணர்ச்சிகரமாக நாம் வர்ணிக்காவிட்டால் எப்படி..?!

மிகச்சிறந்த ஒரு லட்சிய மனைவியாகத் திகழ்ந்தவர் மும்தாஜ் என்பதில் யாதொரு கருத்து வேறுபாடும் இல்லை. ராஜதந்திரி அஸஃப்கானின் மகள் என்பதாலோ என்னவோ, மும்தாஜுக்கு மதிநுட்பம் நிறையவே இருந்தது. அதற்காக நூர்ஜஹான் போலத் தன் கணவனை ‘டாமினேட்’ செய்ய முயன்றதில்லை மும்தாஜ். தன் அன்பு வியூகத்துக்குள் அந்தப் பேரரசரை இருத்தி வைத்துக்கொண்டார் அவர். ‘கணவருக்கு நல்ல மனைவியாய், நண்பராய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய்’ கடைசிவரை வாழ்ந்தவர் மும்தாஜ் பேகம்!

அரசாங்கச் சட்டங்களோ, அறிவிப்புகளோ, கடிதங்களோ... எதுவானாலும் அவை தயாரான பிறகு, அந்தப்புரத்துக்கு அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ஷாஜஹான். மகாராணியும் அவற்றை ஆங்காங்கே கச்சிதமாக ‘எடிட்’ செய்து, குறிப்புகளும் எழுதுவதுண்டு! பொதுவாக, எவ்வளவுதான் ஆசையென்றாலும் வேலைக்காக வெளியூர் போகும்போதாவது கணவன்மார்கள், மனைவிகளை வீட்டில் விட்டுச் செல்வதுதானே வழக்கம்? ஷாஜஹான், தான் போகும் இடத்துக்கெல்லாம் தன் பிரிய மனைவியையும் கூடவே அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் - போர்க்களங்கள் உட்பட!

சில ஆங்கிலேய நூலாசிரியர்கள் ‘அந்தப்புரத்தில் நிம்மதியாக இருக்கவேண்டிய மனைவியைப் போர் நடக்கும் இடத்துக்கெல்லாம் தன்கூடவே இழுத்துச் சென்று சிரமப்படுத்துவது அப்படி எந்த வகையில் பெரிய காதலோ..?!’ என்று அலுப்புடன் குறிப்பிடுகிறார்கள்.

‘அரசர் இருக்குமிடமே ஆக்ரா!’ என்று மும்தாஜ் பரவசத்துடன் முடிவெடுத்தால், நாமென்ன செய்ய!

ஜூன் 1631, ஏழாம் தேதி....

அகமத் நகர், பீஜப்பூர் சுல்தான்களையும் வழிக்குக் கொண்டு வருவதற்காக, மத்திய இந்தியாவுக்குப் படையோடு ஷாஜஹான் சென்றிருந்தபோது, மும்தாஜ் பதினாலாவது குழந்தையைப் பெற்றெடுத்தார். பிரசவம் முடிந்த கையோடு, மும்தாஜுக்குத் திடீரென ஜன்னி பிறந்தது. உடல் தூக்கிப் போட்டது. வெளியே தளபதிகளுடன் ஆலோசனையில் இருந்தார் ஷாஜஹான். தகவல் வந்தவுடனே பதறிப் போய்க் கூடாரத்துக்கு ஓடிவந்த மன்னர், அருமை மனைவியை ‘ஹோ’வென்று அழுதுகொண்டே வாரி, மடியில் இருத்திக் கொண்டார். சில நிமிடங்கள் கணவரின் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டிருந்த மும்தாஜின் தலை சாய்ந்தது. பிரமை பிடித்தவர் போலத் துவண்டு சரிந்து வீழ்ந்து கதறினார் ஷாஜஹான். சில நாட்களில் திகைப்பூட்டும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது - அதுவரை மன்னரின் தலையிலும் முகத்திலும் கம்பீரமாகக் கருமையாக இருந்த ஷாஜஹானின் முடி, திடீரென்று வெள்ளை வெளேர் என்று நரைத்துப் போனது!

அன்பு மனைவியின் அகால மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து ஓரளவு மீளவே, ஷாஜஹானுக்கு இரண்டாண்டுகள் பிடித்ததாகக் கூறப்படுகிறது. அதற்குள் மன்னருக்கு முதுமையான தோற்றம் வந்துவிட்டதாகத் தகவல்! இரண்டாண்டுகளுக்கு மன்னர் புத்தாடையும் அணியவில்லை. அலங்காரம், வாசனைத் திரவியம், அறுசுவை விருந்து எல்லாவற்றையும் தவிர்த்தார். அவ்வப்போது திடீரென்னு மணிக்கணக்கில் மௌனமாகிப் போனார். மன்னர் என்கிற முறையில், அத்தியாவசியக் கடமைகளில் மட்டுமே ஷாஜஹான் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

ஒரு நாள் நெருங்கிய ஆலோசகர்களுடன் அரசர் இருந்தபோது, மனைவி பற்றிப் பேச்சு திரும்பியது. அப்போது காதலும் துக்கமும் ஆவேசமும் பொங்க... “அவளுக்காக ஒரு நினைவு மண்டபம் கட்டவேண்டும்!” என்று சொல்லிக் கலங்கினார் ஷாஜஹான்.

தான் காதலித்த ஒரு பெண்ணுக்கென அற்புதமான ஒரு கல்லறை கட்ட வேண்டும் என்ற எண்ணம் மனதில் விஸ்வரூபமெடுக்க ஆரம்பிக்கவே, காரியத்தில் இறங்கினார் ஷாஜஹான்.

மும்தாஜ் இறந்தது - தட்சிணப் பிரதேசத்தில், பர்ஹான்பூர் என்னும் ஊரில், அங்கே தற்காலிகமாகப் புதைக்கப்பட்ட அவருடைய உடல், ஆறு மாதங்கள் கழித்து ஆக்ராவுக்கு - இன்று தாஜ்மஹால் அமைந்துள்ள இடத்துக்கு - பெரும் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது. ராணி இறந்த சரியாக ஓராண்டு கழித்து தாஜ்மஹால் கட்டடப் பணிகள் துவங்கின.

அதற்கென யமுனைக் கரையில் ஒரு அழகான இடம் மன்னரால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அங்கே இருந்த மிகப்பெரிய தோட்டம், ராஜபுத்திர மன்னர் ஜெய்சிங்குக்குச் சொந்தமானது. அந்தத் தோட்டத்தைக் கல்லறைக்காக வாங்க விரும்பினார் சக்ரவர்த்தி. முதலில் இரண்டு கோடி ரூபாய் விலையாகத் தர நினைத்த பாதுஷா, பணமாகத் தந்தால் நண்பர் ஜெய்சிங் தர்மசங்கடப்படுவாரோ என்று எண்ணி, நான்கு அழகான அரண்மனைகளை ஜெய்சிங்குக்குத் தந்து, தோட்டத்தைப் ‘பண்டமாற்றம்’ செய்து கொண்டார்!

உடனே ராஜவேகத்தில் பணிகள் தொடங்கின. சில நாட்களுக்குள் இருபதாயிரம் வேலையாட்கள் வந்திறங்கினர். கூடவே, தேர்ந்த சிற்பிகள், கட்டடக்கலைக் கலைஞர்கள் மற்றும் தோட்டக்கலை நிபுணர்கள்....

தாஜ்மஹாலுக்கு ‘வரைபடம்’ தயாரித்துத் தந்தவர் யார்..? வெனிஸ் நகரப் பொற்கொல்லர் மற்றும் சிற்பியான வெரோனியோ, துருக்கியக் கட்டடக்கலை கலைஞர் உஸ்தாத் இஸா அஃபாண்டி. லாகூரைச் சேர்ந்த உஸ்தாத் அஹமத்... என்று ஆளுக்கு ஆள் ஒரு பெயரைச் சொன்னாலும், தாஜ்மஹால் தனிப்பட்ட எந்த ஒருவராலும் கற்பனை செய்யப்படவில்லை என்பதே உண்மை. ஷாஜஹானின் மனதில் பனிப்படலமாக இருந்த அந்தக் கல்லறைக்கு வடிவம் தந்தது, உண்மையில் பல மேதைகளின் கூட்டுமுயற்சியே! ஆனால், ஒவ்வொரு டிஸைனையும் நேரடியாகப் பார்த்து ‘ஓகே’ சொன்னார் ஷாஜஹான் என்பது உண்மை.

‘கல்லறையாக மட்டுமல்ல, ஏராளமான மக்கள் வருகை தரும் ஒரு புனித இடமாகவும் தாஜ்மஹால் அமைய வேண்டும்’ என்று விரும்பினார் ஷாஜஹான். அதற்கேற்ப தோட்டம், தங்குமிடங்கள், இசை மேடைகள், கடைவீதி... போன்ற எல்லா வசதிகளையும் உருவாக்க ஆணையிட்டார். மொகலாய ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் மட்டுமே தாஜ்மஹாலில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1632-ல் வேலை துவங்கி, தாஜ்மஹால் கட்டி முடிக்க இருபது ஆண்டுகள் பிடித்தன. வெளிப்புறத்தில் சிறுசிறு வேலைகள் 1653 வரை தொடர்ந்தது.

வெளிப்புற வாயிலுக்குள் நுழைந்தவுடன் தொலைவில் தெரியும் தாஜ்மஹாலைப் பார்த்தால், ‘இவ்வளவு சிறியதா?’ என்று கேட்கத் தோன்றும்... போகப் போகப் பெரிதாகிக் கொண்டே போய், மிக அருகில் சென்று அண்ணாந்து பார்த்தால், கூரை தெரியாத அளவு விஸ்வரூபமெடுக்க வேண்டும் என்கிற ரீதியில், திட்டமிட்டபடி கட்டப்பட்டது தாஜ்மஹால்!

தாஜ்மஹாலைச் சுற்றி நாற்பத்திரண்டு மீட்டர் உயரத்துக்கு நிமிர்ந்து நிற்கும் நான்கு மினார்களையும் லேசாக வெளிப்புறமாகச் சாய்த்துக் கட்டினார்கள் கட்டடக்கலை வல்லுநர்கள். அதாவது, ஏதேனும் விபத்தில் அவை விழ நேர்ந்தாலும், தாஜ்மஹால் மீது விழாது!

மஹாலில் வெளிப்புறக் கதவுகள் மீதும் சுவர்கள் மீதும் பதிக்க, இந்தியாவைத் தவிர ரஷ்யா, திபெத், பாரசீகம் என்று பல நாடுகளிலிருந்து வைரம், வைடூரியம், நீலம், கோமேதகம், முத்து, பவளம்... என்று வரவழைத்து, ஒன்றுவிடாமல் பயன்படுத்தினார்கள் (பிற்பாடு ஆங்கிலேயர் ஆட்சியில் அதிகாரிகள் அவற்றை அதிகாரிகள் சுரண்டியெடுத்துச் சூறையாடியது வேறு விஷயம்!).

“கல்லறையைச் சுற்றிலும் சுவர்களில் புனித குர்-ஆனிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதிகளை எழுத்தோவியமாகச் செதுக்குவதில், உலகிலேயே திறமை வாய்ந்தவரை அழைத்து வாருங்கள்...” என்று ஷாஜஹான் ஆணையிட, பாரசீகத்திலிருந்து அமானாத்தான் என்ற கலைஞரின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டது. அந்த மேதையோ, “நான் எங்கு, எதில் என் கலைத்திறனைக் காட்டினாலும், கீழே என் கையெழுத்தைப் போட்டு (செதுக்கி) கொள்வது வழக்கம். அதற்கு அனுமதித்தால்தான் வரமுடியும்...” என்று பதில் அனுப்பினார். ஷாஜஹானும் ஒப்புக்கொண்டார். இன்றைக்கும் தாஜ்மஹாலில் செதுக்கப்பட்டிருக்கும் ஒரே கையெழுத்து, அந்தக் கலைஞருடையதுதான்!

தாஜ்மஹால் பற்றி ஷாஜஹான் சுருக்கமாக எழுதி வைத்த குறிப்பு - ‘இந்தக் கல்லறையைக் கற்பனை செய்தவர், எப்படிப் பூமியில் பிறந்தவராக இருக்க முடியும்? சொர்க்கத்திலிருந்து வந்து சேர்ந்தது, இதற்கான வரைபடம் என்பதற்குச் சாட்சியம் தேவையா..?’

அற்புதமான, தெய்வீகமான இந்தக் கல்லறை, பிற்பாடு வந்த சில பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குப் பொறாமையைத் தந்தது! லார்டு வில்லியம் பென்டிக் என்பவர் ‘தாஜ்மஹாலை இடித்துவிடலாம்’ என்று யோசனை சொன்னார். இதைக் கேட்டு மற்ற ஆங்கிலேய பிரபுக்களே திகைத்துப் போனார்கள். பிறகு ‘ஒவ்வொரு கல்லாக அகற்றிக் கப்பலில் ஏற்றி இங்கிலாந்துக்கு அனுப்பலாம். அங்கே ஒரு பெரும் தோட்டத்தில் மீண்டும் பொருத்திக் கண்காட்சியாக வைக்கலாம்’ என்றும் ஆங்கிலேயர்கள் ஆலோசித்தார்கள். நல்லவேளையாக, கலையுள்ளம் கொண்ட வைஸ்ராய் கர்ஸன் பிரபு, மேற்கண்ட அபத்த யோசனைகளையெல்லாம் நிராகரித்து, தாஜ்மஹாலை நல்ல முறையில் பராமரிக்க ஏற்பாடுகள் செய்து, அதற்காக சட்டமியற்ற வழிசெய்தார். கூடவே, கெய்ரோவிலிருந்து பெரிய அழகான தொங்கும் பித்தளை விளக்கு ஒன்றைத் தன் காணிக்கையாக வாங்கிக் கொண்டு வந்து, ஷாஜஹான் - மும்தாஜ் ஜோடிக் கல்லறைகளுக்குமேல் தொங்கவும் விட்டார்!

அற்புதத்துக்கும் கச்சிதத்துக்கும் மறுபெயரான தாஜ்மஹாலில் எசகுபிசகாக, நெருக்கியடித்துக் கொண்டு ஒரு மூலையில் இருப்பது - அதைக் கட்டிய மாமன்னர் ஷாஜஹானுடைய கல்லறை மட்டுமே என்பது விசித்திரமான விஷயம்.

ஏன் இப்படி..?

அதன் பின்னணியிலும் ஒரு சோகம் உண்டு..!