தொடர்கள்
விருது
”இந்தியப் பெண்ணுக்கு இங்கிலாந்தின் உயரிய விருது...” - ஸ்வேதா அப்புதாஸ்

இந்த வருடத்திற்கான இங்கிலாந்து மகாராணியின் பிறந்த நாள் கௌரவ விருது 1, 129 நபர்களுக்கு கிடைத்துள்ளது. அதில், இந்திய - கேரளத்து பெண்ணான அமிக்கா ஜார்ஜ் என்பவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

20210517192920890.jpg

எதற்கு இந்த விருது என்றால்..? அமிக்கா ஜார்ஜ், பெண்களுக்கு அதுவும் பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக மாதவிடாய் நாப்கின் வழங்கவேண்டும் என்று போராடி வெற்றி பெற்றதற்காக, இந்த கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெரும் ஒரே இளம் பெண் இவர்என்பது குறிப்பிடத்தக்கது.

20210517193204365.jpg
அமிக்கா ஜார்ஜ்ஜின் தந்தை பிலிப் ஜார்ஜ் கேரளா பத்தனம்திட்டாவை சேர்ந்தவர், அம்மா நிஷா கொல்லம் கூழேஞ்சேரியை சேர்த்தவர்.
அமிக்காவும் அவரின் சகோதரர் மிலன் இருவரும் பிறந்து, வளர்ந்தது இங்கிலாந்தில்தான். கேரளத்திற்கு இவர்கள் ஜஸ்ட் விசிட்டர்கள் தான்.
வடமேற்கு லண்டனில் உள்ள எட்குவார் என்ற இடத்தில் வசிக்கும் அமிக்கா, மிகவும் கவலைபட்டது ஏழ்மையில் இருக்கும் இளம் பெண்கள், தங்களின் மாதாந்திர மாதவிடாய் நாட்களை ஒரு பெரிய பிரச்சனையாகவே கருதி தவிக்கிறார்கள். அந்த நாட்களில் உபயோகப்படுத்த வேண்டிய சானிடரி நாப்கினை, அவர்களால் விலை கொடுத்து வாங்க முடியாத நிலைமை.

20210517193327208.jpg
அமிக்காவிற்கு 17 வயது இருக்கும்போது... ஒரு நாளிதழில் வெளியான இந்தச் செய்தியை படித்து அதிர்ந்து போயுள்ளார். அதில் யு.கே-யில் உள்ள கல்லுரி மற்றும் பள்ளி செல்லும் இளம் பெண்கள் சிலர் ஒவ்வொரு மாதமும் ஒரு வாரம் வகுப்புக்கு வருவதில்லை. காரணம்... மாதவிடாய் பிரச்சனைதான். அதை சமாளிக்க, சானிட்டரி நாப்கின்ஸ் வாங்க முடியாமல் தவித்து, வீட்டில் முடங்கி போய்விடுகிறார்கள் பாவம்..” இயற்கையாக ஏற்படும் உடல் ரிதியான உயிரியல் சுழற்ச்சி மாற்றத்தை ஈஸியாக ஏற்றுகொள்ள முடியாமல், ஓடி ஒளிந்து, வகுப்புக்கு வராமல் இருப்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இதற்குக் காரணம் இலவசமாக சானிட்டரி நாப்கின் கிடைக்காதது தான்” என்று வருத்தமுடன் கூறும் அமிக்கா...

20210517193928817.jpg

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் “பிரீ பீரியட்ஸ்” (Free Periods) என்ற தன் இயக்கத்தின் மூலம் மனுக்களை பெற்று, அரசுக்கு அனுப்பி வைத்தார். அதில் என்ன ஆச்சிரியம் என்றால்... அமிக்காவிற்கு ஏகப்பட்ட இ-மெயில்கள் ஆசிய சமுதாய பெண்களிடம் இருந்து குவிந்து விட்டன. அதில் பெரும்பாலான பெண்கள் கூறியது... தங்களின் வறுமையினால், மூன்று வேளை உணவுக்கே மிக கஷ்டம். அப்படியிருக்க.. எப்படி மாதந்தோறும் சானிட்டரி நாப்கின் வாங்க முடியும் என்று மன வேதனையுடன் தெரிவித்தார்கள்.

அதில் ஒரு பெண் எழுதிய கடிதம், அமிக்காவின் மனதை மிகவும் பாதித்துவிட்டதாம். மாதந்தோறும் சானிட்டரி நாப்கின் வாங்க, அப்பா - அம்மாவின் பர்ஸ்களை துழாவி காசை எடுப்பது அல்லது வீட்டில் மூலை முடுக்கில் தேடி பைசாவை திருடுவதும் நடப்பது பரிதாபமான விஷயம். அப்படியில்லை என்றால் பள்ளிக்கு ஒரு வாரம் கட் தான். சக தோழிகளிடம் கூட இதைப் பற்றி பேச கூச்சம்” என்று வேதனை பட்டுள்ளார்.

இந்த பீரியட்ஸ் பிரச்சனை மோசமானது. பெண்களின் வாழ்க்கையில் மாதந்தோறும் ஒரு டென்ஷனை ஏற்படுத்துகிறது. பல விஷயங்களுக்கு பெண்களை முன்னிறுத்தும் அரசு மற்றும் அனைவரும் அவர்களுக்கு இந்த விஷயத்தில் உதவ முன்வரவில்லை என்ற கோபம் என்னை உறுத்தியது. இவரின் மனுவுக்கு 1,80,000 பெண்கள் கையழுத்து போட்டு, போராட கைகோர்த்தனர்!

20210517194054238.jpg

2017 டிசம்பர் 20 ஆம் தேதி பிரிட்டிஷ் பிரதமரின் வீடான, டவுனிங் ஸ்ட்ரீட்டில் மாபெரும் மறியல் போராட்டத்தை நடத்தினார். அனைத்து மீடியாக்களும் இவரின் பக்கம் திரும்பி, ஏகப்பட்ட பேட்டிகள் ஒளிபரப்பாக... இங்கிலாந்து அரசின் கவனத்தை ஈர்த்தது. பள்ளிகளுக்கு விசிட் செய்து, விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டார். பிரீ பீரியட்ஸ் என்ற அமைப்பை 2019 ஜனவரி மாதம் துவக்கி, மனித உரிமை அமைப்பின் வக்கீல்களுடன் இணைந்து, அரசுக்கு அழுத்தம் தரப்பட்டது. இங்கிலாந்து நீதிமன்றத்தில் இவரின் குரல் உயர்ந்தது. உயர் நீதிமன்றம், யுகே அரசு உடனடியாக எல்லா பெண் குழந்தைகளுக்கும் மாதவிடாய் சானிடரி நாப்கின்களை இலவசமாக வழங்கி, அவர்கள் பள்ளிக்கு தடை இல்லாமல் செல்வதை கண்காணிக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது...

20210517194204227.jpg
கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்து அரசு சிறப்பு நிதியை ஏற்படுத்தி... பள்ளி, கல்லுரி பெண் மாணவிகளுக்கு இலவசமாக பீரியட்ஸ் சாதனங்களை தடையில்லாமல் வழங்க உத்தரவை பிறப்பித்தது. அதை கண்காணிக்க ஒரு அதிகாரி குழுவையே பணியில் அமர்த்தியுள்ளது. அமிக்காவின் இந்தப் போராட்டத்தால், இன்று இங்கிலாந்தில் உள்ள அணைத்து பள்ளி, கல்லுரி மாணவிகள் வகுப்புக்கு லீவு போடாமல் மாதவிடாய் பிரச்னையை மறந்து, தலை நிமிர்ந்து வருவதை பார்க்கும் போது என் உள்ளம் துள்ளுகிறது என்கிறார் அமிக்கா ஜார்ஜ்.

20210517194907570.jpg


தற்போது இங்கிலாந்து நாட்டில் ரயில் நிலையம், திரை அரங்குகள், சிற்றுண்டி சாலைகள், ஹோட்டல்கள், பஸ் நிலையங்கள், மால்கள் என்று எல்லா பொது இடங்களிலும் இலவசமாக கிடைக்கிறது சானிடரி நாப்கின்ஸ். பெண்கள், எந்தக் கூச்சமும் இல்லாமல் ஒரு வித சுதந்திர மகிழ்ச்சியுடன் பயமில்லாமல் நடப்பது அமிக்கா என்ற இளம் பெண்ணின் சமூக போராட்டம் தான்.

20210517195032696.jpg
21 வயதான அமிக்கா ஜார்ஜ், இளம் பெண்களுக்கான போராளியாக மாறியுள்ளார். இங்கிலாந்து மகாராணி பிறந்த நாள் கௌரவ விருதான "Member of the Order of British Empire” (MBE) இவரின் கல்வி சேவைக்கு கொடுக்கப்பட்ட விருது என்பது இந்திய நாட்டுக்கும் பெருமை. தற்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இந்திய ஏகாதிபத்திய வரலாற்றை படித்து கொண்டிருக்கும் அமிக்கா ஜார்ஜ், பெண்கள் தங்களின் மாத பிரச்சனையான பிரியட்ஸை மறந்து ஜாலியாக இருப்பதை ரசித்து கொண்டிருக்கிறார்.

20210517195149948.jpg
பில்கேட்சின் நிறுவனமான Gates Foundation Goalkeper விருதை அமிக்கா ஜார்ஜ்க்கு பில்கேட்ஸ் தன் கரத்தால் கொடுத்து கௌரவித்துள்ளார்.

அவர் தற்போது இங்கிலாந்தின் ஹீரோயின் மற்றும் பிரபல செலிபிரிட்டி.

நீலகிரி மேற்கு ரோட்டரி சங்கத்தை சார்ந்த ஆனந்தியிடம் பேசினோம்...

20210517200139909.jpg
“இங்கிலாந்து பெண், அதிலும் ஒரு கல்லுரி மாணவி.. ஏழை பெண்களுக்காக மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியுள்ளார். ஏதோ வரதட்சணை கொடுமை, பாலியல் கொடுமை போன்ற விஷயங்களுக்கு போராடுவது வழக்கத்தில் உண்டு. ஒரு வெளிநாட்டில்... நம் இந்திய மாணவி அமிக்கா, பெண்களின் மறைவான ஒரு மாதவிடாய் பிரச்னையை கூர்ந்து கவனித்து, அதற்காக ஒரு பெரிய போராட்டத்தை நடத்தி, இங்கிலாந்து அரசை திரும்பிப் பார்க்க வைத்தது பெரிய விஷயம். இவரின் போராட்டத்தால் சானிட்டரி நாப்கின்களை அரசு இலவசமாக கொடுப்பது அமிக்காவிற்கு கிடைத்த மிக பெரிய கெளரவம். அது தான் விருதும் கூட...

மாதவிடாய் என்றால் தீண்ட தகாதது என்று பார்க்கும் சமுதாயம்... பணக்கார நாடு என்று நாம் நினைத்து கொண்டிருக்கும் இங்கிலாந்தில் சானிட்டரி நாப்கின் வாங்க முடியாமல் தவிக்கும் பெண்களை நினைத்தால்... இங்கிலாந்து நாடும் ஒரு ஏழ்மையான நாடு தான் என்பதை அமிக்கா ஜார்ஜ், தன் கௌரவ போராட்டத்தின் வாயிலாக பிரதிபலித்துள்ளார். எங்கள் ரோட்டரி கிளப் மூலம் நிலையான மாதவிடாய் அல்லது சிகப்பை பச்சையாக மாற்றும் ஒரு திட்டத்தை நானும் ரொட்டேரியன் மீனாட்சியும் இணைந்து துணி நாப்கின்களை அறிமுகப்படுத்தி, தேயிலை எஸ்டேட்டுகளில் பணிபுரியும் பெண்களுக்கு அறிமுகம் செய்தோம். இந்த துணி நாப்கின்கள் ஐந்து வருடத்திற்கு யூஸ் செய்யலாம்... தற்போது பெண்கள் யூஸ் செய்யும் சானிடரி நாப்கின்கள் ஆபத்தானது. அதில் பிளாஸ்டிக் இருப்பதால்

, உடல் நலத்திற்கு கேடு. இதை கூட அமிக்கா அவரின் நாட்டில் அறிமுகம் செய்யலாம். தனிப்பட்ட பெண்கள் அமிக்காவாக எழுந்து நிற்க வேண்டும்” என்று முடித்தார்.

பிரீடம் பிரம் (Freedom Firm) அமைப்பின் தேசிய இயக்குநர் கேத்தரின் ராஜாவை தொடர்பு கொண்டு கேட்டபோது...

20210517200316792.jpg

“இங்கிலாந்தில் பள்ளி மற்றும் கல்லூரி பெண்களுக்கு தங்களின் மாத பிரியட்ஸ் நாட்களில் இப்படிப்பட்ட கொடூரத்தை அனுபவிக்கிறார்கள் என்பது வேதனையான ஒன்று... அவர்களின் நிலைமையை உணர்ந்து, நம் நாட்டின் மகள் அமிக்கா ஜார்ஜ் போராடிய விதம் மெய்சிலிர்க்க வைத்து விட்டது. வசதியானவர்கள் வாழும் நாடு என்று தான் நாமெல்லாம் கற்பனையில் இருக்கிறோம். ஒரு சானிட்டரி நாப்கின் வாங்க அவர்கள் படும் பாடு தெரியும்போது.. அந்த நாடும் ஏழ்மையில் சுழல்கிறது என்பது தெரிகிறது... அந்த ஏழ்மையைப் புரிந்து கொண்டு தனி ஒரு பெண்ணாக போராடி நீதிமன்றம், மீடியா மற்றும் அரசை ஈர்த்து வெற்றி பெற்றுள்ளார் என்பது, அவருக்கு கிடைத்துள்ள விருதை விட பெரியது. அவருக்கு பின் ஒரு லட்சத்து எண்பத்தியிரம் பெண்கள் அணிவகுத்து, இங்கிலாந்து அரசை திரும்பி பார்க்க வைத்து, இன்று அவரும் பிரிட்டிஷ் அரசின் ஒரு அங்கம் என்பது நமக்கும் பெருமையான விஷயம்.

நம் நாட்டில் ஏழை குழந்தைகளின் நிலைமை படு மோசம். பெரும்பாலான பள்ளிகளில் டாய்லட் வசதி, தண்ணீர் கூட கிடையாது. அதனால் பள்ளி செல்லும் பெண் குழந்தைகள், பிரியட்ஸ் நாட்களில் பள்ளிக்கு போவது இல்லை. காரணம் சானிட்டரி நாப்கின் ஒரு விஷயம் என்றால்.. பள்ளிகளிலும் எந்த வசதியும் இருப்பதில்லை. இதைப் பலமுறை, மத்திய மனித வள மேம்பாடு துறையிடம் வலியுறுத்தியிருக்கிறோம். ஏன் பெற்றோர்களும், ஆசிரியர்களும் இதை பற்றி கவலை படுவது இல்லை. கிராமத்து பள்ளிகள் மட்டுமல்லாமல், நகர பள்ளிகளிலும் இதே நிலைமை. டெல்லி அரசு, மாணவிகளின் நிலைமையை புரிந்து கொண்டு, இலவசமாக சானிடரி நாப்கின்களை வழங்கி வருகிறது. அதை போல கடந்த தமிழ்நாடு அரசு, கிராமத்து பள்ளிகளுக்கு இலவசமாக நாப்கின்களை வழங்கி வந்தது. தற்போது முதல்வர் ஸ்டாலின், அனைத்து பெண்கள் பள்ளி, கல்லுரிகளிலும் சானிட்டரி நாப்கின் இலவசமாக வழங்கப்படும் என்று கூறியிருப்பது பாராட்டுக்கூறியது. அதே சமயம்... மத்திய அரசு பெண்களின் நிலைமையை புரிந்து கொண்டு, நாப்கின்களுக்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி குறைத்துள்ளது. பள்ளி, கல்லூரி செல்லும் பெண்பிள்ளைகளின் நலனில், நாம் போராடாமலேயே அக்கறை காட்டுவது நல்ல விஷயம். அமிக்கா ஜார்ஜ் போல நம்மை போராட வைக்கவில்லை நம் அரசு. அதே சமயம் இன்னும் நாட்டின் கண்களான பெண்களுக்கு பாதுகாப்பு தேவை” என்று முடித்தார்.

2021051720091925.jpg
நீலகிரியில் அருவங்காட்டில் உள்ள புனித அன்னாள் பெண்கள் மேல்நிலை பள்ளியில், மாணவிகளுக்கு இலவசமாக சானிடரி நாப்கின்கள் வழங்குகிறார்கள். உபியோகிக்கும் நாப்கின்களை, அழிக்கும் இயந்திரத்தை லயன்ஸ் கிளப் கொடுத்து உதவியது, மிகவும் பலன் அளிக்கிறது என்கிறார் ஒரு ஆசிரியை. எங்க பள்ளி மாணவிகள் பிரியட்ஸ் காரணமாக பள்ளிக்கு வராமல் இருப்பது இல்லை. அவர்களுக்கு அதை பற்றிய பயமும் இல்லை. நாங்கள் நிறைய விழ்ப்புணர்வை கொடுத்து உதவுகிறோம் என்று கூறினார்.

இந்திய வம்சாவளி அமிக்கா ஜார்ஜ், இங்கிலாந்து நாட்டு பெண்களுக்கு உதவியதை அந்த நாட்டு பள்ளி, கல்லுரி மாணவிகள் பாராட்டியபடி உள்ளனர்.