மிஸ்டர் ரீல் தில்லியில் மம்தா பானர்ஜியை பார்க்கப் போனபோது... “எம்எல்ஏக்களை எல்லாம் தனியா விட்டுட்டு, மூன்று நாட்கள் டெல்லி வந்து இருக்கீங்களே... அமித்ஷா அங்கு ஏதாவது கோக்குமாக்கு வேலை செய்து எம்எல்ஏக்களை தூக்கி, ஆட்சியை கவிழ்க்க போறார்” என்று சொன்னதும்....
மம்தா பானர்ஜி... “ஏன்... இப்படி பயமுறுத்துகிறீர்கள். நான் புறப்படுவதற்கு முன்பே அமித்ஷாவை தொடர்பு கொண்டேன். உங்களுக்கு அந்த மாதிரி ஏதாவது திட்டம் இருக்கா என்று கேட்டேன். அதற்கு அவர், அதெல்லாம் இல்லை... இப்ப எம்எல்ஏக்கள் எல்லோரும் நான் தான் முதல்வர் என்று போட்டி போடுகிறார்கள், ஒரே தலைவலியா இருக்கு. அதனால நீங்க தைரியமா வரலாம், சோனியா மற்றும் ராகுல் காந்தியை பாருங்கள்.. கெஜ்ரிவாலை பாருங்கள்... நீங்க அப்படி பேசி, அவர்களை உசுப்பி விட்டால் தான் நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஜடியா செய்வதற்கு சுவாரசியமாக இருக்கும். நீங்க வரும் போது நாலு டப்பா ரசகுல்லா மட்டும் வாங்கி வந்திருங்க என்றுகேட்டுக் கொண்டார்” என்றார்.
உடனே மிஸ்டர் ரீல்... “ரசகுல்லா வாங்கி வந்தீர்களா” என்று கேட்டார். அதற்கு மம்தா... “வாங்கிக் கொண்டு வந்து பிரதமரிடம் தந்து விட்டேன். அவர் அமித் ஷாவுக்கு அனுப்பி விட்டார்” என்றார்.
நீங்கள் தான் பிரதமர் வேட்பாளர் என்று ஒரு பேச்சு உலா வருகிறது என்று மிஸ்டர் ரீல் கேட்க... உடனே மம்தா பானர்ஜி... “நான் என்றைக்கும் தொண்டன் தான். தலைவன், தலைவி பதவி ஆசை எல்லாம் இல்லை” என்று சொல்ல... உடனே மிஸ்டர் ரீல், அவரை நம்பாமல் பார்க்க... அப்போது மம்தா பானர்ஜி... “மூணு முறை முதல்வர், இரண்டு மூன்று முறை மத்திய அமைச்சர். இந்தப் பதவி எல்லாம் அலுத்து விட்டது. உங்க அடுத்தக்கட்ட குறி பிரதமர் நாற்காலி என்று பிரசாந்த் கிஷோர் விருப்பப்படுகிறார். மற்றவர் ஆசைகளை நிறைவேற்றுவதை நான் எப்போதும் என் கடமை என்று நினைக்கிறேன்” என அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னதும்....
மிஸ்டர் ரீல்... “பாவம் ராகுல் காந்தி.. ரொம்ப நாளா அந்த நாற்காலி மீது கண் என்று சொன்னபோது”... மம்தா... “கண், காது, மூக்கு எல்லாம் வைக்கலாம். ஜனங்கள் அவரை ஏத்துக்கணுமே... ரெண்டு தொகுதியில் போட்டியிட்டு, ஒரு தொகுதியில் தான் ஜெயித்தார். தவிர.. கட்சி தலைவர் பதவிக்கு ரொம்ப யோசிக்கிறார்.. இப்படி நிறைய பிரச்சனை இருக்கு” என்றார்.
நீங்கள் என்னை சந்தேகமாக பார்க்கறா மாதிரி தெரியுது. பிரதமர் நாற்காலி மீது எனக்கு இந்த கண், முக்கு எல்லாம் கிடையாது. அதை நீங்கள், நம்பிதான் ஆகவேண்டும் என்றார் மம்தா பானர்ஜி.
உடனே மிஸ்டர் ரீல்... அப்புறம் “எதற்கு டெல்லியில் மூணு நாள் முகாம்” என்று கேட்க... அதற்கு மம்தா பானர்ஜி... “பிரதமர், நிதின் கட்காரி, சோனியா, ராகுல் காந்தி, கெஜ்ரிவால், கனிமொழி... இது தவிர... காந்தி, நேரு, ராஜிவ் காந்தி சமாதியில் அஞ்சலி”னு கொஞ்சம் பிஸி என்று சொல்ல...
உடனே மிஸ்டர் ரீல்... “தாஜ்மகால் போகலையா” என்று கேட்டபோது... அதற்கு மம்தா பானர்ஜி... “தாஜ்மகால் போனால், அடுத்த தேர்தலில் இந்து ஓட்டு கிடைக்காது என்று பிரசாந்த் கிஷோர் பயமுறுத்தி விட்டார்” என்று சொல்ல...
அப்போது மிஸ்டர் ரீல்... சரி, “பிரதமர் என்ன சொன்னார்” அதை சொல்லுங்கள் என்று கேட்க... அதற்கு மம்தா பானர்ஜி... “உங்களை மாதிரி நான் பாதியில் எழுந்து போகமாட்டேன். என் மீது என்ன குறை இருந்தாலும், தைரியமா என்னை நீங்கள் திட்டலாம்” என்று சொன்னார். அவர் ஆசைபடுகிறார் என்று அவரை நான் திட்டவில்லை என்றும் சொன்னார்.
உடனே அப்புறம் என்று கேட்க... அதற்கு மம்தா பானர்ஜி... “நீங்கள் நல்லவர், வல்லவர், சிறுபான்மை மக்கள் காவலர். நீங்கள் பதிமுணு முறை, அமித்ஷா பதினேழு முறை மேற்கு வங்காளம் வந்து பிராச்சாரம் செய்ததால் தான், நான் முதல்வர் ஆனேன், ரொம்ப நன்றி” என்று சொன்னேன். அப்ப பிரதமர்... “நீங்கள் தான் தேர்தலில் தோற்று போய்விட்டிர்களே” என்றார். நான் உடனே.. “வரும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன்” என்று சொன்னேன். அதற்கு அவர்... “இடைத்தேர்தலில் கூட நீங்கள் ஜெயிக்கிறது கஷ்டம் தான்னு தேர்தல் ஆணையம் சொல்லுவதே” என்று சொல்ல... நான் உடனே... “நீங்கள் தேர்தல் ஆணையம் பேசியதை ஒட்டு கேட்டிங்களா” என்று கேட்க... அதற்கு அவர்.. “நான் ஒட்டு எல்லாம் கேட்கவில்லை. கிராஸ் டாக்கில் என் காதில் விழுந்தது” என்றார். இப்படி “நான் முதல்வராவது பிரதமர் மோடிக்கு பிடிக்கவில்லை. அதான் பேசாம பிரதமர் பதவியில் உட்காரலாம்னு பார்க்கிறேன்” என்று சொல்ல...
இது தவிர.. கனிமொழி அக்கா, “நீங்கள் என்னை எப்படியாவது மத்திய அமைச்சர் ஆக்கிடணும்னு கேட்டாங்க. நான் உடனே சரி என்று வாக்கு தந்து விட்டேன். அதனால் தான் பிரதமர் ஆகவேண்டும்... மற்றபடி எனக்கு பதவி ஆசை எல்லாம் இல்லை” என்று சொல்ல... மிஸ்டர் ரீல், பாவம் எதுவும் பேசாமல் வந்து விட்டார்.
Leave a comment
Upload