தொடர்கள்
கதை
போலீஸ் பக்கிரி... – பா.அய்யாசாமி

20210630213932494.jpeg

மல்லியக் கொல்லை கிராமம், காலை நேர டீக்கடையில் கூட்டம்கூடி அன்றைய விவசாயப் பணிகளைப்பற்றி விவதித்துக் கொண்டிருந்தனர் கிராமத்து மக்கள்.

இரு சக்கர வாகனத்தில் வந்திறங்கிய இருவர் “இரண்டு டீ” என ஆர்டர் செய்துவிட்டு, கிராமத்து நாட்டாமை யாரு? என விசாரித்தனர்.

என்ன விஷயம் எனக் கேட்டார் பெரியவர் ஒருவர்.

உங்க ஊரிலே சினிமா சூட்டிங் இருக்கு, அதற்கு தகவல் சொல்லணும்.

என்ன படம்? யாரெல்லாம் வராக? ஆர்வம் மேலிட்டது பெரிசுகளுக்கு.

ஏன்? அங்கே வந்து பாரு பெரிசு என நாட்டாமை இருப்பிடத்தை தெரிந்துக் கொண்டு தகவல் சொல்வதற்குள், ஊருக்கே செய்தி சென்று சேர்ந்திருந்தது. அந்த இனியச் செய்தி பக்கிரி காதிற்கும் போய்ச் சேர்ந்தது,

பக்கிரி, படிக்கும் காலத்தில் காவல்ஆய்வாளர் ஒருவரைப் பார்த்து சுய உந்துதலினால் தாமும் அவர் போல் போலீஸாக வேண்டும் என்று வெறியோடு, விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற்று, தன் உடல் மற்றும் திறனை வளர்த்துக்கொள்ள முயற்சிசெய்து செய்தே செய்.....தே படிப்பை பாதியில் விட்டுவிட்டான். போலீஸ் வேலைக்கு முயற்சி செய்தபோது உயரம் போதுமானதாக இல்லை என நிராகரிக்கப்பட்டு, கனவு தகர்ந்து, குடும்ப சூழ்நிலையால் விவசாயப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுவிட்டான். ஆனால் போலீஸ் உடைமீது மட்டும் தீரா காதல் இருந்தது,

வருடா வருடம் தீபாவளிக்கு புத்தாடை எடுப்பதே போலீஸ் சீரூடைதான்,
தனது இருபது வயதிலிருந்து சீருடையில் காக்கிசட்டை கமலஹாசன் முதல் சிவகார்த்திகேயன் வரை படங்களை சேகரித்து வீட்டில் வைத்திருந்தான்.

யாரோ ஒருவரின் தூண்டுதலில் சினிமாவிலாவது போலீஸாக நடிக்கலாம் எனும் கனவில் சென்னைக்குப் போய் வாய்ப்புதேடி அலைந்து, சினிமா, சீரியல் என எதுவும் கைகூடாமல் திரும்பியவன்... மணமாகி, தன் இரு பிள்ளைகளில் ஒரு பிள்ளையாவது போலீஸாக வேண்டும் என்ற ஆசையோடு இருக்கிறான் பக்கிரி.

தற்போது வயது ஐம்பாதாகிறது. இந்த முப்பது வருடத்தில் அவனிடம் அத்தனை வயதிற்கான அளவிலும் போலீஸ் சீருடைகள் இருக்கின்றன.

தீபாவளி அன்று அந்த உடையை போட்டுப் பார்த்து ஒருபுகைப்படம் மட்டும் எடுத்து வீட்டில் மாட்டிவைத்துக் கொள்வான். இதனால் பக்கிரியோடு் போலீஸ் என்ற அவனது லட்சிய வார்த்தை அடைமொழியாகிப் பெயரோடு சேர்ந்து ஊரில் ‘போலீஸ் பக்கிரி’ என்றாகிப் போனான்.

கிராமத்தில் படப்பிடிப்பு போலீஸ் சார்ந்த கதை என தெரிய வரவும், ரொம்ப சந்தோஷமடைந்த பக்கிரி கூட்டத்தை பிளந்துக்கொண்டு வந்து நின்ற காரிலிருந்து இறங்கியவரைப் பார்த்தான். குடையோடும், நாற்காலியோடும் உடன் ஒருவர் ஓடிவர... அமர்ந்தபோது தெரிந்தது அவர்தான் அந்தப் படத்தின் இயக்குநர் என்று.

தன் நீண்ட நாள் கனவை நிறைவேற இறைவன் அனுப்பியவர் இவர்தான்
என நினைத்து அவரைஅணுகி, அய்யா, இதுபோலீஸ் பற்றிய படமா? கேட்டான் பக்கிரி.

ம். என்றார் இயக்குநர்.

தன் ஆசையை விலாவரியாகச் சொன்னான் பக்கிரி.

ஓ.. ஒ என இயக்குநர் சொல்ல,

தன் வாழ்நாள் கனவை அவரிடம் சொன்னபிறகும், அவரின் பதிலில் பக்கிரிக்கு ஏனோ திருப்தியாக இல்லை

விரக்தியோடு திரும்பியவனை, தடுத்து நிறுத்தினார் இயக்குநர்.

இப்போ இந்த வயசிலே போட போலீஸ் உடை இருக்கா எனக் கேட்டார்.

இன்னும் தீபாவளி வரலைங்களே! என்றான் வெள்ளந்தியாக பக்கிரி.

போய் தைத்து வா வாய்ப்பு தருகிறேன் என்ற இயக்குநரின் ஒற்றை வார்த்தையில்...

வேட்டையாடு விளையாடு கமல், சாமி 2 விக்ரம் எல்லாம் வந்து போனார்கள் பக்கிரியின் கண்முன்னே சிறிது நேரத்திற்கு.

ஏட்டு யூனிபார்ம் போட்டு, ஒரு பாஸ்போர்ட்சைஸ் போட்டோ எடுத்துகிட்டு வா எனஅவனை அனுப்பி வைத்தார்.

இறைவா, நீ செய்துட்டே நிறைவா. நிஜத்திலே போலீஸாக முடியாமல் போனாலும் நிழலிலாவது என் கனவை இப்படி என் சொந்த ஊரிலே நிறைவேற வாய்பளித்தமைக்கு நன்றிஅய்யா! என கண் கலங்கியபடி வீட்டிற்கு திரும்பினான்.

அன்று மாலையே போட்டோவோடு ஓடினான் இயக்குநரிடம் கொடுக்க,
அதை வாங்கியவர்...

நல்லா இருக்குயா! மீசை எல்லாம் அருமையா வந்திருக்கு, நீதான் ஹீரோவோட போலீஸ் அப்பா எனக் கூறிட... பக்கிரி மகிழ்ச்சிக் கடலில் மிதந்தான். அவனுக்கு கிடைத்த அந்த வாய்பில் கிராமமே மகிழ்ந்திருந்தது.

அது முதல் அந்த யூனிட் ஆட்களுக்கு நல்ல கவனிப்பு, மரியாதை செய்தது கிராமம்.

பண்ணை பங்களாவில் நாளைசூட்டிங், ஹீரோவுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு, என்ற யூனிட்டார் பக்கிரியை நேரத்திற்கு வந்திடுங்க என சொன்னிதில்... இரவு தூக்கம் காணாமல் போனது பக்கிரிக்கு.

இரவு முழுவதும், போலீஸ் போல் கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்தியபடியும், மீசையை முறுக்கிவிட்டும், புஜங்களை ஏற்றி ஏற்றிப் பார்த்ததில் குடும்பமே அவரின் ஆர்வத்தைப் பார்த்து ரசித்தது.

விடிந்தால் தன் கனவு நிறைவேறப் போகும் நாள், என்ற நினைப்பே அவன் தூக்கத்தை தடை செய்தது.

சீக்கிரமே காலையில் எழுந்து, ஏட்டு சீருடையைப் போட்டுக்கொண்டு சூட்டிங் ஸ்பாட்டிற்கு விரைந்த பக்கிரியை, கிராமமே வாழ்த்தி அனுப்பியது.

அங்கே ஆயத்தப் பணிகள் நடந்துக் கொண்டிருக்க, ஹீரோவோட அப்பா வந்தாச்சு, என்ற தகவல் இயக்குநர் காதிற்கு போய் சேர்ந்தவுடன்... உதவி இயக்குநரை அழைத்து, ஏதோ தகவல் சொல்லி... அவர்கள் இருவரும் பக்கிரியைப் பார்த்து ஏதோ பேசினார்கள்.

நீங்கள் வீட்டில் இருப்பதாகவும், ஹீரோ வந்து உங்களைப்பார்ப்பதாக ஸீன், என்ற உதவி இயக்குநர், இந்த உடையைக் கழற்றி விடுங்கள், வேட்டி மட்டும் அணிந்துக் கொண்டு வாருங்கள் எனச் சொல்லி வேட்டியைக் கொடுத்து அந்த அறையைக் காட்டினார்.

இயக்குநரிடம் கொடுத்த பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் பெரிய சைஸில் டெவலப் செய்து, பிரேம் செய்யப்பட்டு சந்தனம் குங்குமம் வைத்து மாலையிட்டு டேபிளில் வைத்து இருந்ததையும், அதன் முன்னே கூலர்பாக்ஸ் இருந்தததையும் பார்த்த பக்கிரிக்கு, மனசு கணத்து துக்கம் தொண்டையை அடைக்க... செருமிக் கொண்டே, வேட்டியை மட்டும் அணிந்துக் கொண்டு, தொங்கிக் கொண்டிருந்த சீருடையை ஏக்கமாகப் பார்த்தபடி ஹீரோவின் வருகைக்காக யூனிட் ஆட்களோடு ஆளாக காத்திருந்தான் ‘போலீஸ் பக்கிரி’.

காவலர் பணிக்கு உயரம் ஒரு தடையாக இருந்தாலும், காவலராக நடிக்கவாவது வேண்டும் என்ற எண்ணமும், ஆர்வமும் வலுமையாக இருப்பதால் நல்லவாய்ப்புகள் மேலும் கிடைக்கும் என நாமும் நம்புவோம். வாழ்த்துவோம்.