கடந்த ஞாயிற்று கிழமை காலை 11 மணிக்கு ‘மான் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பாரத பிரதமர் மோடி, நீலகிரி - குன்னூரை சேர்ந்த ராதிகா சாஸ்திரி என்னும் பெண் செய்யும் சமூக சேவையை பாராட்ட... நாடே அவர் யார் என்று தேடும் அளவுக்கு பிரபலமடைந்துள்ளார்.
பிரதமர் பாராட்டிய அந்தப் பெண் குன்னூரில் வசிக்கும் ராதிகா சாஸ்திரி, ஒரு சமூக சேவகர். நீலகிரியில் ஏற்பட்ட வெள்ளம்... நிலச்சரிவு... பின் கொரோனா காலத்தில், பல உதவிகளை தனி ஆளாக செய்து வந்தவர்.
குன்னூர் அரசு மருத்துவமனையில், ஆக்சிஜென் செறிவூட்டி சிலிண்டரை அமைக்க உதவி செய்துள்ளார். மேலும்... அதே மருத்துவமனையில், டயலைசிஸ் உபகரணங்கள் மற்றும் அதை பராமரிப்பதற்கான இடத்தையும் கட்டி தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் ‘மான் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் இவரை பாராட்டும் அளவுக்கு என்ன செய்தார் என்று ஆச்சிரியமாக இருந்தது பலருக்கும்... ராதிகா சாஸ்திரி... ஆறு ஆட்டோ ஆம்புலன்ஸ் வாங்கி, நீலகிரி முழுவதும் மக்களின் அவசர சேவைக்கு அர்ப்பணித்துள்ளார்...
இந்த ஆட்டோ ஆம்புலன்ஸ் ‘அம்பர்க்ஸ்’ என்ற சிறிய ரக ஆம்புலன்ஸ். மலை மாவட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்வியா பாராட்டி, அந்த சேவையை அவரும், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனும் துவக்கி வைத்துள்ளனர்.
நாம் ராதிகா சாஸ்திரியை தொடர்பு கொண்டு பேசினோம்... “என்னைப் பற்றி பாரத பிரதமர் மோடி ‘மான் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பேசி இருப்பதை நான் கேட்கவில்லை. பின்னர் தான் கேள்விப்பட்டு சற்று இன்ப அதிர்ச்சி அடைந்தேன்” என்று கூறி தொடர்ந்தார்....
மலை பிரதேசமான நம் நீலகிரி மாவட்டத்தில், சிறிய ரோடுகள் பாதைகள் தான் உள்ளன. சில இடங்களில் கர்ப்பிணி பெண்களை துரி வைத்து தூக்கி கொண்டு வரும் கஷ்டங்களும் நடந்து வருகின்றன. பெரிய ஆம்புலன்ஸ் போக முடியாத இடங்களும் உள்ளன. இதைப் பற்றி கேள்வி பட்டு என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் போது தான், ஜபல்பூரில் இந்த சிறிய அம்பர்க்ஸ் ஆட்டோ ஆம்புலன்ஸ் குறுகிய சாலைகளில் சென்று நோயாளிகளை ஏற்றி மருத்துவமனைகளுக்கு அழைத்து வருவதை படித்தேன். பின்னர் அந்த ஹை டெக் ஆட்டோக்களை தயாரிக்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசினேன்... அதன் மாடல்களை எனக்கு அனுப்பி வைத்தார்கள். அதை ஓகே பண்ணி... அவசர சிகிச்சை மற்றும் உடனடி மருத்துவமனை சேர்ப்பது தான் அதன் குறிக்கோள். உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் கிடையாது.
நோயாளியை படுக்க வைப்பதற்கான வசதி... உடன் நர்ஸ் மற்றும் உதவியாளர் அமர இடம் உண்டு. ஆக்சிஜென் சிலிண்டர் உண்டு. தடினமான தார்பாலின் பொருத்தப்பட்டு, ஓட்டுனருக்கு டோர் பொருத்தப்பட்டு, அவசர சிகப்பு சூழல் விளக்கு... சைரன் எல்லாம் உண்டு. ஆட்டோ போல இல்லாமல், சற்று நீளமாக அமைந்துள்ளது. குறுகிய பாதையில் சுலபமாக போய்வர மிகவும் உதவும் இந்த ஆட்டோ ஆம்புலன்ஸ்...
இதன் விலை மூன்றரை லட்சம்... நம் மாவட்டத்திற்கு என்று ஆறு ‘அம்பர்க்ஸ்’ ஆட்டோ ஆம்புலன்ஸ் வாங்கினேன். கோத்தகிரி கேஎம்எஸ் மருத்துவமனைக்கு ஒன்று, குன்னூரில் ஒன்று, கூடலூருக்கு என்று ஒன்று.. ஊட்டிக்கு 108 என்ற பேனரில் ஒன்று, கிராமப்புறங்களுக்கு ஒன்று
மற்றும் எஸ்டேட் பகுதிகள், வனப்பகுதி பக்கம் சென்று வர ஒன்று என்று மொத்தம் ஆறு ஆம்புலன்ஸும் சேவையை துவக்கிவிட்டது. அந்தந்த ஓட்டுனர்கள் இந்த ஆம்புலன்ஸ்களை பார்த்து பராமரித்து கொள்ளவேண்டும்... இதுவரை அறுபது நோயாளிகளை, இந்தப் புதிய ஆட்டோ ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சரியான நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்பது நல்ல விஷயம். சரிதானே.. இதில் நான் செய்தது... அந்த ஆட்டோ ஆம்புலன்ஸ்களை வாங்கிக் கொடுத்தது தான்” என்று கூலாக கூறுகிறார்.
டேராடூனை சேர்ந்த ராதிகா சாஸ்திரி குன்னூரில் செட்டில் ஆகி பல வருடங்கள் ஓடிவிட்டன ..வண்டிசோலை பகுதியில் தனியாக வாழும் இவர் ஒரு காபி ஷாப் நடத்தி வருகிறார் ... அந்த பகுதியில் இருக்கும் பெண்கள் கல்லூரி மாணவிகளுக்கு சுவையான காபி இடம் அது ..அதே போல குன்னூர் வாசிகள் அடிக்கடி விசிட் செய்வது ராதிகா சாஸ்திரியின் காபி ஷாப்பை தான் ..வெலிங்டன் ராணுவ மையத்தின் அதிகாரிகள் குடும்பத்துடன் ஞாயிற்று கிழமைகளில் இவரின் காபி ஷாப்பில் ஆஜர் ஆகுவதை மறப்பது இல்லையாம் !...
தனிமையில் இருக்கும் ராதிகா சாஸ்திரி .. நிறைய சமூக சேவையில் ஆர்வம் கொண்டுள்ளார் ... ஒரு மிக பெரிய சமூக தொண்டை அர்ப்பணித்து விட்டு புன்னகையுடன் அடுத்த ப்ராஜெக்ட்டிற்கு தன்னை தாயார் படுத்தி கொண்டிருக்கிறார் இந்த குன்னூர் பெண்மணி ....
-ஸ்வேதா அப்புதாஸ்..
Leave a comment
Upload