உடலை வருத்தி பக்தி செய்யாமலும், சிவத்தொண்டு செய்யாமலும், இசையால் சிவபெருமானை வணங்கி நாயன்மார்கள் வரிசையில் இடம்பெற்றவர் ஆனாய நாயனார்.
இசையில் திறமையுடைய ஆனாய நாயனார், அந்த இசையையே சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து பேரின்பத்தை அடையலாம் என்பதற்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்தார்.
இவர் சிவபெருமான் மீது கொண்ட பக்தியினால், நமசிவாய என்னும் ஐந்தெழுத்தினை புல்லாங்குழலில் உள்ளம் உருக வாசிப்பதை தனது பொழுது போக்காகக் கொண்டிருந்தார்.
இவர் கிபி ஏழிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டுக்குள் வாழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்ட தொகையில் ‘அலைமலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன்’ என்று புகழ்கிறார்.
ஆனாய நாயனாரின் இசை பக்தி:
ஆனாய நாயனார், சோழ வள நாட்டில் உள்ள திருமங்கலம் என்னும் திருத்தலத்தில் ஆயர் குலத்தில் பிறந்தவர். தற்போது தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருமங்கலம் என்னும் திருத்தலம் லால்குடி ரயில் நிலையத்திலிருந்து வடமேற்கில் சுமார் 4 கிமீ தொலைவில் உள்ளது.
ஆனாய நாயனார் ஆனிரைகளை (பசு மந்தை) நிரம்பப் பெற்றிருந்தவராதலால்தான் ஆனாயர் என்னும் நாமத்தைப் பெற்றார்.
ஆனாயர் சிவனைத் தனது முழுமுதற்கடவுளாக கொண்டு.
தினமும் சிவபெருமானை வணங்கி திருநீறு இட்டு, தன்னுடைய குலத் தொழிலான மாடுகளை காலை வேளையில் பசுக்களை முல்லை நிலத்துக் காடுகளில் மேய விட்டு, மாலையில் அழைத்து வருவார். பசுக்கள் மேய்ந்து கொண்டிருக்கும் நேரங்களில், சிவபெருமானை மனதில் நினைத்து புல்லாங்குழல் இசைப்பதை வழிபாடாகக் கொண்டு வாழ்ந்தார்.
சிவபெருமானுக்கு குழல் இசை அர்ப்பணம்:
ஒரு நாள் பசுக்களுடன் காட்டுக்கு வந்த ஆனாயர், தம் எதிரிலே பொன்னிற மலர்கள் பூத்துக் குலுங்கும் கொன்றை மரம் ஒன்றைக் கண்டார். கொத்துக் கொத்தாக பூக்கள் நிறைந்து விளங்கிய கொன்றை மரத்தைக் கண்டவுடன், ஆனாயருக்கு சடையுடன் கூடிய சிவபெருமானே நேரில் நிற்பது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று, உடனே அம்மரத்தை வலம் வந்து வணங்கினார். சிவபெருமானை நினைத்தபடியே தன்னுடைய புல்லாங்குழலில் திருஐந்தெழுத்தினை முறையாக பண் அமைத்து வாசிக்கத் தொடங்கினார். அவரது வாசிப்பில் புற்களை மேய்ந்த பசுக்கள் அவரை அடைந்து, மெய்ம்மறந்து நின்றன; பால் குடித்துக் கொண்டு நின்ற கன்றுகளெல்லாம் குடித்தலை மறந்துவிட்டு, இசை கேட்டுக் கொண்டு நின்றன, ஆங்கே காணப்பட்ட எருதுகளும், மான் போன்ற விலங்குகளும் அப்படியே அசையாமல் நின்றன. ஆடுகின்ற மயில்கள் அப்படியே ஆடாமல் நின்றன. மரத்திலுள்ள மலர்கள் எல்லாம் அசையாமல் நின்றன. புல்லாங்குழல் இசை விண்ணகத்தை முட்டியதோடல்லாமல் கயிலையில் அமர்ந்திருக்கும் சிவபெருமானின் திருச்செவிகளுக்கும் கேட்டது. ஆனாயரின் இசை வெள்ளத்திலே மெய்யுருகி ஆனாயரை ஆட்கொள்ள பார்வதி சமேதராய் சிவபெருமான் ரிஷப வாகனத்தில் காட்சி அளித்தவர், ஆனாய நாயனாரை குழலூதியபடியே தம்மை வந்தடைய அருளினார். பூமழை பொழிய, முனிவர்களும் தேவர்களும் துதிக்க, புல்லாங்குழல் இசைத்தபடியே சிவபெருமானுடன் சென்று மீளாத பேரின்ப வாழ்வு பெற்றார்.
குரு பூஜை நாள்:
பஞ்சாட்சரத்தை வேய்ங்குழலால் இசைத்து முக்தி பெற்ற ஆனாய நாயனார், சிவபெருமானோடு ஐக்கியமானது கார்த்திகை மாத ஹஸ்தம் நட்சத்திரம். ஆனாய நாயனாரின் குருபூஜை இவர் அவதரித்ததும், முக்தி அடைந்தும் ஆன திருச்சி லால்குடி அருகே உள்ள திருமங்கலத்தில் உள்ள உலக நாயகி சமேத சாமவேதீஸ்வரர் கோயிலில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்தக் கோயிலின் உட்சுற்றில் வடமேற்கே ஆனாயர் சிவப்பேறு எய்திய இடமுண்டு. அங்கே நாயனாருக்கு தனிக்கோயில் உண்டு. நாயனார் கொன்றை மரத்தின் நிழலிலே நின்று புல்லாங்குழல் வாசிக்கும் பாவனையில் மிக அழகான சிற்பமும் உண்டு.
இவரது குருபூஜை தினத்தன்று எல்லா சிவன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது.
“திருச்சிற்றம்பலம்”
அடுத்த பதிவில் இசைஞானியார் நாயனார்…
Leave a comment
Upload