‘உயிரினங்கள் ஓரறிவு என்கிற தொடுவுணர்விலிருந்து படிப்படியாக இரண்டறிவு, மூன்றறிவு, நான்கறிவு, ஐந்தறிவு என்று வளர்கையில் கேட்கும் திறன், வாசனை நுகரும் திறன், சுவையறியும் திறன், பார்க்கும் திறன் என்று பல்வேறு திரண்களை உள்ளடக்கிய உயிரினங்களை இயற்கை உருவாக்க ஆரம்பிக்கிறது...’
சிந்து பைரவி
பிரபலமான இந்த படத்தில் உள்ள சில கூறுகளை இங்கே அலசலாம். இதன் ஸ்கிரிப்டை.. பாலசந்தர், எழுத்தாளர் பாலகுமாரனோடு சேர்ந்து உருவாக்கினார். காரணம்... அவருக்கும் இரண்டு மனைவியர். இந்த கதையின் நாயகன் ஜே.கே.பி-க்கும் இரண்டு பெண்களோடு தொடர்பு இருக்கிறது. ஒருவர் மனைவி. மற்றொருவர் துணைவி. சிந்து துணைவி. பைரவி மனைவி.
கர்நாடக பாடகரின் ரசனைக்குரிய பெண் சிந்து. அவரின் லௌகீக வாழ்க்கையை பார்த்து பார்த்து செய்கிறவர் பைரவி. அவருக்கு ஒன்று பிடிக்காததால், இன்னொன்று தேவைப்படவில்லை. ஒன்று போதாததால், இன்னொன்று தேவைப்படுகிறது. அவரின் ரசனைக்கு இணையாக அவரோடு சங்கீதம், கர்நாடக பாடல்கள், தனிப்பாடல்கள் என சரிக்கு சரி சிந்துவால் விவாதிக்க முடியும். பைரவிக்கு கிஞ்சித்தும் அந்த ஞானம் கிடையாது. அவள் ஒரு அந்தக்கால மனுசியின் வார்ப்பு. கண்ணகி வழி வந்தவள். புல்லானாலும் புருஷன். கல்லானாலும் கணவன் என்று அவனுக்கு சிசுருஷை செய்வதே தன் பாக்கியம் என அவனின் காலடியில் சரண் புகுந்து கிடப்பவள்.
ஒரு வகையில் நவீன சிலப்பதிகாரம் என்று இந்தப் படத்தின் கதையை சொல்லலாம். இந்தக் கதையை பைரவி கோணத்தில் இருந்து பார்த்தால், என்ன உணர்வுகள் வருகிறது என்று பார்க்கலாம். ஜே.கே.பிக்கு என்ன நீதியோ, அது தானே பைரவிக்கும்?
பைரவிக்கு ஜே.கே.பி-யின் குழுவை சேர்ந்த கடம் வித்வான் டெல்லி கணேஷ் உடன் காதல் என்று வைத்துக் கொள்வோம். செக்சன் ஐ.பி.சி 497 படி திருமணத்திற்கு பிறகான கூடுதல் பாலுறவு ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் குற்றமாகாது என்று உச்ச நீதி மன்றம் சட்டமே கொண்டு வந்து விட்டது. அப்படி இருக்கையில், பைரவியும் தன்னை புரிந்து கொண்டிருக்கிற, தனக்காக வக்காலத்து வாங்கி நியாயம் கேட்க முனைகிற டெல்லி கணேஷ் மீது கனிவு வந்து, காதலாகிற பட்சம், ஜே.கே.பி அதை ஏற்றுக் கொள்வாரா?
இந்த கேள்விக்கு நம் முன் இருக்கிற ஒரே பதில். ஜே.கே.பி ஒரு ஆண். பைரவி ஒரு பெண். அவ்வளவு தான் விசயம். சிலப்பதிகாரத்தில் கோவலனாவது கண்ணகியிடம் திரும்பிய பிறகு மனதார மன்னிப்பு கேட்கிறான். ஆனால், இந்த ஜே.கே.பி பைரவியிடம் இறுதி வரை ஒரு முறை கூட மன்னிப்பு கேட்கவில்லை. ஜே.கே.பி, சிந்துவை நினைத்து உருகிக் கொண்டிருந்த வேளையிலும், அவரின் புகழுக்கு களங்கம் வந்து விடக்கூடாது.. தன்னுடைய கணவனுக்கு எது மகிழ்ச்சியோ, அதையெல்லாம் அவருக்காக கொண்டு வந்து தர சித்தமாகவே இருக்கிறாள்.
நவீன நளாயினி. தன்னுடைய கணவனுக்கு அழகிய மங்கையரோடு சரசமாட வேண்டும் என்கிற தீராத ஆவல். ஆனால், அவனோ நோயாளியாக, நடக்க முடியாதவனாக இருக்கிறான். நளாயினி ஒரு கூடையில் வைத்து ஒவ்வொரு தாசி வீடாக அவனை தூக்கிக்கொண்டு போயிருக்கிறாள். அப்படித்தான், இங்கே பைரவி, ஜே.கே.பி மகிழ்ச்சிக்காக சிந்துவை ஏற்றுக் கொள்ள முடிவெடுக்கிறாள்.
இதே விசயத்தை பைரவி நினைத்து கூட பார்க்க முடியாது. கண்ணகி காலத்திலிருந்தே இதே கதை தான். கண்ணகி தனிமையில் வாடிக் கொண்டிருக்கையில் இந்த சமூகம் அவளின் காதல் குறித்து, காமம் குறித்து கவலை கொள்ளவில்லை. அதே சமயம், அவள் தன்னுடைய கற்பை, தன்னை திருமணம் செய்து விட்டு, அம்போவென விட்டுவிட்டு சென்ற கோவலனுக்காகவே அர்ப்பணம் செய்தவளாய், தன்னுடைய காமத்தை அடக்கிக் கொண்டு கிடக்க வேண்டும் என்றே அன்றைய ஆணாதிக்க சமூகம் எதிர்பார்த்தது. இன்றைய ஆணாதிக்க சமூகமும் தேங்கி புரையேறி குமிளிகள் கொப்பளிக்கும் சாக்கடையாய், அதையே எதிர்பார்க்கிறது. காலம் மாறிக் கொண்டே வருகிறது. காட்சிகளும் தன்னை மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டே இருக்கின்றன. மாறுதல் ஒன்றே மாறாத விதி. ஆனாலும், இந்த ஆணாதிக்க சமூக மனநிலை மட்டும் பெண்களை உடல் அரசியல் மூலம் முடக்கி வைக்கிற கட்டுமானத்தில், எந்தவித மாற்றங்களுக்கும் தன்னை உட்படுத்தாமல் அப்படியே தேங்கி கிடக்கிறது.
இப்படத்தின் இணை கதாசிரியரான பாலகுமாரன் அவர்களை, பத்திரிகையாளர் ஞானி ஒரு முறை பேட்டி எடுத்தது இப்போதும் இணையத்தில் காண கிடைக்கிறது. அதில் அவர் பாலகுமாரனிடம் ஒரு கேள்வி கேட்பார். உங்களுக்கு இரண்டு மனைவிகள். அவர்களோடு ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்கிறீர்கள். இப்போது, உங்கள் மனைவியர்கள் இருவருக்கும், இன்னொரு கணவன் தேவைப்படுவதாக கற்பனை செய்து கொள்ளலாம். அப்படியான கற்பனை நிஜத்தில் அரங்கேறுகிற பட்சம், அதை அவர்கள் உங்கள் இருதார மணத்தை ஆதரித்தது போல, அவர்கள் இருவருக்கும் நடைபெறுகிற இருதார மணத்தை ஆதரிப்பீர்களா? என்று கேட்டார்.
அதற்கு பாலகுமாரன் நிச்சயமாக ஆதரிப்பேன். அப்படி என் மனைவியர்களுக்கு வேறு எவரோடும் காதல் ஏற்படுகிற பட்சம், சந்தோஷமாக அவரோடு போய் வாழும்படி அனுப்பி வைப்பேன் என்றார்.
உடனே, ஞானி அவர்கள் இன்னொரு கிளை கேள்வி கேட்டார். நீங்கள் இரண்டு மனைவிகள் வைத்துக் கொண்டு ஒரே வீட்டில் வசிக்கிறீர்கள். அவர்களும் தங்கள் தங்களுக்கு இரண்டு கணவர்கள் வைத்துக்கொண்டு ஒரே வீட்டில் வசிக்க கூடாதா? என்றார். அதாவது பாலகுமாரன் தன் இரண்டு மனைவியர்களின் கூடுதல் காதலர்களோடு மொத்தம் ஐந்து பேர் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ அனுமதிப்பீர்களா என்பது தான் அவர் கேட்ட கேள்வி.
உடனே பாலகுமாரன் அதிர்ந்து விட்டார். அதெப்படி ஒரே வீட்டில் வசிக்க முடியும். அவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காதல் ஏற்படுகிறபோது, பிரச்னையில்லாமல் அவர்களோடு, அவர்கள் செல்ல அனுமதிப்பது மட்டுமே தன்னால் இயலும். அவர்களை கூட வைத்துக்கொண்டு வாழவெல்லாம் முடியாது என்றார்.
உங்கள் முதல் மனைவி பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை. அவரையும் பிடிக்கிறது. அதேசமயம் உங்கள் இரண்டாவது மனைவியையும் ஒரே வீட்டில் வைத்து வாழ்வது உங்கள் முதல் மனைவிக்கு பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? உங்களால் முடியாத ஒரு விசயம் அவர்களாலும் முடியாது தானே? உங்களுக்கு ஒவ்வாத அல்லது பிடிக்காத ஒரு விசயம், அவர்களுக்கும் அப்படித் தானே இருக்கும் என்று கேட்டபோது... அவரால் அதற்கு சரியான பதில் சொல்ல இயலவில்லை.
அந்த காரசாரமான நேர்காணலின் முடிவில், ஞானி உங்களோட வீரியம் கொஞ்சங்கூட குறையல… நல்லா கிடுக்கிபிடி போட்டு மடக்குனீங்க.. என்னோட நேர்காணல்ல இது ஒரு முக்கியமான நேர்காணல்.. காத்திரமான நேர்காணல்.. என்னை பேசவிடாமல் திணறடித்த ஒரு நேர்காணல் என்று ஞானியின் கேள்வி கணைகளுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, அந்த நேர்காணலை முடித்துக் கொண்டு விட்டார்.
காரணம், ஞானி கேட்ட கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை. ஒரு ஆணாதிக்க சமூக மனநிலையில் வார்த்தெடுக்கப்பட்ட மனதிற்கு எத்தனை தான் அதில் ஈரமும், நேசமும், மனிதமும் கரைந்தோடினாலும், அந்த எல்லைக்கு மேல் பெண்ணுக்கான சுதந்திரத்தை வழங்க மனம் ஒப்பாது என்பதே அந்த நேர்காணலின் மூலம் அறிய முடிகிற சேதி.
அந்த அவருக்கான ஒருபக்க சார்புடைய நீதியையே, சிந்து பைரவி படத்தில் பைரவிக்கும் வழங்குகிறார். பைரவி அவரது மனைவியர்களை போல இரண்டு மனைவியரோடு ஒரே வீட்டில் தன் கணவரான ஜே.கே.பி வாழ்ந்து விட்டு போகட்டும். தான் நளாயினியாகவே இருந்து விட்டு போகிறேன் என்கிற முடிவிற்கு அவரை தானே நகர்த்தி விடுகிறார். அதோடு, எந்தவிதமான எதிர் கேள்வியும் கேட்க விடாதபடிக்கு, பைரவியின் கழுத்தை பிடித்து தள்ளி விட்டு விட்டார்.
அபூர்வ ராகங்கள், தப்பு தாளங்கள், மரோ சரித்திரா, வறுமையின் நிறம் சிவப்பு, புன்னகை, சிந்து பைரவி என பல குறிப்பிடும்படியான படங்களை கே.பாலசந்தர் இயக்கி இருக்கிறார் தான். அவரின் திரைக்கதை உத்தியில் அவர் சப் பிளாட்டுகள் உருவாக்கி, அதை அதற்கான குறிப்பிட்ட காலஅளவிற்குள் சொல்கிற சாமர்த்தியம் தமிழ் திரையுலகில் அவருக்கு உரித்தானது. அந்தக் கலை அவருக்கு அத்தனை கச்சிதமாக வரும்.
அதேபோல சிம்பாலிசம் என்கிற விசயத்திலும் கே.பி ஜித்தர். இதே சிந்து பைரவியிலேயே, அதற்கான ஒரு உதாரணத்தை பார்க்கலாம். ஜே.கே.பி என்கிற சங்கீத மேதைக்கு அவரின் சராசரித்தனங்கள் கொண்ட மனைவி பைரவியால், ரசனைபூர்வமாக ஈடுகொடுக்க முடியவில்லை. அப்போது தான் அவருக்குள் சிந்து அறிமுகமாகிறாள். அவள் ஒரு பரவசமான சங்கீத ரசிகை. சாஸ்திரிய சங்கீதத்தை ஒட்டியே பாடிக் கொண்டிருந்த ஜே.கே.பி கதாபாத்திரத்தில் வாழ்ந்திருந்த சிவகுமார், சிந்துவின் தூண்டுதலாலேயே தமிழில் பாட ஆரம்பிக்கிறார். பாரதியின் பாடல்களையும், நாட்டுப்புற பாடல்களையும் சாஸ்திரிய சங்கீதத்தின் வாயிலாக வெளிப்படுத்த ஆரம்பிக்கிறார். அப்படித்தான் அந்த நட்பு துவங்கி, ஒரு தற்செயலான சமயத்தில் அவர்களுக்கிடையே காதலாக அரும்புகிறது. அவர்கள் இசை ஆலாபனை சேர்ந்திசைத்துக் கொண்டிருந்தபடி தனிமையான கடற்கரையோரம் அந்திமாலை வர்ணஜால மனங்களோடு நடந்து செல்கையில், அவர்களின் கரங்கள் உரசிக் கொள்கிறது. உடனே கடல் அலைகள் நூறடி உயரத்திற்கு எவ்வி குதித்து மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கிறது.
ஜே.கே.பி இப்போது சிந்து தனியாக வசித்து வரும் அறைக்கு வருகிறார். அங்கே ஜே.கே.பி. தமிழில் புதிதாக பாடிய பாடலில் சிந்து தன்னை மறந்து மெய்யுருகி கரைந்து கொண்டிருக்கிறார். அவரை அப்போது அங்கே நேரில் பார்த்ததும் பரவசம் ததும்பி போகிறாள். அவரும் தான். இருவரும் அருகருகே நெருங்கி வந்து, கதகதக்கும் ஒருவர் மூச்சுக்காற்றை இன்னொருவர் சுவாசிக்கிறார்கள். அப்போது தான் இதழ் விரிக்கும் மலரை வருடும் தென்றலாய், அவர் அவளை தழுவுகிறார். அப்படியே சிந்து தன்னை மறந்த நிலையில் படுக்கையில் சரிகிறாள். ஜே.கே.பி. சிந்துவின் முந்தானையை மெதுவாக பற்றுகிறார்.
அடுத்ததாய் ஒரு காட்சி வருகிறது. ஒரு இருள் படிந்திருக்கும் தனிமையான அறை. அங்கே உறை போடப்பட்டிருக்கும் ஒரு வீணை நிமிர்ந்து நின்று கொண்டிருக்கிறது. ஒரு கரம் அந்த துணி உறை ஜிப்பை நீக்கி மெல்ல அகற்றுகிறது. இப்போது வீணை நிர்வாணமாய் நிற்கிற வீணை மட்டும் ஒளியின் சுடரில் சுடர்கிறது. ஆபாசமில்லாமல் காமத்தை வெளிப்படுத்தும் எத்தனை அற்புதமான காட்சி.
பாலகுமாரன்... அகல்யா, சேவல் பண்ணை, பச்சை வயல் மனது, இரும்பு குதிரைகள், மெர்குரி பூக்கள் என்று பல குறிப்பிடும்படியான நாவல்களை பாலகுமாரன் எழுதியவர் தான். இரண்டு பேரும் தங்களின் முத்திரைகளை தமிழ் கலை-இலக்கிய உலகில் அழுத்தமாக பதித்தவர்கள் தான்.
ஒரு முறை வசந்த் சார் என்னை பாலசந்தரிடம் அழைத்துக்கொண்டு போய், என் சிஷ்யன், இவனை வாழ்த்துங்கள் என்றார். யார் காலிலும் விழுந்து பழக்கப்படாத நான், என்னையும் அறியாமல் அவர் காலில் விழ, அவரின் கதகதப்பான கரம் என் தலையை வருடியபடி, காட் பிளஸ் யூ மை சன் என்ற தருணம் மறக்க முடியாதது. அவரின் இறப்பிற்கு சென்றிருந்தபோது கூட, அந்த வார்த்தைகள் எனக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது.
இங்கே நல்ல படங்களில் கூட, ஆணாதிக்க மனோநிலை எப்படி இயல்பாக பார்க்க படுகிறது என்கிற கோணத்தில் மட்டுமே அவதானிக்கிறேன். அப்படியான பார்வையில் படுகிற நெருடல்களை உங்களோடு பகிர்ந்தும் கொள்கிறேன்.
ஒரு நாள் எல்லா படைப்பாளர்களும் ஆண்-பெண் சமத்துவ பார்வையோடு ஒவ்வொரு படைப்பையும் கையாள வேண்டுமெனப்தே இந்தக் கட்டுரைகளின் நோக்கம். காரணம், இன்றைய படைப்பாளர்களின் பங்களிப்பே, நாளைய சமூக நியதியாக உருவெடுக்கும். அவர்கள் தானே நாளைய பாதைக்கான வழிகாட்டிகள். சராசரி மக்கள் அப்படி போடப்படுகிற பாதையில் வழிநடப்பவர்கள் மட்டுமே. அதனால், வழிகாட்டிகள், மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டியிருக்கிறது. அதன் அவசியத்தை எடுத்து வைப்பதே இந்த எளிய முயற்சியின் நோக்கம்.
ராமாயணத்தில் விபீஷ்ணனும், மகாபாரதத்தில் விதுரனும் நடுவுநிலை தவறாதவர்கள். தாங்கள் இருக்கிற அணியில் அறத்திற்கு மாறான ஒரு செயல் நடக்க இருக்கிறதென்றால், இருவருமே அது தங்கள் அணியாகவே இருந்தாலும், உடனே மறுத்து குரல் கொடுப்பவர்கள். ஆனால், அந்த இரண்டு நபர்களும் நாயக பிம்பத்தோடு, இந்த ஆணாதிக்க ஒரு பக்க சார்புடைய சமூகத்தில் கொண்டாடப் படவில்லை. எப்போது விதுரனும், விபீஷ்ணனும் நாயகர்களாக இந்த சமூகத்தில் கொண்டாடப் படுகிறார்களோ, அப்போது இங்கே பெண் சமத்துவம் நிலைநாட்டப்பட்டிருக்கும்.
Leave a comment
Upload