தொடர்கள்
தமிழ்
எமதினிய தமிழ்ச் சொற்களை இழக்காமல், மீட்டெடுப்போம்... - 8 - - இரா.சு.இராசன்

திரு என்ற சொல் வாழும் சேர நாடு...

20210630213520406.jpeg

திருவனந்தபுரம் பற்றிக் குறிப்பிட நேர்ந்தது அண்மையில் ஜெய் ஹிந்த் செம்பகராமன் வரலாறு கூற முற்பட்டபோது. அது அவர் பிறந்த ஊர்.

திரு என்ற தமிழ்ச்சொல் திடமாக ஒட்டிக் கொண்டிருந்த நிலை கண்டு மகிழ்ந்தேன். சேர நாட்டுத்தமிழ் அங்கே வாழ்கிறது.

ஆரியர்கள் பலர் இடம் பெயர்ந்து வந்தங்கு வாழ இடம் பெற்று அங்கு வழங்கு தமிழோடு ஆரியம் கலந்து புது மொழியாம் மலையாள மொழி சமைத்து இனக்கலப்பும் ஆன பின்னும் நல்ல தமிழ் சொற்கள் அழியாமல் வாழ்வது பெரு மகிழ்ச்சி.

திருவனந்த புரம் மட்டுமல்ல வேறு பல ஊர்களிலும் திரு இணைந்தே இருக்கிறதாம்.

திருச் சிவ பேரூர் தான் திருச்சூர் ஆனதென்றும் மேலும் பல ஊர்கள் திரு’வுடன் இணைந்திருக்கும் நலம் உரைத்தார்கள் நண்பர்கள்.

நற்றமிழர் நாட்டினிலோ அரசு முயன்ற பின்னும் ஸ்ரீரங்கமும், ஸ்ரீவில்லிப்புத்தூரும், ஸ்ரீவைகுண்டம் போல் பல ஊர்களிலும் திரு வந்து இணையவில்லை. மக்கள் ஏற்றுக் கொண்டால் தான் மாற்றம் வரும்.

கேரளத்தில் நம்பூதிரிகள் கலப்பற்ற ஆரியர்கள். அவர்களை ‘திருமேனி’ என்ற நல்ல தமிழில் அழைக்கிறார்கள் அனைவரும். அவர்களும் ஒருவருக்கொருவர் திருமேனி என்றழைத்து கொள்கிறார்கள். தமிழங்கே வாழ்கிறது.

தாய்த்தமிழ் நாட்டினிலே தமிழ் வளர்க்கவென அமைந்த சைவத்திரு மடத்துத் தம்பிரான்கள் பெயர்களை ஸ்ரீலஸ்ரீ என்றே தொடங்குகிறார்கள். காலம் காலமாக வட சொல் தான்.

அங்கு தமிழ்ச் சொல்லும் இங்க வடசொல்லும் இருக்கும் நிலை மாறாதோ.