தொடர்கள்
ஒலிம்பிக்ஸ்
மீரா, சிந்து, லவ்லீனா... வெற்றி தேவதைகள்! - மரியா சிவானந்தம்

20210630160755287.png

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் சூடு பிடித்துள்ளன. உலகளாவிய பரபரப்பு எங்கும் நிலவுவதை காண்கிறோம். விளையாட்டு ஆர்வலர்கள் மற்றுமன்றி, பொது மக்களும், இளைஞர்களும், குழந்தைகளும் இம்முறை ஒலிம்பிக் செய்திகளை கூர்ந்து கவனித்த வண்ணம் இருக்கிறார்கள். All roads lead to Rome என்பது மாறி, all eyes are towards Tokyo என்று புதுமொழி உருவாகி உள்ளது.

போட்டியில் கலந்துக் கொள்ளும் நாடுகள், பதட்டமுடன் நகத்தைக் கடித்துக் கொண்டு இருப்பதையும், வீரர்கள் முழு முனைப்புடன் களத்தில் இறங்கி வெற்றிக் கொடியைக் கைப்பற்ற விரைவதையும் காண்கிறோம். இக்களத்தில் புதிய நாயகிகளும், நாயகர்களும் பிறப்பெடுப்பதும், பழைய பிரபலங்கள் வண்ணம் இழப்பதையும் உலகம் ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டு இருக்கிறது.

தினந்தோறும் எல்லா மொழிகளிலும், ஊடகங்களும், செய்தித்தாள்களும்,தொலைக்காட்சி நிறுவனங்களும், இணையத் தளங்களும் பதக்கப்பட்டியலை ‘அப்டேட்’ செய்துக் கொண்டே இருக்கின்றன.

பதக்க ரேஸில் அமெரிக்காவும், சீனாவும் முன்னணியில் இருக்கிறார்கள். பலம் மிக்க நாடுகள் மோதிக் கொள்கையில், இடை இடையே சிறிய நாடுகளும் சப்தமின்றி சாதனை படைக்கின்றன. ஒரு சிற்றூரின் மக்கள் தொகையை ஒத்த, 63 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட குட்டி நாடான பெர்முடா, ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மிகச் சிறிய நாடு என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. அந்நாட்டின் வீராங்கனை ஃப்ளோரா டஃப்பி டிரையத்லான் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்திருக்கிறார்.

20210630161057435.jpg

ஒலிம்பிக் முதல் நாள் போட்டியில் இந்திய அணி சார்பில், களம் கண்ட மீராபாய் சானு பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் (49 கிலோ எடைப் பிரிவில்) 202 கிலோ எடை தூக்கி வெள்ளி பதக்கத்தை வென்று இந்தியாவின் பதக்க கணக்கைத் துவக்கி வைத்துள்ளார்.

20210630161128777.jpg

இம்பால் நகரிலிருந்து அறுபது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நோங்பாக் காக்சிங் தான் (Nongpok Kakching) என்ற சிறிய கிராமம் மீராபாய் பிறந்த ஊர்... நிரந்தர வேலை இல்லாமல் கிடைக்கின்ற வேலையை செய்து வந்துள்ளனர் அவரது பெற்றோர். தன் பிரமிக்கத்தக்க வெற்றியின் மூலம், உலக அரங்கில் இந்தியாவைத் தலை நிமிர வைத்துள்ளார் இந்த எளிய கிராமத்துப் பெண். சென்ற ரியோடி ஜெனிரோ ஒலிம்பிக்கில் தவற விட்ட பதக்கத்தை, ஐந்தாண்டுகளின் தொடர் போராட்டத்துக்குப் பின் டோக்கியோ ஒலிம்பிக்கில் மீட்டு விட்டார். மீராவின் சிறுவயதில்... தன் வீட்டுக்காக விறகுகள் சுமந்த அனுபவமே, இந்த பளுதூக்கும் போட்டிகளின் துவக்கப் புள்ளியாக அமைந்து விட்டது. நகரங்களில் திறமைகளைத் தேடும் இந்தியா, விளையாட்டுத் துறை இனி கிராமங்களுக்குச் செல்ல வேண்டும் என்று தன் வெற்றியால் சொல்கிறார் மீராபாய்.

மீராபாய் சானுவின் வெற்றியைத் தொடர்ந்து குத்துச் சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் இந்தியாவுக்கு 2வது பதக்கத்தை உறுதி செய்துள்ளார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற குத்துச் சண்டை போட்டியில், முன்னாள் உலக சாம்பியன் அபெட்ஸ் நடைனை எதிர்த்து விளையாடிய லவ்லினா, 3-2 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார். வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் அடுத்த வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

20210630161216524.jpg

அசாம் மாநிலத்தில் பின்தங்கியுள்ள ஒரு குக்கிராமமான கோலகட்டில் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் லவ்லினா. அப்பா ஒரு சிறு தொழில் நடத்துபவர். இருப்பினும் தன் பெண்களுக்கு தற்காப்புக் காலையில் பயிற்சி பெற வைத்தார். அவரது அம்மா லவ்லினாவுக்கு முகமது அலியின் கதைகளை கூற... குத்துச்சண்டை லவ்லீனாவின் விருப்பத்துக்குரிய விளையாட்டாக மாறியது. தனது கிராமத்திலிருந்த வசதி வாய்ப்புகளை பயன்படுத்தியே ஆரம்பக்கட்ட பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். 2012 ஒலிம்பிக்கில் மேரி கோம் பெற்ற வெற்றி, அவருக்கு மேலும் தூண்டுகோலாக அமைந்தது. பின்னர் இவர் பெற்ற பயிற்சியும், வெற்றிகளும் இன்று ஒலிம்பிக் வெற்றியாளராக நிறுத்தி உள்ளது.

தனி நபர் வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி கால் இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றார். கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்யாவின் செனியா பெரோவாவை 6-5 என்ற கோல் கணக்கில் தீபிகா குமாரி வீழ்த்தினார். இந்த ஒலிம்பிக்கில் தீபிகா வெற்றி வாகை சூடி வருவார் என்று நம்பிக்கை வலுக்கிறது. இறகுப் பந்து போட்டியில் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள பி.வி. சிந்துவும் நம் நம்பிக்கைக்கு பலம் சேர்க்கிறார்.

20210630161331922.jpg

வெற்றிப் பட்டயங்கள் ஒருபுறம் ஜொலிக்க... தோல்வி கதைகளும் நம்மைச் சிலிர்க்க வைக்கின்றன! இந்தியாவின் முதல் ஒலிம்பிக் வாள் சண்டை வீராங்கனை பவானி தேவி, தனது அறிமுக போட்டியை வெற்றியுடன் துவங்கினார். ஆனால், தனது 32 வது சுற்று ஆட்டத்தில் தோல்வியடைந்தார்.

கால் இறுதிப்போட்டியில் தோற்றவர் என்றாலும், மேரி கோமின் குத்துச்சண்டை அபாரமாக இருந்தது. துவக்க விழாவில் இந்தியக் கொடியை பெருமிதமாக ஏந்திச் சென்றவர், கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் கொலம்பிய வீராங்கனை இன்க்ரிட் வேலன்சியாவிடம் மோதினார். இதில் 2 -3 என்ற கணக்கில் இந்தியாவின் மேரி கோம் போராடித் தோற்றார். 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் மேரி கோம் வெண்கலம் வென்றார். மேரிகோம் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர். எனவே மேரி கோம் இந்த ஒலிம்பிக்கில் தோற்ற போதும், உலக அரங்கில் தன் பெயரை நிலை நிறுத்தியவர்.

20210630161408512.jpg

இந்திய வீரர்களின் பங்களிப்பை பார்க்கையில், அதானு தாஸ், பிரவீன் ஜாதவ், மற்றும் தருந்தீப் ராய் ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் வில்வித்தை அணி தகுதி சுற்றில் கஜகஸ்தான் அணியை 6-2 என்ற கணக்கில் வீழ்த்தி கால் இறுதி பந்தயத்தில் கொரியாவிடம் 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் களம் கண்ட இந்திய வீராங்கனை மனிகா பத்ரா, தனது 3-வது சுற்றில் ஆஸ்திரியாவின் சோபியா போல்கனோவாவிடம் 0-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். ஆடவர் குத்துச்சண்டை போட்டியில் சீன வீரர் எர்பிகியிடம் போராடி தோல்வியுற்றார் இந்திய வீரர் ஆஷிஷ் குமார். ஆடவருக்கான 200 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் ஹீட்ஸ் 2 சுற்றில் 4 வது இடம்பிடித்த இந்திய வீரர் சஜன் பிரகாஷ் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.

வெற்றியும், தோல்வியும் விளையாட்டில் சகஜம்தான் என்றாலும், சில மகத்தான தோல்விகளும் வெற்றியைப் போலவே கொண்டாடப்படுகின்றன. மேரி கோமின் தோல்வியும் இந்த வகையைச் சேர்ந்ததே.

ஒலிம்பிக் திருவிழா இன்னும் பத்துநாட்கள் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இன்னும் பல போட்டிகளில் நம் வீரர்களும் வீராங்கனைகளும் வெற்றிக்கனியைப் பறிக்க ஆர்வமுடன் உழைக்கின்றனர். இந்திய மக்களின் வாழ்த்து அவர்களுக்கு துணை நிற்கும்.