தொடர்கள்
Daily Articles
பத்மஸ்ரீ விருது வென்ற வில்லிசை கலைஞரின் நினைவலைகள்... - 27 - கலைமாமணி பாரதி திருமகன்

20210701195011526.jpg

மகாபெரியவா ஆசியுடன், கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அருளுரைக்குப் பிறகு, என் தந்தையின் ‘வள்ளி திருக்கல்யாணம்’ என்ற வில்லிசை கச்சேரியும் இனிதே நிறைவு பெற்றது. வாரியார் சுவாமிகள் வாழ்த்தி பேசினார் என்பது வரை பார்த்தோம்...

இந்நிகழ்ச்சிகளை புதிதாக திருமணமான 108 ஜோடிகளும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர் – வாரியார் சுவாமிகளின் அருளுரை மற்றும் என் தந்தையின் வில்லிசை கச்சேரியை..!

ஆஹா… என்னே ரசனையுள்ள மக்கள்..! இன்றைக்கும் எங்களின் மனதில் இக்காட்சிகள் பசுமையாக நினைவிருக்கிறது. எனது தந்தையை வாரியார் சுவாமிகள் வாழ்த்தி பேசிய பிறகு, கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவர் திடீரென எழுந்து நின்றார்… ‘அவர் என்ன சொல்லப் போகிறாரோ..?!’ என எங்களின் மனம் படபடத்தது.

அந்த ரசிகர் வாரியாரை நோக்கி பேச ஆரம்பித்தார்... ‘‘சாமி… எங்க கோயில் விசேஷத்துக்கு கவிஞர் சுப்பு ஆறுமுகம் ஐயாவை வைக்கலாம்னு நிறைய முறை கேட்டு வருகிறோம். ஆனால், எப்பப் போனாலும் கவிஞரின் ‘டேட்’ (Date) கிடைக்கறதில்லை… நீங்க கொஞ்சம் சொல்லுங்க சாமி..!’’ என்றார் வெளிப்படையாக.

உடனே வாரியார் சுவாமி நகைச்சுவையாக – ‘‘கவிஞர் ‘Date‘ கொடுக்கலேன்னா, அப்படியேவா வந்துடுவீங்க… அவரை ‘Cover’ பண்ணணும்..! (ஒரு கவரில் பணம் போடுவது போல் ‘Action’ செய்தபடியே) நிச்சயம் வருவார் ஆறுமுகம் ஐயா..!’’ என்றாரே, பார்க்கலாம்… இதை கேட்டதும் மக்களின் கள்ளங்கபடமற்ற சிரிப்பொலி மற்றும் கரவொலியால் அந்த அரங்கமே குலுங்கியது.

– ஆஹா… இனிமேல் கிடைக்குமா, இதுமாதிரியான அரிய காட்சிகள்..! இதை எழுதும்போது, எனது கண்களில் நீர் உணர்ச்சி பிரவாகத்தால் பெருகியது.

என் தந்தை இன்று 93 வயது நிறைவடைந்து, 94-ம் அகவையில் வீற்றிருக்கிறார். அவரது உடலில் தளர்ச்சியடைந்திருந்தாலும், அவரது தமிழ் எழுத்தாற்றலுக்கு வரவில்லை..!

வாரியார் சுவாமியும் என் தந்தையும் சரி, மேடைகளில் ‘தாய் பக்தி’ குறித்து நிறைய பேசுவார்கள்… ஒருமுறை அரக்கோணத்தில் வாரியாரின் அருளுரைக்குப் பிறகு, எங்களின் வில்லிசை கச்சேரி..!
வாரியார் சுவாமிகள் அருளுரையை ஆரம்பிக்கும்போது, நாங்கள் அவருக்கு முன்னால் அமர்ந்து கேட்டுக் கொண்டிருப்போம். அதேபோல், எங்களின் வில்லிசை நிகழ்ச்சியின்போது கூடவே அமர்ந்து, ரசித்து, வாழ்த்தி… நிறைவாக, அனைவருக்கும் விபூதி கொடுத்து அனுப்புவார். இதுவே மறுநாள் அதிகாலை 3 மணியாகிவிடும். ஆஹா… என்னே அருமையான நாட்கள்..!

அக்கூட்டத்தில் வாரியார் சுவாமிகள் பேசுகையில், ‘‘எப்பவுமே தாயன்பு பெரிசுதான்! நான் 20, 30 நாட்கள் ஊர், உலகமெல்லாம் போய் சொற்பொழிவுகளை முடித்துவிட்டு, எங்க வீட்டுக்கு போவேன். அங்கு குளித்து, பூஜையெல்லாம் முடித்துவிட்டு, முதல்ல என் அம்மாவைத்தான் முதல்ல போய்ப் பார்ப்பேன்… என் அம்மாவுக்கு கண்புலன் அவ்வளவா தெரியாது. ஆனா, ஆசையோடு காத்திருப்பா – என்னைப் பார்க்கறதுக்கு..!

‘அம்மா… நல்லாயிருக்கீங்களா..?’னு கேட்டுக்கிட்டே, என் அம்மாகிட்ட போய் பாத வணக்கம் செய்வேன். அப்போ என் அம்மா என்ன செய்வாங்க, தெரியுமா..? என்னை கிட்டே கூப்பிட்டு, (கண்புலன் அவ்வளவாகத் தெரியாததால்) என் உடம்பைத் தடவி பார்த்துட்டு, ‘என்ன கிருபானந்தா… ஊர்ஊரா அலைஞ்சு, இப்படி துரும்பா மெலிஞ்சு போனியேப்பா..!’னு ஆதங்கத்துடன் தாய் கேட்பாள்.

இப்ப சொல்லுங்க… நானா மெலிஞ்சிருக்கேன்..?!’’னு அரங்கில் இருக்கும் மக்களை பார்த்து வாரியார் சுவாமிகள் கேட்பார். அங்கிருந்த மக்கள் அனைவரும் ‘இல்லை’ என்பதுபோல் தலையாட்டி சிரிப்பார்கள்.

‘‘நான் இன்னும் குண்டானா… தமிழ்நாடு தாங்குமா..?!’’ என வாரியார் சுவாமிகள் கேட்க, அதற்கு அனைவரும் ‘தாங்காது’ என்பது போல் கைகளை ஆட்டியபடி சிரிப்பார்கள்.

பின்னர் நிறைவாக ‘‘மாதா… மாதாதான்..!’’ என்று சொல்லி, ‘மாத்ரு தேவோ பவ…’ என்று பாடி காண்பித்து, வாரியார் சுவாமிகள் தனது அருளுரையை நிறைவு செய்வார்.

என் தந்தையின் வில்லுப்பாட்டு பாணி தனி விதம்… தாய் பக்தியைப் பற்றி என் தந்தை மேடையில் பேசும்போது, சில விஷயங்களைக் குறிப்பிட்டு சொல்வார்.

அன்றைக்கு – அரக்கோணத்திலும் அப்படித்தான்..! அன்று மேடையில், ‘‘நம்ம கையில் கடவுள் ஏன் 10 விரல்களை வெச்சிருக்காரு, தெரியுமா..?’’ என்று என் தந்தை கேட்டார். ‘ஏன்?’னு நீங்கதான் யோசிச்சு பதில் சொல்லுங்களேன். அதுவரை…

- காத்திருப்போம்