தொடர்கள்
Daily Articles
நேசித்த புத்தகங்கள் - 24 - வேங்கடகிருஷ்ணன்

2021070119595640.jpg

பாஷோவின்
ஜென் கவிதைகள்

20210701202228516.jpg

இந்தப் புத்தகத்தை ஏழு வருடங்களுக்கு முன் சென்னை புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பக அரங்கில் வாங்கினேன். எஸ்ரா (எஸ்.ராமகிருஷ்ணன்) அவர்களிடம் கையெழுத்துக்காக நீட்டியபோது, இதை முழுவதுமாக படித்து உள்வாங்கி விட்டு பிறகு என்னிடம் வந்து கையெழுத்து பெற்று செல்லுங்கள் என்றார். அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்து, ஒவ்வொரு முறை படிக்கும்போதும் வெவ்வேறு புரிதல், இதன் மூலம் எனக்குள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. உண்மையைச் சொன்னால் 90 பக்கங்களே உள்ள இந்தப் புத்தகத்தை இன்னும் என்னால் முழுவதுமாக படித்து முடிக்க முடியவில்லை. (கையெழுத்தும் வாங்கவில்லை) இந்தப் புத்தகம் தான் என்னை ஜென் வழி முறை குறித்து அறிந்து கொள்ள ஆவல் ஏற்படுத்தியது. புத்த மதத்தின் ஒரு பிரிவாக இதனை சொன்னாலும் ஜென் என்பது ஒரு அனுபவம்.

“தண்ணீருக்குள் தென்படும் கற்கள்
விசித்திரமானவை
அவற்றை தண்ணீரால் கரைக்க முடிவதேயில்லை”

என்ற ஜென் கவிதையை ஆசிரியர் விளக்கும்போது, இது நமது இருப்பின் பாடலாகவே ஒலிக்கிறது. தண்ணீரும் கல்லும் வெறும் புற அடையாளங்கள் மட்டுமே, என்று சொல்லும்போது புரிந்தது போல் இருந்தாலும், மீண்டும் வாசிக்கையில் மிகவும் வேறான பொருளை நமக்கு உணர்த்துகிறது.

மௌனமே ஜென் கவிதையின் ஆதார தொனி...
“மனமே புத்தர்
விளக்குவது எளிது
வாழ்ந்து காட்டுவது கடினம்”

என்ற ஜென் கவிதை தான் இதற்கான சரியான உதாரணம்.

தன்னை எப்போதுமே சிறிய துளியாகவே ஜென் கவிஞர்கள் அடையாளம் காண்கிறார்கள். கவிஞன் என்ற பெருமிதம் அவர்களிடம் ஒருபோதும் இல்லை. தொண்டரடிப்பொடி என்று நாம் குறிப்பிடும் அந்த பணிவின் கடைநிலை.

ஜென் கவிதையின் வாசகன் தனது பரபரப்புகளில் இருந்து விடுபட்டு கூழாங்கற்களை கையில் ஏந்தி தடவுவது போல வார்த்தைகளை மிருதுவாக தடவி அனுபவித்து அறியும் போது, அவன் கூழாங்கற்கள் பாடுவதைக் கேட்க முடியும். அந்தப் பாடல், கல்லின் பாடல் மட்டுமல்ல... ஆற்றின் பாடல் கூடத்தானே??

“புல் நிசப்தமாய் அமர்ந்திருக்கிறது
எதுவும் செய்யாமல்
வசந்தம் வருகையில்
தானே வளர்கிறது”

“புல் நிசப்தமாக அமர்ந்திருக்கிறது எதுவும் செய்யாமல்” என்ற வரிகள் நமக்குள் பெரும் அதிர்வை ஏற்படுத்துகின்றன. இந்த அதிர்வின் வழியே நம் கண்கள் அதிகம் கவனிக்காமல் கடந்து செல்லும் ஒரு காட்சி பிரம்மாண்டமானதாக நம் முன்னே தோன்றி மறைகிறது.
அடுத்த வரி இந்தக் காட்சியை உயிரோட்டமான தாக்குகிறது.
வசந்தம் வருகையில்
தானே வளர்கிறது

இதில் வசந்தம் என்ற பருவ காலச் சொல் தான் கவிதையின் மையக் குறியீடு. இந்தச் சொல் வெறும் பருவநிலையை குறிப்பது மட்டுமல்ல... உள்ளார்ந்த மாறுதலை, அக இயக்கத்தை அடையாளப்படுத்துகிறது. அதன் அதிர்வில் புல் தானே வளர்கிறது என்பது நமது விழிப்புணர்வில் நாம் மேம்படுகிறோம் என்ற உண்மையை எடுத்துச் சொல்கிறது.
இன்னொரு முக்கியமான உணர்வு ஜென் கவிதைகள் இயற்கையை கடந்தகாலத்தில் வைத்து பார்ப்பதில்லை. நாம் ஒரு மலையை, அருவியை சந்திக்கும்போது இந்தக் கணம் என்ற ஒன்று மட்டுமே நம்மோடு இருக்கிறது. கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் யாவும் இக்கணம் ஆகவே வெளிப்படுகிறது. அதைத்தான் ஜென் கவிதைகள் கவிதை காலமாக முன் வைக்கின்றன.

ஜப்பானுக்கு எஸ்ரா பயணமான போது கியாட்டோவில் ஒரு கோவிலை பார்வையிடுகிறார். அது ஜென் தத்துவத்தை விளக்கும் குறியீடு போல் இருக்கிறது. இந்தக் கோவில் மீவா என்கிற இடத்தில் இருக்கிறது. கோவில் ஒரு ஏரியில் இருக்கிறது. ஏரியின் முன்னால் ஒரு பெரிய வாசலை உருவாக்கியிருக்கிறார்கள். வாசலில் நுழைந்தால் மறுபக்கம் பார்ப்பது தண்ணீர்தான். ஒன்று உலகம் வெளியால் நிரம்பியிருக்கிறது அல்லது இயற்கையின் ஏதாவது ஒரு மூலகத்தால் நிரம்பி இருக்கிறது. இதுதான் பௌத்த சாரம் இதைத்தான் ஜென் உணர்த்துகிறது.

அந்த ஏரியின் நுழைவாயிலுக்கு பக்கத்தில் ஒருவர் தண்ணீரைப் பார்த்து வியப்பது போல ஒரு சிற்பம் இருக்கிறது. யாருடைய சிற்பம் என்று பார்த்தால் அதுதான் பாஷோவினுடைய சிற்பம். பாஷோ ஒரு வெறுமையின் வாசலினூடாக உள்ளே நுழைந்து, அந்தப் பக்கம் இருக்கக்கூடிய தண்ணீரின் அழகை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது நமக்கு நன்றாகத் தெரிகிறது வெறுமையை சந்திப்பது என்பது மகத்தான ஒரு அனுபவம். வெறுமை என்பது ஒன்றுமில்லை என்று நினைக்கிறோம். அது தவறு. வெறுமை என்பது ஒரு இருத்தல் நிலை. ஒரு முடிவில்லாத வெளி. இந்த வெளியை பார்த்து தன்னை அதனோடு கலந்து அதற்குள்ளாகவே இருக்க முடியும் என்பதுதான் அது.
எஸ்ரா சொல்கிறார், ‘தேவ தச்சனுடைய கவிதை’யிலே ஒரு வரி வருகிறது. அவர் அவருடைய உரையாடலில் கூட அதைச் சொன்னார்.
“மழை பெய்து தண்ணீர் தேங்கி இருக்கும் இடத்தில் ஒரு விளக்குக் கம்பத்தின் நிழல் தண்ணீரில் விழுகிறது. தெரு நாய் ஓடி வந்து அந்த தண்ணீரை குடிக்கும் போது, அந்த நிழலை விலக்கி எப்படி தண்ணீரை குடிக்கிறது? நாய் தண்ணிரை மட்டும் தனியாக குடிக்கும் காட்சி விந்தையாக இல்லையா?” எனக் கேட்டார்.

அதைக் கேட்ட போது எனது புலன்கள் விழித்துக் கொண்டது போல உணர்ந்தேன். இதுதான் ஜென் வழிகாட்டல். நாய் தண்ணீரில் தெரியும் பிம்பத்தை விலக்கி குடிப்பது போல, நாம் வாழ்க்கையை அதன் பரபரப்புகளை விலக்கிவிட்டு அறிய முடியாதா? என்ற தவிப்பு உருவானது. ஜென் கவிதை அப்படியான ஒரு முயற்சியைத் தான் மேற்கொள்கிறது.

இந்த ஜென் கவிதையை பாருங்கள்...

“தண்ணீரில் விழுந்த
நிலவு
நனைவதும்
இல்லை கரைவதும் இல்லை”

பார்க்க எளிமையான வரிகள் போன்று இருக்கும் இவைகள் தரும் அனுபவம் மகத்தானது. நிலவை பற்றியும் தண்ணீரை பற்றியுமான நமது மனதின் பார்வையை அது முற்றிலும் மாற்றி விடுகிறது. இன்னொன்று...

“உலகத்தில் உள்ள எல்லா குளங்களிலும்
ஒரே நிலவுதான்
ஒளிர்ந்து கொண்டிருக்கிறது”

சட்டென ஒற்றை நிலவு, பல்வேறு பிம்பங்களாக உரு மாறும் அதிசயம் நமக்கு சுட்டிக் காட்டப்படுகிறது. இது நிலவு பற்றிய கவிதை இல்லை, வாழ்க்கை இப்படிப்பட்டது தான் என்று அறிமுகம் செய்யும் கவிதை இது. நிலவு போல தான் நாமும் கிடைத்த குளத்தில் நம்மை பிரதிபலித்து கொள்கிறோம்.

ஜென் பற்றி விவரிக்கும் போது எஸ்ரா சொல்கிறார்... ஜென் என்பது ஒரு வழிகாட்டும் முறை, ஒரு அறிதல், ஒரு அக தேடல், ஒரு விழிப்புணர்வு ஒரு பரவசம் இப்படி என்னை பற்றி நிறைய சொல்லலாம். ஜெனரல் பற்றி சுலபமாக சொல்லலாம் என்றால் அது ஒரு மின்னல்வெட்டுப் போல ஒரு கணத்தில் செரிக்கக்கூடிய அந்த உணர்ச்சியின் வெளிப்பாடு. ஒரு நிமிடத்தில் உங்கள் இருப்பு இருந்தும், இல்லாது ஆகி விடுவது போல.
இந்தக் கவிதையைப் பாருங்கள்...

“திருடன் விட்டுச் சென்றிருக்கிறான்
ஜன்னலில்
உள்ள நிலவை”

இந்த மூன்று வரிகள் நிறைய விஷயங்களை நமக்கு படமாக்கி காட்டுகின்றன. அந்த கவிஞர் வீட்டில் திருட முடியாத பொருளும் இருக்கிறது, அது நிலவு. அந்தக் கவிஞர் திருடன் மேல் பரிதாபம் கொள்கிறார். அவன் நிலவை விட்டுச் சென்று விட்டானே என்று. மூன்றாவதாக ஜன்னலில் நிலவு மட்டும்தான் இருக்கிறது, அவர் வீட்டில் திருடுவதற்கு வேறொன்றுமில்லை. கவிஞரின் வறுமையும் இங்கே தெரிகிறது. இதுதான் ஜென் வழங்கும் பார்வை.

பாஷோ ஒரு எரிமலையை பார்க்கிறார், உடனே கவிதை ஒன்றை எழுதுகிறார்...

“மட்சுமா

மட்சுமா!
மட்சுமா "

இவ்வளவுதான் கவிதை. ஆச்சரியமாக இருக்கிறதா? ஜென் இதை நமக்கு புரியவைக்கும். முதல் மட்சுமா அந்த மலையை அவர் பார்த்தவுடன் இவ்வளவு நாளாக பார்க்க விரும்பிய மலையை அவர் பார்க்கிறார். உடனே அதன் பெயரைச் சொல்கிறார். மற்றும் அடுத்தது அந்த மலை அவருக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது, அதனுடைய வெளிப்பாடுதான் அந்த ‘ஆ’. இப்போது அடுத்த மாட்சுமாவை நன்றாக கவனித்தால் ஒரு ஆச்சரியக்குறி இடப்பட்டுள்ளது. அந்த மலை அவரிடம் ஏற்படுத்திய பிரமிப்பு, பிரம்மாண்டம். அவர் முன்னால் நிற்கும் அந்த பிரம்மாண்டம், இப்போது அவர் கண்ணிலும்... அதன் மூலமாக அவர் மனதிலும் வந்துவிட்டது. கடைசி மட்சுமா அவர்தான். அந்த மலை அவர் உள்ளே நிலைபெற்றுவிட்டது. இதுதான் ஜென் நிலை. இந்தக் கவிதையை விட ஜென்னை எளிதாக சொல்லித்தர இயலாது. இன்னொரு முறை அந்த கவிதையை படியுங்கள். நமக்கு இன்னும் பரிச்சயமாக வேண்டுமென்றால் மட்சுமாவிற்கு பதிலாக அண்ணாமலை நமது திருவண்ணாமலை மலையை கற்பனை செய்து கொள்ளுங்கள். நான் அதுபோல செய்து என்னுடைய பிரியமான மலையுடன் ஒன்றிப்போய் இருக்கிறேன்.

இந்தக் கவிதை உங்களை உயர்நிலைக்கு அழைத்துச் செல்லும் இதை எழுதியவர் பூஸன்...

“கோயில் மணி மீது
ஓய்வெடுக்கும் வண்ணத்துப்பூச்சிக்கு
நல்ல உறக்கம்
மணி ஒலிக்கும் வரை”

நம் மனதில் உருவாகும் படம், மணி மீது வண்ணத்துப்பூச்சியும் யாரும் அந்த மணியை அடித்து விடக்கூடாதே என்கிற பதைபதைப்பும் . ஆனால் வண்ணத்துப்பூச்சி உறங்காது, இது அனைவருக்கும் தெரியும். அது தேனுண்டு மயங்கி, கிறங்கி இருக்கத்தான் வாய்ப்புள்ளது. அது எங்கோ தேனுண்டு கிறங்கி, இங்கு மணியின் மீது வந்து அமர்ந்திருக்கிறது. மணி ஓர் இரும்பு உலோகம், அதன் மேல் வண்ணத்துப்பூச்சி வந்து அமர்கிறது என்றால் அதன் இரும்பு தன்மை போய் விட்டது என்று பொருள். மணி இவ்வளவு நேரமாக அடிக்கப்படாமல் இருக்கிறது என்பது மற்றொரு குறியீடு. ஒலிக்காத மணி என்றால் அது கைவிடப்பட்ட மடாலயம் அல்லது தேவாலயம். வண்ணத்துப்பூச்சி ஜென் கவிதைகளில் அதிகமாக ஒரு விழிப்புணர்வு குறியீடாக, கையாளப்படுகிறது. இப்போது அந்த கவிதையை மீண்டும் படியுங்கள், இப்போது ஏற்படும் மனச்சித்திரம் முழுவதும் வேறாக இருக்கும்.

எரிந்து போன தன் வீட்டை குறித்தும் பாஷோ ஒரு கவிதை எழுதியிருக்கிறார்...

“தீயில் வீடு எரிந்து விட்டது
ஆனால் அதன் நினைவுகள் ஒன்று கூட
எரியாமல் அப்படியே என்னிடம் இருக்கிறது”

அவருடைய அந்த வீடு, பின்னால் அவருடைய சீடர்களால் கட்டி கொடுக்கப்படுகிறது. அதை ஒரு ஹைக்கூ பள்ளியாக மாற்றுகிறார். யார் வேண்டுமானாலும் அங்கு வந்து கவிதை பாடலாம், ஹைக்கூ எழுத கற்றுக் கொள்ளலாம். உடல் நலம் இன்றி, பாஷோ இறக்கும் தருவாயில் ஒரு கவிதை சொல்கிறார்...

“நான் இல்லாமல் போகிறேன்
ஆனால் வசந்த காலம்
என்னுடைய நினைவுகளுடன்
இருந்துகொண்டேதான் இருக்கும்”

எனக்கு கண்ணதாசன் நினைவுக்கு வருகிறார். கவிஞர் எழுதிய அழியா வரிகள்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை , எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை”
கவிஞரும் இதனைப் பாடும் போது ஒரு ஜென் மனநிலையில் தான் இருந்திருக்க வேண்டும்.

இறுதியாக எஸ்ரா சொல்வது... ஜென் கவிதைகள் இயற்கையை புரிந்து கொள்வதற்கான ஒரு வாசல், ஒரு வழிமுறை, நமது விழிப்புணர்ச்சியை நம்மை, வழிநடத்த கூடியது. ஆகவே நாம் ஜென் கதைகளை, கவிதைகளை வாசிப்போம். ஜென்னை கொண்டாடுவோம்” என்று சொல்கிறார்.

Truly, truly I say to you, unless a grain of wheat falls into the earth and dies, it reminds alone; but if it dies, it bears much fruits என்று பைபிளில் ஒரு வாக்கியம் இருக்கிறது. இது தானியங்களுக்கு மட்டுமானது இல்லை... நல்ல சொற்களுக்கும் பொருந்தக் கூடிய ஒன்றே. ஆம், நண்பர்களே மண்ணில் விழுந்து முளைக்கும் தானியம் போல, மனதில் சொற்கள் விழுந்து ஊன்றி முளைக்கக் கூடியவை. அதற்குத் தேவை திறந்த மனதும், கேட்கும் அக்கறையும் மட்டுமே.

ஜென் கவிதைகள் - மனதின் விழிப்பு.