‘கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன், மானுடம் தோன்றிய காலத்திலிருந்து மக்கள் பின்பற்ற வந்திருக்கிற வாழ்வியல் முறை தான் தாய் வழிச் சமூகம். அதில் அந்தந்த பிராந்தியத்தை சேர்ந்த மனிதர்கள் குழுக்களாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் தலைவி ஒரு பெண். அங்கே தலைவன் கிடையாது. ஒரு குழுவிற்கு ஒரு தலைவி. அவள் அந்த குழுவை வழிநடத்திச் சென்றிருக்கிறாள். அங்கே வாரிசுகள் கிடையாது. தாய் என்கிற ஒற்றை உறவை தவிர, வேறு உறவுகள் கிடையாது. அதனால் பாசம் என்பது கிடையாது. அன்பு மட்டுமே உண்டு. தலைவி அந்தக் காலத்திலேயே ஜனநாயக முறைப்படி, அனைவருக்கும் சமமான உரிமைகளை வழங்கி இருக்கிறாள். அவர்களின் வாழ்வியல் கோட்பாடு என்பது கட்டற்ற காதல்.. கட்டற்ற காமம்.. கட்டற்ற சுதந்திரம்.. கட்டற்ற மகிழ்ச்சி அவ்வளவே. அது அங்கே சாத்தியப்பட்டிருந்ததற்கு முக்கியக் காரணம், அவர்கள் பறவைகளை போல வாழ்ந்திருந்ததே காரணம். ’
கொஞ்ச வருடங்களுக்கு முன்பு வரை இந்தப் பழக்கம் இருந்து வந்திருக்கிறது. பல கிராமங்களில் இப்போதும் கூட இருந்து வருகிறது. பெண் பள்ளியில் படித்து கொண்டிருப்பாள். பூப்பெய்தியதும் அவள் பள்ளிகளில் இருந்து நிறுத்தப்படுவாள். அவள் எத்தனை பிரமாதமாக படிப்பவளாய் இருந்தாலும், அவளின் படிப்பு அதோடு முற்றுப்புள்ளி பெற்று விடும்.
தெருக்களில் சிறுவர்களும், சிறுமியர்களுமாய் விகல்பமின்றி அத்தனை விளையாட்டுகளையும் கூடி விளையாடுவார்கள். ஒரு பெண் வயதுக்கு வந்து விட்டால் போதும், அதோடு அவள் ஆண் சிறுவர்களிடமிருந்து பிரித்து வைக்கப்படுவாள். அவளின் தலைக்குள் அந்த கணத்தில் இருந்து பலவிதமான கருத்துகள் அவளுக்குள் திணிக்கப்படுகின்றன. கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் அவளுக்கு அறிவிக்கப்படுகின்றன. அவள் அந்தப் புள்ளியிலிருந்து தன் வாழ்நாள் முடிகிறது வரை ஏதோ ஒரு வகையான சிறைக்கம்பி இல்லாத சிறை வாழ்க்கையையே மேற்கொள்கிறாள்.
அப்படி அவளுக்குள் அந்தத் தருணத்திலிருந்து என்ன தான் நடந்து விடுகிறது? அவளின் பாலுறுப்பு வளர்ச்சியடைந்து, அதன் இயக்கத்தை துவக்குகிறது. அதன் காரணமாக அவளுக்குள் எல்லா பெண்களுக்கும் போல மாதாமாதம் ஒரு கரு முட்டை அவளின் கருப்பையிலிருந்து முதிர்ச்சியடைந்து, கருப்பைக்கு நகர்கிறது. இணை சேர்ந்து ஆணின் உயிரணுவோடு சேர்ந்து, மனித சந்ததிகளை படைப்பதே அந்த கரு முட்டையின் நோக்கம்.
அதற்கு அந்தப் பெண் முறையாக தயாராகாத போது, அப்படி மாதாமாதம் கருப்பையில் வந்து காத்திருக்கிற கரு முட்டை அதை சுற்றி உருவாக்கி வைத்திருக்கிற மெல்லிய திரையை உடைத்துக் கொண்டு வெளியே வருகிறது. காரணம், அந்தக் கரு முட்டை கருப்பைக்கு வந்து விட்டால், அதன் ஆயுள் ஒரு மாத காலம் தான். அதற்குள் அது கருவாக மாறாதபட்சம் வெளியேறி விடுகிறது. அப்போது அதனால் கொஞ்சம் உதிரப்போக்கு ஏற்படுகிறது. அதனால் தான் அந்தக் காலக்கட்டத்தில் பெண்கள் விஸ்பர் போன்ற சேனிடரி நாம்கின்களை அணிகிறார்கள். அது அந்த உதிரத்தை உறிஞ்சி வைத்து கொள்கிறது. இந்த உதிரபோக்கு மூன்று நாட்களில் படிப்படியாக குறைந்து நின்று விடுகிறது. இது ஒரு இயற்கையான விசயம்.
இதை வைத்துக்கொண்டு தான் ஆணாதிக்க சமுதாயம் பெண்களை அடக்கி ஒடுக்கி வீட்டிற்குள், சமையலறைக்குள் சிறைப்பிடிக்க ஆரம்பித்தது. இது குறித்து எத்தனை எத்தனை அறியாமைகள்? எத்தனை எத்தனை மூடநம்பிக்கைள்? எத்தனை எத்தனை அடக்கு முறைகள்? எத்தனை எத்தனை சொல்லவொண்ணா துயரங்கள்? எத்தனை எத்தனை தாழ்த்துதல்கள்? அத்தனையும் சொல்லி மாளாது. அப்படி பாடாய் படுத்தி இருக்கிறார்கள்.
இந்த இடத்தில் ஒரு செக்ஸ் கதை சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. உலகத்திலேயே ஆபாசபடுத்தவே முடியாத முதல் செக்ஸ் கதை என்றும் இதை சொல்லலாம். பாலியல் கல்வியின் பாலபாடம் என்றும் கூட சொல்லலாம்.
மொட்டு மலர்கிறது. மலர்ந்ததும் அதில் தேன் சுரக்கிறது. அதை தேன் என்று கூட சொல்ல முடியாது. அதை ஆங்கிலத்தில் நெக்டர் அல்லது இனிப்பு திரவம் என்று அழைப்பார்கள். அது ஒரு பிசுபிசுப்பான இனிப்பு திரவம். அதை பெரும்பாலும் சுரப்பது மலரின் இதழ்கள், ஆந்த்தர் பகுதிகளில் உள்ள சுரப்பிகள். அதை உறிஞ்சி வயிற்றுக்கு அனுப்பும். அங்கே ஒரு என்ஸைம் சுரக்கும். அது அதை தேனாக மாற்றும். அந்த தேனை கொண்டு போய் அடையில் உள்ள மற்ற வீட்டு தேனீயின் வாய் வழியாக அதன் வயிற்றுக்கு அனுப்பும். அதே ரசாயண மாற்றம் அங்கேயும் நடக்கும். இப்படி ஒவ்வொரு தேனீயாக அது மாற்றப்பட்டு முடிவில் தேனாக மாறும். அப்போதும் அதில் சிறிதளவு தண்ணீர் சத்து இருக்கும். அதனால் அந்த தேனை தேன் கூடுகளில் உள்ள அறைகளில் சேமித்து காற்றோட்டமாக வைக்கும். அதன் மூலம் அந்த தேனிலுள்ள நீர் முழுதும் ஆவியாக சுத்தமான தேன் உண்டாவதோடு, அதே ஆவியாதல் செயல்பாட்டின் மூலம் தேன்கூடு இயற்கையிலேயே ஒரு ஏ/சி எஃபெக்ட்டை அங்கே உருவாக்கி கொள்கிறது.
சிறுபிராயத்தில் தும்பை பூவை செடியிலிருந்து பிடுங்கி அதன் அடிப்பகுதி வழியாக உறிஞ்சினால் ஒருவிதமான இனிப்பு திரவம் இருக்கும். அது தேன் கிடையாது. தேனாவதற்கு தேவையான மூலப்பொருள். ஆனால் வேறு லெவலில் சுவையாக இருக்கும். சரி. கதைக்கு திரும்பலாம்.
அப்படியாக சுரக்கிற இனிப்பு திரவத்தை உண்ண வருகிற தேனீக்களின் கால்களில் ஏற்கனவே (முந்தைய மலரின் உபயம்) ஒட்டியிருக்கிற மகரந்த துகள்கள், இந்த மலரின் சூலில் ஒட்டிக் கொள்கின்றன. இப்படியாக தேனீக்கள் தன் கால்களில் ஒட்டியிருக்கிற மகரந்த துகள்களை அடுத்த மலருக்கு, அதன் இனிப்பு திரவத்தை அருந்த செல்கிற போது, அதன் சூலிலில் தன்னிச்சையாக தடவி விட்டு விடுகிறது. இப்படியாக தேனீக்கள் போன்ற பல எளிய, எடையில்லாத பறக்கும் உயிரிகள் ஒரு மலரில் உள்ள ஆந்த்தர் என்கிற ஆண் உறுப்பு உற்பத்தி செய்கிற ஆண் உயிரணுவாகிற மகரந்த துகள்களை அடுத்த மலரில் உள்ள ஸ்டிக்மா என்கிற பெண் உறுப்பாகிற சூலில் சேர்த்து விடுகின்றன. அப்படியாக, ஸ்டிக்மா என்கிற சூலில் உள்ள பெண் கருமுட்டையில், அடுத்த மலரில் இருந்து தேனீயின் கால்கள் வழியாக கொண்டு வரப்படுகிற ஆண் உயிரணுவாகிற மகரந்த துகள்கள் சேர்க்கப்படுகின்றன. அப்படி ஆண் உயிரணுவும், பெண் கரு முட்டையும் சூலில் கூடுகின்றன. அந்த முயக்கத்தின் நீட்சியாக அவை ஒன்றோடு ஒன்றாக கலந்து, அந்த சூலின் அடியில் உள்ள சூல் பை அல்லது மகரந்த பைக்கு சென்று வளர ஆரம்பிக்கிறது. அதன் விளைவாக ஒரு மலர் காயாக உருமாற்றம் கொள்கிறது. காய் கனியாகிறது. கனியை புசிக்கிற பறவை அதன் விதையை தன் எச்சம் என்கிற ஊட்டச்சத்தின் மூலம் எங்கோ விதைத்து விட்டு செல்கிறது. அங்கே வனம் உருவாகிறது, பசுமை தளிர்க்கிறது. இப்படியாகவே ஒரு உயிர் தாவரமான செடிகளும், கொடிகளும், மரங்களும் கலவி கொண்டு, இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு, தங்களின் சந்ததிகளை விருத்தி செய்தபடி இருக்கின்றன. எப்படியிருந்தது இந்த செக்ஸ் கதை. ஒரு துளி ஆபாசமில்லாமல் இந்த ஒரு அறிவு தாவரங்கள் பாலுறவு கொள்ள முடிகிறதல்லவா? தாவரங்களும், பறவைகளும் இன்னபிற விலங்குகளும் காமத்தை ஆபாசமில்லாமல் அணுக முடிகிறபோது, ஆறறிவு படைத்த மனிதர்களால் அது முடியாதா?
அங்கே மட்டும் ஏன் இத்தனை ஆபாசம்? செக்ஸ் என்கிற வார்த்தையை நமது பெருமபாலான தமிழ் சினிமாக்கள் தப்பு பண்றது என்றே மொழிபெயர்க்க பழக்கி வைத்திருக்கிறது. கோயில்களிலும், கலைகளிலும் கொண்டாடப்பட்ட காதலும், காமமும், எந்தப் புள்ளியில் இப்படி ஆபாசமாக பார்க்கப்பட்டது? இயல்பான ஒரு விசயம், எதனால் இங்கே இத்தனை ஆபாசப்படுத்தப்படுகிறது? கிசுகிசுவாக மாற்றப்படுகிறது? எப்போது இங்கே செயற்கையான பாலியல் வறட்சி அறிமுகப்படுத்தப்பட்டது? அது எப்படி திட்டமிட்டு படிப்படியாக வளர்த்தெடுக்கப்படுகிறது? அதனால் அதற்கு பலகீனப்பட்டு, அடிமையாக்கப்படுகிற சமூகம், எப்படி தங்கள் உழைப்பை, பணத்தை அங்கே கொண்டு போய் கொட்டுகிறார்கள்? காமம் என்கிற விசயத்தை ஆழமாக யோசித்து அணுகவிடாமல், தட்டையாக யோசித்தால் போதுமானது என்று எது தடுக்கிறது? இதனால் யாருக்கு பெரும் லாபம் கிடைக்கிறது?
இருபதாம் நூற்றாண்டு வரை தண்ணீர் கூட விலைக்கு விற்க போகிறார்கள் என்று நகைச்சுவை எழுதிக் கொண்டிருந்தார்கள். அந்த நகைச்சுவை இப்போது அவல நிஜமாகி இருக்கிறது. சென்ற நூற்றாண்டு வரை இத்தனை புதியபுதிய நோய்கள் வரவில்லை. இத்தனை மருந்துகள், தொழில்நுட்பங்கள், இத்தனை வைத்திய செலவுகள் வரவில்லை. இத்தனை மனஅழுத்தம் வரவில்லை. இத்தனை மனநோய்கள் வரவில்லை. இத்தனை மனநல மருத்துவர்கள் அவசிய பட்டிருக்கவில்லை. ஒற்றை வார்த்தையில் பெரிய வணிகத்தை சூசகமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். செயற்கையாக உருவாக்கப்பட்ட பாலியல் வறட்சி. அதை ஆரோக்கியமாக, இயல்பாக பார்க்கிற சக்தியை எளிய மனங்களில் இருந்து பறித்து விட்டதில், இங்கே காமமும், காதலும் ஆபாசப்படுத்தப்பட்டு கிடக்கிறது. ஜீவநதிகள் சாக்கடைகளாக திரிந்து போய் கொண்டிருக்கின்றன.
ஒரு பெண் நேரடியாக என்னிடம் சொன்னவொரு தகவல் இது. அப்போது அந்த பெண் பிளஸ் டூ படித்து கொண்டிருந்திருக்கிறாள். நன்கு தெரிந்த பெண். அந்தப் பெண்ணை அந்த தெருவை சேர்ந்த ஒரு நபர் கடத்திகொண்டு போகிறார். அந்தப் பெண்ணை ஒரு அறையில் பூட்டி வைத்து ஒரு வாரம் வன்புணர்வு செய்கிறார். பிற்பாடு கொண்டு வந்து விடுகிறார். வருகிற வழியில் உன்னை திருமணம் செய்து கொள்வதற்காக தான் இப்படி செய்தேன் என்கிறார். இங்கே வந்ததும், பெண்ணின் வீட்டார் காவல்நிலையத்தில் வழக்கு பதிய தயாராகிறார்கள். அந்தப் பெண், ஒரே பிடியாக அந்த நபரையே திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி விட்டார். ஏன்? தானாகவே ஒரு பெண் அப்படிப்பட்ட அவமானத்திற்கு பிற்பாடும் அப்படி சொல்வார்? அப்படி அவரை சொல்ல வைத்தது எது? இந்த சமூகம். ஏன் இப்படியான முடிவிற்குள் பொதுபுத்தியுள்ள சராசரி பெண்களை தள்ளிவிட்டுவிட்டு, எனக்கென்ன வந்தது என்று கண்டுகொள்ளாமல் போய் கொண்டே இருக்கிறது?
நேரடியாக பார்த்த ஒரு சம்பவத்தை சொல்லி விட்டு, திரைநாயகிகள் பற்றிய உதாரணங்களுக்கு செல்லலாம். சென்னை அசோக்நகரில் அந்த அரசு மகளிர் பள்ளி பிரசித்தம். முன்பெல்லாம் அங்கே படிக்கிறவர்கள் அத்தனை பேரும் நூற்றுக்கு நூறு பாஸாகி விடுவார்கள் என்றொரு செய்தி உண்டு. (இது பெரும்பாலான பள்ளிகளில் இப்போது தொற்றியிருக்கிற ஒரு நோய்மை கூறு என்பது வேறு விசயம். இதுபற்றி பிரிதொரு இடத்தில் அலசலாம்.) அந்தப் பள்ளியை சுற்றியுள்ள சாலையில் ஒரு மாலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தேன். அப்போது சாரைசாரையாக பள்ளி விட்டு பெண்கள் சென்று கொண்டிருந்தார்கள். திடீரென ஒரு கார் அங்கு வந்து நின்றது. உடனே ஒரு நபர் அந்தப் பெண்ணை என்னவோ சொல்லி, காரில் திணித்து கொண்டு புறப்பட்டு விட்டார். உடனே அதைக் கண்ணுற்ற சில ஆசிரியைகள், உடனே காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து விட்டார்கள். அதெல்லாம் சரி தான். அதற்கு பிறகு அவர்கள் நடந்து கொண்டது தான் சகிக்க முடியாதது. அதிர்ச்சியில் உறைந்து போய் அங்கே நின்றிருந்த வயதுக்கு வந்த பெண்களிடம், அந்த ஆசிரியை இப்படி சீறினார்.‘இதுக்கு தான்டி சொல்றது.. இப்புடி அலையாதீங்கன்னு.. ஆம்பளை பையன்கிட்ட என்னடி பேச்சு வேண்டிக் கெடக்கு.. இப்ப பாத்தீங்கள்ல.. தூக்கிட்டு போயிட்டான். இப்பிடி தான் ஒவ்வொருத்தியையும் எவனோ ஒருத்தன் தூக்கிட்டு போக போறான்.. சிரிப்பு.. எந்நேரமும் சிரிப்பு. ஒருத்தருக்குள்ள ஒருத்தர் ரகசியமா அப்பிடி என்ன தான் பேசிக்குவாளுங்களோ.. மூடிக்கிட்டு வீட்டை பாத்து போங்கடி..’ என்று தெரு முழுக்க கேட்கிறாற்போல் சாலையில் நின்றபடியே வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த மாணவிகளை வசை மாரி பொழிந்து கொண்டிருந்தார்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் அந்தக் காரில் பெண்ணை அழைத்துக்கொண்டு போனவைனை, காவல் துறை பிடித்துக் கொண்டு வந்து விட்டது. அவன் தாய் மாமன். அவன் தன்னிச்சையாக இப்படியொரு காரியத்தை செய்திருக்கிறான். அந்தப் பெண்ணிற்கும், இந்த சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், அந்த ஆசிரியை ஒட்டுமொத்த மாணவிகளின் இதயங்களிலும் அந்த சில நிமிடங்களுக்குள் நஞ்சை கலந்து விட்டார்.. ஆபாசத்தை விதைத்து விட்டார். இயல்பான ஒரு விசயத்தை பற்றி, இயல்பாக கற்றுத் தர வேண்டிய பொறுப்பில் இருக்கிற ஆசிரியை, புரிதலற்று, தன்னுடைய இயலாமையை ஆபாசமாக்கி, அவர்கள் மீது கொட்டி விட்டார். இது வன்முறை இல்லையா?
இங்கே பெரும்பாலான பெற்றோர்களுக்கும், ஆசிரிய ஆசிரியைகளுக்கும் தான் முதலில் கவுன்சிலிங் மற்றும் முறையான பாலியல் கல்வி கற்றுக் கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. காரணம், அவர்கள் தானே இளைய தலைமுறையினரின் ஆளுமை பண்புகளை வடிவமைப்பதில் தெரிந்தோ, தெரியாமலோ முக்கிய பங்காற்றுகிறார்கள். அவர்களே இப்படி புரிதலற்று, காமத்தை ஆபாசமாக பார்க்கிற பார்வையோடு இருந்தால், இளைய தலைமுறையென்ன.. ஒட்டு மொத்த சமுதாயமே ஆபாசப்பட்டு தானே போகும்??
தலைப்பிற்கு வருவோம். திருமணத்திற்கு முன். திருமணத்திற்கு பின். இங்கே ஆண் - பெண் சமத்துவம், அந்த லட்சணத்தில் தான் இருக்கிறது. எத்தனை எத்தனை புகழ் பெற்ற, திறமையான நடிகைகள், திருமணம் ஆனதும் நடிப்பு துறையிலிருந்து விலக நேரிடுகிறது. அது அவர்களாகவே எடுக்கிற முடிவா? அப்படியொரு முடிவை இந்த சமூகத்தில் எந்த ஒரு ஆண் நடிகராவது எடுத்திருக்கிறாரா? திருமணம் செய்து கொண்டு விட்டேன். அதனால், இனிமேல் திரைப்படங்களில் நாயகனாக நடிக்க மாட்டேன். வீட்டில் இருந்து குடும்பத்தை, பிள்ளைகளை பார்த்து கொள்ள போகிறேன் என்று எந்த நடிகராவது சொல்லி இருக்கிறாரா? ஒரே ஒரு உதாரணமாவது அப்படி சொல்ல முடியுமா? தமிழ் நாயகிகளில் மட்டும் குறைந்தது நூறு உதாரணங்கள் சொல்லலாம்.
ஜெனிலியா, அசின், நஸ்ரியா என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் ஷாலினி கதை ரொம்பவே ஸ்பெஷல். பிரியாத வரம் வேண்டும் படப்பிடிப்பு நிறைவடைய ஒரு பாடல் காட்சியில் ஒரு பகுதி மட்டும் பாக்கி இருந்தது. அதற்குள் ஷாலினிக்கு திருமணம் ஆகி விட்டது. ஆனால், அவரின் கணவர் தீர்மானமாக இருந்து விட்டார். திருமணத்திற்கு பிறகு ஒரு நாள் கூட ஷாலினி நடிக்கக் கூடாது என்று. அந்த ஏழு நாட்கள் படத்தில் என் முதல் திரையுலக குருநாதர் ஒரு வசனம் வைத்திருப்பார். என்னோட காதலி, இன்னொருத்தருக்கு மனைவி ஆகலாம். பட்சே, இன்னொருத்தரோட மனைவி எனக்கு காதலியாக முடியாது. காரணம் என்னவாக இருந்து விட முடியும்? வெர்ஜினிட்டி. இந்த சமூகத்தில் பெண் தன் உடம்பாலேயே அளவிட படுகிறாள். அவளின் பாலுறுப்பை பாதுகாப்பதே, அவளின் பிரதான கடமை என்று கற்பிதம் செய்விக்கபட்டிருக்கிறாள். இன்னொருவருடைய மனைவி தானே காதலியாக முடியாது. அந்தப் பெண் டிவோர்ர்ஸ் பெற்று விட்டால், காதலியாக முடிய வேண்டும் தானே? ஆனால் இங்கே அதற்கெல்லாம் இடமே கிடையாது. கன்னித்தன்மை இல்லாமல் போகிற போது, அந்த பெண்ணை எப்படி மறுபடி காதலியாக ஒரு தமிழ் திரை நாயகன் ஏற்றுக் கொள்ள முடியும்?
அப்படியாகவே ஷாலினி விசயத்திலும் நடந்தது. இரண்டு நாட்கள் நடித்து கொடுத்து விட்டு வந்துவிடலாம் என தான் அவரும் நினைத்தார். ஆனால், ஆணாதிக்க சமூகத்தில் வார்த்தெடுக்கப்பட்ட அவரின் கணவர், யாரோவாக நீ இருந்தபோது யாரோடு வேண்டுமானாலும் மரத்தை சுற்றி டூயட் பாடலாம். அதுவே என்னுடைய மனைவி என்கிற அடையாளத்தை பெற்ற பிறகு, ஒரு நொடி கூட வேறொரு நடிகரை தொட்டு நடிக்க கூடாது என்று விட்டார். இங்கே நிஜத்தை விட நிழலை கட்டி காப்பதற்காக தானே வாழ்நாள் முழுக்க மெனக்கிடுகிறார்கள். இமேஜ் தானே இங்கே பிரதானம். அதனால், அந்தப் படம் ஏற்கனவே ஷாலினி, குஞ்சாக்க போபன் நடிக்க மலையாளத்தில் எடுத்திருந்த பாடலில் உள்ள லாங் ஷாட் காட்சிகளை வைத்து, ஒப்பேற்றி ரிலீஸ் செய்தார்கள். இப்போதும் அந்த காட்சி அப்படியே ஒரு நடமாடும் சாட்சியாக அந்தப் படத்திற்குள் உலா வந்து கொண்டு தான் இருக்கிறது.
சுஜாதா திருமணத்திற்கு முன்னால் சிவாஜியோடு அந்தமான் காதலி என்றொரு படத்தில் நடிப்பிற்கு பின், அவரின் கணவரின் விருப்பத்திற்கிணங்க நடிப்பிற்கு முழுக்கு போட்டார். அற்புதமான நடிகை. அன்னக்கிளி, நூல்வேலி, அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது என்று ஏராளமான படங்களில் கலக்கி இருப்பார். கல்யாணத்தோடு நடிப்பை நிறுத்துவதாக அறிவித்தார்.
யார் செய்த புண்ணியமோ, அவருடைய கணவர் நடத்திக் கொண்டிருந்த ஊறுகாய் பிசினஸ் முழுசாக படுத்து கொண்டது. உடனே அவர் அந்த குடும்பத்தின் பொருளாதார தேவைக்காக வேறு வழியின்றி நடிக்க வேண்டிய சூழல் வந்தபோது, அந்தக் கணவரால் அதை தடுக்க முடியவில்லை. ஆனாலும், அவரை ஒரு இரும்பு கோட்டைக்குள் யாரும் தன்னை தாண்டி தொடர்பு கொள்ள முடியாதபடியே வைத்திருந்தார். படப்பிடிப்பு தளத்தில் ஒரு இயக்குநரிடம் அப்படித்தான் ஒரு முறை சுஜாதா தன்னுடைய சேலையை விலக்கி காட்ட, கால், தொடை எல்லாம் சிகரெட்டால் சூடு போடப்பட்ட காயம் இருந்திருக்கிறது. உடனே பதறிப்போன அந்த இயக்குநர், மருந்து வாங்கி வந்து தரச் சொல்லி இருக்கிறார்.
ராஜசுலோசனா என்றொரு நடிகை எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் அவர்களுக்கு ஜோடியாகவெல்லாம் நடித்திருப்பவர். திருமணம் ஆன சில மாதங்களில் மூன்றாந்தர பத்திரிகை ஒன்று பிழைப்பிற்காக கிசுகிசு ஒன்று எழுதி போட... சூடாகிப் போன அவரின் கணவர் படப்பிடிப்பு தளத்திற்கே வந்து, எல்லோர் முன்னாலேயே பளாரென அறைந்திருக்கிறார். இப்படி எவ்வளவோ உதாரணங்கள் சொல்லி கொண்டே போகலாம்.
குடும்ப வன்முறை என்பது ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதோ ஒரு வகையில் நிகழவே செய்கிறது. அதை எந்த மீ டூ அமைப்பும், கேள்விக்கு உட்படுத்துவதில்லை. யாராவது பிரபலமானவர்களை அதுவும் திரைப்படத்துறையை சார்ந்தவர்களை மட்டுமே குறி வைத்து வருடக்கணக்காய் துறத்தி, அதில் ஒரு பப்ளிசிடி தேடிக் கொள்கிற அளவிற்கே அந்த விசயம் சிறுத்து போய் விட்டது ஒரு சோகம். அந்த இயக்கம் பெண்களுக்கானது மட்டுமல்ல. ஆண்களுக்கானதுமானதாக வளர்த்தெடுக்க பட்டிருக்க வேண்டும். மனிதர்களுக்கான இயக்கமாக அது விரிவடைந்திருக்க வேண்டும். தனிப்பட்ட பழி வாங்குதலுக்கான ஒரு குறுக்கு வழியாக அது குறுகிப் போயிருந்திருக்க கூடாது. பழி வாங்குவது எந்தவொரு ஆக்கப்பூர்வமான அமைப்பின் நோக்கமாக இருக்க முடியாது. ஆண்களுக்கும், பெண்களுக்குமான பாலியல் தடுமாற்றங்கள் குறித்த தத்துவ விசாரத்தை, அதன் வழி அதற்கான தெளிவை எட்ட அப்படிப்பட்ட அமைப்பு எந்த முயற்சியையும் எடுத்து வைக்கவில்லை. வெறுப்பை கொட்டவும், குழுக்களாக பிரிந்து பிரிந்து மாறிமாறி தரம் தாழ்ந்து, புழுதி வாரி தூற்றிக் கொண்டது மட்டுமே மிச்சம் என்கிற நிலையில் அது வந்து நின்றிருக்கிறது. நிரந்தரமான நியாயம் என்பது பாதிக்கப்பட்டவர் முன்னெடுக்கிற செயல்பாடுகள் மூலம், அதுமாதிரி இனியொருவர் பாதிக்காமல் இருக்கவும், பாதிப்பை உண்டாக்கியவரை மீட்டெடுப்பதுமாகவே இருக்க வேண்டியிருக்கிறது. அல்லது வெற்று கூச்சலோடு எல்லாம் முடிந்து போகிறது. குடும்ப வன்முறையோ, பெண் உடம்பால் அளக்கப்படுகிறவளாக, ஒரு பண்டமாக, ஆணின் சொத்தாக, ஆணின் உடமையாக பார்க்கப்படுகிற இந்த ஆணாதிக்க சாதிய சமுதாயத்தை புணரமைப்பு செய்வது குறித்து இனியாவது இப்படியான அமைப்பு, தங்களின் செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்பதே மனிதர்களை அறம் நோக்கி நகர்த்தும்.
சம்பள விசயத்தில் கூட பிரபலமான நாயகி வாங்குகிற சம்பளத்தை விட அதிகமாக ஒரு பிரபலமான குணச்சித்திர நடிகர் வாங்குகிறார். தெருக்களில் நடனமாடுகிறபோது, நாயகன் டூ பீஸ் போடுவதில்லை. அரைகுறை ஆடை உடுத்துவதில்லை. பெண் மட்டும் அப்படியான காட்சி பொருளாகவே ஆக்கப்படுகிறார். இந்த கதைகளை வேறு வேறு கட்டுரைகளில் விரிவாகவே பார்க்கலாம். மறுபடி இந்தக் கதைக்கு திரும்பலாம்.
இங்கே கனவுக்கன்னியாக வலம் வரும் திரை நாயகிகள் கூட திருமணம் செய்து விட்டால், உடனே அக்கா, அண்ணி கதாபாத்திரங்களுக்கு பதவி இறக்கம் செய்யப்படுவார். திருமணம் ஆகாதபோது அந்த நாயகிக்காக கோவிலே கட்டுவார்கள். திருமணம் ஆனதும், அவரும் விதிவிலக்கல்ல. அவருக்கும் அண்ணி, அம்மா, அக்கா கதாபாத்திரம் தான். திருமணத்திற்கு முன்பு வரை கன்னித்தன்மையோடு இருப்பதாக ஒரு பிம்பத்தை பார்வையாளர்கள் கட்டமைத்து கொள்ள இந்த சமூகம் பழக்குவிக்கிறது. அவர்கள் திருமணத்திற்கு பின் அந்த பிம்பம் கட்டுடைகிறபடியால், அவர்களை இங்கே உள்ள பார்வையாளர்கள் உடனே கனவுக்கன்னி பீடத்திலிருந்து தூக்கியடித்து விடுகிறார்கள். அதே சமயம் எத்தனை வயதானாலும் இங்கே உள்ள நாயகர்கள் இளமை மாறாத நாயகர்களாகவே வலம் வருகிறார்கள். அவர்களுக்கு மகளாக நடித்து, பின் காதலியாக நடித்து, பிற்பாடு அண்ணியாக நடித்து, இப்போது அம்மாவாக நடித்து கொண்டிருப்பவர்கள், இன்னும் சில வருடங்களில் அந்த நாயகனுக்கு பாட்டியாகவும் நடிப்பார்கள். ஏனென்று யோசித்திருக்கிறோமா?
பெண்களை உடம்பால் அளவீடு செய்கிற ஆணாதிக்க மனநிலையை எப்போது புறந்தள்ள போகிறோம்? எப்போது காமத்தை, காதலை ஆபாசமின்றி பார்க்க போகிறோம். எப்போது உறவு கொள்வதென்பதை தப்பு பண்ணிட்டு இருந்தோம் என்று சொல்கிறதிலிருந்து மாறப்போகிறோம். எப்போது காமத்தை புனிதமோ, ஆபாசமோ இல்லாமல் இயல்பாக பார்க்க போகிறோம். அந்த நாளில் பெண் - ஆண் சமத்துவம் நிலைகொண்டிருக்கும். அப்போது திரைநாயகிகளும் தங்கள் விருப்பப்படி இறக்கும் வரை நடித்து கொண்டிருப்பார்கள்.
*
Leave a comment
Upload