தொடர்கள்
விகடகவியார்
கொடநாடு கொள்ளை, கொலை வழக்கு... - விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட்...

பிடி இறுகுகிறது

20210809190602210.jpeg

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை மேல் விசாரணைக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதுவும் குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி, இது அரசியல் பழிவாங்கல் என்று கொதித்து எழுந்தார். அப்போது எடப்பாடி பெயரை குறிப்பிடாமல், சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் மடியில் கனமில்லை என்றால் ஏன் பயப்படுகிறீர்கள். எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக அதிமுகவின் செயல் இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

கொடநாடு கொலை வழக்கில் சாட்சியாக இருக்கும் அனுபவ் ரவி, எடப்பாடி யோசனை படி, உயர்நீதிமன்றத்தில் மேல் விசாரணைக்கு தடை கோரி செய்த மனு, தள்ளுபடி ஆனது. அதன் பிறகு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் அனுபவ் ரவி. இதுவும் எடப்பாடி ஏற்பாடுதான். அவருக்காக ஆஜரான வழக்கறிஞருக்கு பல லட்சம் செலவு செய்யப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றமும், இந்த மனுவை தள்ளுபடி செய்தது. உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேல் விசாரணை செய்வது, சரியான நடவடிக்கை தான். எனவே.. இதுபற்றிய எந்த வாதங்களையும் நாங்கள் கேட்க விரும்பவில்லை என்று சொல்லி, நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்தார்கள்.

இனிமேல் யாராலும் தடை செய்ய முடியாது என்பதை உறுதியாக தெரிந்துகொண்ட விசாரணைக்குழு, விசாரணையை முடுக்கி விட்டது.

20210809190639949.jpeg

மேலாளர் நடராஜன்

கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அவர் தனது வழக்கறிஞர் ராஜ்குமாருடன், பழைய எஸ்பி அலுவலகத்திற்கு வந்தார். அங்கு மேற்கு மண்டல ஐஜி சுதாகர், எஸ்.பி. ஆஷிஷ்ராவத் இருவரும் வழக்கறிஞரை வெளியே காத்திருக்க சொல்லிவிட்டு, மேலாளர் நடராஜனிடம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். மின்தடை ஏற்பட்டது எப்படி..? கண்காணிப்பு கேமராவை ஆஃப் செய்ய சொன்னது யார்..? என்று அவரை குடைந்து எடுத்துவிட்டார்கள். குறிப்பாக எடப்பாடி பற்றி நிறைய கேள்விகள் கேட்டார்கள். எடப்பாடி எத்தனை முறை இந்த எஸ்டேட்டுக்கு வந்துள்ளார். நீங்கள் புகார் தராமல், காவலாளியை விட்டு புகார் தர சொன்னது ஏன்..? கொலை நடந்த விஷயம் உங்களுக்கு எப்போது தெரியும். அந்த இடத்திற்கு நீங்கள் தாமதமாக வந்தீர்கள் என்று சொல்கிறார்களே, அது உண்மையா..? அன்று உங்களிடம் யார் யாரெல்லாம் பேசினார்கள் என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரை திணற அடித்திருக்கிறார்கள், ஐஜி, எஸ்பி இருவரும். இவையெல்லாவற்றையும் ஆடியோ பதிவுடன் வீடியோ எடுத்து வைத்திருக்கிறார்கள். விசாரணை எல்லாம் முடிந்ததும், எங்கேயும் போகக்கூடாது, மறுபடியும் அழைப்போம் என்று கண்டிஷனுடன் மேலாளர் நடராஜனிடம் சொல்லி அனுப்பி இருக்கிறார்கள்.

20210809190718849.jpeg

சுதாகர் ஐ.ஜி.

தொடர்ந்து மறுநாள் 8, 9, 10 எண் கொண்ட கொடநாடு எஸ்டேட் நுழைவாயில் பகுதியில், காவல்துறை குழு ஆலோசனை செய்தது, ஆய்வு செய்தது. அப்போதும் எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம், அந்தக் குழு, கேள்வி மேல் கேள்வி கேட்டு கொலை நடந்த இடம், காவலாளியை கட்டி போட்ட இடம், கொள்ளை நடந்த இடம் என்று எல்லா இடங்களையும் ஆய்வு செய்தார்கள்.

இது போதாதென்று இன்னொரு விசாரணை குழு, கோவையில் - தனியார் விடுதியில் கனகராஜ் மனைவி மற்றும் அவர் உறவினர்களை விசாரணை நடத்தியது. கனகராஜன் மரணத்தில் உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா என்ற கேள்வியை திரும்பத் திரும்ப கேட்டது. விசாரணைக்குழு கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்த அன்று கனகராஜ் எங்கிருந்தார் என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொள்வது. கனகராஜ் மனைவியிடம், எடப்பாடி பற்றி சில கேள்விகளைக் கேட்டது விசாரணைக் குழு.

20210809190921241.jpeg

இது தவிர... இந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரிகளிடம், தனியாக விசாரணை நடந்து வருகிறது. குறிப்பாக கொடநாடு எஸ்டேட்டில் மெயின் நுழைவாயிலில் 20 போலீசார் தினந்தோறும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் டிஎஸ்பி சுழற்சி முறையில் இரவு அங்கு ஆய்வு செய்வது வழக்கம். ஆனால், கொலை, கொள்ளை நடந்த அன்று, அங்கு ஒரு காவலர் கூட இல்லை. இதன் மர்மம் என்ன என்று விசாரித்து வருகிறது விசாரணைக்குழு. ரவுண்ட்ஸ் போக வேண்டாம், காவலர்கள் அங்கு இருக்க வேண்டாம் என்று உத்தரவிட்ட அதிகாரி யார் என்று விசாரணை அதிகாரிகள், விவரங்களை சேகரித்து இருக்கிறார்கள்.

இதன் நடுவே... புதிதாக வாக்குமூலம் தந்தவர்கள், இதுதான் நடந்தது என்று எல்லா உண்மையும் சொல்லிவிட்டார்கள். மொத்தத்தில் இந்த தீபாவளி, அதிமுகவிற்கு ஹாப்பி தீபாவளி இல்லை என்பது மட்டும் உண்மை.