தொடர்கள்
விகடகவியார்
விகடகவியார்

அதிமுக குழப்பம்...

20211026182812784.jpg

சென்ற வாரம் அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா பேச எழுந்ததும், பல மாவட்ட செயலாளர்கள்... அவர் பேசக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தார்கள். காரணம்... சமீப காலமாக தலைமைக்கு எதிராகவும், சசிகலாவுக்கு ஆதரவாகவும் அன்வர் ராஜா பேசிக்கொண்டு இருப்பது தான். அன்வர் ராஜா மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி கடிதம் தந்தோமே, ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சில மாவட்டச் செயலாளர்கள், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை பார்த்துக் கேட்டார்கள்.

அப்போது முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் எழுந்து, கட்சியை கடுமையாக விமர்சித்து விட்டு கூட்டத்துக்கு வருகிறார் இவர். அப்படியென்றால் கட்சித் தலைமை மீது அவருக்கு பயம் இல்லை என்றுதானே ஆகிறது. ஏன்... அவர் மீது நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று அவரும் வற்புறுத்தினார். அன்வர்ராஜா உடனே தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்பதாக சொல்லி அமர்ந்தார்…

ராமதாஸ் கோபம்

20211026182743515.jpg

இப்போதெல்லாம் பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சி நிர்வாகிகளிடம் கோபமாக பேசுகிறார். வன்னியர்களுக்கான ஒதுக்கீடு தடை, அன்புமணி ராமதாசுக்கு உரிய பதவி கிடைக்கவில்லை, இப்படி வரிசைகட்டி வருத்தப்படுகிறார்...

தற்போது... திடீர் சுறுசுறுப்பாக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி நிர்வாகிகளிடம் பேசுகிறார். ஏற்கனவே திண்டிவனம் மாவட்ட நிர்வாகிகளிடம் பேசினார். சென்ற வாரம் கடலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் பேசினார். அங்கெல்லாம் அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில், இன்னும் கணிசமான இடங்களை பெறவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார். கடலூர் மாவட்டத்தில் பேசும்போது... கடலூரில் இரண்டு தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், தோற்றுப் போனோம். நம்மை தோற்கடித்தவர்கள் நம் கட்சிக்காரர்கள் தான். பொறுப்பில் இருந்தவர்கள், பொறுப்பில் இருப்பவர்கள்.. இவர்கள் தான் காரணம். அவர்கள் யார் என்பது கூட எனக்குத் தெரியும் என்று வெளிப்படுத்திய ராமதாஸ்... தமிழ்நாட்டை ஆள வேண்டும், அந்த எண்ணம் நிறைவேற அன்புமணி ராமதாஸ் முதல்வராக வரவேண்டும், அதற்கு நீங்கள் வேலை செய்ய வேண்டும். அப்படி இல்லாவிட்டால்... மாடு மேய்க்கும் சிறுவர்களை நான் மாவட்ட செயலாளர் ஆக்கி விடுவேன் என்று நிர்வாகிகளை பயமுறுத்தினார்.

ஜோதிமணி போராட்டம்

20211026182601383.jpg

கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, அதிமுக ஆட்சி காலத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் மோதிக்கொண்டு பரபரப்புச் செய்தியாக இருப்பார். தற்போது தோழமை கட்சி ஆட்சி என்றாலும், அவருக்கு அனுசரணையாக அதிகாரிகள் இல்லை.

மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை உறுப்பு பொருத்த மத்திய அரசு நிதி உதவி செய்யும் திட்டத்தில், ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு உதவ திட்டமிட்டு முகாம் நடத்தி, பயனாளிகள் பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் தந்தார் ஜோதிமணி. கரூர் மாவட்ட ஆட்சியர், அந்தப் பட்டியலை கிடப்பில் போட்டுவிட்டார்.

இதனால் சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தன்னை அலட்சியம் செய்வதாக சொல்லி மத்திய அரசின் இந்த உதவியை மக்களுக்கு சென்றுவிடாமல் தடுக்கப் பார்க்கிறார் என்று அவர்மீது புகார் சொல்லி, அலுவலகத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி.

மாவட்ட ஆட்சியர் அவரை சமாதானப்படுத்த, அவருக்கு முன்பாக தரையில் அமர்ந்து விளக்கம் சொல்ல முற்பட்டபோது... இந்தத் திட்டத்தில் முறைகேடுகள், கமிஷன், ஊழல், ஆட்சியர் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் என்றெல்லாம் பத்திரிகையாளரிடம் அவர் சொல்ல... கூடவே தூத்துக்குடியில் கனிமொழி நடத்தும் மாற்றுத்திறனாளி முகாமுக்கு எல்லா உதவிகளும் தடையில்லாமல் சுமூகமாக நடக்கிறது, அது எப்படி என்று கேள்வி கேட்டார். அதன்பிறகு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர், இந்த அரசியல் நமக்கு வேண்டாம் என்று எழுந்து போய்விட்டார்.

20211026182639413.jpg

இதனிடையே கரூர் ஆட்சியர் பிரபு சங்கர் மீது குற்றம் சாட்டி நான்கு பக்க கடிதத்தை தலைமைச் செயலாளர் இறையன்புக்கு அனுப்பியிருக்கிறார் ஜோதிமணி. அந்தக் கடிதத்தில்... கரூர் ஆட்சியர் மேஜையில் இருந்து குறைந்தபட்சம் ஒரு சதவீதம் முதல் இரண்டு சதவீதம் கட்டாய வசூல் முடிந்த பிறகுதான், கோப்புகள் நகரும் என்று மக்கள் மத்தியில் பரவலான அபிப்பிராயம் உள்ளது. மக்கள் நலனுக்கு விரோதமான மாவட்ட ஆட்சித் தலைவர் என்றெல்லாம் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ஜோதிமணி. இதற்கு... மாவட்ட ஆட்சித் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நடந்தது என்ன என்பதை சுட்டிக்காட்டி... முடிவாக ‘வாய்மையே வெல்லும்’ என்று பதிவிட்டு இருக்கிறார். எது எப்படியோ இரவு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படுத்து, தனது தர்ணா போராட்டத்தை தொடர்ந்த கரூர் எம்பி ஜோதிமணி, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில், எனது உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. முதல்வர், காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, நகர்ப்புற துறை அமைச்சர் கேஎன் நேரு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்திருக்கிறார். ஆனால், மாவட்ட ஆட்சித் தலைவர் மீது அவர் சொன்ன கமிஷன் குற்றச்சாட்டு பற்றி, அமைச்சர் என்ன சொன்னார் என்பதை ஜோதிமணி வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.