அகத்தியர் (தொடர்ச்சி...)
சித்தர்களின் முதல்வரான அகத்தியர் சொன்ன கருத்துக்கள் எளிமையாய் மக்களுக்கு புரியும் வகையில் தரப்பட்டுள்ளவை.
“மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவையுயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே.”
எல்லாவற்றையும் விட மனதின் ஆற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்.
அகத்தியர் பாடல்கள்...
ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்
உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும்;
பருவமதிற் சேறுபயிர் செய்ய வேணும்
பாழிலே மனத்தை விடான் பரம ஞானி;
திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி
தேசத்திற் கள்ளரப்பா கோடா கோடி;
வருவார்க ளப்பனே அனேகங் கோடி
வார்த்தையினால் பசப்புவார் திருடர் தானே.
இதை விட எளிமையாய் சொல்லிட யாராலும் இயலாது. நல்ல மனது வேண்டும். உழவுத் தொழில் செய்ய வேண்டும். பொய் வார்த்தை சொல்லி யாரையும் ஏமாற்றக் கூடாது என்று அறிவுரை சொல்லி வைத்தார் அகத்தியர். பசப்புதல் என்கிற நல்ல தமிழ் வார்த்தையை நாம் இழந்து விட்டோம்.
குருவாக உமைபாக னெனக்குத் தந்த
கூறரிய ஞானமது பத்தின் மூன்று
பொருளாகச் சொல்லி விட்டேனப்பா நீதான்
பொருளறிந்தாற் பூரணமும் பொருந்திக் காணே
அருளாகா திந்நூலைப் பழித்த பேர்கள்
அருநரகிற் பிசாசெனவே அடைந்து வாழ்வார்
அருளாக ஆராய்ந்து பார்க்கும் பேர்கள்
ஆகாயம் நின்றநிலை அறியலாமே.
சிவபெருமான் தமக்குத் தந்த ஞானத்தை பாட்டின் மூலம் நான் இந்த உலகத்திற்கு வழங்கி விட்டேன். இதை பழித்து சொல்வோர் நரகத்தில் பிசாசாகப் போவார்கள், உணர்ந்து பயன்படுத்துவோர் சுவர்க்கம் செல்வர் என்பதையே இந்த கடைசிப்பாட்டில் குறிப்பிடுகிறார்.
ஞானப்பாடல்களில் இவ்வாறு கூறிய அகத்தியர், தன்னுடைய மற்றொரு நூலில் சித்தர் பாடல்கள் ஏன் மக்களுக்கு புரிவதில்லை என்பதை பற்றி பாடியுள்ளார்.
அகத்தியர் பரிபாசைத்திரட்டு 1:23 “அருளினதோர் ஐநூறும் யாருக்கென்றால் அகங்கடந்த மேஞ்ஞானியருள் பெற்றோர்க்குக் குறு முகமாய் கொடுப்பதல்லால் மற்றோர் கையில் கொடுத்தவர்க்கும் பெற்றவர்க்கும் சாபம் கூறிப் பெருமையுள்ள சித்தர்தமை வணங்கிப் போற்றி பிரமன் தன் உத்தரவு தன்னால் இந்நூல் கருவறிய ஞானிகட்கே வெளியிட்டேனால் கையடக்கமாக வைத்துக் கண்டுதேறே” இந்த பாடல்கள் மூலம் அகத்தியர் கூறுவது யாதெனில், இந்தப் பாடல் அனைத்தும் சரியான மனிதர்களுக்கு மட்டுமே சென்றடைய வேண்டும் என்பதால், ஞானத்தை அடைய விரும்புபவர்கள், அதன் மேல் பரிபூரண நாட்டம் கொண்டு, குரு மூலமே சித்தர்களின் பாடல்களுக்கான முழு பொருளையும் அறிய முடியும். மற்றபடி சாதாரண மனிதர்களால் சித்தர்களின் பாடல்களில் ஒளிந்துள்ள பொருளை முழுமையாக அறிய முடியாது. சாதாரண மனிதர்கள் அறிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்ட பாடல் அல்ல சித்தரின் பாடல்கள் என்று கூறி உள்ளார்.
யார் யாரையோ சாமியார், என்று சொல்வதற்கும், வெறுமே கண்ணை மூடி தவம் செய்கிறேன் என்று சொல்பவரையும் கண்டு கோபமாய் அகத்தியர் சொல்கிறார்...... மடையர்கள்.!!
“மடையனவன் சலத்திலுள்ளே யிருந்தே னென்பான்
மாடுநிற்கும் யோகமல்ல வித்தையாச்சு
சடைவளர்த்தா லாவதென்ன கண்ணை மூடிச்
சாம்பவியென் றேயுரைப்பார் தவமில்லார்கள்”
– அகத்தியர் ஞானச்சுருக்கம்
வித்தை காட்டுபவர்கள் தான் நான், தண்ணீரினுள் இருப்பேன். அப்படி செய்வேன்.. இதை செய்வேன் என பொய்களை அவிழ்த்து விடுவர். மடையன் தான் அவன்! ஏனெனில் ஒரு எருமை மாடு கூட தண்ணீரினுள் இருக்கும்! அவன் யோகியல்ல!
அதுமட்டுமா? தாடி, சடை வளர்த்து உத்திராட்சம் அணிந்து, காவி உடுத்தி, பெரியசாமி என்று தன்னை தம்பட்டமடிக்கும் எவனும் உண்மையான சாமி அல்ல! மூவாசையை முற்றும் துறந்தவனே, சாமி – யார்? என தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடுபவனே, அத்ற்காக ஞான தவம் செய்பவனே சாமியார்! ஆத்மசாதகன்! தவசீலன்!
காஷாயம் தரித்து கண்ணை மூடி எவன் எதை செய்தாலும் அதுவும் ஞானமல்ல! தவமல்ல! கண்ணை மூடினாலே தவறு!? அவன் கண்ணை மூடிட்டான் என செத்தவனைத்தானே சொல்வோம்? கண்ணை மூடி நீ எதை செய்தாலும் நீயும் செத்துதான் போவாய்!? சந்தேகமேயில்லை!
“கலையுரைத்த கற்பனை எல்லாம் நிலை என கொண்டாடும் கண் மூடி பழக்கம் எல்லாம் மண் மூடி போக” என் திருவருட்பிரகாசவள்ளலார் தெளிவாக கூறுகிறார்! இங்கே இந்தப் பாடலில் அகத்தியரும் கூறுகிறார்.“கண்ணை மூடி சாம்பவியென்று உரைப்பார் தவமில்லர்கள்” என்றே!?
இப்போதும், பல சாமியார்களும் தியானம், யோகா என்றெல்லாம் விளம்பரம் செய்து அப்பாவிகளை கூட்டி வைத்து கண்ணை மூடு, அதை செய் அப்படி நினை என என்னவெல்லாமோ கூறுகிறார்கள்! ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் அவர்களுக்கும் ஞானம் என்றால் என்னவென்றே தெரியாது!
பாவம்! மடையர்கள்!
தான் எழுதியுள்ள புத்தகங்கள், பாடல்கள் செய்யுள்கள் பற்றி அவரே பாடியுள்ளார்...
கேளப்பா மூன்றுலட்சங் காப்பு சொன்னேன்
கிருபையுள்ள வர்தமது லட்சங் காப்பு
சூளப்பா வைத்தியத்திலிரெண்டு லட்சஞ் சொன்னேன்
அவற்றைக் குறுக்கியிரு காண்டஞ் சொன்னேன்
பாளப்பா வதைக்குறுக்கி பாதி யாக
அறுநூறு நாலுஞ் சொன்னேன்
வேளப்பா திராவகமென் நூறுஞ் சொன்னேன்
வேதமுறை யைந்நூற்றில் வெளி யிட்டேனே.
இதுவரை மூன்று லட்சம் பாடல்களை எழுதியுள்ளேன். அதில் பரம் பொருளைக் குறித்து ஒரு லட்சமும், வைத்தியத்தை பற்றி இரண்டு லட்சம் எழுதினேன். அவ்விரண்டு லட்சத்தை சுறுக்கி இரண்டு காண்டங்களாகப் பாடினேன். மேலுமதைச் சுருக்கி இரண்டாயிரத்து நானூறு பாடல்களாக எழுதினேன். இதை தவிர திராவகமுறைகள் எண்ணூறு பாடல்களாக படியுள்ளேன் மற்றும் வேத முறைகளை ஐந்நூறு பாடல்கள் இயற்றியுள்ளேன்.
வெளியிட்ட வைம்பதிலே மூன்றுஞ் சொன்னேன்
விபரமாய் முந்நூற்றிற்செந் தூரஞ் சொன்னேன்
வழியாக வெண்பதிலேமுப் பூவுஞ் சொன்னேன்
வைத்தியந் தானாயிரத்தைந் நூறுஞ் சொன்னேன்
அழியாத முன்னூறில் கர்ம தர்மம்
அன்பாக சொன்னதைநீ யறிந்து பாரு
முழியாதே நானுற்றிலி ரண்டுஞ் சொன்னேன்
மூடினதோர் நீற்றினமாம் நாலுநூறு
மேலுமொரு ஐம்பது பாடல்களில் வாத, வைத்திய யோக மார்கங்களைப் பாடியுள்ளேன். முன்னூறு பாடல்களில் செந்தூரச் செய்முறைகளை கூறியுள்ளேன். எண்பது பாடல்களில் தனி முப்பு முறைகளைக் பற்றி பாடியுள்ளேன். தனியே ஆயிரத்து நூறு வைத்திய முறைகளை பாடியுள்ளேன். முன்னூறு பாடல்களில் கர்ம தர்மங்களை அன்பாக கூறியுள்ளேன். நானூற்றில் இரண்டையும் சொன்னேன். நீற்றின் முறைகளைப்பற்றி நானூறு பாடல்களை கூறியுள்ளேன்
நானூற்றில் வைத்தியமும்பூர ணமுந் தோன்றும்
நாடியுடன் குருநாடி நன்றாய்த் தோன்றப்
பாலான முப்பாலு நன்றாய்த் தோன்றப்
பாடினேன் வைத்தியபூர ணமிதப்பா
தேடினாற் கிடையாதிவ்வு லகத் துள்ளே
சிவயோகி வைத்திருப்பார்கொ டுக்கமாட்டார்
நாளாக வவர்களிடந் தொண்டு செய்து
நன்மையுடன் நூல்வாங்கி நாட்டம் பாரே — அகத்தியர் பரிபூரணம் 400
இந்நானூற்றில் வைத்திய முறைகளும், பரம்பொருள் அடையும் மார்க்கமும் நாடி முறைகளுடன் குருநாடியும் நன்றாய்த் தோன்றும். மூன்று முறைகளாக வாத வைத்திய யோகமார்க்கங்கள் தெளிவாய்த் தெரியும். தேடினாலும் இதுபோல் நூல் இவ்வுலகில் கிடைக்காது. சிவயோகிகள் வைத்திருப்பார்கள் கொடுக்க மாட்டார்கள். அவர்களுக்கு தொண்டு செய்து அவர்கள் அனுமதியுடன் நூலை வாங்கி படிக்கவும்.
சித்தர் வழி தொடர்வோம்.....
Leave a comment
Upload