சேவை மனப்பான்மை என்பது எல்லோருக்கும் வந்து விடுவது இல்லை... பணத்திற்காகவும், புகழுக்காகவும், சேவைகளை செய்து தங்களையே உயர்த்தி கொண்டிருப்பவர்கள் ஏராளம். அந்த வரிசையிலில்லாமல், தனியாக ஒரு புதிய பாதையை அமைத்து கொண்டு மனித நேயத்துடன், சமூக சேவை செய்பவர்களை மதர் தெரசாவுடன் ஒப்பிடுவது ஒர் சிலர் மட்டும்.
இந்த வரிசையில் ஊட்டியில் மனித சமூக சேவை செய்துவரும் 34 வயது இளைஞர் தஸ்தகீர்...
பல வருடங்களாக ஊட்டி நகரில் ஆதரவின்றி கைவிடப்பட்ட பல அனாதைகள், தெருக்களின் ஓரத்தில் கடும் குளிர், மழையில் படுத்து கிடப்பதை பார்க்க முடிந்தது...
பல வருடங்களுக்கு முன்... ஊட்டியில் அனாதை மற்றும் தற்கொலை செய்து கொள்பவர்களின் சடலங்களை தனி ஒருவராக, தன் குதிரை வண்டியில் எடுத்து வந்து அரசு மருத்துவமனை சவ கிடங்கில் கிடத்தி, போஸ்ட்மார்ட்டம் முடிந்தவுடன், காந்தல் கல்லறை தோட்டத்தில் புதைப்பதை செய்து வந்தார் புட்சத் தெருவை சேர்ந்த முன்னா.
அவரின் இறப்புக்கு பின், காவல்துறை திண்டாடிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
பல வருடங்கள் கழித்து தான், அனாதை சடலங்களை அப்புறப்படுத்தும் பணியில் சில இளைஞர்கள் இறங்கியுள்ளது தெரிய வந்தது...
2015 ஆம் ஆண்டு தஸ்தகிர் என்ற இளைஞர், “அப்துல் காலம் கல்வி பசுமை அறக்கட்டளை” என்ற அமைப்பை துவக்கி, மிகப் பெரிய மனிதாபிமான சேவையை செய்து வருகிறார். இந்த அமைப்பின் மாவட்ட தலைவரும் இவர் தான்.
அந்த இளையஞர் தஸ்தகிரை சந்தித்து பேசினோம்...
“சிறு வயதிலிருந்தே ஏழைகள், பிச்சை எடுப்பவர்களை பார்த்தால் என் மனதில் ஒருவித சோக உணர்வு ஏற்படும். இப்படிதான்... ஊட்டியில், அனாதை சடலங்களை எடுத்து மனித நேயத்துடன் நடை போட்டு கொண்டிருந்த மாமனிதர் முன்னா. அவர் இறந்தபோது, அவரின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட நினைவு உள்ளது. ஒரு சாதாரண மனிதனுக்கு ஏராளமான கூட்டம்... அத்தனை கூட்டமும் கண்கலங்கியது, அவரின் சேவையை நினைத்து தான். அப்பொழுது என் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. இனி அவரது சேவையை யார் தொடருவார்கள்?... அப்பொழுது நான் சிறு பையன். அந்த நிகழ்வை நான் மறந்து விட்டேன். பின்னர்... இந்த அறக்கட்டளையைத் துவங்கிய பின் தான், மீண்டும் என் மனதில் முன்னா உதயமானார்...
2002 ஆம் வருடம், ஊட்டி சி.எஸ்.ஐ. சி.எம்.எம். பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது, ஊட்டி பஸ் நிலையம் அருகில் ஒரு வயதானவர் ஒரு மாலை வேளையில் குளிரில் நடுங்கி கொண்டிருந்தார். அவரிடம் பேசின பொழுது தான், டெல்லியை சேர்ந்த வியாபாரி என்றும் மேட்டுப்பாளையத்தில், பர்ஸை தவற விட்டிருக்கிறார். பின் சிலரிடம் பணம் பெற்று, வழி தெரியாமல் ஏதோவொரு பஸ் ஏறி ஊட்டி வந்துள்ளார். குளிரில் நடுங்கிய அவரை, என் வீட்டிற்கு அழைத்து சென்று இரண்டு நாள் தங்க வைத்து, என் அம்மா - அப்பா அவரை கவனித்ததை மறக்க முடியாது. பின் ரயில் டிக்கெட் புக் செய்து, டெல்லிக்கு அனுப்பி வைத்தோம். அவர் டெல்லி சென்றவுடன், 2000 ரூபாய் அனுப்பி வைத்தார். அன்றே என் சமூக சேவை துவங்கி விட்டது என்று கூறும் தஸ்தகிர்... இன்று 92 அனாதைகளின் பாதுகாவலர், அனாதை இல்லம் நடத்துகிறார்.
தஸ்தகிர் நம்மிடம் மேலும் கூறும் போது...
“ஆரம்பத்தில்... பள்ளி கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு, பள்ளி கட்டணம் கட்டி, படிக்கவைப்பது... ஊட்டி நகரில் உள்ள பள்ளி கூடங்களில் செடிகளை வெட்டுவது, பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது போன்ற சமூக பணிகளில் ஈடுபட்டு... பின் 2017 ஆம் ஆண்டு, நீலகிரி கலெக்டராக இன்னசன்ட் திவ்வியா பொறுப்பேற்றவுடன், அவரின் துரிதமான பணி நம்மை வியக்க செய்தது. ஒரு நாள் கலெக்டரிடமிருந்து அழைப்பு வந்தது.... என்னமோ ஏதோ என்று செல்ல... ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் இருக்கிறார், அவரை நீங்கள் அழைத்து சென்று ஒரு ஹோமில் சேர்த்து விடுங்க என்று கூறினார். அவருக்கு எல்லா உதவிகளும் செய்து, அவரின் உடல் நலம் சரியானவுடன் சொந்த ஊரான திருச்சிக்கு கொண்டு போய் விட்டோம். அதற்கு பின் தான், சாலை ஓரத்தில் யாரும் தங்கக் கூடாது என்று கலெக்டர் கூற... அப்பொழுது தான், எங்கள் அறக்கட்டளை மூலம் ஒரு ஹோம் துவங்கும் வேலையில் இறங்கினோம்....
நகராட்சி, நகர் புற வீடற்றோர் தங்கும் விடுதி நடத்த பண உதவி செய்தனர், மத்திய அரசின் திட்டம் அது. இரவில் ஒருவர் கூட சாலை ஓரத்தில் தூங்க கூடாது, அதற்கான திட்டம் தான் இது. முள்ளிக்குர் என்ற இடத்திலுள்ள பழைய பள்ளி கட்டிடத்தை ஓதுக்கி கொடுக்க... அங்கு எங்க அறக்கட்டளை சார்பாக, அனாதை இல்லத்தை துவக்கினோம். முதலில் சாலை ஓரத்தில் இருந்த 6 பேரை சேர்த்து துவங்கினோம், இன்று 92 பேர் இருக்கின்றனர்.
நாங்கள் எந்தப் பணஉதவியும் கேட்பதில்லை. வெறும் பொருள் உதவி மட்டும் தான். ரேஷன் அரிசி, பருப்பு, சக்கரை பெற்றுக் கொள்கிறோம்.
அரசு மாதம் 30,0000 தருகின்றனர்... அதை வைத்து இந்தப் பணியை மேம்படுத்தி கொண்டிருக்கிறோம். இதுவரை 63 குடும்பங்கள் பலன் பெற்றிருக்கின்றனர். ஆதரவற்ற 37 உடல்களை, அவரவர்களின் முறைப்படி இறுதி சடங்கு நடத்தி, மனித மான்பை தக்க வைத்து கொண்டிருக்கிறோம் என்கிறார்.
இப்ப எங்க ஹோமில் எல்லா வசதியும் செய்து கொடுத்துள்ளோம். மூன்று கம்பளிகள், ஹீட்டர் என்று எல்லாம் உண்டு. உணவையும், நன்றாக தயாரித்து மூன்று வேளையும் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.
எங்களுக்கு ரொம்பவே உதவி செய்தது முன்னாள் கலெக்டர் அம்மா தான். அவரின் இரண்டு வருட பிறந்த நாளை எங்க ஹோமில் தான் கொண்டாடினார்கள். அனைவருக்கும் உணவு, உடை, கம்பளி என்று கொடுத்து உதவிய கரம் அவர்களின் கரம். அதே போல குன்னூரில் ஒரு ஹோம் துவங்க... முன்னால் கலெக்டர் இன்னசன்ட் திவ்வியா உதவி செய்து, கிருஷ்ணாபுரத்தில் உபயோகம் இல்லாத பள்ளியை கொடுத்தார். அங்கு 26 நபர்கள் இருந்தார்கள். தற்போது தேர்தல் என்று சொல்லி, அதை காலி செய்ய சொல்லிவிட்டனர். எங்களுக்கு ஒரு இடம் வேண்டும் என்று தற்போதைய கலெக்டர் அம்ரீத் அவர்களை சந்தித்து பேசிவிட்டு வந்துள்ளோம். எந்த பதிலும் இல்லை என்று வருத்தப்படுகிறார்.
“முன்னாள் கலெக்டர் இன்னசன்ட் திவ்வியா, எங்க ஹோமிலிருந்த குஷ்டரோக நோயாளியின் கரத்தை பிடித்து நலம் விசாரித்தது இன்னும் என் கண்முன்னே இருக்கிறது.
பல நல்ல உள்ளங்கள் உதவி கரம் நீட்டுகிறார்கள், அது மனதுக்கு சந்தோஷம் கொடுக்கிறது.
எங்க அறக்கட்டளையில் எனக்கு தோள் கொடுத்து உதவி செய்யும் நண்பர்கள் சுரேஷ், ஜெகதீஷ், தர்மா, முபாரக் மற்றும் அனந்தகிரிஷ்ணனின் உதவிகள் தான் எனக்கு உயிர்நாடிகள்” என்று கூறுகிறார்...
சாலை ஓரத்தில் அனாதையாக கிடப்பவர்களுக்கு, முடிவெட்டி, குளிப்பாட்டி எங்க ஹோமில் சேர்த்து பராமரிக்க... அவர்களை புது மனுஷர்களாக பார்ப்பது சுவாரசியமானது. அதில் குஷ்டரோகிகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு மருத்துவ உதவி செய்வது அரசு மருத்துவர்கள் தான். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு டாக்டர் பூரணஜித் சிகிச்சை அளிக்கிறார்கள். இல்லம் தேடி மருத்துவம், வாரம்தோறும் ஹோமுக்கு வந்து மெடிக்கல் டெஸ்ட் எடுக்கிறார்கள்.
கொரோனா எங்க வாட்ச்மெனுக்கு மட்டும் வந்தது. அப்பொழுது 136 பேர் இருந்தனர். எல்லோருக்கும் டெஸ்ட் எடுத்தார்கள். யாரையும் அது பாதிக்கவில்லை என்பது ஆறுதலான விஷயம்.
இப்படி தான் கடந்த வருடம், ஊட்டி நகரில் இங்கிலிஷ் பேசி கொண்டு ஒருவர் சுற்றி கொண்டிருக்கிறார் என்று கலெக்டர் கூற... அவரை ஒழுங்கு படுத்தி ஹோமில் வைத்திருந்தோம்... பின்னர் அவர் இறந்து போய்விட்டார் என்பது தான் வருத்தமான விஷயம்.
மூர்த்தி என்பவர் ஒரு டி கடையில் மாஸ்டராக இருந்தவருக்கு, வெரிகோஸ் நெர்வ் பிரச்சனை வந்து கால் பாதிப்பு ஏற்பட்டு வேலை போய்விட்டது. பின்னர் அவரை எங்க ஹோமிற்கு அழைத்து வந்தோம். இப்பொழுது அவர் தான் எங்க ஹோம் மாஸ்டர் செஃப். அருமையாக சமைக்கிறார்.
குன்னுரில் சுற்றி திரிந்த செல்வா என்பவரை பிடித்து கொண்டு வந்தது தான் த்ரில்லிங். அவரை ஈசியாக பிடிக்க முடியாது என்று கூறினார்கள் குன்னூர்வாசிகள். இங்கு ஹோமுக்கு வந்தவுடன், தப்பித்து ஓட முற்பட்டார். அதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை, அவரை பொள்ளாச்சியில் உள்ள ஒரு கிராமத்து ஹோமில் கொண்டு போய் சேர்த்து விட்டோம். இப்பொழுது அவர் அமைதியாக இருக்கிறார் என்பது நல்ல தகவல்.
எங்க ஹோமில் ஒரு அரசியல் பிரமுகர் கூட இருக்கிறார். அவர் தான் முன்னாள் கவுன்சிலர் ஜான் போஸ்கோ. அவரின் குடும்பம், இவரை விட்டுவிட்டு வெளி நாடு சென்று விட்டனர். அவருக்கு ஸ்ட்ரோக் ஏற்பட, எங்க ஹோமுக்கு கூட்டி வந்துவிட்டோம். ஹோமை விட்டு போக... சிஎம்-முக்கு கடிதம் எழுதி, கலாட்டா பண்ணிட்டார். அவரின் குடும்பம் கண்டு கொள்ளவில்லை, தற்போது அமைதியாக இருக்கிறார், பாவம்.
இப்படி தான் எங்க சமூக பணி நடந்து கொண்டிருக்கிறது. அரசு ஒரு நல்ல இடம் கொடுத்தால் நல்லது. பணமே வேண்டாம்... பொருளும், இடமும் தான் தேவை என்று கூறும் தஸ்தகிருக்கு, அவரின் மனைவி ரஷிதா பேகம் தான் பூஸ்டர். இரவு, பகல், பண்டிகை நாள் என்று பாராமல், எப்பொழுதும் அழைப்பு வந்தவுடன் என் காரை எடுத்து கொண்டு மாவட்டத்தில் எந்த இடம் என்றாலும் எங்க டீம் சென்று விடுவோம்... என் மனைவி முகம் சுளிக்காமல் வழியனுப்பி வைப்பது பெரிய விஷயம் சார் என்கிறார். இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள்.
தஸ்தகீரை தேடி இதுவரை 160 விருதுகள் குவிந்துள்ளன...!
மேலும் இவரின் முக நூலை பார்க்கும் பலர், இவரை தொடர்பு கொண்டு ஊக்க படுத்துகிறார்கள்.
இவரின் மனிதாபிமான சமூக சேவையை அங்கீகரித்த சர்வதேச தமிழ் பல்கலை கழகம், இவருக்கு கௌரவ முனைவர் பட்டத்தை வழங்கியுள்ளது....
“இந்த முனைவர் பட்டமும், விருதுகளும் கிடைக்க காரணகர்த்தாக்கள் எங்கள் ஹோமில் உள்ள அனைத்து உள்ளங்கள்தான் என்று கூறுகிறார் தஸ்தகிர் தன்னடக்கத்துடன்.
இந்த இளம் சமூக சேவகர் தஸ்தகிர், தெருவில் அனாதையாக இருப்பவர்களுக்கு ஒரு இளம் காட் பாதர் தான்...
Leave a comment
Upload