தொடர்கள்
தொடர்கள்
பத்மஸ்ரீ விருது வென்ற வில்லிசை கலைஞரின் நினைவலைகள்... - 46 - கலைமாமணி பாரதி திருமகன்

20220021113907589.jpg

‘பொங்கலோ… பொங்கல்..!’ – சர்க்கரை பொங்கலின் நெய் மணம் இன்னும் கைகளை விட்டு அகலவில்லை. காரணம், இக்கட்டுரையை வாழ்த்தும் விகடகவி வாசகர்களின் மெய்மனம். இதனால், பொங்கல் விழாவை பற்றிய ஒரு கருத்தை உங்களுடன் பகிரச் செய்கிறது.

20220021113939589.jpg

1980 அல்லது 1990-ம் ஆண்டு என நினைக்கிறேன். ஒரு பொங்கல் தினத்தில் – என் தந்தையாரின் ஒரு அற்புத படைப்பு! அதுதான், சென்னை தொலைக்காட்சிக்கு ஒரு பொங்கல் பண்டிகையின்போது என் தந்தை பாடல் எழுதி, ராமமூர்த்தி அண்ணா இசையில், மறைந்த பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜனுடன் அவரது மகன் சீர்காழி சிவசிதம்பரம் சேர்ந்து பாடியது. அரைமணி நேர காட்சி சித்திரம்!

2022002111401113.jpg

இந்த சித்திரத்தை அன்போடு, ஞானத்தோடு இயக்கியவர் – எங்களின் அன்பு சகோதரர் கலைமாமணி எம்.எஸ்.பெருமாள். இவர், கலைமாமணி சுகி.சிவத்தின் சகோதரர் எனக் குறிப்பிடத்தக்கது.

அந்த காட்சி சித்திரத்தில் இடம்பெற்ற பாடல்கள்… ஆஹா..! அப்பாடலை இன்றைக்கும் நெய் மணக்க, என் மகன் கலைமகன் வில்லிசை மேடைகளில் பாடி வருகிறார். கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு மேல் பாடல் ஒலிப்பதிவு… காட்சி பதிவு – 15 நாட்கள்..!

அப்பாடலின் தலைப்பு – ‘ஏர்வரிசை கொண்டு வந்த சீர்வரிசை’! என் தந்தையின் எழுத்தை மட்டும்தான் இங்கு ரசிக்க முடியும். ஏனெனில், விகடகவி பத்திரிகை அல்லவா! இதோ, அந்த பாடல் வரிகள்…

‘உழவின் பெருமையை உலகுக்கு எடுத்து
சொல்ல முருகப்பெருமான் என்ன செய்தார்?
கிருஷ்ண பகவான் என்ன செய்தார்?
வீணை மகள் என்ன செய்தார்?
தமிழ்த்தாய் என்ன செய்தார்..?’

என்னே… அழகான சிந்தனை! அதுசரி… பொங்கல் யார் வீட்டில்..? வள்ளுவன்-வாசுகி வீட்டுவாசலில்! அனைவரும் குலவையிட்டு, அடுப்பு வைத்து நெருப்பூட்டி, அலங்கரித்த மண்பானை வைத்து, மனதார பால் பொங்கிய காட்சியில் பைந்தமிழ் பொங்குகிறது!

வேலெடுத்த முருகன் கையில் ஏறெடுத்தானோ…
வேணுகான கண்ணன் வந்தே நீர் இறைத்தானோ…
வீணைமகள் மென்விரலில் நாற்று நட்டாளோ…
எனக்கு வேண்டிய தமிழ்த்தாயே பாட்டிசைத்தாளோ!

சரணம்

வள்ளுவன் வீட்டுவாசலிலே – வாசுகியால்
இட்ட பொங்கலிலே…
வந்து பிறந்த திருக்குறளின் – வாழ்த்து பெறும்
எங்கள் ஏர்த்தொழிலே…
கும்பிடுகிற கைகளைப் போல் திருவிளக்கு ஜோதி!
கொத்து மஞ்சள் பொங்கலுக்கு
சொல்வதென்ன சேதி..?
உழைப்போருக்கு நன்றி சொல்லிடுதா – கேளு…
உழவனையே கைகூப்பி கும்பிடுதா – பாரு..!

(வள்ளுவர்)

– இப்பாடலை என் தந்தை எழுத, சீர்காழி கோவிந்தராஜன் ஐயா பாடினார். அவருடன் அடுத்த தலைமுறை – எங்கள் அன்பு சகோதரர் சீர்காழி சிவசிதம்பரமும் பல வரிகள் பாடியுள்ளார்.

‘அஞ்சு வயசிலே சின்னக் கண்ணன்
நடையே தனி அழகு – அவன்
பிஞ்சுக் கால் தட வரிசை போலவே – நாற்று
நட்டு பழகு – இளம் நாற்று நட்டு பழகு..!’

– இந்த மலரும் நினைவுகளை இன்றும் எங்களோடு சகோதரர் சீர்காழி சிவசிதம்பரம் பகிர்ந்து கொள்வார். அவர் அடிக்கடி சொல்வது – ‘‘உங்க தந்தை எழுதி, என் அப்பா பாடிய ‘ஏன்’ படத்தின் வில்லுப் பாட்டு, இன்றைய தலைமுறைக்கு – தமிழுக்குக் கிடைத்த பெருமை..!’’ என்பார்.

இன்னும் ஒன்று… அறிஞர் அண்ணா பல்லவி எழுதி, என் தந்தை சரணங்கள் எழுதிய ‘காதல் ஜோதி’ திரைப்பட பாடலை, என் தந்தை பாடியதை இன்றைக்கும் பெருமையாகச் சொல்வார்.

தலைமுறைகள் கலைகளை வளர்ப்பது, தந்தை எனும் மாபெரும் கலைஞனின் புகழ் காப்பது சாதாரணம் என்றா நினைப்பது..? இல்லை… அது, கலைமகள் தரும் தலைமுறை வரம்..! தமிழ் பொங்கல் கரம்..! அனைவருக்கும் ‘பொங்கலோ பொங்கல்’..!

மற்றுமொரு சுவையான சம்பவங்களை அடுத்த வாரம் எடுத்துக் கூறுகிறேன். அதுவரை…

– காத்திருப்போம்