தொடர்கள்
ஆன்மீகம்
கோச் செங்கட் சோழ நாயனார்!! - ஆரூர் சுந்தரசேகர்.

கோச் செங்கட் சோழ நாயனார்

அறுபத்து மூன்று நாயன்மார்களும் சிவபெருமானுக்கு ஏதேனும் ஒரு வகையில் பல தொண்டுகள் செய்து வந்தனர். கோச் செங்கட் சோழ நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.

அரசனான கோச் செங்கட் சோழ நாயனார், வீரத்திலும், விவேகத்திலும் சிறந்தவராக இருந்தாலும், இறைவன் அருளால் முற்பிறப்பை உணர்ந்து, சிவபெருமானிடத்து மீது ஆராக்காதல் கொண்டு, கோயில்கள் கட்டத் தம்மை முழுக்க முழுக்க அர்ப்பணித்துக் கொண்டார். இவர் எழுபதற்கும் மேலாக கோவில்களை பல ஊர்களிலும் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

இவரது சிவத்தொண்டினை சுந்தரமூர்த்தி நாயனார் "தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க்கு அடியேன்" என திருத்தொண்டத் தொகையில் பாராட்டியுள்ளார்.

‘என் கோவே! செங்கண்ணா’:

சோழ அரசரான சுபவேதர் பட்டத்தரசி கமலாவதியாருடன் சோழவளநாட்டை அரசு புரிந்து வந்தார். திருமணமாகி நெடுநாட்களாகியும் மக்கட் பேறு இல்லாமல் மன்னன் மனைவியாருடன் தில்லையில் கோயில் கொண்டுள்ள நடராஜரை வழிபட்டு பெருத்தவமிருந்தார்.

இறைவனின் அருளால் அரசி கமலவதியார் கருவுற்றார். குழந்தை பிறக்கும் நேரம் நெருங்கியது. அப்போது ஜோதிட வல்லுனர்கள் இக்குழந்தை இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறக்குமேயானால் மூவுலகத்தையும் ஆளக் கூடிய ஆற்றலைப் பெறக்கூடிய குழந்தையாக இருக்கும் என்றார்கள். ஒரு நாழிகை தாமதித்துத் தமக்குக் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தம்மைத் தலைகீழாகக் கட்டித் தொங்க விடுமாறு கமலவதியார் கட்டளையிட்டார்.

அவ்வண்ணமே அரசியாரைக் கட்டினர். குறித்த வண்ணம் ஒரு நாழிகை கழித்து ஆண் குழந்தை பிறந்தது. தலைகீழாகத் தொங்கிய காரணத்தால் குழந்தையின் கண்கள் சிவந்து இருந்திருக்கிறது. அதைக் கண்ட கமலவதியார் ‘என் கோவே! செங்கண்ணா’ என்று அழைத்து மகிழ்ந்த சிறிது நேரத்திலேயே இறந்து போனார்.
பிறந்த பொழுதே தாயை இழந்த கோச் செங்கண்ணானைச் சுபதேவன் தன் உயிரெனக் காத்து வளர்த்து, உரிய பருவத்தில் நாடாளும் வேந்தராக முடிசூட்டி விட்டு தன் தவநெறியைச் சார்ந்து சிவலோக பதவி அடைந்தார். தந்தைக்குப் பின்னர் கோச் செங்கட் சோழன், குடிமக்கள் போற்றும்படியாக நீதி, நேர்மையுடன் அரசாட்சி செய்தார். கோச் செங்கண்ணான் சிவபெருமான் திருவருளால் தன் பூர்வஜென்மம் பற்றி தெரிந்து கொண்டார்.

கோச் செங்கட் சோழ நாயனார் பூர்வஜென்மம்:

கோச் செங்கட் சோழ நாயனார்

புராண காலத்தில் காவிரிச் சந்திர தீர்த்தத்தின் அருகில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர்.
சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டு வந்து வழிபாடு செய்தது. யானை சிலந்தி பின்னிய வலையைத் தேவையற்றதாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். இது தினசரி தொடர்ந்தது. அதனால் ஆத்திரமடைந்த சிலந்தி யானையைத் தண்டிக்க வேண்டி அதன் துதிக்கைக்குள் புகுந்தது. யானையும் சிலந்தியும் போராடி இரண்டுமே மடிந்தன.
இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையைச் சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார்.

சிலந்தியை மறுபிறவியில் கோச் செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறக்க செய்து சிவத் தொண்டு செய்ய வைத்தார்.

மாடக்கோயில்கள் கட்டிய கோச் செங்கட் சோழ நாயனார்:

கோச் செங்கட் சோழ நாயனார்

பூர்வஜென்ம வாசனையால் கோச் செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி மாடக் கோவில்களைக் கட்டினார். கோச் செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயிலாகும். இவர் சோழ நாட்டின் பல இடங்களிலும் கோயில் கட்டினார். இவர் எழுபது கோயில்களை மாடக்கோவிலாக கட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்கோயில்களுக்கு, அமுதுபடிக்காகச் செல்வம் வழங்கினார். தமது புகழ் எத்திசைகளிலும் விளங்கச் செங்கோல் முறையே நாட்டினை ஆட்சிபுரிந்தார். பின்பு சிதம்பர ஸ்தலத்தை அடைந்து, பொன்னம்பலத்தே ஆடல்புரியும் பெருமான் திருவடிகளை வணங்கிப் போற்றி அங்குத் தில்லைவாழந்தணர்களுக்குத் திருமாளிகைகள் கட்டுவித்துப் பின்னும் பல திருப்பணிகள் செய்தார்.
இவ்வாறு புகழ்பெற்ற அரசராகவும் சிவனடியாராகவும் விளங்கிய
கோச் செங்கட் சோழ நாயனார் தில்லையம்பலவாணர் திருவடி நீழலை அடைந்தார்.

குருபூஜை நாள்:
மாபெரும் அரசராக இருந்து, சோழ நாட்டின் பல இடங்களிலும் கோயில் கட்டிய கோச் செங்கட் சோழ நாயனாரின் குருபூஜை மாசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் அவர் அவதாரம் செய்த ஸ்தலமான திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயிலில் (இதனைத் திருவானைக்காவல் என்றும் சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர்) மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தக் கோயிலில் கோச் செங்கட் சோழ நாயனாருக்கு தனி சந்நிதி இருக்கிறது.

இவரது குருபூஜை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

“திருச்சிற்றம்பலம்”

அடுத்த பதிவில் கோட்புலி நாயனார்…