தொடர்கள்
கதை
மருமகள் சமர்த்து - பா. அய்யாசாமி

20220413220837627.jpg


என்ன சிவகாமி? வீட்டிற்கு மருமகள் வந்துவிட்டாள், இனி கவலையில்லை டாண்டாண்ணு எல்லா வேலையும் நடக்கும் என சரோஜா சொன்னதற்கு,

ஆமாம்,இத்தனை வயசான பின்புதான் எனக்கு மருமகள் வந்திருக்காள்
ஆனால் ம்... உனக்கு இப்பதான் வயசு ஐம்பதைத் தாண்டுது.
அதுக்குள்ளே மருமகள்.... என பெருமூச்சு விட்டப்படியே சொன்னாள் சிவகாமி.

திருப்பூர் துணிக் கம்பெனி ஒன்றின் காலனி குடியிருப்பில் பக்கத்துபக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் இருவரும் கணவன்களுக்கு மில்லில் வேலை நடுத்தர வசதியான குடும்பம்.

இருவரின் மகன்களும் ஒத்த வயதுடையவர்கள்தான் திருச்சியில் வேலை.

வார இறுதி விடுமுறை நாட்களில்மட்டும்தான் தங்கள் ஊரான திருப்பூருக்கு வருவார்கள்.

இருவருக்கும் திருமணம் ஒரே மாதத்தில் நடந்து சமீபத்தில்தான் மருமகளை இருவரும் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்கள்.

" என் மருமவ ரொம்ப விவரம் என்ற சரோஜா, சமையல் வேலையெல்லாம் அவளுக்கு

அத்துப்படி. எனக்கு ஒரு வேலையும் செய்யச் சொல்வதேயில்லை"சும்மா உட்காருங்க அத்தை. நான் பார்த்துக்கிறேன் என்கிறாள் என்றாள் பெருமையாக.

இதெல்லாம் பெருமையா சரோஜா ? அதுதான் சரியென நாமும் சும்மா உட்காரக்கூடாது இதுநாள்வரை எப்படி அதிகாரத்தை கையிலே வைத்திருந்தோமோ

அப்படியே இருக்கணும்.நம்மைக்கேட்டுத்தான் அவர்கள் எதுவும் செய்யணும்,அது போலத்தான் என்மருமகளை நான் பழக்கிக்கொண்டு வருகிறேன் என்றாள் சிவகாமி.

பேசிக்கொண்டிருக்கும் போதே இரு வீட்டிற்கும் எரிவாயு சிலிண்டர் வர, என்ன இம்புட்டு விலையாக இருக்கே,போகிற போக்கைப் பார்த்தால் விறகடுப்புதான் திரும்ப வரும்போல.. என்றவர்கள், அதனை வாங்கி வைத்துவிட்டு மீண்டும் அமர்ந்து பேசத்தொடங்கினர்.

சமையல் வேலையெல்லாம் பெரிய வேலையா ? சிக்கனமாக குடும்பத்தை நடத்தி, சீக்கிரமாக

யார் குழந்தையைப் பெற்று நம் கையில் கொடுக்கிறார்களோ அதுதான்சாமர்த்தியம் அதில் என் மருமக சமர்த்து என்றாள் சரோஜா.

அது நம் மகன்களும் சம்பந்தப்பட்டது.விடுமுறைக்கு வந்தால் பொழுதுக்கும் வெளியே சுத்திகிட்டு இருக்கானுவ. இவனுகளை நம்பி நாம எப்படி பந்தயம் பேசறது ? என்றாள் சிவகாமி.

நீ சொல்கிற சாமர்த்தியத்தை எப்படி நிரூபிக்கிறது என சிவகாமியும் தன் பங்கிற்கு சரோஜாவிடம் மல்லுக்கட்டத் துவங்கினாள்.

இரண்டு மருமகளும் விவரமானதுகதான்.நல்லாவேபடிச்சும் இருக்குதுக. சாமர்த்தியமாக குடும்பம்
நடத்தி யாருக்கு நாள் தள்ளிப் போகுதுன்னு பார்ப்போம் என்றுசரோஜா சொன்னதும் அந்த சவாலை ஏற்றுக்கொண்டார் சிவகாமியும் இந்த சவாலினால் இருவரின் வீட்டிலும் கணவன்களும், மகன்களும்
சரியான நேரத்திற்கு வீட்டிற்கு வர அறிவுறுத்தப்பட்டார்கள்.

அப்போதுதான் வீட்டு வேலைகள் சடுதியில் முடியும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இரவில் குடும்பத்தோடு வெளியேபோய் சாப்பிடுவது என முடிவு செய்தனர்.

இரவில் வேலைகள் முன்னதாகவே முடிக்கப்பெற்றதும் விளக்குகள் அணைக்கப்பட்டு விட, மகன்,
மருமகள் உள்ளே படுத்துறங்க, பெரியவர்கள் வீட்டின் வெளியேபடுத்துறங்கினார்கள்.

அதிகாலையில் எழுந்து தலைக்குக் குளித்து பரபரவென சமையல் வேலைகளில் ஈடுபடும் மருமகள்களைப் பார்த்தசிவகாமியும், சரோஜாவும். ஒருவரை ஒருவர் பார்த்து வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டனர்.

இவர்களின் சவாலுக்காக மருமகள்கள் ஒத்துழைப்பு தருகிறார்கள் என மனதில் பெருமையாக நினைத்துக்
கொண்டனர் இருவரும்.

முதலில் யார் நல்ல செய்தி சொல்வது என்பதில் ஆர்வமாய்இருந்தனர் இருவரும்.

ஞாயிற்றுக்கிழமை காலை இளம்வெயிலில், இரு குடும்பத்தாரும் வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது இன்றோடு ஐம்பது நாளாகிறது.என் மருமகள்தான் சமர்த்து
என்று சிவகாமி சொன்னதும், உண்மைதான், என் வீட்டு மருமகளும் சமர்த்துதான் விரைவில் சொல்லுவாள்
என்றாள் சரோஜா.

இந்த நல்ல செய்தி கணவன்மார் காதில் விழுந்ததும்,

ஐயா, நாங்க தாத்தாவாகிட்டோம் என்ற சந்தோஷத்தில் மகிழ்ந்த இருவரின் கணவன்மார்களும் மகனையும்,மருமகளையும் கூப்பிட்டு ஆசிர்வதித்து இனிப்பு வாங்கி வரும்படி அவர்களை பணித்தனர்.

எதற்கு இனிப்பு ? என சிவகாமி கேட்டதும் தாத்தா பாட்டியாகப்போகிறோம்கொண்டாடவேண்டாமா ? அதற்குதான் என்ற கணவரிடம், யார் சொன்னார்கள் என்று இருவரும் திருப்பி கேட்டதற்கு,
நீங்கள்தானே நாள் தள்ளிப் போனதாக இப்போது சந்தோஷமாகப்பேசினீர்கள் என்ற கணவன்மார்களிடம்..

ஓ .. ஓ அதுவா ? என்ற சிவகாமி, குழந்தை பெற்றுக்கொள்வதெல்லாம் அவரவர் இஷ்டம். அவர்களுக்கு எப்போ வேண்டுமென தோன்றுகிறதோஅப்போ நடக்கட்டும். அதில் தலையிட நமக்கு உரிமையில்லை என்றாள் சிவகாமி.

நீங்கள் இருவரும்தானே இத்தனை நாள் போட்டி போட்டீங்க ? இப்போ நமக்கென்ன உரிமை என்று
கேட்கிறீங்க என்று திருப்பிக் கேட்டதற்கு நாங்க போட்டி போட்டது மருமகளின் சிக்கனத்தாலும்,
சாமர்த்தியத்தாலும், விற்கின்ற விலையிலே எரிவாயு சிலிண்டர் எத்தனை நாள் வருகிறது, அதை கச்சிதமாகப் பயன்படுத்துவதில் யார் மருமகள் சமர்த்து என்பதை பற்றித்தானே என்றதும் அங்கிருந்தவர்களிடம் சிரிப்பு அடங்க வெகுநேரமானது.