தொடர்கள்
தொடர்கள்
காதல் பொதுமறை -89 காவிரி மைந்தன்

2022041822040152.jpg

2022041822054021.jpg

எண்ண மின்னல் அல்லவா எழுத வைத்தது!!

2022041822092735.jpg
அன்றொரு நாள் இரவு.. வானிலே வட்டநிலா பொட்டு வைத்தாற்போல் திகழ..

உன் அழைப்பு மணியோசை என்னை திசைதெரியாத பாதையில் இட்டுச் சென்றது!

நான் எழுதியிருந்த அழகிய தமிழ்க் கவிதைகளால் நிரம்பிக்கிடந்த சில வரிகளைக் கண்டு நீ அன்று ஆனந்தக் கூத்தாடினாய்!

என்றோ எழுதிய சிற்சிலவரிகளே உனக்கு இத்தனை சந்தோஷங்களை வாரிக்கொடுக்கிறதென்றால்,

உனக்காக நான் எழுதித் தரும்போது உன் மகிழ்ச்சி எத்தனைமடங்கு ஆகும் என்கிற ஒரு எண்ணமின்னல் அல்லவா என்னை மீண்டும் மீண்டும் எழுதவைத்தது!

அன்றுதான் எனக்குள் ஒரு புதிய உலகம் பிறந்தது! கவிதை மலர்ந்து சிரித்தது!

ஒவ்வொரு நாளும் திருநாளாக.. உந்தன் மனம் உவகைப் பண் பாட.. எண்ணக்குளத்தில் நித்தம் நீராடி..

நினைவுகளோடு நெடிய பயணமேற்கொண்டு..

லாவகமாய் வரும் வார்த்தைகளை லெளஹீகமாய் கைப்பிடித்து ஆதியந்தம் தேடியலையாமல்,

அந்தரங்க நாடகங்கள் எப்படியிருக்கும் என்கிற மோன நிலையில் மூழ்கி முத்தெடுக்கும் வழியைக் கண்டறிந்தேன்!

உனக்காக எழுதுவது ஒரு சுகம் என்றால் அதை உன் காதுமடலோரம் வந்து படிப்பது மறு சுகம்!

இடையிடையே உன் சிணுங்கல்கள் சிங்காரமாக அல்ல..அல்ல சிருங்காரமாக வந்துவிழ, தேவியின் தரிசனங்கள் கிடைத்தவன்போல் நான் இன்பக்கடலில் விழுந்திடுவேன்!

தனிமையது கொஞ்சம்கிடைத்தாலும் தாளும் தமிழும்தானே எனக்குத் துணை!

எந்தெந்த இடங்களில் அமர்ந்து நான் எழுதினேன் என்பதை எண்ணிப்பார்த்தால் எனக்கே சிரிப்பு வரும்!

என்றாலும் எழுதப்படும் பொருள் காதல் என்பதால் எனக்குள்ளே பெருமிதமே நிறையும்!!

படபடக்கும் இதயத்திடம் கொஞ்சம் பொறு என்பேன்.. அடுத்த வார்த்தை என்ன என்பதை அறிய அதற்குத்தான் அத்தனை ஆசை?

எந்த மடலும் வார்த்தை கிட்டாமல் நடுவே நின்று போனதாய் வரலாறில்லை!

அது எப்படி நடக்கும்.. நீதான் உன் புன்னகைக் கோலத்தால் என் மனதில் துள்ளித்துள்ளி ஆடுகிறாயே..

புத்தம்புதிய கற்பனைகள் எப்படி பிறக்கின்றன என்பது எனக்கே தெரியாமல்.. எழுதியபின்னர் அதை ரசிக்கும் முதல் ரசிகன் நானாக..

உன்னிடம் சொல்லிடும்போது நீ எப்படி ரசிப்பாய் என்கிற ரகசியம் அறிந்தவனாக.. நீ வலையேதும் வீசாமல் அகப்பட்டவன் நான் என்றாக..

நமக்குள் நடக்கும் இந்தக் காதல் பாடங்கள்.. எழுதிவைக்கப்பட்டிருக்கும் எல்லோரா ஓவியங்கள்!

இன்னுமின்னும் என்று வளர்கிறதே எப்படி?

அதை உன்னை எண்ணும்போதெல்லாம் ஏற்படும் உணர்வுகளின் அலைவரிசை!

ஒருநாள் உன்னிடம் மடல்படித்து ஓய்ந்தபின் மறுநாள் எப்போது வரும் என்கிற காத்திருப்பு கடினமானதாகவே ஆகிவிடும்!

இருப்பினும் அடுத்த மடல் எழுதும் ஆனந்தப் பணியாலே அங்கே வந்த பாரம் சற்றே இறங்கிவிடும்!

மறுமுறை தவமேற்கொள்ளும்போது இன்பத்தமிழ் வரம் கிடைக்கும்..

அதை எழுதிவைத்துப் பார்க்கும்போது அன்பின்தாழ் மெல்லத்திறக்கும்!!