தொடர்கள்
கதை
பெற்ற மனம் கல்லானால் - ரேணு மிரா

20220419172648634.jpg

அதிகாலைப்பொழுது ....எம் எஸ் அம்மாவின் சுப்ரபாதம் தமிழில் ஒலிக்க, வீடெங்கும் ஊதுவதியின் மணம் கமழ....

"பர்வதம் " என்று அழைத்தபடி வெளியே இருந்த செய்தித் தாளை எடுத்தார் ஸ்ரீநிவாசன். ஆங்கிலத் தாளை விலக்கி, தமிழை மட்டும் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றார்.
அடுத்தது "சுரேஷ் , சுரேஷ் " என்று கூப்பிட்டபடி மீனா ஆங்கில செய்தித் தாளை மேசையில் வேகமாகப் போட்டுவிட்டு " உங்க அப்பாவுக்கு இதயும் சேர்த்து எடுத்துட்டு வர முடியலையோ? எல்லாம் நான் தான் செய்யணுமோ?" என்றாள். சுரேஷுக்கு செய்தித் தாளின் தலைப்புச் செய்தியை விட மீனாவின் புலம்பலில் ஆர்வம் இல்லை. இந்தாங்க என்று மணம் கமழ பில்டர் காபியை தன் கணவனிடம் தந்து விட்டு தானும் அமர்ந்து பருகத் துவங்கினாள் பர்வதம். "டிபன் ரெடியா இருக்கு,குளிச்சிட்டு, டிபன் சாப்பிட்டுவிட்டு சேஷாசலம் வீட்டுக்கு போகணும்னு சொன்னீங்களே நானும் வரேன் வேலையெல்லாம் முடிஞ்சு போயிடுச்சு வேலைக்காரி இன்னிக்கு வர மாட்டா, நேத்தே சொல்லிட்டா நான் பத்து மணிக்கு மேல ஃப்ரீ தான் சீக்கிரம் கிளம்புங்க ஏன்னா அதுக்கப்புறம் வெயில் ஏறிடும்" பக்கத்துல உட்கார்ந்து இருந்த சுரேஷின் கண்கள் செய்தித்தாளை பார்த்தாலும் அவன் கவனம் தாய் தந்தையின் உரையாடலை ரசித்து சிரித்த வண்ணம் இருந்தது.

"அப்பா டீ" என்றபடி தன் பிஞ்சுக் கரங்களால் சிறிதளவு சிந்தியபடி சுரேஷிடம் கொடுத்தான், சுரேஷின் ஒரே மகன் பாபு." பாட்டி" என்றபடி பர்வதம் அம்மாவை தாவி கட்டிக்கொண்டான் பாபு. "பாட்டி எனக்கு இன்னைக்கு லீவு, நான் டிவி பார்க்க வா" என்றான் பாட்டியோ குழந்தையை சற்று விலக்கி "இல்லடா கண்ணு நானும் தாத்தாவும் வெளியே போறோம், நீ போய் உன் வீட்டுப்பாடம் செய்" என்று கூறிவிட்டு அங்கிருந்து சமையல் அறைக்கு சென்றாள். இதுவே ஸ்ரீனிவாசன், சுரேஷின் சமீபத்திய நடைமுறை. அன்று மீனாவும் சுரேஷும் அலுவலகத்திலிருந்து வருவதற்கு சற்று தாமதமாகிவிட்டது. அப்போது பள்ளியிலிருந்து வந்த பாபு வீட்டுக் கூடத்தில் தனியாக அமர்ந்து வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருந்தான். இதைப்பார்த்த மீனா உள்ளே நுழைந்தவுடன் பாபுவைப்பார்த்து "என்னடா கண்ணு எப்ப வந்தே? சாரிடா கண்ணு லேட்டாயிடுச்சு. ஏதாவது சாப்பிட்டியா?" என்றாள். "பிஸ்கட் சாப்பிட்டேன்" என்றான் குழந்தை." உங்க பாட்டி எதுவும் கொடுக்கலையா?" என்றாள் மீனா. "அவங்க தான் பிஸ்கட் வாங்கி கொடுத்தாங்க"என்றான் பாபு. இதைக் கேட்ட மீனா ஆத்திரத்துடன் "சுரேஷ் கேட்டீங்களா, உங்க அம்மாவால குழந்தைக்கு இரண்டு தோசை கூட போட்டுக் கொடுக்க முடியல, பிஸ்கட் கொடுத்து இருக்காங்க பாருங்க" என்றபடி சமையலறைக்குள் நுழைந்தாள். "அவர்களால் முடிந்ததை கொடுத்திருக்காங்க" என்றபடி சுரேஷ் ரூமுக்குள் சென்றான். இந்த சரசரப்பில் உள்ளே நுழைந்தார் சீனிவாசன். "என்னவாம்?" என்றார், பர்வதத்தை பார்த்து. அப்போதுதான் ரூமில் இருந்து வெளியே வந்த பர்வதம் சம்பவத்தை விளக்கினாள். உதட்டோரம் லேசான புன்னகையுடன் சாவகாசமாக அமர்ந்த சீனிவாசன், "நாளைக்கு சாயந்தரம் 5 மணிக்கெல்லாம் கிளம்பி நாம திருப்பதிக்கு போறோம்", " என்ன திடீர்னு?" என்ற பர்வதம் கேட்க, "என் பழைய நண்பன் ராமா ரெட்டியை சங்கத்தில் சந்தித்தேன், அவர் DC யாக இருந்து ரிடையர்ஆனவர். அவர் திருப்பதி தேவஸ்தானத்தில் நல்ல செல்வாக்கு உள்ளவர். நாளைக்கு அவன் மனைவியுடன் திருப்பதி போகிறான், வரியா என்றான் சரி என்று சொல்லிவிட்டேன், ஏன்? என்ன ஆச்சு? எனி ப்ராப்ளம்? போகலாம் இல்ல? என்று கேட்டார் "நோ நோ போகலாம்" என்றபடி பர்வதம் உள்ளே சென்றாள்.

அன்று இரவு சுரேஷ் தன் அறைக்குள் தூக்கம் பிடிக்காமல் பால்கனியில் நின்று நட்சத்திரங்களைப் பார்த்தபடி தன் தாய் தந்தையை நினைத்து மகிழ்ந்தான். பிள்ளை மனம் கல்லானால் பெற்றவர்களால் பொறுத்துக்கொள்ள முடிகிறது. ஆனால் பெற்றவர்கள் மனம் கல் ஆனால் அது பிள்ளைகளின் நன்மைக்கே. மெல்லிய எண்ணங்கள் ஓட உதட்டோரம் புன்னகையுடன் சுரேஷ் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டு தன் அறைக்குள் உறக்கத்தை தொடர்ந்தான்.
திருப்பதி தேவஸ்தானத்தின் தரிசனம் முடித்து விட்டு வெளியேறிய இரண்டு தம்பதிகளுக்கு லட்டுக்கு நின்ற வரிசையைப் பார்த்து மலைப்பு வந்தது. ஆனால் ராம ரெட்டியின் செல்வாக்கு அவர்களுக்கு அதையும் சிரமமின்றி பெற்றுத்தர, அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு சென்றனர். ராமா ரெட்டி அவர் மனைவியுடன் அவர்களுக்கு தெரிந்த வரை சந்திக்கச் சென்றார். அப்போது தனிமையில் இருந்த பர்வதம், சீனிவாசனை பார்த்து ஒரு பெருமூச்சு விட்டு "போன முறை குழந்தை பாபு மீனா சுரேஷ் அனைவரும் வந்திருந்தோம் இப்போ எவ்வளவு மாற்றம், இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ?" என்று கண்களின் ஓரம் கண்ணீர் உடன் பெருமூச்சு விட்டாள்.

அதற்கு சீனிவாசன் "அதெல்லாம் ஒன்றும் இல்லை இங்க பாரு பறவைகள் தன் குஞ்சுகளை மலையின் மேலிருந்து கீழே தள்ளுகிற மாதிரி இருக்கும் ஆனால் அது அந்தப் பறவைகளுக்கு தீங்கு செய்யாமல் பறக்க கற்றுக் கொடுக்கும், நம் மனதை கல்லாக்கி வைத்துக் கொள்வது, பல நேரங்களில் தப்பாகத்தான் தெரியும். ஆனால் அது மீனாவின் மனசுல நாம் அவர்களை நம்பி இல்லை என்றும் அவர்களும் நம்மை நம்பி இல்ல அப்படிங்கிற தெளிவையும் தரும். பின் அன்றாட மனஸ்தாபங்கள் நீங்கும். இங்க பாரு பர்வதம் எதிர் பார்ப்பு இருந்தால்தான் உறவுகளில் கருத்துவேறுபாடு வரும், அது குறைந்து சுமுகமா போய்விடும். எதிர்பார்ப்பு இல்லைனா வாழ்க்கை சுகமாக இருக்கும்னு சொல்றேன். சரி சரி கிளம்பு அவங்க ரெண்டு பேரும் வந்துட்ட மாதிரி தெரியுது, இந்தா இங்கே பாரு இந்த கவரை விட்டுட்டே பாரு மீனாவுக்கு வளையலும் பாபு வாங்கின பொம்மையும் இதோ இந்த கவரில் இருக்கு இந்த கவரை எடுத்து உள்ளே வை அவங்க வந்தவுடன் கிளம்பலாம் என சொன்னாங்க வா போகலாம்" என்று சொன்னபடி, உதட்டில் புன்னகையும், மனதில் திருப்தியுடனும் ஊருக்கு தன் மனைவியுடன் கிளம்ப ஆயத்தமானார் சீனிவாசன்.