தொடர்கள்
பொது
ராஜீவ் காந்தியின் கடைசி கணங்கள் மறந்து போன மக்களுக்காக ! மீள் பதிவு ராம்.

20200421185202351.jpeg

(தரையில் அமர்ந்து பேட்டியெடுப்பவர் மூத்த பத்திரிகையாளர் ஜாசன்) ராஜீவ் கொலையாவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு... கற்பனையிலாவது நினைத்திருப்பாரா ராஜீவ் இன்னும் சற்று நேரத்தில் சிதறப் போகிறோம் என்று.....! கொடுமை.

மற்றெந்த பத்திரிகையை விடவும் ராஜீவ் கொலை வழக்கில் மீள் பதிவு போட விகடகவிக்கு ஏராள தகுதி இருக்கிறது.

ராஜீவ் காந்தியின் கடைசி சில நிமிடங்களையும் அவர் உடல் சிதறி இறந்து போன தருணங்களின் போதும் அப்போது உடனிருந்த மூத்த பத்திரிகையாளர் ஜாசன், மற்றும் மேப்ஸ் விகடகவி ஆசிரியர் குழுவில் இருப்பது தான் காரணம்.

ராஜீவ் கொலை வழக்கில் யார் வேண்டுமானாலும், எந்த வகையில் வேண்டுமானாலும் சட்டத்தின் ஓட்டைகள் மற்றும் சந்து பொந்துகளை உபயோகித்து வெளியே வரட்டும்.

ஆனால் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்படாத ஒருவரை வெறும் அரசியல் தமிழர் செண்டிமெண்ட் ஓட்டுக் காரணமாக மட்டும் ஒரு மாநில முதல்வர் ஆரத் தழுவி வரவேற்பது அவசியமா என்ற கேள்விக்கு அரசியல் பார்வையாளர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்......

20220421085407776.jpg

(இந்தப் படத்தையொட்டி வாட்சப்பில் உலா வரும் மீம்ஸ்கள் இந்த கட்டுரையின் இலக்குக்கு அப்பாற்பட்டவை)

வாசகர்களின் கருத்து என்ன ??

மே 2020ல் வெளியான கட்டுரையின் மீள் பதிவு இங்கே...

21 மே மாதம் 1991. கொடூரமாக கொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தி கதை இன்றைய தலைமுறைக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். மற்றபடி தமிழர்கள் நெஞ்சில் நீங்காத வடுவாகி விட்ட பல முறை படித்து, பாடப்புத்தங்களை விட மனப்பாடமான ஒரு விஷயம். ஒற்றைக் கண் சிவராசன், இடுப்பில் வெடி குண்டு கட்டிக் கொண்டு சென்ற தனு, முத்தாய்ப்பாக அதை நாங்கள் செய்திருக்கக் கூடாது என்று வருந்திய பிரபாகரன். இவையெல்லாம் சரித்திரத்தின் ரத்தம் தோய்ந்த பக்கங்களில் புதைந்திருக்கும் துன்பியல் பெயர்கள்.

ராஜீவ் கொலையில் அநியாயங்களையோ அல்லது திட்டமிடலையோ பல ஆயிரம் முறை பல ஆயிரம் ஊடகங்கள் பேசி முடிந்த கதை.

ஆனால் விகடகவியில் இதை எழுதுவதற்கு ஒரு தனி, பிரத்யேகக் காரணம் இருக்கிறது. ஏனெனில் இந்த கொலையில் தொடர்புடைய இரண்டு பேர் இன்று விகடகவியின் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். மன்னிக்கவும். தொடர்புடையவர்கள் என்றால் கொலையில் தொடர்புடையவர்கள் இல்லை.

அன்று நடந்த சம்பவத்தை தமிழ் கூறும் நல்லுலகிற்கு, மேலும் வெளி உலகிற்கு தெரியப்படுத்திய வகையில் தொடர்புடையவர்கள்.

மூத்த பத்திரிகையாளர் ஜாசன். அன்று புகைப்படம் எடுத்த எம்.ஏ.பார்த்தசாரதி என்கிற மேப்ஸ்.

இருவருமே செய்தி சொல்லுவார்களே தவிர, தங்கள் புகைப்படம் வருவதை விரும்பாதவர்கள். வலுக்கட்டாயமாக பேசி தான் இந்த தகவல்களைப் பெற வேண்டியிருந்தது.

மேப்ஸ் அந்த நாளை விவரிக்கையில்.…

20200421185637178.jpg

ஜூனியர் விகடனில் வெளி வந்த பெட்டிச் செய்தி அன்று......

“அதாவது நாங்க மூணாவது நாலாவது கான்வாயிலிருந்து இறங்கினோம். அனுகுண்டு வெடித்தது போல சத்தம். இதெல்லாம் ஏற்கனவே ஜூனியர் விகடனில் எழுதியாச்சு. இன்னிக்கு நினைச்சாலும் பக்குனு இருக்கு. என்னால மறக்க முடியாத விஷயம் என்னன்னா... அந்த உடம்புல பாதிய காணோம். முகமெல்லாம் கூட இல்லை. அன்னிக்கு பக்கத்தில இருந்த பல பேரு செத்துப் போயிட்டாங்க. அந்த இடத்தில யாருமே கிட்ட வரக்காணோம். மூப்பனார் மட்டும் இல்லைன்னா மார்ச்சுவரிக்கு கூட ராஜீவ் உடல் வந்திருக்காது. கிடைச்சத அள்ளிட்டுப் போய் தான் ஈமக் காரியங்களே பண்ணிணாங்கன்னா எவ்வளவு கொடுமை...?

இத்தனைக்கும் இரண்டு மணி நேரம் முன்னாடி தான் ஜாசனும் நானும் ஏர்போர்ட்ல வெச்சு அவரை பேட்டி எடுத்துட்டு ஶ்ரீ பெரும்புதூர் போறோம். ஒரே ஒரு விஷயம் தான் உறுத்துது. அடுத்த நாள் காலை வரைக்கும் யாருமே அங்க ஒரு போலீஸ் காவல் கூட போடலை.

இத பத்தி உப கதைகள் நிறைய இருக்கு. இப்ப அதெல்லாம் சொன்னா கேக்க ஆளில்ல. காங்கிரசே ராஜீவ் காந்திய மறந்தாச்சு அப்படீங்கறது தான் ரொம்ப சோகம்!”

மேப்ஸிடம் அந்த சம்பவம் எந்தவிதமான பாதிப்பை ஏற்படுத்தியது என்று கேட்ட போது.... “பல நாள் தூக்கம் வரலை. நல்லா ஞாபகம் இருக்கு. அந்த வெடிச் சத்தம் கேட்டப்புறம், மெதுவா மெதுவா கிட்ட போய் படம் எடுக்கப் போறேன்... ஜாசன் என் கைய நல்லா இறுக்கி பிடிச்சுக்கிட்டார். காமிராவை ஃபோகஸ் பண்ணக் கூட முடியலை. ‘யோவ் கைய விடுய்யா’ன்னு கத்திட்டு தான் படமெடுத்தேன்.

அன்னிக்கு ராத்திரி பூரா சி.என்.என்., பி.பி.சி., ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்துன்னு பேட்டி மேல பேட்டி எடுத்துக்கிட்டே இருந்தாங்க. தமாஷ் என்னன்னா படம் எடுத்த நான் திரும்ப வரும் போது, பசி தாங்காம ஆட்டோல உக்காந்துக்கிட்டு தேங்கா பன் சாப்பிட்டுக்கிட்டே வந்தேன். ஜாசனை சாப்பிடறீங்களான்னு கேட்டப்ப.... ‘யோவ் நீ என்ன மனுசன்யா?’ன்னு டென்ஷனாயிட்டாரு.

20200421185945512.png

மேடையருகே கோரச் சம்பவம்.....

20200421190006844.png

அலங்கோலமாக ராஜீவ். ஆங்கிலப் பத்திரிகை இப்படி எழுதியது. இறப்பு மரியாதை அறியாதது.

அவரு அந்த சம்பவத்துக்கப்புறம் சுமார் பத்து நாளைக்கு சரியாவே சாப்பிடலை தெரியுமா?” என்றார்.

அது சரி ஜாசனை அந்த இடத்தில் ஒரு போட்டோ எடுத்தீங்களா என்று கேட்டதும் கடுப்பானார் மேப்ஸ்.

“யோவ்.. நானே ஃபிலிம் ரோல் பத்தலை... நைசா இறந்து கிடந்த ஹரிபாபு பைல ஃபிலிம் ரோல் எடுக்கலாமானு யோசிச்சுக்கிட்டு இருந்தேன். அப்ப செல்ஃபி எடுக்கற மாதிரி ஜாசனை வெச்சா படம் எடுத்துக்கிட்டு இருப்பேன்?...”

ஜாசனிடம் இந்த சம்பவம் அவர் வாழ்க்கையை எப்படி மாற்றியது என்று கேட்டேன்...

ஜாசன் சொன்னார்...

“அதெல்லாம் பெரிதாக மாற்றம் எல்லாம் நடக்கவில்லை. ஜூனியர் விகடன் அந்த காலத்தில் நம்பர் ஒன் இதழாக இருந்தது, அப்போதே நான் பல கவர் ஸ்டோரிகள் எழுதியிருக்கிறேன். அதைப் போல்தான் இதுவும். ஆனால், எம்டி இந்த இதழுக்கான சன்மானமாக அப்போது என்னை அழைத்து 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அப்போது என்னை ‘ஜூனியர் விகடனில் நிரந்தர வேலையில் சேர்ந்து விடுகிறீர்களா?’ என்று கேட்டார்... ‘வேண்டாம் சார், இப்படியே பகுதி நேரமாக தொடர்கிறேன்’ என்றேன். அதே சமயம் எனக்கு ஒரு ஊழியனுக்கு கொடுக்க வேண்டிய சலுகையை விட அதிகமாகவே விகடன் நிர்வாகம் எனக்குக் கொடுத்தது. என்னைப் பொறுத்தவரை, ராஜீவ் காந்தி படுகொலை ஒரு முக்கிய செய்தி. அதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட சிவராசன் சுட்டுக் கொல்லப்படுகிற வரை, நான் தொடர்ந்து செய்திகளை எழுதி வந்தேன். அதே சமயம் ராஜீவ் காந்தி பற்றி இன்னொரு செய்தியையும் சொல்ல விரும்புகிறேன்... அவர் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்தார். நான் அந்த நிகழ்ச்சிக்கு போயிருந்தேன், என்னுடன் விகடன் புகைப்பட நிருபர் சிவபெருமாளும் வந்திருந்தார். திரும்பும்போது ராஜீவ்காந்தி காரை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தோம், அப்போது நல்ல மழை... ராஜீவ்காந்தி காரின் வைப்பர் வேலை செய்யவில்லை. உடனே காரை நிறுத்தச் சொன்ன ராஜீவ் காந்தி, இறங்கி அவரே அந்த வைப்பரை சரி செய்தார். இதை சிவபெருமாள் புகைப்படம் எடுத்தார், நான் அருகில் இருந்தேன். “இவர் உங்களுடன் வந்தவர் தானே என்றவர்.... அவரையும் அழைத்து, இது பெரிய செய்தி எல்லாம் அல்ல... வைப்பர் ஒழுங்காக வேலை செய்தால்தான், நான் பாதுகாப்பாக டெல்லி திரும்ப முடியும் அவ்வளவுதான். இது பெரிய செய்தி எல்லாம் இல்லை... இதற்கெல்லாம் நீங்கள் முக்கியத்தும் தராதீர்கள்” என்று எங்கள் இருவரையும் தோளைத் தட்டி அனுப்பினார் ராஜீவ் காந்தி.”

தமிழ்நாட்டில் இன்னமும் பல பேருக்கு ராஜீவ் காந்தி கொலை வழக்கு நினைவில் இருப்பதற்கு ஒரே காரணம், இன்றும் சிறையில் இருக்கும் அந்த ஏழு பேர் தான்.

இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிராக ஒரு துரும்பை எடுத்துப் போட்டாலும் ஜென்மத்திற்கும் சிறையில் இருக்க வேண்டியது தான் என்பதை இன்றைய போலிப் போராளிகளுக்கு நினைவு படுத்துவதற்கேனும் அவர்களை விடுவிக்கக் கூடாது என்பது தான் பலரின் கருத்து.

ராஜகளை பொங்கிய அந்த ராஜீவ் காந்தியை, இரண்டு துண்டுகளாக அதுவும் முகமழிந்து, உருக்குலைந்து போன நிலையில் அவரையும் அவரைச் சுற்றிலும் இருந்தவர்கள் கருகியதையும் நேரில் பார்த்த ஜாசன், மற்றும் மேப்ஸின் கருத்து என்ன...?

விடிவிக்கலாமா அந்த ஏழு பேரையும்?????

20200421185746160.jpg

ஜாசன்:

“ராஜீவ் காந்தி உள்பட அங்கு இறந்தவர்களின் சடலங்களை நேரில் பார்த்தவன்! அவர்களுக்கும் ராஜீவ் காந்திக்கும் என்ன சம்பந்தம்.... பாதுகாக்க வந்த போலீஸ், வேடிக்கை பார்க்க வந்த தொண்டன், இப்படி பலரும் ராஜீவ் காந்தியுடன் சேர்ந்து படுகொலை ஆனார்கள். இந்த ஏழு பேர் விடுதலையை பொறத்தவரை... இவர்கள் ஏற்கனவே பல சட்ட போராட்டங்கள், அரசியல் ரீதியாக பல தலைவர்கள் தந்த வாக்குறுதிகளை நம்பி ஏமாந்தவர்கள். பலமுறை சட்டமன்றம் இவர்களை விடுதலை செய்யச் சொல்லி தீர்மானம் நிறைவேற்றியது. சட்டமன்றம் என்பது பொதுமக்களின் சார்பானது. அவர்கள் அவர்களின் பிரதிநிதிகள். ஆனால் அந்த தீர்மானங்களின் மீது இன்றுவரை எந்த நடவடிக்கையும் இன்றி, ஜனாதிபதி அலுவலகத்திலும் உள்துறை அமைச்சர்களும் பத்தோடு பதினொன்றாக இருக்கிறது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. அவர்களை விடுதலை செய்வதில் என்னைக் கேட்டால் எந்த தடையும் இல்லை!அதே சமயம் அவர்கள் குற்றவாளிகள் அல்ல, அப்பாவிகள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ராஜீவ் காந்தி கொலையில் அவர்களும் சம்பந்தப்பட்டவர்கள் தான் இதை யாராலும் மறுக்க முடியாது.”

மேப்ஸ்.:

“என்னைப் பொறுத்தவரை அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவன் என்ற முறையில் அந்த கொடூர காட்சிகள் கண் முன்னே வர அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.”

ஜாசனும் மேப்ஸும் ராஜீவ் காந்தியின் மரணத்தை சில இஞ்சுகள் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் போது, எனக்கு நன்றாக ஒரு படுகொலை சம்பவம் நினைவிருக்கிறது.

இந்திரா காந்தியின் மரணத்தின் போது நாகர்கோவிலில் நான் படித்துக் கொண்டிருந்தேன். தெருத்தெருவாக சென்று எப்படி மலர் அஞ்சலி இந்திராவின் போட்டோவிற்கு செய்தோமோ, அது போலவே தான் ராஜிவ் மரணத்தின் போதும் நாங்கள் இருந்த ஊட்டியில் செய்தோம். நம்ப மாட்டீர்கள். தூக்கம் வராமல் அந்த சம்பவத்தை டிவியில் பார்த்து இரவு முழுவதும் குடும்பமே அழுதிருக்கிறோம்.

தூரத்தில் தொலைக்காட்சியில் பார்த்த போது இப்படி ஒரு பாதிப்பு என்றால், நேரில் அதிலும் அவ்வளவு அருகே பார்த்தவர்களுக்கு எப்படி இருக்கும்?

மேப்ஸ் சொன்னார் ‘ஒரு முப்பது செகண்ட் முன்னே சென்றிருந்தால் நாங்களும் ராஜீவுக்கு அருகில் இருந்திருப்போம். அவ்ளோதான்’. பல சமயங்களில் ராஜீவ் மரணத்தின் மர்மங்கள் இன்னமுமே நீடிப்பதாகவே தோன்றுகிறது !

என்னைப் பொறுத்தவரை, இந்த உலகில் அனைத்தும் இறைவனால் முன்னமே தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு நொடியும். ஒவ்வொரு நகர்வும்.

பேரறிவாளன் விடுதலை உட்பட !!