தொடர்கள்
தொடர்கள்
காதல் பொதுமறை -95 காவிரி மைந்தன்

20220424223412822.jpg

20220424223458843.jpg

இமைப்பந்தல் நிழலுக்குள்..

20220530092545446.jpg

அன்பே! கலைக்கோயில்தன்னில் சிலையெனவே நீயெழுந்தாய்!

என் மனக்கோவிலில் வீற்றிருக்கும் மகராணியே!

உன்னெழில் வண்ணம்தன்னில் எனை மறந்தேன்!

கவிதைப் பண்பாடுகின்றேன்! கரைபுரண்டு ஓடுகின்றேன்!

உனை நினைந்து வாழுகின்றேன்!

வண்ணத்தமிழால் எண்ணங்களைப்பூட்டி உன் இதயப்பரப்பில் என் புரவிகள் வெள்ளோட்டம் பாய்கின்றன!

சொல்லில் வழியும் அமுதமதுவை சுவைத்துமகிழும் காதலியே!

கற்பனைத்தேன் கலந்தவரை போதுமா?

இனியது கன்னியிதழில் ஊறுமா?

என்னை வந்து சேருமா? ஆவல்களை மீறுமா?

அடுத்தடுத்துப் பேசுமா?

தளிர்க்கொடிபோல் நீ என்னைத் தழுவிக்கிடக்கும் உன்னை மடியில் வைத்து கொஞ்சம் கொஞ்சட்டுமா!

தருவதற்கும் பெறுதவற்கும் இனிமேலும் பஞ்சமா?

இருவிழிகள் சிறகடிக்கும் நூதனங்கள் என்ன? அவை சொல்ல நினைக்கும் எண்ணங்கள்தான் என்ன?

நின் கருமணிகளோ வெண்திரையில் இங்குமங்கும் மோதும்!

கட்டழகைச் சுமந்தபடி என் கையருகே உன் தேகம்!

தென்றலுக்குக்கூட தடைபோட வேண்டி உன்னை நான் அணைப்பேன்!

ஓராயிரம் முத்தங்கள் பதிப்பேன்!

இடைவெளிகள் இல்லாது இருவரும் சேர.. இமைக்கதவுகள் அந்நேரம் தானாக மூட ..

இன்பத்தை இறைவன் வைத்திருக்கும் இடங்களையெல்லாம் ஒவ்வொன்றாய் தேட..

வார்த்தைக்கு இனிமேல் வாய்ப்பென்ன பெண்ணே.. உன்னில் என்னை வசமாக்கு!

திசைகள் மறந்தபடி ஆசைக்கடல் மூழ்கலாம். இரவில் தூங்கி பகலில் எழுவதென்றாலும், பகலில் தூங்கி இரவில் எழுவதென்றாலும் எனக்குச் சம்மதம்!

பெளர்ணமி இரவில் பால்நுரை பொங்கும் கடல் அலைகள் உயர்ந்து எழுவது ஏனடி?

அவை.. அழகுநிலாவைப் பார்த்து ஆனந்தக் கும்மியடிப்பதுதானடி! கடலலைகள் வந்து நம் காலை நனைத்து கவிதை பாடும் கோலங்கள்..

கன்னியுந்தன் கைகள்பற்றி நெஞ்சம்பூத்து மகிழ்ந்த காலங்கள்..

இரவின் போர்வை மெதுவாய் மூடிய பொன்மாலைப் பொழுதினிலே..

இதழ்கள் பொழிந்த அமுதமழையில் நனைந்து மகிழ்ந்த நாட்களே!

எழுத நினைக்கும் எண்ணங்களெல்லாம் என்னிலிருந்து புறப்பட்டாலும் அவை உன்னை அணைக்கும் கோலங்கள் அறிவேன்!

குளிர்காலமேகங்கள் கூட்டணி போட்டதுபோல் உன் விழிகளிரண்டின் இமைகளும் இதமாய் பதமாய் என்னை வரவேற்கும் நூதனங்கள் -

ஒரு வசந்த விழா வைபவத்திற்கு வரவேற்பிதழ் வாசிப்பதாகவே எனக்குப்படுகின்றன!

என் மனதின் மைய மண்டபத்தில் மகராணியின் எழிற்கோலம் உனக்கானது என்னும்போது பெருமிதமே கொள்கிறேன்!

அலங்காரம் ஏதுமில்லாமலே என் அழகுநிலா கொலுவீற்றிருக்கும் திருமுகத்தில் ஆசைவெள்ளம் பாய்கிறபோது ஏற்படும் பெளர்ணமி வெளிச்சம் கன்னங்கள் என்னும் மதனகிண்ணங்கள்மீது பதமான இதழ்முத்தங்கள் பதித்தாக வேண்டும் என்று எனைத் தூண்டுதே!

கன்னிமயில் என்மீது சாயட்டும்! காதல் விளையாட்டு காலமெல்லாம் தொடரட்டும்!

கவிதை மொழிகேட்டு கண்ணுறங்கவிரும்பும் என் பைங்கிளியே!

இதழின் சுவையூட்டல் இடையிடையே நடந்தபடி இனிக்கும் விருந்தை நிதம்தோறும் வழங்கடி!

உன் இமைப்பந்தல் நிழலுக்குள் இளைப்பாற விரும்புகிறேன்!