தொடர்கள்
பொது
பர்கர் கிங் - விஸ்வாசமே உன் விலை என்ன ?? - மாலா ஶ்ரீ

2022060120002455.jpg

மெரிக்காவில் பர்கர் கிங் உணவகத்தில் கெவின் ஃபோர்டு என்பவர் கடந்த 27 ஆண்டுகள் ஊழியராக வேலை பார்த்து, சமீபத்தில் பணி ஓய்வு பெற்றிருக்கிறார். தனது 27 வருட பணிக் காலத்தின்போது, கெவின் ஃபோர்டு ஒரு நாள்கூட லீவு எடுக்கவில்லை . எனினும், அவருக்கு பர்கர் கிங் நிறுவனம் சிறிய அன்பளிப்புடன் மட்டுமே வழியனுப்பி வைத்தது. இதில் கெவின் ஃபோர்டு ஏமாற்றமடைந்தார். பர்கர் கிங் கெவினின் விஸ்வாசத்திற்கு கொடுத்த பரிசு தக்கினியூண்டு தான். அவர்கள் பர்கர் சைஸ் கூட கருணை இல்லை.

இது பற்றிய தகவலறிந்ததும் தனது தந்தைக்கு உதவி செய்ய மகள் செரினா தீர்மானித்தார். இதையடுத்து அவர், தனது சமூக வலைதளத்தின் மூலமாக 'கடந்த 27 வருடங்களில் ஒரு நாள்கூட லீவு எடுக்காத தனது தந்தையும் பர்கர் கிங் ஊழியருமான கெவின் ஃபோர்டுக்கு நிதி திரட்டி செய்தியை செரினா வெளியிட்டார். சமூக வலைதளத்தில் வெளியான தகவலை பார்த்து, கெவின் ஃபோர்டுக்கு ஏராளமான நெட்டிசன்கள் போட்டி போட்டு பணத்தை அள்ளி வழங்கினர். 'GoFundMe' என்ற அமைப்பின் மூலம் இத்தொகைகளை கெவின் ஃபோர்டின் மகள் செரினா திரட்டினார்.

20220601200053428.jpg

முதல் நபராக பிரபல நகைச்சுவை நடிகர் டேவிட் ஸ்பேட் என்பவர், தனது பங்காக 5000 அமெரிக்க டாலர் வழங்கியுள்ளார். அதன்பின், கெவின் ஃபோர்டின் 27 வருட சேவையை பாராட்டி ஏராளமான நெட்டிசன்கள் தாராளமாக நிதியுதவி வழங்கினர். இதன்மூலம், கடந்த சில நாட்களில் ஒரு கோடி ருபாய்க்கு மேல் அமெரிக்க டாலர்கள் சேர்ந்திருப்பதாக கெவின் ஃபோர்டின் மகள் செரினா மகிழ்ச்சி தெரிவித்தார்.

பர்கர் கிங் பெக்கர் கிங்காக இருந்தால் என்ன, மக்களின் மனதில் ஈரம் இருக்கும் வரை கெவின் ஃபோர்டுகளுக்கு பிரச்சினையே இல்லை.