தொடர்கள்
கதை
வண்டி - பா.அய்யாசாமி

20220601194657754.jpg


என்ன வண்டி?

ஹீரோ பைக் ஐயா,

நம்பர் என்ன ?

சொன்னான்.

எப்போ எங்கே நடந்தது ? என விசாரனையை துவக்கினார் காவல் நிலைய எழுத்தர்.

ஐயா, நான் நடுக்கடைத்தெருவில் உள்ள தனியார் நிறுவனத்திலே விற்பனை பிரதிநிதியாக வேலை செய்கிறேன். அலுவலக வாசலில் வண்டியை விட்டுவிட்டு முதல் மாடியில் உள்ள ஆபீஸூக்கு சென்று, திரும்பவந்த பார்த்தபோது வண்டி அங்கில்லை.

எப்போ நடந்தது ?

ஒரு மணி நேரத்திற்கு முன்பு என்றவன், அங்கே அருகே உள்ள கடையின் கேமராவில் புட்டேஜ் பார்த்து அந்த காப்பியையும் கொண்டு வந்திருக்கேன் ஐயா என்று கொடுத்தான்.

எங்க வேலையெல்லாம் நீங்களே செய்திட்டீங்களா ?
சரி, சரி புகார் கூட அதையும் கொடுத்துப்போ ! நாங்க பார்த்துக்கிறோம்.

ஐயா, அந்த வண்டியாலத்தான் எனக்கு வேலையே கிடைச்சுது.
வண்டி இருந்தாத்தான் திரும்பவும் வேலைக்கே போகமுடியும், அதுவும் இறந்துபோன என் அப்பா பேரில் உள்ளது.


தற்போது என்னிடமுள்ள ஒரே சொத்தும் அதுதான், அப்பா இறந்த பின்பும் அதை விற்காமல் ஞாபகமாக
பத்து வருடமாக வைத்துள்ளேன் என்று கூறி கண்ணீர் விட்டான் குமரன்.

ஓ பழசா !? நான் கூட புதுசோன்னு கவலைப்பட்டேன் என சொல்லி சிரித்தனர் காவல்நிலையத்தார்கள்.

இதே வேலையாகப் போச்சு இவனுங்களுக்கு,பொழுது விடிந்து பொழுது போனால் போதும் கிளம்பி வந்திடுவாங்க, அதை காணும் இதைக் காணும்னு, நாங்களும் கஷ்டப்பட்டு ஆளைப்பிடித்து வந்து வண்டியை மீட்டு திரும்ப உரியவரிடம் ஒப்படைக்கிறதுக்குள்ளே உசிரே போயிடுது என புலம்பியவர், வாகனத்திருட்டு வழக்கில் நேற்று அகப்பட்டு கோர்ட்டுக்கு அழைத்துச்செல்ல
நின்றியிருந்த அருணை அடிக்க கையை ஓங்கியபடி,
" போடா உள்ளே! என கைதி அறைக்கு அனுப்பி வைத்து தாழ் போட்டார் எழுத்தர்.

நம்பிக்கை இழந்த குமரன் கண்கள் கலங்கியபடி, அழுதுக்கொண்டே அங்கியிருந்து திரும்பும் வேளையில்,

தம்பீ,என அழைத்தான் அறையில் இருந்த கைதி அருண்.

ஜட்டியுடன் நின்றவனை மிரட்சியுடன் பார்த்து

என்ன ? என்றான் குமரன்.

ஒரு டீ வாங்கிக் கொடேன் எனக்கு என்றான்.

பயந்தபடியே வெளியே சென்று ஒரு டீ வாங்கிக் கொண்டு வந்து கொடுத்த குமரனை கவனித்த எழுத்தர்,

என்ன செய்கிறாய் நீ ? அவனுக்கு ஏதாவது ஆச்சுன்னா எங்க தாலி அறுந்திடும் சும்மா மூடிகிட்டு கிளம்பு என குமரனை அதட்டினார்.

திரும்பவும் குமரனை அழைத்தான் அருண்.

இப்போ என்ன ? என்றான் குமரன் அலுப்புடன்.

உன்னைப்பார்த்தால் ரொம்ப நல்லவனாக தெரியுது,
அதான் கூப்பிட்டேன் என்றவன்

இவங்களை நம்பிக்கிட்டு இருக்காதே!
நீ வண்டி வச்சு கானாமல் போன இடத்திற்கு பக்கத்திலே,ஒரு அரை கிலோ மீட்டருக்குள் வண்டிகள் நிற்குமிடமெல்லாம் போய் நன்றாக போய் தேடிப்பாரு கிடைக்கும் என்றான்

இப்போவெல்லாம் நாங்க வண்டியை எடுத்துகிட்டு உடனே போறதில்லை. பக்கத்திலே எங்காவது பார்க் பண்ணிட்டு இரவு போய் சுலபமாக எடுத்துகிடுவோம், இது எங்க புது டெக்னிக்.வேற யார்கிட்டேயும் சொல்லி எங்க தொழிலை கெடுத்திடாதே என்றும் கூறினான்.

“ ஏண்டா, அங்க என்னடா பேச்சு ? என இருவரையும் அதட்டி விரட்டினார் காவலர் ஒருவர்.

அந்த நம்பிக்கை வார்த்தையுடன் தன் நண்பனுடன் பயணித்த குமரன் அடுத்த அரை மணி நேரத்தில் ஒரு சினிமா தியோட்டர் வாசலில், தன் வண்டியைக்கண்டு ஆசையாக தடவி, அப்பாவை நினைத்து அழுது சந்தோஷமடைந்தான்.

அதனை எடுத்துக்கொண்டு காவல் நிலையம் சென்று விபரத்தை எழுத்தரிடம் தெரிவித்து புகாரை வாபஸ் பெற்றபோது,

அப்படியா தம்பீ, ரொம்ப சந்தோஷம்! என்ற எழுத்தர், வண்டியை அவர்கள் கண்டுபிடித்து ஒப்படைத்ததாகக் எழுதி வாங்கிக்கொண்டு அறிவுரை செய்து அனுப்பினர்.

வெறுந்தரையில் அமைதியாக கால் மேல் கால் போட்டு படுத்திருந்த கைதியைப் பார்த்து கண்களால் நன்றி கூறி நகர்ந்தான் குமரன்.