தொடர்கள்
ஆன்மீகம்
புகழ்த்துணை நாயனார்!! ஆரூர் சுந்தரசேகர்.

புகழ்த்துணை நாயனார்!!
ஆரூர் சுந்தரசேகர்.

புகழ்த்துணை நாயனார்!!


சிறப்புமிகு அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான புகழ்த்துணை நாயனார் சிவபெருமானுக்கு சிவத்தொண்டு செய்வதில் மட்டில்லா மகிழ்ச்சிக் கொள்வார். இவர் மனதால் இறைவனைத் தியானித்து, வாயால் அர்ச்சித்து, உடலால் வழிபாடு மேற்கொள்வதை பெரும் சிவப்பேறாக எண்ணி அதனைத் தவறாது கடைப்பிடித்து வந்தார். இவர் தினமும் சிவாலயத்திற்குச் சென்று இறைவனைச் சிவாகம விதிப்படி பூசித்து வந்தார்.
ஒரு சமயம் நாட்டில் பஞ்சம் வந்தபோது, உணவுக்கு வழி இல்லாத காலத்திலும் சிவபெருமானின் மீது கொண்ட அன்பு மற்றும் பக்தியால் தொடர்ந்து சிவபெருமான் பூஜையை விடாது செய்தார். இறையருளால் பஞ்சம் நீங்கும் வரை தினமும் பொற்காசு பெற்ற புகழ்த்துணை நாயனார் தமக்குக் கிடைத்த பொற்காசினைக் கொண்டு தம்முடைய வறுமையையும் மக்களின் வறுமையையும் போக்கி, இறைவனது வழிபாட்டில் சற்றும் வழுவாமல் வாழ்ந்தார்.
புகழ்த்துணை நாயனாரை சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில்
“புடைசூழ்ந்த புலியதன் மேல் அரவாடச் சூடி பொன்னடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கு அடியேன்” என்று போற்றுகின்றார்.

செருவிலிபுத்தூரில் அவதரித்த புகழ்த்துணை நாயனார்:
சோழ நாட்டிலுள்ள செருவிலிபுத்தூரில் (காவிரிக்குத் தென்கரையில் உள்ள 127 தலங்களில் 66வது திருத்தலமான அரிசிலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள அரிசிற்கரைப் புத்தூர் என்னும் அழகாபுத்தூர்) ஆதி சைவர் மரபில் அவதரித்தவர் புகழ்த்துணை நாயனார். இவர் மனதால் சிவபெருமானைத் தியானித்து, வாயால் அர்ச்சனை செய்து, உடலால் வழிபாடு மேற்கொள்வதைத் தவறாது கடைப்பிடித்து வந்தார்.
புகழ்த்துணை நாயனார் இத்தலத்தில் அருள்பாலிக்கின்ற அருள்மிகு சௌந்தர நாயகி சமேத சொர்ணபுரீஸ்வரருக்கு அரிசிலாற்றிலிருந்து நீரைக் கொண்டு வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து சிவாகம முறைப்படி தினந்தோறும் பூஜைகள் செய்து வந்தார். வயதாகித் தள்ளாமை அவரை ஆட்கொண்டுவிட்ட போதிலும் தினமும் அரிசிலாற்றிலிருந்து நீரைக் கொண்டுவந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்வதை நிறுத்தவில்லை.

பஞ்சத்திலும் சிவவழிபாட்டினை மேற்கொள்ளல்:
புகழ்த்துணை நாயனார் முதுமையிலும் சிவனது பூஜையை விடாது செய்தார். இவ்வாறு சிவபெருமானை வழிபட்டு வரும்போது கடுமையான பஞ்சம் அப்பகுதியில் ஏற்பட்டது. அதனால் மக்கள் கோயிலுக்குப் போவதைக்கூட நிறுத்திவிட்டு, உணவு கிடைக்கும் இடம் தேடி அலைந்தனர். பஞ்சம் ஏற்பட்ட காரணத்தினால் புகழ்த்துணை நாயனாரை வறுமையும் பற்றிக் கொண்டது. உணவு கிடைக்காத நிலையில் பசியில் வாடினார். பஞ்சம் தோன்றி உணவுக்கு வழி இல்லாத காலத்திலும் சிவபெருமானின் மீது கொண்ட அன்பு மற்றும் பக்தியால் அவரை விடாது எப்பொழுதும் போல் கோயிலின் அருகே ஓடும் அரிசிலாற்றிலிருந்து கிடைத்த நீரினைக் கொண்டு வந்து இறைவனை அபிஷேகித்து, எங்கேனும் சென்று மணமிக்க பூக்களைப் பறித்துக் கொண்டு வந்து அர்ச்சித்து, நைவேத்தியம் செய்து சிவாகம முறைப்படி வழிபட்டு பூஜை செய்து வந்தார்.

படிக்காசு பெற்ற புகழ்த்துணை நாயனார்:
ஒரு நாள் புகழ்த்துணை நாயனார் அரிசிலாற்றிற்குச் சென்று குடத்தில் நீரை நிரப்பிக் கொண்டு ஈஸ்வர சந்நிதிக்கு வந்தார். பசி மயக்கத்தில் கால்கள் தள்ளாட, கைகள் நடுங்கக் குடத்தைத் தூக்கி சிவலிங்கத்தின் மீது அபிஷேகம் செய்து கொண்டிருந்த போது பசி மயக்கத்தால் கை தவறி அபிஷேகம் செய்து கொண்டிருந்த நீர்க்குடம் சிவலிங்கத்தின் உச்சியில் விழுந்தது. இறைவனின் மீது குடம் விழுந்து விட்டதால் பதற்றமடைந்து கீழே விழுந்து மயக்கமடைந்தார். (சிவலிங்கத்தின் உச்சியில் குடம் விழுந்த தழும்பு இன்றும் காணப்படுகிறது) புகழ்த்துணை நாயனார் கொண்ட பக்தியால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அவருடைய மயக்க நிலையை உறக்க நிலையாக்கி அருள்புரிந்தார். அவர் கனவில் இறைவன் தோன்றி, "பஞ்சம் தீரும் வரை தினமும் உனக்கு ஒரு பொற்காசு தருகிறேன், அதனால் உன் துன்பங்கள் தீரும்" என்று அருளி மறைந்தார்.

புகழ்த்துணை நாயனார்!!

விழித்தெழுந்த புகழ்த்துணை நாயனார் பீடத்தின் கீழே ஒரு பொற்காசு இருக்கக் கண்டு மகிழ்ந்தார். (இதனைப் படிக்காசு என்று கூறுவர். படிக்காசு வழங்கியதால் இங்குள்ள சிவனாருக்குப் படிக்காசு நாதர் என்று அழைக்கப்பட்டார்) அதே இடத்தில் தினமும் அவருக்கு ஒரு பொற்காசு கிடைத்தது. அதைக் கொண்டு தம்முடைய வறுமையையும் மக்களின் வறுமையையும் போக்கினார். இறைவனுக்கு மேலும் சிறந்த தொண்டு செய்து இறுதியில் சிவபெருமானின் திருவடியில் ஐக்கியமானார்.

குருபூஜை நாள்:
தினமும் தமக்குக் கிடைத்த பொற்காசினைக் கொண்டு தம்முடைய வறுமையையும் மக்களின் வறுமையையும் போக்கி, சிவபெருமானது வழிபாட்டில் சற்றும் வழுவாமல் வாழ்ந்த புகழ்த்துணை நாயனாரின் குருபூஜை ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தன்று அவர் அவதாரம் செய்த ஸ்தலமும், முக்தியடைந்த ஸ்தலமும் ஆன தஞ்சாவூர் மாவட்டம் அழகாபுத்தூர் (பெரியபுராணத்தில் சேக்கிழார் குறிப்பிடும் செருவிலிபுத்தூர் என்னும் இத்தலம் அரிசிற்கரைப்புத்தூர் மருவி அழகாபுத்தூர் என தற்போது வழங்கப்பெறுகிறது)
அ/மி சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயிலில் (கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்திருக் கோவிலின் முன் மண்டபத்தில் புகழ்த்துணை நாயனார், தன் மனைவி லட்சுமியுடன் காட்சி தருகிறார். இவரது குருபூஜை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

புகழ்த்துணை நாயனார்!!

"திருச்சிற்றம்பலம்"

அடுத்த பதிவில் பூசலார் நாயனார்…!!