தொடர்கள்
கவர் ஸ்டோரி
மீண்டும் மஞ்சப் பை - வேண்டாம் பிளாஸ்டிக். - ராம்.

20220602092821280.jpeg

சென்னை திருவல்லிக்கேணி.

பள்ளி படிக்கும் வயதில் அங்கு விவேகா என்ற ஒரு உணவகம் இருந்தது.

அங்கு இட்லி சாம்பார் பொங்கல் சாப்பிட்டது இன்னமும் நாக்கின் நினைவில் இருக்கிறது. அதற்கு அந்த சுவை மட்டும் காரணமில்லை. அவர்கள் அதை கட்டிக் கொடுக்கும் அந்த இலை தான். ஒரு வகையில் சின்ன சின்ன குச்சிகளை இணைத்து ஒரு இலையில் கொடுப்பார்கள்.

சில சமயங்களில் அந்தக் குட்டி குச்சியும் சாப்பிடும் போது தொல்லை கொடுக்கும். சே இதற்கு பதிலாக வேறு ஒரு மாற்று வந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்தது உண்டு.

மாற்று வந்தது. விவேகா மட்டுமல்ல அனைத்து உணவகங்களும் மாற்றத்தை கொண்டு வந்தது.

அப்போது அந்த மாற்றம் சுலபமாக தெரிய, கடைசி கிராமம் வரை இந்தியாவில் ஏன் உலகம் முழுவதும் அந்த மாற்றத்தை சுவீகரித்துக் கொண்ட போது அதன் அபாயம் தெரியவில்லை.

இன்று விஸ்வரூபம் எடுத்து மனித குலத்தை வேரறுக்க வந்த அந்த அபாயம் ....

பிளாஸ்டிக் !

20220602100942710.jpg

ஜூலை 1 முதல் இந்திய அரசு ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்திருக்கிறது. 21 ஒரு முறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை அமலுக்கு வருகிறது.

பிரசவ வைராக்கியம் என்று சொல்வார்கள். ஐயையோ இந்த வலி தாங்க முடியவில்லை இது தான் கடைசி பிரசவம் என்று சொல்பவர் அடுத்த வருடம் மீண்டும் குழந்தை பெற வருவது போல், அல்லது குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்பது போல் இந்த முறை இந்த தடை ஜஸ்ட் லைக் தட் வந்து விட்டு போய் விடக் கூடாது.

நமது விகடகவில் தொடர்ந்து நூறு சிறுகதைகள் எழுதி வரும் வெ.சுப்பிரமணியன் ஒரு ஓய்வு பெற்ற பேராசிரியர். ஜியாலஜி பேராசிரியர். நிலவியியல் பேராசிரியர். அவரிடம் இந்த பிளாஸ்டிக் பற்றி ஒரு அபாய அறிமுகம் கொடுங்களேன் என்ற போது கவலையுடன் எழுதி அனுப்பினார்.

20220602100725632.jpeg

ஆயிரத்தி எண்ணூற்று அறுபத்திரண்டாம் ஆண்டு, லண்டன் மாநகரத்தைசேர்ந்த ‘அலெக்ஸாண்டர் பார்க்ஸ்’ என்பவரால், கரிமப் பொருட்களைக்கொண்டு, பலபடிமாக்கம் முறையில், உருவாக்கம் பெற்ற ஒரு ‘மீட்சித்தன்மை’ கொண்ட வேதியியல் கூட்டுப்பொருளே இந்த ‘நெகிழி’ எனப்படும் ‘பிளாஸ்டிக்’.

இன்றைக்கு மனித வாழ்வில் இன்றியமையாத, தவிர்க்க முடியாதஅங்கமாகிவிட்ட இந்த ‘நெகிழி’ மனிதகுல அழிவுக்கு பெருமளவுக்குவித்திட்டுவிட்டது.

உலகம் முழுவதும் தற்போது சராசரியாக ஆண்டொன்றுக்கு எண்பத்தாறுகோடி மெட்ரிக் டன் அளவிற்கு உற்பத்தியாகி பயன்பாட்டில் விடப்படும் இந்தநெகிழி, வீட்டு உபயோகம், மருத்துவம், வணிகம், விவசாயம், தொழிற்சாலைகள்என்று அனைத்து இடங்களையும் ஆக்கிரமித்துள்ளதை மறுக்கமுடியாது.

ஆனால்… பயன் பாட்டுக்குப் பிறகு திட மற்றும் திரவக் கழிவுகளாகவெளியேற்றப்படும் இந்த நெகிழிகளின் எச்சங்கள், மக்கிப்போய் உருமாற்றம்பெற்று அழியாமல், சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது என்பதே நிதர்சனம்.

உலகம் முழுவதும் உள்ள சமுத்திரப் பகுதிகளில் வெளியேற்றப்படும் இந்த‘நெகிழி எச்சங்கள்’ ஏறத்தாழ ‘பத்து லட்சம் டன்கள்’ என்ற அளவைவிடவும்அதிகமாக உள்ளது. இதே நிலை நீடித்தால், அடுத்த இருபது வருடங்களுக்குள், கடலில் வாழும் மீன்களின் எடையை விடவும், இந்த நெகிழிக் கழிவுகளின் எடைஅதிகமாகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றார்கள்.

நகர்ப்புரங்களிலுள்ள குடிநீர் குழாய்களில் வரும் குடிநீரை சோதனைசெய்து பார்த்ததில் 0.002 மில்லிமீட்டர் அளவுக்கு விட்டம் கொண்ட ‘நெகிழித்திவலைகள்’ கலந்திருப்பதை சில இடங்களில் கண்டறிந்திருப்பதுஅதிர்ச்சியளிக்கிறது.

சூரிய வெப்பத்தாலும், காற்று மற்றும் மழையாலும் பூமியின் மேல்பரப்பிலுள்ள பாறைகள் சிதிலமடைந்து, நமக்கு காலப்போக்கில் ‘மண்’ கிடைக்கிறது என்ற உண்மை நம்மில் அநேகருக்கு தெரியும்.

மனிதகுலம் தழைத்தோங்க ஆதாரமான தாவர-ஜங்கம வளர்ச்சிக்கு,இயற்கையின் வரப்பிராசாதமான இந்த ‘மண்’ இன்றியமையாதது. இந்தமண்தான் மழைநீரை சேர்த்து வைத்து, தாவங்கள் வேரூன்றி வள்ரவதற்குஏதுவாகிறது. ஆனால்… பயன்பாட்டுக்குப்பிறகு நம்மால் வீசியெறியப்படும் இந்தநெகிழிக்கழிவுகள், மண்ணில் உட்புகுந்து, வேர்கள் மூலமாக செடிக்குள் நீர்சவ்வூடுபரவுதலை தடை செய்கிறது. இதனால் தாவர வளர்ச்சியேநின்றுபோகிறது. குறிப்பாக ‘மலைப்பிரதேசங்களிலும், நதிநீர்வழித்தடங்களிலும்’ இந்த பேராபத்து அதிகம் நடக்கிறது..

பொதுவாக மண்ணிலும் நீரிலும் கலக்கும் இந்த நெகிழிக் கழிவுகள்உருத்தெரியாமல் மக்கிப்போவதற்கு, ஏறத்தாழ 600 வருடங்கள்எடுத்துக்கொள்வதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்லுகின்றன.

பிளாஸ்டிக் இனி வரும் தலைமுறைக்கு சாபம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

என்னெவல்லாம் ஒரு முறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் ??

20220602094126577.jpg

இன்று முதல் மேற்கண்ட பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுகின்றன. உற்பத்தியும் உபயோகமும்.

இதை இந்திய அரசு எப்படி கையாளப் போகிறது என்று தெரியவில்லை.

பிராண்ட் ஆடிட் சென்று சொல்லப்படும் ஒரு ஆய்வில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை யூனி லீவர் தான் பிளாஸ்டிக் சுற்றுபுறசூழல் கொடுமையில் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்த படியாக இருப்பது என்ன என்றால் நமக்கு குற்ற உணர்வு தான் மிஞ்சம்.

நம்ம ஆவினே தான்.

இதை எப்படி தடுப்பது ?? ஒரு சின்ன விஷயம். இந்த பால்பாக்கெட் வாங்கியவுடன் பாத்திரத்தில் கொட்டுமுன் ஒரு சின்ன முனையை வெட்டி எறிகிறோமே அது ஏதோ ஒரு ஜீவராசியின் உயிரை நம்மையறியாமலே எடுத்து விடுகிறது. கொஞ்சம் கூட தயக்கமோ அல்லது ஒரு சுயஒழுக்கமோ இல்லாமல் நாம் செய்யும் அன்றாடக் கொலை அந்த சின்ன பிளாஸ்டிக் முனையை வெட்டி குப்பையில் வீசுவது.

20220602094506489.jpeg

ஆவின் நிறுவனம் இந்த பிளாஸ்டிக்கையெல்லாம் சேகரித்துக் கொண்டு போய் மறு சுழற்சி செய்ய ரெடி இருந்தாலும் இதையெல்லாம் மீறி குப்பையில் வந்து சேரும் ஆவின் கவர் நமக்கு நாமே வெட்டிக் கொள்ளும் குழி தான்.

மஹாராஷ்ட்ராவுக்கு அடுத்த படியாக தமிழ்நாடு தான் ஒரு நாளைக்கு நான்கு லட்சம் டன் பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டுகிறதாம்.

சென்னையில் மட்டும் ஒரு நாளை 429 டன் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அது கொடுங்கையூரிலும் பெருங்குடியிலுமுள்ள நீராதாரத்தின் மேல் இருக்கும் குப்பைக் கூடத்தில் கொட்டப்படுகிறது. அநியாயம். அக்கிரமம்.

சரி கடலில் கொண்டு போடலாம் என்றால் அது யார் அப்பன் வீட்டு இடம். அங்குள்ள உயிர்வாழ் ஜீவன்களுக்கு யார் பதில் சொல்வது. ஒரு சுறாமீனை எடுத்துப் பார்த்தால் அதன் வயிற்றில் பாதிக்கு பாதி பிளாஸ்டிக் குப்பைகள் தான் இருக்கும்.

20220602100910787.jpg

மனித குலம் கடலோரமாக கைகோர்த்துக் கொண்டு வெட்கி தலைதலை குனிந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.

எங்கு செல்லும் பூமி ???

இவையெல்லாம் நம்மையறியாமல் நம் மகிழ்ச்சியை நெகிழியாக மாற்றும் கணங்கள்.

பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட காதுகுடையும் இயர் பட்ஸ்

பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள்

பிளாஸ்டி கொடிகள்

மிட்டாய் குச்சிகள்

ஐஸ்கிரீம் குச்சிகள்

அலங்காரத்துக்கு பயன்படுத்தும் தெர்மாகோல்

பிளேட்கள்

கப்கள்

கட்லரி பொருட்களான ஸ்பூன், கத்தி, ஸ்ட்ரா, ட்ரே

ஸ்வீட் பாக்ஸ்களை சுற்றியிருக்கும் ரிப்பன்கள்

வாழ்த்து அட்டை

சிகரெட் பாக்கெட்கள்

பிளாஸ்டிக் அல்லது பிவிசி பேனர்கள் (100 மைக்ரான்களுக் கு குறைவு)

இவையெல்லாமே ஒருமுறை உபயோகப்படும் குப்பைகள் தான்.

இவையெல்லாமே தவிர்க்கப்பட வேண்டும்.

ஒரே வழி மஞ்சப் பை தான்.

வளர்ந்த நாடுகளில் இது முறைப்படுத்தப்படுகிறது. ஹாங்காங்கில் பிளாஸ்டிக் பை கேட்டால் உபரிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அது பத்தாது.

அரசாங்கம் சட்டங்களை இயற்றலாம். ஆனால் அதை கடைபிடிக்க வேண்டியது மக்கள் தான்.

பிளாஸ்டிக் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு முறையும் நாம் தான் யோசிக்க வேண்டும். அரசாங்கம் போடும் சட்டம் அவர்களுக்கானது அல்ல. நமக்கானது.

எருமை மாட்டில் மழைபொழிவது போல ஒவ்வொரு முறையும் விழிப்புணர்வே இல்லாமல் பிளாஸ்டிக் பொருட்களாக உபயோகித்து தூக்கி எறியும் போது நம் குழந்தைகளுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் குடிக்க நீர் கூட இல்லாமல் செய்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி ஒவ்வொருவருக்கும் வர வேண்டும்.

இப்படி கட்டுரை எழுதிக் கிழிக்கும் ஒவ்வொரு பத்திரிகையாளனுக்கும் அந்த உணர்வு வர வேண்டும்

அடுத்த முறை சங்கீதாவிற்கோ அல்லது அஞ்சப்பருக்கோ செல்லும் போது சாம்பாருக்கும் குருமாவிற்கும் பாத்திரம் எடுத்துச் செல்லுங்கள். பிளாஸ்டிக் பையில் சாம்பார் வாங்கி வராதீர்கள்.

இந்த கட்டுரையை தப்பித் தவறி படித்து விடும் ஒவ்வொருவரும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பதை முற்றிலுமாக நிறுத்தா விட்டாலும் குறைப்போம் என்றாவது சூளுரைக்க வேண்டும்.

வேண்டாம் பிளாஸ்டிக். !!

பிளாஸ்டிக் பற்றிய ஒரு சயன்ஸ் ஃபிக்‌ஷன் குறும்படம்......விகடகவி டீம்.... இங்கே.....