தொடர்கள்
Other
அப்சிங்கே – பாரதத்தின் ஒரே மிலிடரி கிராமம்-பால்கி

முதல் உலகப் போர் முதற்கொண்டே இந்திய ராணுவத்தில் தன் மண்ணின் மைந்தர்களை தந்து பங்கு கொண்ட பாரம்பரியம் கொண்ட புகழ்பெற்ற ஒரு சிறிய குக் கிராமம் ஒன்று மகாராஷ்டிராவின் தென்மேற்கு கோடியில், சதாரா நகரத்திலிருந்து சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமம், ஆயுதப் படைகளுக்கு அளித்த பங்களிப்பிற்காக அப்ஷிங்கே மிலிட்டரி கிராமம் என்றும் அழைக்கப்படுகிறது. பல தலைமுறைகளாக இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உள்ளனர்.

பெயர் அப்ஷிங்கே.செல்லமாக, கௌரவமாக, பீறு நடையுடன் வீர ராணுவ வீரர்களின் கிராமம் அப்ஷிங்கே என்றே அழைக்கப்படுகிறது. கிராம மக்களும் இதைப் பெருமையாகவும் சற்றே ஒருபடி மேலே சென்று ஆணவமும் கொள்கின்றனர். நியாயம் தானே..!

17.5 வயது முதல் 23 வயது வரை உள்ள இந்திய இளைஞர்களை நாட்டுப்பணியில் சீறுடன் அமர்த்தும் அக்னிபத் திட்டத்தை இந்திய ராணுவம் அறிவித்தவுடன், அதை செயல்படுத்துவதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகளும் பொது மக்கள் இயல்பான வாழ்வு சின்ன பின்னமானதும் நினைவிருக்கலாம். ஆனால் இந்த அரசாங்கத்தின் புதிய ராணுவத்தில் ஆள் சேர்க்கை திட்டம் ஒரு நல்ல விஷயம் என்று ஏகமனதாக ஏற்றுக்கொண்டு அதன் படி செயலிலும் ஈடுபட்டது இந்த வீர ராணுவ கிராமம்.

மக்கள்தொகை 3,000 என்ற அளவில் உள்ள அப்சிங்கேவில், 350 குடும்பங்கள் தற்போது ஆயுதப்படைகளில் குறைந்தபட்சம் ஒரு உறுப்பினரையாவது கொண்டுள்ளனர். முதல் உலகப் போரின்போது உயிர் தியாகம் செய்த இங்கிருந்து வந்த 46 ராணுவ வீரர்களின் நினைவாக ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட விஜய் ஸ்தம்ப் இந்த கிராமத்தின் நடுவில் உள்ள தூபியே இதற்கு கட்டியங்கூறும். இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் இந்த இடத்தை குறிக்கின்றன. கூடவே ஒரு டாங்க்கும் ஒரு காட்சி பொருளாக அங்கு உள்ளது.

20220708231007571.jpg

20220708231035118.jpg

20220708231102305.jpg

20220708231150277.jpg

20220708231221754.jpg

துணை சர்பஞ்ச் (நாட்டாமை) ராஜஸ்ரீ கராண்டே, “அக்னிபத் மிக முக்கியமான திட்டம். கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவிட் காரணமாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவாகவே இருந்தது. இந்த திட்டம் அவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாகும். கராண்டேவின் மூதாதையர் ராம்சந்திரராவ் வித்தோபா கராண்டே முதலாம் உலகப் போரில் பங்கு வகித்தார். அதைத் தொடர்ந்து, கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள் 1962ல் சீனாவுடனான போர், பாகிஸ்தானுடனான 1965, 1971 மற்றும் கார்கில் போர்களின் போது பங்கு கொண்டனர்” என்று அவர் கூறுகிறார்.

கிராமத்தில் இருந்த மாஜி ராணுவ வீரர்கள் இந்த கிராமத்தில் இருந்த இளைஞர்களை அழைத்து, அக்னிபாத் திட்டம் என்ன என்பதையும் அதன் நன்மைகளை அடிக்கோடிட்டுக் காட்டியும், அதனால் கலவரங்கள் அவசியமில்லை என்றஆலோசனையையும், வழிகாட்டுதல்களையும் வழங்கியிருக்கின்றனர். கராண்டே கூறுகையில், ராணுவத்தில் பணியாற்றிய கராண்டே குடும்பத்தின் புகழ்பெற்ற உறுப்பினர்களின் ராணுவத்தில் அவர்களின் பெயர்களை பட்டியலிடுகிறார். 1 ஜெனரல், 2 கேப்டன்கள், ஒரு ஹவால்தார், ஒரு பிரிகேடியர் 2 கர்னல்கள் மற்றும் சமீபத்திய அவரது மகன் உத்கர்ஷ் விக்ரம் கராண்டே (23) நவம்பர் மாதம் லெப்டினன்டாக சேர்ந்துள்ளார்.

மற்றொரு ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சுபேதார் உதாஜி நிகம், “அக்னி பாத் வீரர்கள் 4 ஆண்டுகளுக்குப் பிறகு என்ன செய்வார்கள்?”, என்ற கேள்விகள் எழுகின்றன, அவர்கள் மத்திய ஆயுதப் படைகள் மற்றும் பிற மத்திய அரசுப் பணிகளில் பணியாற்றலாம். காவல் துறைகள். நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைப்பதில் இந்தத் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும்,” என்கிறார். உதாஜி நிகம் அவரது குடும்பத்தில் நான்காம் தலைமுறை ராணுவ வீரர். அவரது இரண்டு சகோதரர்களும் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்கள். "எங்கள் கிராமம் தம் மகன்களை தேச சேவைக்கு வழங்குவதற்கு பெயர் பெற்றது, அது எங்கள் இரத்தத்தில் ஊறி உள்ள ஒரு கொள்கையாகும். இளைஞர்கள் (அக்னிபத்) திட்டத்தைப் பற்றி நேர்மறையாக உள்ளனர், மேலும் அவர்கள், தாம் அக்னிவீரர்களாக மாறியபின்பு பாரம்பரியமாக பெற்ற வளர்ப்பு மற்றும் பாரம்பரியம் போன்ற குணங்களால் சிறந்து விளங்க முடியும் என்பதை அவர்கள் அறிவார்கள். அதனால் தங்களால் நிச்சயம் ராணுவத்தில் ஆயுதப் படையில் நிரந்தர வேலைக்கான 25 சதவீதக் குறியீட்டிலேயே அமைக்கப்பெறுவார்கள் என்ற ஆர்வமுடன் இருக்கிறார்கள்" என்றார் மேலும்.

இந்திய ஆயுதப் படைகளுக்கு ஆட்களை அனுப்பியதற்காக அப்ஷிங்கேவின் நற்பெயரை போற்றி பேணி பாதுகாக்கும் வகையில் 2021 ஆம் ஆண்டில், நாட்டிற்கு சேவை செய்த அப்ஷிங்கேவின் பல வீரர்களின் வாழ்க்கையை நினைவுகூரும் வகையில் அந்த கிராமத்தில் ஒரு அருங்காட்சியகம் கட்ட மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களில் பெரும்பாலானோர் தற்போது விவசாயப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ராணுவத்தில் சேர விரும்பும் நிகாமின் மகன் யாஷ் (19), கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, ஆட்சேர்ப்பு செயல்முறை பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இதனால் பல ஆர்வலர்கள் இப்போது வயது வரம்பை மீறியதால் இந்த சந்தர்பத்தை இழப்பதாகவும் கூறினார். "இராணுவ ஆட்சேர்ப்பை பாதித்த தொற்றுநோய் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் காத்திருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், இந்தத் திட்டம் திடீரென அறிவிக்கப்பட்டதாகவும், தொற்றுநோய் காரணமாக ஆட்சேர்ப்பு செயல்முறை முன்னதாகவே பாதிக்கப்பட்டிருந்ததாலும், வயது வரம்பு குறித்து ஆர்வலர்கள் கவலைப்பட்டதால் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும்,” என்றும் "தற்போதைய சூழ்நிலையைத் தவிர்க்க (திட்டத்தின் மீதான எதிர்ப்பு), முதலில் திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அரசாங்கம் மெதுவாகச் சென்றிருக்க வேண்டும்," என்றும் அவர் கூறினார்.

அப்ஷிங்கே மிலிட்டரி கிராமத்தில் இராணுவ ஆர்வலர்களுக்காக ஒரு அகாடமியை நடத்தி வரும் விக்ரம் காட்ஜ், தனது மாணவர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தைப் பற்றி பாசிடிவாகவே இருக்கின்றனர்”, என்று கூறினார்.

"நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அக்னிவீரர்களின் எதிர்காலம் குறித்து வாதங்கள் இருந்தாலும், நாங்கள் எங்கள் அகாடமியில், நான்கு ஆண்டுகள் அக்னிவீரராகப் பணியாற்றிய பிறகு ராணுவத்தில் நிரந்தரமாகச் சேர்க்கப்படும் 25 சதவீத இடங்களுக்குச் செல்வதை நோக்கமாகக் கொண்டே மாணவர்களைத் தயார்படுத்துகிறோம் " என்றே தொடர்ந்தார்.

முப்படைகளிலும் ராணுவ வீரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பல தசாப்தங்களாக நடந்து வந்த பழமையான தேர்வு செயல்முறை நீக்கப்பட்டு இந்த அக்னிபாத் திட்டத்தின் மூலம் உள்ளே வரும் அக்னிவீரர்களினால் நமது படைகள் இளமை மிக்கதாக மாறும் என்ற இந்திய அரசு கணிக்கிறது.

மும்பையின் சண்முகானந்தா சபா, தேசப் பாதுகாப்பில் நமது எல்லைப் பாதுகாவலர்களில் சிலரின் பங்களிப்பை மக்கள் போற்றி பங்கேற்பதை ஊக்குவிக்கும் ஸ்ரீசண்முகா ஷௌர்ய ரத்னா எனும் விருதை நிறுவி, கடந்த நான்கு வருடங்களாக அளித்தும் வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக, தனிநபர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த வருடம் நாட்டின் ஒரே இராணுவ கிராமமான அப்ஷிங்கேவிற்கே வரும் ஆகஸ்ட் 15, 2022 அன்று, சபா, நமது பாரதத்தின் 75ஆவது சுதந்திர தினத்தில் இந்த விருதை வழங்க முடிவு செய்துள்ளது. சமீபத்தில் அந்த கிராமத்திற்கு நேரில் சென்று கிராமத்தினரைக் கண்டு வந்திருக்கிறது சபாவின் நிர்வாக குழுவின் சில அங்கத்தினர்கள் கொண்ட குழு.

அந்த கிராமத்தில் வசிக்கும் 350 குடும்பங்களில் குறைந்தபட்சம் குடும்பத்துக்கு ஒருவராவது ராணுவத்தில் பணியாற்றுகின்றனர். கிராமத்தின் குழந்தைகள் சிறுவயதிலிருந்தே ஆயுதப் படைகளில் பணிபுரிய ஊக்குவிக்கப்பட்டு அதற்கேற்ப பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். கிராமத்தின் இந்த தனித்துவமான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அப்சிங்கே கிராமத்திற்கு 2022 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஷண்முகா ஷௌர்ய ரத்னா விருதான ₹. 5 லட்சம் மற்றும் ஒரு பாராட்டு சான்றிதழ் வழங்குவதில் சபை மகிழ்ச்சியடைகிறது என்றும் அதே விழாவில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 75 ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கவுரவிக்கப்படுவார்கள் என்றும் சபாவின் அழைப்பிதழ் குறிப்பிடுகிறது.

நடக்கவிருக்கும் 75ஆவது பாரதத்தின் சுதந்திர தின விழாவிற்கு மதிப்பு சேர்க்கும் வகையில் மும்பை ஷண்முகானந்தா சபாவின் இந்த செயல் அமைந்துள்ளது. சபாவின் கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக அறியப்பட்டுவரும் பன்முக கலை சேவைகளில் இதுவும் ஒன்று. விகடகவி சபாவை மனதார பாராட்டுகிறது.

அப்ஷிங்கே மிலிடரி கிராமம் பாரதத்தின் ஒரு முன்மாதிரி கிராமம் என்பதில் சந்தேகமேயில்லை.

20220713064802132.jpeg