தொடர்கள்
தொடர்கள்
கண்ணதாசன் பாடல்களில் வாழ்வியல் கூறுகள் - 12 - காவிரி மைந்தன்

2022906211040755.jpg

2022906211111256.jpg

இதயவீணை தூங்கும்போது பாட முடியுமா?


இருவர் உள்ளம் திரைப்படத்திற்காக கவிஞர் கண்ணதாசன் வரைந்த பாடல்! திரையிசைத்திலகம்கே.வி. மகாதேவன் தந்த இசையமைப்பில் முகிழ்த்ததும் பி.சுசீலாவின் குரலில் பிறந்துவந்ததும் மறக்கமுடியுமா? இதய வீணைதூங்கும்போது பாடமுடியுமா?
இணைந்து வாழ வேண்டிய இதயங்கள் இடையே இடைவெளி! இதை எப்படி இதைவிட எளிமையாக இனிமையாகக் கூறிவிடமுடியும்? அன்பின் சுவாசம் தவழ வேண்டிய இல்லற வாழ்வில் அகண்ட பிரிவு.. மனரீதியாக அமைந்துவிடும்போது.. முதல்வரிக்கு ஏற்றாற்போல் இரண்டாம் வரி.. இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா? இப்படிச் சொல்லத்தான் எங்கள் கண்ணதாசன் வேண்டுமென்கிறோம்!
திரு. அப்சல் என்கிற எனது நண்பர் இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு இப்படியெல்லாம் பாடல்கள் இருக்கின்றனவா – இதுபோல் பாடல்கள் இருந்தால் எனக்குத் தாருங்கள் என்றார்! பாடல் என்றால் ஏதோ படத்திற்காக எழுதப்படுவது என்று நினைத்துக் கொண்டிருந்த அவரின் எண்ணத்தை இந்த ஒற்றைப் பாடல் திருப்பிப்போட்டது! சொற்களை வைத்து வாழ்க்கை சூத்திரத்தை வரைந்துகாட்டிய கவிஞரின் கைவண்ணத்தை வியந்து பாராட்டாத உள்ளங்கள் ஏது?
நடிகர்திலகம் சிவாஜி் கணேசன் அபிநயசரஸ்வதி சரோஜாதேவி இருவரின் இணையற்ற நடிப்பில் இருவர் உள்ளம்.. ஒருமித்து வாழவேண்டிய உள்ளங்கள் ஒட்டாமல் வாழும்போது.. இதயவீணை பாட முடியுமா?..
இதய வீணை தூங்கும் போது...
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா
விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா
வீட்டு குயிலை கூண்டில் வைத்தால் பாட்டு பாடுமா பாட்டு பாடுமா

(இதய வீணை தூங்கும் போது...)

மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே
சில மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே அடிமை செய்தானே

உருகிவிட்ட மெழுகினிலே ஒளி ஏது
உடைந்து விட்ட சிலையினிலே அழகேது
பழுது பட்ட கோவிலிலே தெய்வம் ஏது
பனி படர்ந்த பாதையிலே பயணம் ஏது
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா