இந்த வாரத்தில் ஹாங்காங்கில் சீக்கியர்களின் கோவில் ஒன்றை பிரம்மாண்ட முறையில் ஹாங்காங்கின் தலைவர் ஜான் லீ திறந்து வைத்தார்.
இது புணரமைக்கப்பட்டது என்றாலும் மொத்தத்தில் இடித்து புதிதாக கட்டப்பட்ட கட்டிடம்.
ஹாங்காங்கின் முதல் இந்துக் கோவில் என்ற வகையில் சீக்கியர்களின் கோவில் தான் இருந்தது. 1901ல் கட்டப்பட்டு மீண்டும் இரண்டாம் உலகப் போரின் போது இடிக்கப்பட்டு மீண்டும் 50களில் கட்டப்பட்ட கட்டிடம் ஏழு வருடங்களுக்கு முன் விரிசல் விட, மொத்தத்தில் இடித்து புதிதாக கட்டியிருக்கிறார்கள்.
இந்த வாரத்தில் விகடகவிக்காக பிரத்யேக விசிட் அடித்தோம். பல ஆச்சரியங்கள் காத்திருந்தது.
239 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த நான்கு தள கட்டிடம் முழுக்க முழுக்க அரசாங்கத்தில் இருந்து ஒரு பைசா கூட பெறாமல் மக்களின் நன்கொடையிலேயே கட்டப்பட்டிருக்கிறது. கட்டிடத்திற்கான உழைப்பைக் கூட பலர் இலவசமாக செய்திருக்கின்றனர்.
வாரந்தோறும் 5000 பேருக்கு இலவச அன்ன தானம் காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை இடைவிடாமல் நடக்கிறது. இது எல்லோருக்கும், எந்தவித வித்தியாசமும் பாராட்டாமல் இலவசமாக வழங்கப்படுகின்றது! இவற்றைப் பெறுவதற்கு ஒருவர் மதநம்பிக்கையாளராக இருக்க வேண்டும் என்ற தேவையில்லை!
அது போக 15 நாட்களுக்கு தேவைப்படும் இலவச தங்குமிடமும் கொடுக்கிறார்கள். இலவச தங்கும் வசதி தேவைப்படும் அனைவருக்கும் எந்தவிதப் பாகுபாடுமின்றி வழங்கப்படுவது! யாத்திரீர்களுக்கு மட்டுமன்று!
சீக்கியர்கள் மட்டுமல்லாத அனைத்து மதத்தினரும் இங்கு வழிபடலாம்.
(கல்சா திவான் பொருளாளர் பத்ரா ஜி.சிங்)
கல்சா திவான் என்று சொல்லப்படும் இந்த குருத்வாராவின் சார்பில் பொருளாளர் பத்ரா ஜி. சிங் பேசினார். குருத்வாராவை சுற்றிக் காண்பித்தார்.
அது மட்டுமல்ல சீக்கிய மதம் பற்றிய பல சந்தேகங்களையும் விளக்கினார்.
இந்த இணைப்பில் இருக்கும் வீடியோவில் கேள்வி பதில்கள் ஆங்கிலத்தில் இருக்கிறது. சுருக்கமாக இங்கே.
(பிரம்மாண்ட பிரார்த்தனைக் கூடம்)
கேள்வி: சீக்கிய மதம் என்பது இந்து மதத்தின் கிளை என்று கொள்ளலாமா ??
பத்ரா ஜி.சிங்: அப்படி சொல்ல முடியாது. இந்து மதத்திலிருந்து பிரிந்து வந்தது என்று சொல்லலாம். ஆனாலும் இந்து மதத்தின் அடிவாரம் இருக்கும். அதிலிருந்து விலகி உருவ வழிபாடு மற்றும் சடங்குகள் இல்லாதது தான் சீக்கிய மதம்
கேள்வி : சீக்கிய மதம் என்பது ??
பத்ரா ஜி.சிங்: சீக் என்றாலே கற்றுக் கொள்வது என்று பொருள் படும். ஒவ்வொரு சீக்கியரும் மாணவரே.
கேள்வி : சீக்கிய மதம் பிராமணீயத்தை எதிர்த்து தான் தோன்றியது என்று சொல்வது… ??
பத்ரா ஜி.சிங்: உண்மை. எங்கள் குரு குருநானக் சிறுவனாக இருந்த போது அவருக்கு பூணூல் அணிவிக்கும் சடங்கு வந்த போது நான் இறைவனை வேண்டுவதற்கு இதெல்லாம் எதற்கு என்று துவங்கியது தான் சீக்கிய மதத்தின் ஆணி வேர் என்று சொல்லலாம்.
அவர் தான் எங்கள் முதல் குரு.அவருக்கு பின் பத்து குருமார்கள் எங்களுக்கு வந்தார்கள். கடைசி குரு குரு கோபிந்த் சிங் அவர்கள். அவருக்குப் பின் எங்கள் குரு குரு கிரந்த சாஹேப் என்பது எங்களது புனித நூல் தான். மனித குருக்கள் கிடையாது.
கேள்வி : குரு கிரந்த சாஹேப்பில் எந்த வித கடவுளையும் குறிப்பிட வில்லையா ??
பத்ரா ஜி.சிங்: இல்லை. ஒரே கடவுள். அவருக்கு உருவம் இல்லை. அவருக்கு பெயர் இல்லை. நாங்கள் வாஹே குரு என்று சொல்கிறோம். அதற்கு ஹேய் குரு கடவுளே இந்த உலகை அற்புதமாக படைத்தாய் நீ தான் எங்கள் கடவுள் என்று பொருள்.
(லங்கர் என்று சொல்லப்படும் உணவு வழங்கும் தளம்.)
கேள்வி : தியாகம் என்பது சீக்கிய மதத்திற்கு எவ்வளவு முக்கியம். ??
பத்ரா ஜி.சிங்: உங்களுக்கு உணவில்லாவிட்டாலும் பசித்தவருக்கு உணவிடும் தியாகம் தான் சீக்கிய மதத்தின் அடித்தளம். அது மட்டுமல்ல ஒளரங்கசீப் கட்டாய மத மாற்றத்திற்கு எங்கள் குரு தெஹ்பகதூரை கட்டாயப்படுத்திய போது உயிர் வேண்டுமா மதம் மாறுகிறாயா என்ற போது உயிரையே மதத்திற்காக தியாகம் செய்தவர். அது மட்டுமல்ல தன்னுடைய நான்கு மகன்களையும் தியாகம் செய்தார். தியாகத்தின் அடித்தளத்தில் கட்டப்பட்டது தான் சீக்கிய மதம்.
கேள்வி : சீக்கிய மதத்தில் பெண்களுக்கு என்ன இடம் இருக்கிறது ??
பத்ரா ஜி.சிங்: சீக்கிய மதத்தில் ஆண்கள் பெண்கள் அனைவரும் சமம். இங்கு ஆண்களுக்கு என்னென்ன செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அது அனைத்தும் பெண்களுக்கும் வழிபாட்டில் உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது.
கேள்வி : சீக்கிய மதத்தில் புகைப்பதும் மது அருந்துவதும் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது பஞ்சாபில். (வீடியோவில் இந்த கேள்வி. பதிவாகவில்லை.)
பத்ரா ஜி.சிங்: வருத்தமான விஷயம் தான். எங்கள் மதத்தில் புகையிலைக்கும் மதுவுக்கும் அனுமதியில்லை. ஆனால் எங்கள் மாநிலத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள், வழி தவறிப் போன இளைஞர்கள், மத நம்பிக்கையோ அல்லது இறை பக்தியோ இல்லாத இளைஞர்கள் இப்படி செய்கிறார்கள். இது வருத்தத்திற்குரிய செய்தி தான். இறைவன் அருளால் அவர்கள் இதிலிருந்து மீண்டு வர வேண்டும்.
கேள்வி : உங்கள் புனித நூல் அல்லது உங்கள் குரு குரு கிரந்த சாஹேப் என்ன தத்துவங்களை சொல்கிறது. ?
பத்ரா ஜி.சிங்: மனிதர்களுக்கு சேவை செய்வது இறைவனுக்கு செய்வது போல. அடக்கமாக இரு. அனைத்தும் ஒரு நாள் அடங்கித்தான் போக வேண்டும். அனைவரும் சமம். இங்கு யாரும் பெரியவன் சிறியவன் கிடையாது.
கொஞ்சம் விரிவான பேட்டி ஆங்கிலத்தில் இங்கே. அப்படியே கோவிலையும் சுற்றிப் பார்த்து விடலாம்.
பேட்டி ஒரு அருமையான லங்கர் பிரசாதத்துடன் முடிந்தது.
பிரம்மாண்டமான ஒரு சீக்கிய கோவிலைப் பார்த்தது மட்டுமல்ல, சீக்கிய மதம் குறித்த பல சந்தேகங்களும் தெளிந்தது.
வாஹே குரு. வாஹே குரு. வாஹே குரு.
பேட்டி : ராம், குருநாதன், தேவி.
ஒளிப்பதிவு : சதீஷ்
படங்கள் : ஜத்தின்.
Leave a comment
Upload