தொடர்கள்
தொடர்கள்
வாங்காதே படிக்காதே - எழுத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசர்

20230026070231790.jpeg

கோவை. தெற்கு உக்கடம். கரும்புக்கடை. அதிகாலை மணி 5.30.
தினரோஜாவின் உக்கடம் ஏஜென்ட் கட்டுகளை பிரித்துக் கொண்டிருந்தார். கட்டுகளை பிரிப்பதை பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் பீட்டர்.
“பீட்டர்! உனக்கு தினரோஜா எத்தனை காப்பிகள் வேண்டும்?”
“இன்னைக்கி ஞாயிற்றுக்கிழமை வாரரோஜா இணைப்பா தர்றதால இருநூறு
காப்பி விக்கும். இருநூறு கொடுங்க!”
இருநூறு காப்பிகளை வாங்கி மிகப்பெரிய துணிப்பையில் வைத்தான் பீட்டர்.
ஒரு கார் பீட்டரை உரசிக்கொண்டு வந்து நின்றது. அதிலிருந்து நால்வர் இறங்கினர்
“நீதான் தினரோஜா பீட்டரா?”
“ஆமாம்!”
“தினரோஜாவை இன்னைக்கி எத்னி வீட்ல போடுவ?”
“இருநூறு!”
“இதில எத்னி முஸ்லிம் வீடுகள்?”
“பத்து!”
“அந்த பத்து முஸ்லிம் வீடுகளின் முகவரி சொல்லு….”
வந்தவர்களின் மூர்க்கத்தனத்தை கண்டு பயந்து பத்து முஸ்லிம் வீடுகளின்
முகவரிகளை கூறினான் பீட்டர். வந்தவர்கள் மீண்டும் காரில் ஏறி பறந்தனர்.
ஆறாவது வீடாக முஸ்தபா நகருக்குள் அந்த கார் புகுந்தது. அந்த வீட்டின்
வெளிவாசலில் பொருத்தப்பட்டிருந்த அழைப்புமணியை அமுக்கினார். 62வயது
முதியவர் வெளிப்பட்டார். அழகிய முகமன்கள் பரிமாற்றம்.
“உங்க பெயர் பாய்?”
“அமீனுதீன்..”
“என்ன பண்றீங்க?”
“ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்து ஓய்வு பெற்று
விட்டேன். நான் எழுத்தாளரும் கூட!”
“எந்த பத்திரிகையில் எழுதுகிறீர்கள்?”
“எல்லா பத்திரிகைகளிலும் எழுதுகிறேன்!”

“நீங்க இந்தவீட்டுக்கு வந்து எத்னி வருஷமாகுது?”
“நாலு வருஷமாகுது!”
“இதுக்கு முன்னாடி எங்க இருந்தீங்க?”
“கம்பம்!”
“நீங்க தினமும் தினரோஜா தினசரிதான் வாங்றீங்க போல…”
“ஆமா.. முப்பத்தியேழு வருஷமா அந்த பத்திரிகைல கதைகள் எல்லாம்
எழுதிட்டு இருக்கேன்..”
“அந்த பத்திரிகை இஸ்லாமுக்கு எதிரான கிஜேபிக்கு சார்பானது என்பது
உங்களுக்குத் தெரியாதா? அந்த பத்திரிகைல நீங்க எழுதுறதும் தப்பு அந்த
பத்திரிகையை வாங்கி தினம் படிக்றதும் தப்பு. நாம அனைவரும் அந்த பத்திரிகையை
பகிஷ்கரிக்கனும்!”
“வேறெந்த தினசரியை வாங்கி படிக்கனும்னு சொல்றீங்க?”
வந்தவர்கள் சில பத்திரிகைகளின் பெயர்கள் கூறினர்.
“அந்த பத்திரிகைகளில் முஸ்லிமுக்கு எதிரான கருத்துகள் வருவதில்லையா?
மத்தியிலும் மாநிலத்திலும் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சிக்கு
சார்பாக 90சதவீத மீடியாக்கள் செயல்படுவது யதார்த்தம். நம் இஸ்லாமிய
இதழ்களில் இந்துகளுக்கு எதிரான கருத்துகள் வருவதில்லையா? அவரவர் ரோலை
அவரவர் ப்ளே பண்ணதான் செய்வார்கள்… தினரோஜாவிலிருந்து ஆன்மிகரோஜா
சிறுவர்ரோஜா வாரரோஜா இணைப்புகள் வருகின்றன. அரசியலில் சில மாறுபட்ட
கருத்துகள் தினரோஜா கூறுவதாக நீங்கள் சொல்லலாம். ஆனால் இலக்கியத்துக்கு
தினரோஜா ஆற்றும் பணி மகத்தானது. ஆன்மிக ரோஜாவில் இரண்டு பக்கங்கள்
இஸ்லாமுக்கு ஒதுக்குகிறார்கள். வருடத்தில் இருஇஸ்லாமிய பண்டிகைகளுக்கு
சிறப்பு மலர் போடுகிறார்கள். எழுதுபவர்களுக்கு உழைப்பவரின் வியர்வை காயும்
முன் சிறப்பான சன்மானம் கொடுத்து விடுகிறார்கள். நீங்கள் இஸ்லாமிய இதழ்களில்
பிறமதத்தினரின் விழுமியங்களை கோட்பாடுகளை அரை பக்கமாவது
போடுகிறீர்களா?”
“இந்துமதத்தில் மதசுதந்திரம் அதிகம். இஸ்லாம் இராணுவ கட்டுபாடுகள்
கொண்ட மதம். நாம் பிறமத நம்பிக்கைகளை நம் பத்திரிகைகளில் போடமாட்டோம்!”
“இஸ்லாமிய வெறுப்பு, பிராமண துவேஷம், தலித் கசப்புகளை கொண்டாடி நம்
இந்திய நாட்டை 100வருஷம் பின்னுக்கு கொண்டு செல்கிறோம். மத
துவேஷமில்லாத பொருளாதார ஏற்றத்தாழ்வில்லாத பிராந்திய மற்றும் மொழி வெறி இல்லாத ஒரு யுடோப்பியன் சமுதாயத்தை கற்பனை செய்து கொண்டு தான் கதை எழுதி வருகிறேன்..”
“யுடோப்பியன் சமுதாயம் நிஜத்தில் சாத்தியமே இல்லை பாய்!”

“சினிமா வேண்டாம் கவிதை வேண்டாம் ஓவியம் வேண்டாம் இசை
வேண்டாம் வெகுஜன ஊடகங்கள் வேண்டாம் என ஒதுங்கி உங்களுக்கும் பிறமத
சகோதரர்களுக்கும் இடையே இரும்புச்சுவர் எழுப்புகிறீர்கள். நேர்மறையான எல்லா
விஷயங்களும் இறைவனுக்கு உவப்பானவை. மாற்று கருத்துகளை தகுந்த
விளக்கங்களால் புன்முறுவலாய் எதிர்கொள்ள வேண்டும். தினரோஜாவுடன் முட்டி
மோதாமல் இஸ்லாமிய கதைகளை எழுதுகிறேன் அவர்களும் பிரசுரிக்கிறார்கள்.
பிறமத சகோதரர்கள் நம் மத விழுமியங்களை கோட்பாடுகளை கலாபூர்வமாக
அறிந்து கொள்கிறார்கள். இருமதங்களுக்கு இடையே ஆன பெர்லின் சுவரை என்
எழுத்துகள் மூலம் அகற்றுகிறேன். மனிதநேயம் மூலம் மனித மனங்களை
ஒருங்கிணைக்கிறேன்!”
“எழுதி நீங்கள் சொல்லும் எதனையும் சாதித்து விட முடியாது!”
“எழுத்தின் மகத்துவம் பிரமாண்டமானது. எழுத்தில் எனக்கு அழகிய முன்
மாதிரிகளாக இருந்தவர்கள் பெரும்பாலும் இந்துமத எழுத்தாளர்கள்தான்… அவர்களை
எல்லாம் நான் வாசிக்காமல் இருந்திருந்தால் இப்ப நான் ஒரு கருத்து குருடனாக
இருந்திருப்பேன்..”
“உங்கள் அறிவுக்கண்ணை அவர்கள் திறந்தார்களா?”
“விழித்திருக்கும் நேரமெல்லாம் கண் காதுகளை திறந்து வைத்து நம்மை சுற்றி
நடப்பவைகளை அப்சர்வ் பண்ணினால்தான் நாம் அப்டேட்டட் ஆக இருப்போம்.
இல்லையென்றால் அவுட்டேட்டட் ஆகிவிடுவோம்.,,, மீடியாக்களில் பங்கேற்பு,
உயர்கல்வி கற்றல், பிறமத நம்பிக்கைகளை கண்ணியப்படுத்தல், தலைமை பண்பை
வளர்த்து கொள்ளுதல், மதத்திற்குள் இருக்கும் நுண்கலையாளர்கள்
இலக்கியவாதிகளை அங்கீகரித்தல், பெண்கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்
நம்மின் உடனடி தேவைகள்!”
“பயான் பண்ணுகிறீர்கள் பாய்!”
“நான் தினரோஜா மட்டும் வாசிக்கவில்லை இஸ்லாமிய சிறு
பத்திரிகைகளையும் வாசிக்கிறேன். திருக்குர்ஆன் ஹதீஸ் தமிழ் மொழி
பெயர்ப்புகளை வாசிக்கிறேன். நான் என் சுயத்தை எதற்காகவும் இழக்கவில்லை.
பிறரின் சுயத்தையும் நான் அங்கீகரிக்கிறேன்… மனிதம் போற்றினால் இறைவன் எந்த பெயரில் இருந்தாலும் மகிழ்வான்!”
“நம்மை இரண்டாம் தர குடிமகனாக்க ஆளும் கட்சி முயற்சிக்கிறதே?”
“அப்படி ஒரு முயற்சி நடந்தால் அது முழுமையாக தோல்வியடையும். பிறமத
சகோதரர்களும் அப்படி ஒரு முயற்சி வெற்றியடைய அனுமதிக்க மாட்டார்கள். ஒரு தவறான முன்னெடுப்பு நாட்டை இருபது துண்டுகளாய் சிதறடித்துவிடும்…”
“அப்படி என்றால் நீங்கள் தினரோஜா வாங்குவதை நிறுத்த மாட்டீர்கள்?”

“எதிர்கருத்துகளே கூடாது என்பது சர்வாதிகாரம் இல்லையா? எதிர்கருத்துகள்
நசுக்கபடுவதை எதிர்த்து குரல் கொடுக்கும் நாம் எதிர்கருத்தை அனுமதிக்க வேண்டும்
அல்லவா?”
“இருபதாயிரம் முஸ்லிம்கள் இருக்கும் இடத்தில் நீங்கள் மட்டும் தினரோஜா
வாங்குவது உங்களுக்கு தவறாக படவில்லையா?”
“இருபதாயிரம் முஸ்லிம்கள் தினரோஜா வாங்கவேண்டும் என நான் வற்புறுத்த
வில்லையே?”
“முரண்டு பிடிக்கிறீர்கள்!”
“இல்லவே இல்லை… மதநம்பிக்கையுடன் நவீனத்தை ஸ்வீகரிக்கிறேன்… நான்
நம் மதத்தை நேசிக்கும் அதே நேரத்தில் சகமக்களையும் என் தாய்நாட்டையும் பூமி பந்தையும் நேசிக்கிறேன்!”
“நீங்கள் பேசியதை முழுவதும் கைபேசியில் பதிவு செய்திருக்கிறேன்!’‘
“மிக நல்லது. ஆறஅமர போட்டு கேளுங்கள். நண்பர்களையும் கேட்க
சொல்லுங்கள்.. தெளிவு பிறக்கும்!”
“நாங்கள் வன்முறையாளர்கள் என அனுமானித்து விட்டீர்களா?”
“இல்லவே இல்லை.. தினரோஜா பற்றி உங்களுக்கு புரிதல் இல்லை. நான்
சொல்லும் விளக்கத்தை பொறுமையாக கேட்டீர்கள்.. புரிதல் தொடங்கியிருக்கும்!”
“உங்களை போல மாற்றுமத சகோதரர்களும் சிந்திக்கிறார்களா?”
“சிந்திப்பதால்தான் நம் மத விழுமியங்களையும் கோட்பாடுகளையும் மதித்து
அவர்களின் பல லட்சம் வாசகர்கள் கொண்ட பத்திரிகையில் பிரசுரிக்கிறார்கள்..”
“மொத்தத்தில் என்ன தான் சொல்ல வருகிறீர்கள் பாய்?”
“மதம் சார்ந்த மனிதர்களுக்கு இடையே தகவல்தொடர்பு மேம்படவேண்டும்.
பரஸ்பரம் நம்பிக்கையும் மரியாதையும் துளிர்க்கவேண்டும். மதபற்று மதவெறியாக மிகைக்கக்கூடாது. மனசாட்சியே பிரபஞ்சத்தின் ஒரே கடவுள்!’‘
வந்தவர்கள் ஸ்தம்பித்தனர். நால்வர்களில் ஒருவன் பேசினான். “தினரோஜா
நீங்கள் வாங்குவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. நாங்கள்
வாங்குவதாக வேண்டாமா என்பதனை இனிதான் யோசிக்க வேண்டும் அஸ்ஸலாமு
அலைக்கும்!”
“வஅலைக்கும் ஸலாம்!”
“இந்த எழுத்தாளர் சொல்வதிலும் ஒரு தர்க்கநியாயம் இருக்க தான் செய்கிறது!”
என கிசுகிசுத்தபடி காரில் ஏறி பறந்தனர்.