தொடர்கள்
கவர் ஸ்டோரி
ஜாதிகள் இருக்குதடி பாப்பா..!

20230101174901515.png

சமூக நீதி, சமத்துவம், இதெல்லாம் ஏட்டுச் சுரைக்காய் தான் போல் இருக்கிறது.

மதுரை உயர்நீதிமன்றத்தில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் என்ற கிராமத்தில் பட்டியலின மக்களை சாதி அடிப்படையிலான பாகுபாடு நிகழத்தப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை சமர்பிக்கபட வேண்டும் என்ற என்ற பொது நல வழக்கு தொடரப்பட்டது.

வேங்கைவயல் ஒரு கிராமத்து டைரிக் குறிப்பு !!

வேங்கைவயல் கிராமத்தில் 20 பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகிறது. அமைதியான கிராமம் …இந்த கிராமத்திற்கு குடிநீர் வழங்கும் மேல்நிலை தொட்டி 2016-17 ஆண்டில் கட்டத் தொடங்கப்பட்டு கடந்த வருடம் பணிகள் நிறைவடைந்து வீடுகள் முன்பு, சாலை ஓரத்தில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டது.

வேங்கைவயல் கிராமத்தினர் இந்த குடிநீர் தொட்டி கட்டப்படுவதற்கு முன்பு தங்கள் அருகில் இருக்கும் உறையூர் கிராமத்தில் இருந்த குடிநீர் தொட்டி முலம் குடிநீர் பெற்று வந்தனர். இந்த பகுதியில் பட்டியலினத்தவர்கள், முத்திரையர்கள், அகமுடையர்கள் போன்ற சமுகங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

வேங்கைவயல் கிராமத்திற்கு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து தெருகுழாய்களில் குடிநீர் பிடித்து மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

20230101175213202.jpg

சில நாட்களுக்கு முன்பு , வேங்கைவயல் கிராம மக்கள் குடிநீர் குடிக்கும் போது ஓருவித வார்த்தைகளால் விவரிக்க முடியாத துர்நாற்றம் அடிப்பதை உணர்ந்தனர். அதன்பின் சமையல் செய்த சோற்றிலும் இந்த துர்நாற்றம் வர தொடங்கியது. இதற்குள் இங்கு இருக்கும் குழந்தைகள் இந்த தண்ணீரை குடிக்க அவர்களுக்கு உடல்நலம் குன்றியது. பெரியவர்களுக்கும் இந்த குடிநீரை குடித்து உடல்நலம் குன்றியதால் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு விரைந்தனர். மருத்துவர்கள் குடிநீர் அல்லது உணவில் ஏதோ பிரச்சனை என்று கூறி உடன் அதிகாரிகளுக்கு தெரியபடுத்த சொன்னார்கள்.

வேங்கைவயல் கிராமத்தில் வசித்து வந்த இளைஞர்கள் அவசரமாக குடிநீர் மேல்நிலை தொட்டியில் ஏறி ஏதாவது நாய் அல்லது மிருகங்கள் தொட்டியில் விழுந்து இறந்துவிட்டதா என்று பார்த்த போது அதிர்ந்து விட்டனர். துர்நாற்றத்துடன் குடிநீர் தொட்டியில் தேக்கி வைக்கப்படிருந்த தண்ணீர் மீது மனித மலஜலம் மிதந்து கொண்டிருந்தது.

அடுத்த சில மணித்துளிகளில் முத்துகாடுபஞ்சாயத்து தலைவர் எம்.பத்மா மற்றும் கந்தவர்வ கோட்டை தனித்தொகுதி சிபிஐ (எம்) எம்.எல்.ஏ. எம்.சின்னதுரை ஆகியோர்க்கு வேங்கைவயல் கிராமத்தினர் தகவல் கொடுத்தனர்.இதற்குள் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோர்கள் வெள்ளானூர் காவல்நிலையத்தில் குடிநீர் மேல்தொட்டியில் மலஜல விவகாரம் குறித்து புகார் கொடுத்ததும் அதனை வழக்காக பதிவுசெய்தனர்.
இதற்குள் மாவட்ட கலெக்டர் கவிதா ராமுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் தனது அதிகாரிகள் டீமுடன் அடுத்த நாள் வேங்கைவயல் கிராமத்திற்கு புடைசூழு வந்துவிட்டார்.வேங்கைவயல் கிராம எல்லையில் வெளியாட்கள் நுழையாத அளவிற்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.

குடிநீர் மேல் தொட்டியில் மலஜலம் கலக்க என்ன காரணம், யார் செய்தது என்று கலெக்டர் வேங்கைவயல் மக்களிடம் விசாரிக்க தொடங்கினார்.

அப்போது, இந்த பகுதியில் இன்னும் இரட்டை டம்ளர் முறை உள்ளது. எறையூரில் இருக்கும் ஸ்ரீ அய்யனார் கோயிலில் பட்டியலினத்தவரை அனுமதிப்பதில்லை .அதனை எதிர்த்து தமிழக அரசுக்கு மனு செய்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் 22 தேதி பட்டியல் இனத்தவர்கள் அய்யனார் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட தமிழக அரசு உதவி செய்தது. இதனால் இந்த பகுதியில் இருக்கும் சிலருக்கு எங்கள் மீது கோபம் இருந்தது அதன் வெளிப்பாடாக இந்த குடிநீர் மேல் தொட்டியில் மலஜலம் விவகாரம் நடந்து இருக்கலாம் என்று கிராம மக்கள் கலெக்டரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த அய்யனார் கோயிலுக்கு பட்டியிலின் மக்கள் வருவோரை இதே பகுதியில் டீ கடை வைத்திருக்கும் தம்பதிகள் தட்டி கேட்டு கோயிலில் நுழைய கூடாது என தகராறு செய்தவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு வன்கொடுமை சட்டப்பட்டி கைது நடவடிக்கையும் சமீபத்தில் நடந்துள்ளது என்று காவல்துறை சார்பாக கூறப்படுகிறது.

வேங்கைவயல் கிராமத்தில் இருக்கும் பட்டியிலன மக்கள் கடந்த டிசம்பர் மாதம் நடந்த அய்யனார் கோயில் திருவிழாக்களில் பெருமளவில் பங்கு பெற்றனர். நாங்களும் அவர்களும் சுமுகமாக தான் விழாவில் மகிழ்ச்சியாக பங்கு கொண்டோம். எந்த வித வழக்கும் இருதரப்பும் காவல்நிலையத்தில் அளிக்கவில்லை.வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் வேண்டும் என்றே யாரோ மலஜல கலந்துள்ள குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்கிறார் எறையூர் பகுதியில் இருக்கும் மற்ற சமுகத்தை சேர்ந்த பெண்மணி .

வேங்கைவயல் கிராமத்தை சுற்றியிருக்கும் அனைத்து சமுகத்தினரையும் அழைத்து இந்த பகுதி ரெவின்யூ டிபார்ட்மெண்ட் அதிகாரிகள் பீஸ் மீட்டிங் நடத்தி முடித்தார்.

வேங்கைவயல் கிராமத்தின் அருகில் இருக்கும் எறையூர் கிராம மக்களுக்கும் இதுவரை ஓற்றுமையாக தான் இருக்கிறார்கள். எந்தவொரு போலீஸ் வழக்கும் இதுமாதிரியான சம்பவங்கள் நிகழ்ந்ததாக முன்மாதிரி இல்லை. அத்துடன் வேங்கைவயல் கிராம குடிநீர் மேல்நிலை தொட்டியில் மலஜல கலந்த விவகாரம் குறித்து இந்த கிராம மக்கள் யாரையும் குறிப்பாக கைகாட்டி குற்றம்சாட்டவில்லை என்கிறார் இந்த பகுதி எம்.எல்.ஏ சின்னதுரை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழக காவல்துறையிடமிருந்து இந்த வழக்கை சிபி-சிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டுள்ளது.தற்போது வெவ்வேறு இனத்தை சேர்ந்த 150 பேரை சிபி-சிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேங்கை வயல் சம்பவத்தில் குற்றவாளிகள் ஒரு மாத காலம் ஆகியும் கைது செய்யப்படாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

20230101175357514.jpg
தமிழகத்தையே உலுக்கிய வேங்கைவயல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து இதுவரை நடவடிக்கை எடுக்காதற்கு யார் காரணம்?.. குடிநீரில் மனித கழிவை கலந்தவர்கள் யார் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் தண்டிக்கப்பட வேண்டும். புதிய குடிநீர் தொட்டியை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறோம். புதிதாக குடிநீர் தொட்டியை கட்டக் கூடாது, பொது குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீரை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது கண்டனங்களை எழுப்பி உள்ளார்.

20230101175422434.jpg
வேங்கைவயல் நிகழ்வுக்கு பிறகு இந்த பகுதியில் சட்ட துறை அமைச்சர் ரகுபதி,ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் சுற்றுசூழல் அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் சமத்துவ பொங்கல் விழா சமுக நல்லினக்கத்திற்காக நடத்தினர்.அதில் சிலர் மட்டும் மற்ற இனத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர் என்கின்றனர் இந்த பகுதி மக்கள்.

வேங்கைவயல் கிராம குடிநீர்மேல்நிலை தொட்டியில் மலஜலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் அபய குரலாக உள்ளது.

தமிழுக அரசைப் பொறுத்தவரை இதை பற்றி எழந்த கண்டன குரல்கள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக மாறிவிட்டது என்பது தான் நிஜம்!

சாதிகள் இல்லையடி பாப்ப குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம் என்று ஓங்கிக் குரலெடுத்த பாரதி மண்ணில் இப்படி மிருகங்களை விட கேவலமாக நடந்து கொண்ட மனிதர்களுடன் வாழ வேண்டிய நிலையில் நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும்.