தொடர்கள்
ஆன்மீகம்
பாரதத்தின் மலைக் கோயில்கள் ! - 17 - திருக்கழுக்குன்றம் (வேதகிரி மலை), தமிழ்நாடு!! வேண்டியதைத் தந்திடும் வேதகிரீஸ்வரர் கோயில் - ஆரூர் சுந்தரசேகர்.

Vedakriswarar temple that gives the desired

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் அமைந்துள்ளது. வேதங்களே மலை வடிவம் கொண்டதால் வேதகிரி என்றும், வாழை மரம் நிறைந்த பகுதியானதால் கதலி வனம் என்றும், நான்கு யுகங்களிலும் கழுகுகள் பூஜை செய்வதால் கழுக்குன்றம் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த கோயில் 1400 ஆண்டுகள் பழமையானது.
அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற 44 ஸ்தலங்களுள் மிகவும் முக்கியமான ஸ்தலம். தேவாரப் பாடல்பெற்ற தொண்டை மண்டல ஸ்தலங்களுள் 28-வது ஸ்தலமாகவும் இது விளங்குகிறது.
இங்கு மலைமேல் ஒரு கோயிலும், அடிவாரத்தில் ஒரு கோயிலும் உள்ளது. இவை முறையே மலைக்கோயில், தாழக்கோயில் என்றழைக்கப்பபடுகிறது. மலைக்கோயிலஇல் மூலவர் வாழைப் பூக்குருத்துப் போன்று சுயம்புலிங்க மூர்த்தியாக வேதகிரீஸ்வரர் என்ற பெயருடனும், அம்மன் சொக்கநாயகி என்கிற பெண்ணினல்லாளம்மை என்ற பெயரிலும் அருளுகின்றார். இம்மலையைக் கிரிவலம் வருதல் சிறப்புடையது. மேலும், அடிவாரத்தில் அமைந்துள்ள தாழக்கோயிலில் திரிபுரசுந்தரி அம்பாள் சமேத பக்தவச்சலேஸ்வரர் அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோயிலில் மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவிக்க இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும், அது முதற்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகவும் சொல்லப்படுகிறது. இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் விடியற்காலையில் நீராடி, இம்மலையை வலம் வந்தால் உடற்பிணி நீங்கும். (இதைச்சில மருத்துவர்களே அனுபவித்துக் கூறியுள்ளனர்)
தெய்வீக ஸ்தலங்களை மூன்று வகையாகக் குறிப்பிடுவது வழக்கம், அவை மூர்த்தி சிறப்பு, ஸ்தல சிறப்பு, தீர்த்த சிறப்பு இவை மூன்றிலும் இத்திருக்கோவில் சிறந்து விளங்குகிறது. அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோயில் கன்னி ராசிக்கான பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.
இக்கோயிலுக்கு, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

Vedakriswarar temple that gives the desired

ஸ்தலபுராணம்:
ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் 4 பெரிய பாறைகளாக இருப்பதாகவும், அவற்றுள் “அதர்வண வேத பாறை உச்சியில் சிவபெருமான் கோவில் கொண்டுள்ளார் என்று ஸ்தலபுராணம் விவரிக்கிறது”.
கழுகுகள் பூஜித்துப் பேறு பெற்ற காரணத்தால் கழுக்குன்றம் என்று பெயர் ஏற்பட்டது. முதல் யுகத்தில் சாபம் பெற்ற சண்டன், பிரசண்டன் என்னும் கழுகுகளும், இரண்டாம் யுகத்தில் சம்பாதி, ஜடாயு என்னும் கழுகுகளும், மூன்றாம் யுகத்தில் சம்புகுத்தன், மாகுத்தன் என்னும் கழுகுகளும், நான்காம் யுகத்தில் சம்பு, ஆதி என்னும் கழுகுகளும் முறையே வழிபட்டுப் பேறு பெற்றன.

​ Vedakriswarar temple that gives the desired  ​


மலையில் நாள்தோறும் உச்சிப் பொழுதில் இரண்டு கழுகுகள் வந்து சில ஆண்டுகள் முன்பு வரை உணவு பெற்றுச் சென்றுள்ளன. இவை தினமும் இராமேஸ்வரத்தில் ஸ்நானம் செய்து கழுக்குன்றத்தில் ஆகாரம் உண்டு காசியில் அடைக்கலம் ஆவதாக ஐதீகம். கழுகுகளுக்கு அமுதூட்டும் செயல் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருவதாகக் கூறுகிறார்கள். (இப்போது அவைகள் வருவதில்லை.) இதனைக் காண வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானோர் தினமும் வந்து, கழுகுகளைக் கண்டு வணங்கி, மகிழ்ந்து செல்வார்கள். இதனால், காலம்காலமாக கழுகுகள் வந்து சென்றதன் அடையாளமாக ஏற்கனவே கழுகுகள் வந்து உணவருந்திய பாறைக்குக் கழுகு பாறை என அழைக்கப்படுகிறது. இரண்டு கழுகுகளின் வருகை பற்றி 03.01.1681 வருடம் டச்சுக்காரர்கள் இந்த அற்புத சம்பவத்தை ஆலயத்தின் கல்வெட்டில் எழுதி வைத்திருக்கிறார்கள்.
இந்த மலைக்கோயிலுக்குக் காலங்காலமாகக் கழுகுகள் வந்து சென்றதன் நினைவாக மலை மீதுள்ள பாறையில் இரண்டு கழுகு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனைத் தினமும் பக்தர்கள் வந்து வணங்கிச் செல்கின்றனர்.

Vedakriswarar temple that gives the desired

கோயில் அமைப்பு:
இந்த வேதகிரி மலையில் மூலஸ்தானம் மூன்று பிரமாண்ட கற்பாறைகளால் ஆக்கப்பட்டிருக்கிறது. கற்பகிரகத்தின் உட்பக்கத்தில் மேற்கில் சோமாஸ் கந்தரும், பிரம்மாவும், மகாவிஷ்ணுவும், வடக்கில் யோக தட்சிணா மூர்த்தியும், மார்க்கண்டேயர் சிவலிங்க பூசையும், தெற்கில் நந்திகேசுவரர், சண்டிகேசுவரர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மூலவர் வாழைப் பூக்குருத்துப் போன்று சுயம்புலிங்க மூர்த்தியாக வேதகிரீசுவரர் என்ற பெயருடனும், அம்மன் சொக்கநாயகி என்கிற பெண்ணினல்லாளம்மை என்ற பெயரிலும் எழுந்தருளி இருக்கின்றனர். இந்த ஸ்தலத்தில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தி இல்லாமல் இருப்பது சிறப்பு அம்சமாகும்.
இந்த மலை சுமார் 4 கி.மி. சுற்றளவும், 500 அடி உயரமும் கொண்டுள்ளது. மலைமேல் இராஜகோபுரம், ஒரு பிராகாரத்துடன் அமைந்துள்ளது. மலைமீது ஏறிச்செல்ல நல்ல முறையில் அமைக்கப்பட்ட 545 படிக்கட்டுகளுடன் இயற்கை எழில் சூழ அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் படிகள் செங்குத்தாக உள்ளதால், வழியில் பக்தர்கள் ஓய்வெடுக்கச் சிறிய மண்டபங்கள் உள்ளன. படி வரிசைகளின் மேற்கூரையும், இளைப்பாறத் தங்குமிடங்களும் பயணிப்போரை வெயிலிலிருந்தும், மழையிலிருந்தும் பாதுகாக்கின்றன.

Vedakriswarar temple that gives the desired


தாழக்கோவில்:
மலையின் கீழே ஊரின் மத்தியில் பிரம்மாண்டமான தாழக் கோயில் உள்ளது. இக்கோயில் சுமார் 12 ஏக்கர் நிலப்பரளவில் நான்கு புறமும் கோபுரங்களுடன் அமைந்துள்ளது. கிழக்கில் ஏழு நிலையுள்ள இராஜகோபுரம், மூன்று பிராகாரங்களுடன் அமைந்துள்ளது. இராஜகோபுர வழியே உள்ளே நுழைந்தால் நேர் எதிரே ஒரு நான்கு கால் மண்டபம் உள்ளது, வலதுபுறம் உள்ள அலுவலக மண்டபக் கற்சுவரில் நேர்த்தியான அழகுடன் அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம் அமைந்துள்ளது. இடதுபுறம் உள்ள பதினாறு கால் மண்டப தூண்களில் அழகிய சிற்பங்கள் அமையப் பெற்றுள்ளன. நான்கு கால் மண்டபத்தையடுத்து இரண்டாவது கோபுர வாயிலில் இருபுறமும் விநாயகரும் சுப்பிரமணியரும் உள்ளனர். வெளிப் பிரகாரம் வடக்குச் சுற்றில் நந்தி தீர்த்தமும், கரையில் நந்தியும் உள்ளது. இரண்டாவது கோபுர வாயிலில் நுழைந்து உள்பிரகாரம் வலம் வரும்போது சோமாஸ்கந்தர் சந்நிதி, பாணப்பகுதி இல்லாமல் பீடம் மட்டுமே கொண்ட ஆத்மநாதர் சந்நிதி உள்ளது. இதன் எதிரில் மாணிக்கவாசகர், ஏகாம்பரநாதர், தலவிநாயகரான வண்டுவன விநாயகர், ஜம்புகேஸ்வரர், அருணாச்சலேஸ்வரர், ஆறுமுகப் பெருமான் முதலிய சந்நிதிகள் தனித் தனிக் கோயில்களாக அமைந்துள்ளன.
இப்பிரகாரத்தில் அழகான முன் மண்டபத்துடன் கூடிய கருவறையில் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அம்மன் திரிபுரசுந்தரி அருள்பாலிக்கின்றார். அம்பாளின் சந்நிதிக்கு எதிர்த்திசையில், பிரத்தியட்ச வேதபுரீஸ்வரர், அதையடுத்து நடராச சபை. பிரகாரம் வலம் வந்தால் மரத்தாலான கொடிமரம், அடுத்து, வலதுபுறத்தில் அகோர வீரபத்திரர். உள்சுற்றில் வலம் வரும்போது சூரியன் சந்நிதியும் இதையடுத்து விநாயகரும், அறுபத்து மூவர் மூலத்திருமேனிகளும், ஏழு சிவலிங்கங்களும், அதனையடுத்து நாயன்மார்களின் உற்சவத் திருமேனிகளும் உள்ளன. இங்குள்ள பைரவர் வாகனமின்றி காட்சி தருகின்றார்.
மூலவர் சதுரபீட ஆவுடையாரில் பக்தவத்சலேஸ்வரர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மேலும் இக்கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடையது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் தனி சந்நிதியிலும், உட்பிராகாரத்தில் சுமார் ஏழு அடி உயரமுள்ள அகோர வீரபத்திரர் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றார்.

​ Vedakriswarar temple that gives the desired  ​

ஸ்தல சிறப்பு:
வேதமே மலையாக அமைந்த ஸ்தலம். கோடி ருத்ரர்கள் தவம் செய்து முக்தி அடைந்த ஸ்தலம். சித்தர்கள் பலர் இம்மலையில் வாழ்ந்ததால் தியானம் செய்ய ஏற்ற ஸ்தலம். சுந்தரர் சிவபெருமானிடம் பொன் பெற்ற ஸ்தலம். இறைவன் காதலித்து உறையும் இடம் கழுக்குன்றம் என திருஞானசம்பந்தரால் மகிழ்ந்து போற்றிய ஸ்தலம். மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் காட்சி தந்த ஸ்தலம். என் உடல் வீழும் போதும் நீதான் எனக்குத் துணை என்று ஈசனைப் பட்டினத்தார் உருக்கமாக பாடி வழிபட்ட ஸ்தலம். உலகின் உச்சமான அமராவதி நகருக்கு நிகரான ஸ்தலம். திருக்கழுக்குன்றம் என அருணகிரிநாதரால் புகழப்பெற்ற ஸ்தலம். சுரகுரு மன்னனுக்கு சுயம்புவாய் ஈஸ்வரன் காட்சி தந்த ஸ்தலம்.
மார்க்கண்ட முனிவர் சிவபெருமானின் அருளால் என்றும் பதினாறு வயது பெற்று காசி முதலிய ஸ்தலங்களை வணங்கி இங்கு வந்தார். சிவலிங்க பிரதிஷ்டை செய்து அபிஷேகம் செய்தபோது இறைவன் அருளால் அத்தடாகத்தில் சங்கு தோன்றியது. மார்க்கண்ட தீர்த்தம் என்று வழங்கப்பட்ட இத்தீர்த்தத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறந்து கொண்டிருப்பதால் சங்கு தீர்த்தம் எனப் பெயர்பெற்றது.
தீர்த்த விசேஷம் கொண்ட கோவில்:
இந்த மலையைச் சுற்றி பன்னிரு தீர்த்தங்கள் உள்ளன. அவை: 1. இந்திர தீர்த்தம், 2. சங்கு தீர்த்தம் (மார்க்கண்டேய தீர்த்தம்), 3. சம்பு தீர்த்தம், 4. நந்தி தீர்த்தம், 5. ருத்ர தீர்த்தம், 6. வசிஷ்ட தீர்த்தம், 7. அகத்திய தீர்த்தம், 8. மெய்ஞான தீர்த்தம், 9. கௌசிக தீர்த்தம், 10. வருண தீர்த்தம், 11. அகலிகை தீர்த்தம், 12. பட்சி தீர்த்தம்.
சங்கு தீர்த்தம்:
கிழக்கிலுள்ள இராஜகோபுரத்திற்கு நேரே உள்ள தெருவின் மறு கோடியில் மிக்க புகழுடைய “சங்கு தீர்த்தம்” உள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு பகவான் கன்னி ராசியில், பிரவேசிக்கும் திருநாளில், இங்கு கங்கை முதலான புண்ணிய நதிகளெல்லாம் சங்கமம் ஆவதாக ஐதீகம். இதையொட்டி சங்கு புஷ்கர மகாமேளா எனும் விழா நடைபெறும். இந்த சங்கு தீர்த்தத்தில்தான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு கன்னி ராசியில் வரும்போது சங்கு தோன்றுகிறது. பொதுவாக உப்பு நீரில் தான் சங்குகள் தோன்றும். மாறாக குளத்து நீரில் சங்கு தோன்றுகிறது என்பது ஆச்சரியமளிக்கிறது. இவ்வாறு தோன்றும் சங்கை தீர்த்த புஷ்கர மேளாவின் போது ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்யப் பயன்படுத்துவார்கள். இந்த குளத்தில் இரண்டு நீராழி மண்டபங்களும், நீராடுவதற்குரிய படித்துறை மண்டபமும் உள்ளன. சங்கு தீர்த்தத்தில் விடியற்காலையில் நீராடி, மலையைக் கிரிவலம் வருபவர்களின் நோய்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை.
அம்பாள் திரிபுரசுந்தரி:
அம்பாள் திரிபுரசுந்தரி சுயம்பு வடிவானவள். அம்பாள் மூர்த்தம் அஷ்ட கந்தகம் உட்பட எட்டு விதமான வாசனை பொருட்களால் ஆனவர். அம்பாளுக்கு (திரிபுரசுந்தரி) மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது. ஆண்டில் ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்திரியில் வரும் நவமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்படுகின்றது. மற்ற நாட்களில் அம்மனுக்கு திருப்பாதத்தில் மட்டுமே பூஜை நடக்கின்றது.
இந்திரன் வணங்கும் ஸ்தலம்:
மலைமேல் உள்ள வேதகிரீஸ்வரரை இந்திரன் பூஜிக்கும் ஸ்தலம் இது. இந்திரன் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்நிதியில் நுழைந்து இறைவனை வலம் வந்து, பூஜித்து செல்வதாக ஐதீகம்.
இந்திரன் இன்றும் இறைவனை வணங்குகிறார் என்ற உண்மைக்குச் சான்றாக, இடி, கருவறைக்கு (விமானம்) மேலே உள்ள கோபுரத்தின் ஒரு துளை வழியாக விழுந்து சிவலிங்கத்தைச் சுற்றிச் செல்கிறது. அடுத்த நாள் கருவறை திறக்கும்போது தாங்க முடியாத வெப்பம் அனுபவிக்கப்படுகிறது.

குடைவரைக் கோயிலும், கல்வெட்டும்:
மலைக் கோயிலில் இருந்து கீழே இறங்கும் மற்றொரு வழியில் பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் எழுப்பிய அழகிய குடைவரைக் கோயில் ஒன்று சிவலிங்கத் திருமேனியோடு அமைந்துள்ளது. இந்த மண்டபம் அரிய சிற்பங்களால் நிறைந்துள்ளது மற்றும் மாமல்லர் காலத்திற்கு (கி. பி. 610 - 640) சொந்தமானது. குகையில் இரண்டு வராண்டாக்களை, நான்கு பிரமாண்ட தூண்களால் தாங்கி நிற்கின்றன. சிற்பங்களுடன் கூடிய முழு மண்டபமும் ஒரே பாறையிலிருந்து வெட்டப்பட்டதால் இந்த குகை ஒருகல் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.

​ Vedakriswarar temple that gives the desired  ​


கல்வெட்டு:
கி.பி 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர். சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. இந்த கல்வெட்டில் இத்தலம் 'உலகளந்த சோழபுரம்' என்று குறிப்பிடப்படுகிறது. தொண்டை நாட்டுக்குரிய 24 கோட்டங்களுள் இது களத்தூர்க் கோட்டத்தைச் சார்ந்தது.
கி.பி.8ஆம் நூற்றாண்டில், திருக்கழுக்குன்றம் என்று வழங்கப்பட்டது. இப்பெயரே தொடர்ந்து இன்றளவும் அழைக்கப்பட்டு வருகிறது.

திருவிழாக்கள்:
இந்த கோயிலில் லட்ச தீப திருவிழா, சித்திரைத் திருவிழா, விடயாற்றி உற்சவம், திரிபுரசுந்தரி அம்மன் திருவிழா, திருக்கல்யாண திருவிழா, நவராத்திரி திருவிழா, கார்த்திகை தீப திருவிழா, தெப்பத் திருவிழா, சங்காபிஷேகம், ஆருத்ரா தரிசனம், சுந்தரர் திருவிழா, மாசி மகம், சேரமானுடன் கைலாயம் செல்லும் விழா, பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான், பவித்ரோற்சவம், மாணிக்கவாசகர் திருவிழா சிறப்பான முறையில் நடைபெறுகின்றது. ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று அறுபத்து மூவருடன் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி கிரிவலம் வரும் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
இக்கோயில் கார்த்திகை மாதம் கடைசி சோம வாரத்தில்1008 சங்காபிஷேகம் நடைபெறுகின்றது.
லட்ச தீபம்:
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் கன்னி லக்கினத்தில் நுழையும் நாளன்று லட்சதீபத்திருவிழாவை மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் இங்கிருக்கும் வீடுகளிலும், கோயில்களிலும், சங்கு தீர்த்த குளக்கரையிலும் லட்சக் கணக்கில் விளக்குகள் ஏற்றப்பட்டு ஊர் முழுவதும் ஒளி வெள்ளத்தில் மின்னும்.
தேர்த் திருவிழா:
ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் சித்திரை மாத தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழா, திருமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும். இதில் ஏழாம் நாள் தேர்த்திருவிழாவில் பல ஊர்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் வந்திருந்து வடம் பிடித்து இழுத்துச் செல்வார்கள். பத்து நாட்கள் திருவிழாவிற்குப் பிறகு, பதினோராம் நாள் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த வணிகர்கள் அனைவரும் பட்டாசு, வானவேடிக்கை வெடித்து விழாவை நிறைவு செய்வார்கள்.

கோயில் திறக்கும் நேரம்:
மலைக்கோவில் தினந்தோறும் காலை 09:00 மணி முதல் பகல் 12:30 மணி வரையிலும் மாலையில் 04:30 மணி முதல் 06.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தாழக்கோவில் தினந்தோறும் காலை 06:00 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும் மாலையில் 04:00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

பிரார்த்தனை:
இக்கோயில் சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்குப் பெருமளவில் வருகின்றனர்.
குறிப்பாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், சித்தப்பிரமை பிடித்தவர்கள் 48 நாட்கள்(ஒரு மண்டலம்)சங்கு தீர்த்தத்தில் மூழ்கி விட்டு இத்தலத்தில் வழிபடும் பட்சத்தில் அவர்கள் முழுமையாகக் குணமடையும் அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது. தீராத வியாதிகள் தீருகிறது. குழந்தை பாக்கியம் வேண்டுவோரும் வழிபட்டுப் பலனடைகின்றனர். இத்தலத்தில் பக்தர்களின் எல்லாவித வேண்டுதல்களும், திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்துப் பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும்.
ஆஸ்துமா, ரத்தக்கொதிப்பு இருதய நோய் உள்ளவர்கள் காலையும் மாலையும் சஞ்சீவிக் காற்று வீசும் இம்மலை ஏறி வந்து ஈசனை வழிபட்டால் அத்தகைய நோய்களிலிருந்து குணமடைகின்றனர் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:
சுவாமி அம்பாள் ஆகியோருக்கு வேஷ்டி சேலை சாற்றுதல், அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகள் ஆகியவற்றை இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திக்கடன்களாகச் செய்கின்றனர். சிவபெருமானுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்குப் பிரசாதம் தரலாம். வசதி படைத்தவர்கள் கோவில் திருப்பணிக்காகப் பொருள் தருவதும் வழக்கமாக உள்ளது.

கோயிலுக்குப் போவது எப்படி:
மகாபலிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் திருக்கழுக்குன்றம் அமைந்திருக்கிறது. தமிழகம் முழுவதும் இருந்து செங்கல்பட்டுக்குப் பேருந்து, இரயில் வசதிகள் இருக்கின்றன. அருகிலிருக்கும் விமான நிலையம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம். செங்கல்பட்டிலிருந்து 14 கி.மீ தூரத்திலும், மகாபலிபுரத்தில் இருந்து 10 கி.மீ தூரத்திலும் இந்தத் தலம் அமைந்திருக்கிறது. பேருந்தில் சென்றால் கோயில் வாசலிலேயே இறங்கிக் கொள்ளலாம்.

​ Vedakriswarar temple that gives the desired  ​

முகவரி:
அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில்,
திருக்கழுக்குன்றம்,
திருக்கழுக்குன்றம் – 603109,
செங்கல்பட்டு மாவட்டம்.

வேண்டியதைத் தந்திடும் வேதகிரீஸ்வரரை வழிபட்டு அருள் பெறுவோம்!!

https://youtu.be/2PrWOyq7VyU

https://youtu.be/0Oezrf8kLKU

https://www.youtube.com/watch?v=JonB0ImxpMk

https://youtu.be/vONXjdme-d4