தொடர்கள்
ஆன்மீகம்
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நூற்றாண்டு விழா சிறப்பிதழ் – ஒரு பார்வை - எம். பைரவசுப்பிரமணியம்

20230223083513484.jpeg

தற்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி, காகித நூல்களின் பயன்பாட்டைக் குறைத்து, டிஜிட்டல் ஊடகமாக அதிகரித்துள்ளது. காகிதம் தகவல்களைத் தாங்கி வந்தபோது கிடைத்த அதே உயர்தரக் கல்வியை, பெரும்பாலான டிஜிட்டல் முறை ஊடகங்களும் பின்பற்றுகிறதா என்ற கேள்வி சிந்தனைக்குட்பட்டது. எனினும், தேசபக்தி, தெய்வபக்தி, மனிதத் தொண்டு ஆகியவற்றை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்கள், மாறிவரும் முறைகளிலும் உயர்தரக் கல்வியைப் பாதுகாக்கின்றன என்பது உண்மை. அத்தகையதொரு நிறுவனம், கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகெங்கிலும் கிளைகளுடன் விரவியுள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடம். அதன் சென்னைக் கிளையின் 125-ஆவது வருட விழாவும், அதன் தமிழ்ப் பத்திரிகையின் நூற்றாண்டு விழாவும் ஒருங்கிணைவது மிக அருமை.

சென்னையிலிருந்து கடந்த 102-வருடங்களாகத் தொய்வின்றி ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் “ஆன்மிக-கலாச்சார”ப் பண்பாடுகளை வளர்க்கும் தமிழ்ச் சஞ்சிகையாக ஓவ்வொரு மாதமும் வெளிவருகிறது. கொரோனா காரணமாக இரு வருடங்களுக்கு முன்பு நிகழவிருந்த ‘விஜய’த்தின் பிரத்யேக நூற்றாண்டு விழா, சென்னை மடத்தின் 125-ஆவது வருட விழாவுடன் இணைந்து, 2023-ஆம் வருடம் மார்ச் 24-ஆம் நாள் சென்னை மடத்தில் நிகழவிருப்பது இறைவன் இட்ட ஆணை போலும்.

சமுதாய நற்சிந்தனைகள், தேச-தெய்வ பக்தி, மனித வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய கருத்துகள் என்றென்றும் போற்றப்பட வேண்டும். காலத்திற்கேற்ப மாறுவது கல்விமுறை என்றாலும், மாறக் கூடாதது கல்வியாகும். அத்தகைய உண்மைக் கல்வி, மனித மேம்பாட்டிற்குப் பயன்படும் வகையில் எப்போதும் அமைந்திருப்பது அவசியம். அதற்குக் காலத்திற்கேற்ப கருத்துகளை எடுத்துச் சொல்லும் அறிஞர்கள் மற்றும் சொல்லும் விதம் ஆகியவை மாறுவதும் அவசியமாகும்.

அவ்வழியைப் பின்பற்றும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், மார்ச் 2023 இதழைத் தனது நூற்றாண்டுச் சிறப்பிதழாக வெளியிட்டுள்ளது. வழக்கமான 52-பக்க மாத இதழை, இச்சிறப்பிதழுக்காக 230-பக்கங்களில் 60 கட்டுரைகளுடன், அதிகச் செலவு செய்தபோதும் அதே ரூ.20 விலையில், அளிக்க ஸ்ரீராமகிருஷ்ண மடம் போன்ற சமூகக் கண்ணோட்டமுள்ள நிறுவனங்கள் மட்டுமே செய்ய முடியும். மாதாமாதம் 175,000 பிரதிகள் விற்பனையில் பெரும் பகுதி பள்ளிமாணவச் செல்வங்கள் சந்தா செலுத்திப் பெறும் ‘விஜயம்’ இதழ், ஏறக்குறைய 10 லட்சம் வாசகர்கள் படித்துப் பயன்பெறும் சிறப்புள்ளது.

இச்சிறப்பிதழிலுள்ள கட்டுரைகள், தற்போது நம்மிடையே வாழும் மிகச்சிறந்த ஞானிகள், துறவியர், சிந்தனையாளர்கள், சமுதாயத்தில் உயர்மதிப்புள்ளவர்கள், தன்னார்வத் தொண்டர்கள் எனப் பலரது கருத்துகளால் வாசகரைப் பண்படுத்துகின்றன. காலத்தையொட்டிய கருத்துகளை அளிப்பதில், நவீனத் தொழில்நுட்பத்தைத் திறன்படப் பயன்படுத்தும் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின், மற்றொரு மணிமகுடம் இச்சிறப்பிதழ், தமிழர்கள் அனைவரும் வாங்கிப் படித்துப் பாதுகாக்க வேண்டிய அச்சுப்பிரதி நூலாக அனைவருக்கும் எக்காலத்திலும் பயன்படும்.

தெய்வத் திருமூவர்களாகிய ஸ்ரீ ராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவி மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் சீடர் பரம்பரைத் துறவியரின் உயர்மிகுத் தொழில்முறை மேலாண்மையில் இயங்கும், ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண இயக்கம், ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்ற தாரக மந்திரத்தின் மற்றுமொரு பரிமாணமாக இச்சிறப்பிதழை நமக்கு அளித்துள்ளது.

(எம். பைரவசுப்பிரமணியம், தன்னார்வத் தொண்டாளர், ராமகிருஷ்ண மடம்)