தொடர்கள்
அனுபவம்
"கிளார்க்சன்ஸ் பார்ம்" - கோமதி

20230225081521876.jpeg

அமேசான் ப்ரைமில் வரும் வலைதளத் தொடர்களை பார்ப்பவர்களுக்கு ஜெரெமி கிளார்க்சன் என்னும் பெயர் புதியதல்ல. "கிளார்க்சன்ஸ் பார்ம்" என்னும் இத்தொடர் ஒரு மில்லினியர் பணக்கார விவசாயியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது.

இந்தியாவில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயி ஒவ்வொருவரும் இந்த உயரத்தை தொட வேண்டும் என்ற ஆவலை என்னுள் தூண்டியது. இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் பன்முகத் திறமை கொண்டவர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இவர் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர், பத்திரிக்கையாளர் மற்றும் "டாப் கியர்" என்னும் தொலைக்காட்சித் தொடரின் மூலம் பலவகையான வாகனங்கள் பற்றிய தன்னுடைய கருத்தை மக்களிடம் சென்றடையச் செய்தவர்.அதோடு ஒரு தலைசிறந்த எழுத்தாளரும் கூட.

இப்படிப்பட்ட ஒரு பிரபலம், ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் வாங்குவது ஒரு பெரிய விஷயமல்ல. ஆனால் அதில் விவசாயம் செய்வது, ஆடு, மாடு, கோழி வளர்ப்பது என தன்னுடைய வேட்கையை பூர்த்தி செய்வதோடு நில்லாமல், இதனை ஒரு வலைதளத் தொடராக ஒளிபரப்பி லாபம் ஈட்டுவது என்பது பிரமிப்பான விஷயம்!

20230225081550588.jpeg

முதலாவது சீசனில் ஆடு வளர்க்கும் கலையைப் பற்றி கூறும் இவர், இரண்டாவது சீசனில் பசு, கோழி வளர்த்தல் பற்றியும், உணவு விடுதி கட்டி அதில் லாபம் சம்பாதிக்கும் உக்தியையும் விளக்குகின்றார். ஜெரெமி ஒரு மிகச் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் என்பதை இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பங்கினைக் காணும் ஒவ்வொருவரும் ஒத்துக்கொள்வார்கள்.

புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு கவுண்டியில் சாட்லிங்டன் என்னும் கிராமத்தில் இவரது மிகப் பெரிய பண்ணை அமைந்துள்ளது. "டிட்லி ஸ்குவாட் பார்ம்" என்று அனைவராலும் அறியப்படும் எழில் மிகுந்த, இயற்கை அழகு கொஞ்சும் பச்சை பசேலென்ற இந்த வயல் வரப்பு, சிப்பிங் நார்டன் என்னும் இடத்திலிருந்து 3 மைல் தொலைவில் அமைந்துள்ளது. நீங்கள் லண்டனின் பசுமை, பழமையை ரசிக்க விரும்பினால் காட்ஸ்வோல்ட் செல்லுங்கள் என ஒருமனதாக இங்குள்ள அனைவரும் கூறுவார்கள். எங்கெங்கு நோக்கினும் பச்சை பசேலென்று விளங்கும் வயல்வெளி, கண் கவரும் மலர்கள், துள்ளி விளையாடும் மான்கள், வரலாற்று சிறப்பு மிக்க பழமை மாறாத கட்டிடங்கள் என காட்ஸ்வோல்டின் சிறப்பை அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஒவ்வொரு வயல்வெளியில் தாவரங்களும், மலர்களும் நேர்கோட்டில் விளைந்திருப்பது கூடுதல் சிறப்பு.

20230225081711613.jpeg

இங்கிலாந்து அரசு பணக்காரர்களுக்கு குறிப்பாக நிலம்/பண்ணை வைத்திருப்பவர்களுக்கு பல விதிமுறைகள் விதிக்கிறது. இந்த விதிமுறைகள் பசுமையை பாதுகாப்பதற்கும், இயற்கை அழகு அழியாமல் இருப்பதற்கு வழிவகுக்கிறது. இரண்டாவது சீசனில் ஜெரெமி ஒரு உணவு விடுதி கட்டுவதற்கு விண்ணப்பம் அளித்து, அது மறுக்கப்படுவதன் மூலம் நமக்கு இது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. கவுன்சில் உறுப்பினர்களுக்கும் ஜெரெமி அவரது வக்கீலுக்கு இடையேயான வாதமும் மிகவும் சுவாரசியமானதாக அமைந்துள்ளது.

ஆயிரம் ஏக்கர் நிறைந்த நிலத்தை ஒருவரால் எவ்வாறு பராமரிக்க முடியும் என்ற பிரமிப்பு உங்களுக்கு ஏற்படுவது நியாயமே! அவரது பிரமாண்டமான ட்ராக்டர்கள், பலவிதமான வாகனங்கள் என இவற்றை காணும் பொழுது அது சுலபமானதாகதவே தோன்றுகிறது. ஜெரெமியின் உதவியாளராக வரும் இளம் விவசாயியான கேளம் கூப்பர், மற்றுமொரு விவசாயியான ஜெரால்டு ஆகியோரும் இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் வலு சேர்க்கிறார்கள். ஜெரெமியின் வக்கீலாகவும் நலம் விரும்பியதாகவும் வரும் சார்லியும் நம் கவனத்தை கவருகிறார். ஜெரெமியின் காதலியான லிசா ஹோகன் அவர்களும் இவருக்கு உதவி செய்வதை அவ்வப்பொழுது காண முடிகிறது.

20230225081736691.jpeg

பசு பராமரிப்பை பார்க்கும்பொழுது சற்று மிரளும் விதமாகவும், ஒரு சில நிகழ்வுகள் வியப்பாகவும் உள்ளன. குறிப்பாக பசுக்கள் அனைத்தையும் IVF மூலமாக கர்ப்பம் தரிக்க விழைகிறார்கள். காளைகள் எளிதில் கிடைக்காததாலும், வாடகைக்கு கிடைக்கும் காளைகள் விலை உயர்ந்ததாக இருக்கும் காரணத்தினாலும் செயற்கை முறையே பெரும்பாலும் கையாளப்படுகிறது. ஒரு வேளை இது பயனளிக்கவில்லை என்றால் தான் காளை வாடகைக்கு கூட்டி வரப்படுகிறது. இதைக் காணும் பொழுது நாம் அருந்தும் பால் எந்த அளவு இயற்கையானது என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. பசுக்களை காசநோயிலிருந்தும் , கோழிகளை பறவை காய்ச்சலிலிருந்தும் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது பற்றியும், அவ்வாறு செய்யாவிட்டால் அதற்கான உரிமம் பறிக்கப்பட்டு விடும் என்பதையும் இதில் விளக்கி உள்ளார்கள். பசுக்கள் கன்றினை ஈன்றெடுக்கும் தருணத்தை கணிப்பதற்காக பசுவின் வாலில் ஒரு சிறு இயந்திரம் பொருத்தப்பட்டு, சரியான அத்தருணத்தை வாலின் அசைவை அறிந்து கைபேசிக்கு தகவல் அனுப்பும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி கண்டு நான் வாயடைத்து போனேன்!

இந்தியாவின் பரப்பளவையும் இயற்கை அழகையும் ஒப்பிடும் பொழுது இது என்ன ஜுஜுபி என நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது. இப்படி ஒரு வலைதளத் தொடரை இந்தியாவிலிருந்து கூடிய விரைவில் எதிர் நோக்குவோம் !