தொடர்கள்
கதை
மீண்டும் யயாதி - கி. ரமணி

20230320194827652.jpg

வருஷம் 2007 ஆகஸ்ட் 1:

கோவில் பின்பக்கத்து தாமிரபரணி ஆற்றுப் படித்துறையில் தண்ணீருக்கு வெளியே தெரியும் கடைசிப் படியில் வானமாமலை அமர்ந்திருந்தார்.

அவருடைய நீட்டிய கால்கள் தண்ணீரை அளைந்து கொண்டிருந்தன. கால்களைச் சுற்றி ஏராளமான சிறு மீன்கள் மொய்த்துக் கொண்டிருந்தன.

ஆற்றில் தண்ணீர் மிக மெதுவாக... எதிரே குறுக்காக இருந்த ரயில்பாலத்தின் மீது பொறுமையுடன் நகர்ந்து கொண்டிருந்த கூட்ஸ் வண்டிமாதிரி.....அங்குல ரீதியில் ஊர்ந்து கொண்டிருந்தது.

தன். பக்கத்திலேயே நின்று கொண்டிருந்த முகுந்த்தைப் படியில் அமரச் சொன்னார். தன்னைப்போல் இரு கால்களையும் நீட்டி தண்ணீருக்குள் முழுக்கச் சொன்னார்.

செய்தான்.

புதிய ஒரு ஜோடி கால்களை தண்ணீருக்குள் கண்டதும் ஒரு சிறிய மீன் படையே உற்சாகமாகி முகுந்தின் கால்களை, பாதங்களை முற்றுகையிட்டு கிச்சு கிச்சு மூட்டிக்
கொண்டாடின.

வேகமாக காலை வெளியே இழுத்த முகுந்த்." நீ எப்படிப்பா இந்த மீன் கடியை எல்லாம் பொருத்துக்கிற?"
என்றான்.

" கடியா? சேச்சே! உன் காலில் இருக்கும் அழுக்கை பைசா செலவு இல்லாம கிளீன் பண்ணறதுங்க இந்த மீன்கள் . அவ்வளவுதான்."

"எனக்கு இதை விட, ,இன்னும் சுகாதாரமான வழிகளில் வலி இல்லாமல் என் கால்களை கழுவத் தெரியும். தேங்க்ஸ்."என்றான்

" மீன் கடி இல்லாமல் ஓடும் நதிநீரில் இந்தப் புதுப் படித்துறையில் ஹாயாக காலை வைத்து அமர்ந்திருக்கும் அனுபவம் உனக்கு வேண்டாமா?. சும்மா உன் கால்களை வை.நான் வழி பண்றேன்" என்றார் வானமாமலை.

தயக்கத்துடன் மறுபடி கால்களை
தண்ணீரில் வைத்தான் முகுந்த்.

தன் கைப்பைக்குள் வைத்திருந்த
அரிசிப் பொரியை வனமாமலை நீரில் தூவ மீன் பட்டாளம், கால் பாத ருசி மறந்து, , தண்ணீரில் மிதக்கும் பொரியை வினோத ஆர்வத்துடன் துரத்த ஆரம்பித்தது.

"மீன் ஃபிரீ அனுபவம் எப்படி?
இதில் ஒரு பாடம் இருக்குன்னு தோணுது.
மீன் கடி தான் ப்ராப்ளம்..ஆத்துல கால் வைக்க.. என்றால்.
ஒண்ணு, மீன் கடியைப் பொறுத்துக்கொண்டு காலைத் தண்ணில வெக்கலாம் .

இல்லை இந்த ஆட்டமே வேண்டாம்னு காலை வெளியே
எடுக்கலாம்.

தண்ணில பொரி தூவுவது மூணாவது வழி . ஆனா இது தான் பெஸ்ட் வழி. காலயும் தண்ணீல வெக்கலாம். மீன்களையும் மடை மாற்றம் பண்ணியாச்சு.
என்ன சொல்றே?"

" இந்த ஆத்தங்கரைக்கு வந்ததிலிருந்தே என்னவோ நீ சம்மந்தம் இல்லாம பேசுற மாதிரி இருக்கு. வாட்ஸ் யூர் ப்ராப்ளம்ப்பா? "

"இல்லப்பா எல்லாம் உண்மை. வா கொஞ்சம் ஒக்காந்து பேசலாம் "
என்று முகுந்த்தை ஆற்றுப் பக்கத்திலிருந்த நாணல் புதரைத் தாண்டி, பச்சைப்புல் வெளிக்கு அழைத்து, அமரச் சொல்லித் தானும் அமர்ந்தார். பக்கத்தில் ஆங்காங்கு சில வாடாமல்லிப் பூச்செடிகள்
அதில் பூக்கள்,சுற்றிச் சில பட்டாம்பூச்சிகள், தரையில் உள்ள வளைகளை நோக்கி எதற்கோ விரையும் சில அவசர நண்டுகள்.

வெளியே எதிரே நெடுந்தூரத்தில் மங்கும் மாலைக் கதிரொளியில் ஆற்றுக்கு வெகு அப்பால் நூற்றுக்கணக்கில் யானைகள் கூட்டம் கூட்டமாக செல்வது போல தோன்றும் மேற்கு தொடர்ச்சி மலைகள் . நேர் எதிரே பெருமாள் மலை.
மலை உச்சியில் கிரீடம் அணிந்த ரங்கநாதப் பெருமாள் படுத்திருப்பது போல் ஒரு இயற்கையான தோற்றம்.

"பெருமாளுக்கு எதிரில் பொய் சொல்ல மாட்டேன்ல. நான் சொல்றது எல்லாமே உண்மை. நான் சொல்லப் போவதில் நிறைய உனக்கு தெரிந்திருந்தாலும் பரவாயில்லை. சும்மா கேட்டுக் கொள்"என்று ஆரம்பித்தார்.

இன்று 2007வது வருஷம் ஆகஸ்ட் மாசம் 1 ம் தேதி
இல்லையா. அம்பத்தி ரெண்டு வருஷத்துக்கு முன்னால்1955 இல் நான் பிறந்தேன். ரெண்டு பொண்ணுக்கு பின் நிறைய வருஷம் கழிச்சு பிறந்த ஒரே பையன். செல்லமாக வளர்ந்தேன். என் சகோதரிகளுக்கு திருமணம் ஆகி வேறு வீடு சென்று விட்டார்கள்.
எங்க அப்பா சொத்து முழுவதும் எனக்குத்தான்.
அப்பா ஒழுங்கா படிக்கச் சொன்னார்.நான் அப்படிச் செய்யவில்லை.
நான் அழகாக,பிரமாதமாக ஓவியம் வரைந்தேன். அப்பாவின் முழு விருப்பம் இல்லாமல் சென்னை சித்திரக் கல்லூரியில் படித்து முடித்து ஊர் திரும்பியவுடன் 22 வயதில் அப்பாவின் தங்கை பெண்ணை ,உங்க அம்மாவைக் கண்ணை மூடிக்கொண்டு கல்யாணம் பண்ணி மூன்று பிள்ளைகள் பெற்றேன். அரவிந்த், கௌதம், அப்புறம் நீ..முகுந்த்.
உங்க தாத்தாவுக்கு, அதாவது எங்க அப்பாவுக்கு நிறைய நிலம், அரிசி மில், கரும்புத் தோட்டங்கள், நெல் வயல், வெல்ல மண்டி என்று ஏராளமான கிராமத்து சொத்துக்கள்.

சித்திரக் கல்லூரியில் முதல் வகுப்பில் படிப்பு முடித்த நான் ஓவியம் எல்லாம் மறந்து தகப்பன் சொல் கேட்டு அவர் வாரிசாக கிராமப் பண்ணயாராக மாறியாகி விட்டது.

உங்க அம்மாவும் ஹை ஸ்கூல் தாண்டாததால் எனக்குள் இருந்த உலகம் சுற்றும்,வெல்லும்...தூரிகை சார்ந்த ஆசைகளுக்கு, தூண்டுகோல் எதுவும் இல்லை.

நீ பிறந்து ஐந்து வருடமான சமயம் புற்றுநோயில் உன் அம்மா இறந்து விட்டது நம் துரதிஷ்டம். அடுத்த சில வருஷங்களுக்கு உன் பாட்டி உங்களைப் பார்த்துக் கொள்ள, பாட்டி தாத்தாவின் மறைவுக்குப் பின் உங்களை போர்ட்டிங் ஸ்கூலுக்கு அனுப்பி விட்டேன்.உன் அண்ணன்கள் இருவரும் பொறியியல் படிப்புக்கு பின் அமெரிக்கா போய் மேற்படிப்புக்குப் பின்செட்டில் ஆகிவிட்டனர். இரண்டு பேரும் முறையே,வெள்ளைக்கார, ஜப்பானியப் பெண்களை திருமணம் செய்து கொண்டு விட்டார்கள். நீயும் பட்டப்படிப்புக்கு பின் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று விட்டாய். மூன்று வருஷம் கழித்து இப்போதுதான் இந்தியா வருகிறாய். நீயும் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள். கருப்போ மஞ்சளோ, வெள்ளயோ, பழுப்போ உன் இஷ்டம்.நான் குறுக்கே வர மாட்டேன்.சத்தியம்.

ஏதோ என்னால் முடிந்ததற்கு உங்களை படிக்க வைத்து செலவு செய்து அமெரிக்கா அனுப்பினேன்.
உங்கள் படிப்பு அல்லது வேலை சம்மந்தப்பட்ட எந்த விஷயத்திலும் இதுவரை நான் கேள்வி கேட்டதில்லை.
கடந்த 20 வருஷங்களுக்கு மேல் மறுமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருக்கிறேன்.எல்லாச் சொத்துக்களையும், விவசாயத்தையும், ஊழியர்களையும் பார்த்துப் ,பரிமரித்துக் கொண்டிருக்கிறேன்.

இதெல்லாம் நான்உங்களுக்கு செய்த தியாகம் என்றெல்லாம் கூறவில்லை.என் கடமையைச் செய்தேன் என்று கூறலாம் இல்லையா? "
என்று கூறி முகுந்தைப் பார்த்தார் வானமாமலை.


"அப்சலூட்லி அப்பா.தியாகம் என்றே
சொல்லேன். தவறில்லை".

"தேங்க்ஸ் முகுந்த். ஒரு குட்டி இதிகாசக் கதை சொல்றேன். அது முடிந்தபின் உன்னிடம் ஒன்று கேட்பேன். நீ எனக்கு தவறாமல் செய்ய வேண்டும்."

"முதலில் கதையை சொல்லுப்பா.
ரொம்ப வள வள ன்னு சொல்லாத."

"யயாதி.. கேள்விப்பட்டிருக்கியா?"

"எங்கோ கேட்ட மாதிரி இருக்கு.
இந்தியால ஏதாவது டாடா அல்லது மகேந்திரா காரோட புது மாடல்
பேரா? இல்லை ஏதாவது ஜாப்பனீஸ் ரெஸ்டாரண்ட்டா?"

"இல்லப்பா! ஒரு பழைய ராஜா பெயர்.
மகாபாரத காலத்துக்கு முன்பு யாயாதி என்று ஹஸ்தினாபுரத்தைத் தலைநகராகக் கொண்ட குரு நாட்டின் சந்திர வம்சத்து மன்னன்.
அவன் மனைவி தேவயானி.... காதல் கோட்டை படத்துக்கும் இவளுக்கும் சம்மந்தம் இல்லை..இவள் அசுர குரு சுக்ரா
ச்சாரியாரின் பெண் .

யயாதிக்கும் தேவயானிக்கும் இரண்டு பிள்ளைகள்.
அசுர அரசனின் மகள் சர்மிஷ்டை. அரசனின் குரு சுக்ராச்சாரியாரின்
மகளான தேவயானிக்கு அவள் கோபத்தில் செய்த ஒரு கொடுமைக்கு தண்டனையாக
யயாதியின் அரண்மனையில் தேவயானிக்கு பணிப்பெண்ணாக சர்மிஷ்டை இருக்க நேர்கிறது.

யயாதி, தேவயானியிடம் அலுத்துப் போய், தற்போதைய தன் அரண்மனைப் பணிப்பெண் ஆன சர்மிஷ்டையிடம் ரொமான்டிக் ஆகி காதலித்துப் பின் ரகசிய கல்யாணம் செய்து மூன்று பிள்ளைகள் பெறுகிறான்.

விஷயம் பழைய ட்யூப்லைட் ஆக வெகு தாமதித்து தேவயானிக்குத் தெரிய, அவள் தன் அப்பாவும் மகா கோபக்காரரும் ஆன சுக்ரா ச்சாரியாருக்குச் சொல்ல,அவரும் தன் பங்குக்குப் பொங்கி, யாயதியைப் பார்த்து" பிடி சாபம்!நீ குடுகுடுகிழவனாகக்கடவது" என்று சபிக்க,
யயாதி நொடி நேரத்தில் படு கிழவன் ஆகிவிடுகிறான்.
இதை எதிர்பார்க்காது நடு நடுங்கிப் போன யயாதி, ஆச்சாரியார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க...

கொஞ்சம் சூடு தணிந்த பின் இந்த சாபத்தினால் தன் பெண்ணும் பாதிக்கப்படுவாளே என்பதை உணர்ந்த சுக்ராச்சாரியார்,

" உன் பிள்ளையில் யாராவது ஒருவன் சரி என்றால் நீ அவனை வாரிசாக்கி விட்டு ராஜ பரிபாலன த்தை அவனிடம் கொடுத்துவிட்டு
அவன் இளமையை உன் முதுமையுடன் எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளலாம். பல வருஷங்கள் கழித்து, அனுபவித்து விட்டு மகனிடம்இரவல் வாங்கிய இளமையைத் திருப்பிக் கொடுக்கலாம். என்றார்.

அரசன் தேவயானியின் இரண்டு மகன்கள், சர்மிஷ்டையின் முதல் இரண்டு மகன்களிடம், இந்த யாசகத்தைக் கேட்க,எல்லாரும் இந்த வம்பே வேண்டாம்.முடியாது. ராஜ்ஜியம் போனால் போகிறது. இளமையைத் தொலைத்து கிழவன் ஆவதா.. என்று விலகி விட்டார்கள்.

யயாதிக்கு பிடித்தமான (சர்மிஷ்டை யின்) கடைசி மகன்
புரு தந்தை துயருற்று இருப்பதைக் கண்டு விசாரிக்க, தன் கோரிக்கையை யயாதி தயக்கத்துடன் புருவிடம் சொல்ல,

புரு "தந்தையே, இந்த உதவியை உங்களுக்கு செய்வது என் கடமை.
சந்தோஷத்துடன் செய்கிறேன்."

என்றுசொல்லித் தன் இளமையைத் தந்தைக்கு அளித்து அவருடைய முதுமையை ஏற்று ஆயிரம் வருஷம் ராஜ்ய பரிபாலனம் செய்கிறான் .

யயாதி வாழ்க்கையைப் போதும் போதும் என்ற அளவுக்கு அனுபவித்து விட்டுக் கடைசியில் மகனை அணுகி அவன் இளமையை
அவனுக்கு திரும்பி அளித்துப் பின் தன் முதுமையை ஏற்றுத் துறவறம் செல்கிறான் .

புரு சரித்திர புருஷன் ஆகிறான்.

புருவின் வம்சத்தில் வந்தவர்கள் தான் மகாபாரதத்துப் பாண்டவர்களும் கௌரவர்களும்.

இப்படியாகக் கதை முடிகிறது."

"நைஸ் ஸ்டோரி.ஆனா இதை ஏன் இப்ப சொல்ற. "என்றான் முகுன்த்.

" இந்த கதையை என் வாழ்க்கையில் நுழைக்க வேண்டிய நிலைமையில் இப்போது இருக்கிறேன். காரணம் மிருநாளினி சட்டர்ஜி."

"இது யாருப்பா புதுசா! வடநாட்டு லேடி கேரக்டர் எல்லாம் வருது உன் கதைல.!"

"பெங்காலி..கல்கத்தாக்காரி. என்னுடைய அந்தக் காலத்து சென்னை சித்திரக்கல்லூரி வகுப்புத் தோழி. இன்னும் சொல்லப்போனால், என் பழைய காதலி."

" அட இதெல்லாம் கூட உண்டா உன் பிளாஷ் பாக்ல! சபாஷ்!"

"ஆமாம் முகுந்த். என்னுடைய சித்திரம் வரையும் திறமையில் மயங்கிப் பின் என்னிடமும் மயங்கினாள். ஒரு வருஷம்
காதலித்தோம். அவள் குடும்பத்தில் எங்கள் திருமணத்துக்கு தடை இல்லை.

படிப்பு முடியும் போது ஊருக்கு வந்து
அப்பாவிடம் சம்மதம் கேட்டேன்.
குண்டுக் கட்டாகக் கட்டி என்னை வீட்டில் அடைத்து, தன் தங்கையின் குடும்பத்தை அவசர கதியில் அழைத்து தங்கையின் பெண்ணுக்கு, அதான் உன் அம்மாவுக்கு என்னைத் தாலி கட்ட வைத்து விட்டார். கொஞ்ச நாள் கழித்து என் நிலையை உணர்த்தி...ரொம்ப சாரி.. என்று
மிருநாளினிக்கு லெட்டர் போட்டேன்.

கோழை, துரோகி என்பது போல் அர்ச்சனை செய்து பதில் வந்தது. அத்துடன் எல்லாம் முடிந்தது என்று நினைத்தேன்.மறந்தேன். வருஷங்கள் ஓடின.
ஆனால்விஷயம் முடியவில்லை.
திடீரென்று போன மாசம் பிரான்சிலிருந்து நம்ம ஊருக்கு, நம்ம வீட்டுக்கு வந்தாள் மிருநாளினி . அவள் பிரான்சில் இப்போ பெரிய
ஆர்டிஸ்ட்டாம்.ஒரு ஓவிய கண்காட்சிக்காக இந்தியா வந்தாளாம். அவளுக்கு ஒரு கல்யாணம் முடிந்து விவாகரத்தும் ஆகிவிட்டதாம் . பிள்ளைகள் யாரும் இல்லையாம் . என்னை விட ஒரு வயது இளையவள்.ரொம்ப நேரம் பேசினோம். என்னை வேறு வழி இல்லாமல் மன்னித்து விட்டதாகக் கூறினாள்.!
"நீயும் இப்ப ப்ரீ தானே.நாம் ஏன் கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கூடாது. பேசாம இந்த பிராப்பர்டி கர்மாந்தரம் எல்லாத்தையும் விட்டு விட்டு என்னோட கிளம்பி வா. பிரான்ஸ்க்கு... பாரிசுக்கு .உன்னைப் பெரிய ஓவியன் ஆக்கி விடுகிறேன். இனி நம்ம வாழ்வு பிரான்ஸில் தான். கல்யாணம் பண்ணிக்கலாமா? எப்போ பண்ணிக்கலாம்?" என்றாள்.

" நீ என்ன சொன்ன?"

" கொஞ்சம் குழம்பி இருந்தேன். ஆனால் அடுத்த நாள் முடிவு பண்ணி விட்டேன்."

"என்ன?"

" படித்துறையில் தண்ணீரில் கால் வைத்த மாதிரி உணர்ந்தேன். அப்படியே இருந்தால் மீன்கடியை பொறுத்துக் கொண்டு இந்த கிராமத்து வாழ்க்கையை ஓட்டி விட வேண்டியது தான். மிருநாளினி சொன்ன மாதிரி தண்ணீரில் இருந்து காலை எடுத்து விட்டு திடீர்னு ஓடி விடவும் முடியாது பிரான்ஸ்க்கு. நம்மை நம்பி நிறைய நிலம், நிறைய தொழிலாளர்கள், தொழில். பாரம்பர்யம்.......
அப்போதுதான் இந்த மீனுக்கு பொரி போடுவது போல் மடைமாற்றம் செய்யும் ஒரு ஐடியா தோன்றியது."

"அது என்ன?"

"சொல்கிறேன்.அதுக்காகத்தான்
யயாதி கதையை உனக்கு சொன்னேன்.
யயாதியைப் போல் நான் உன்னிடம் ஒருவேண்டுகோள் வைக்கிறேன் இப்போ. முடியாது என்று மட்டும் சொல்லி விடாதே."

"ம்ம் சொல்லு..."

"இந்த நிலம் நீச்சு,சொத்து பத்து, அரிசி மில், வெல்ல மண்டி எல்லாம் சேர்ந்து ஒரு இருபது கோடி ரூபாய்க்கு மேல தேறும் என்று நினைக்கிறேன்.. சொத்து எல்லாம் இன்னைக்கு தேதில என் பேர்ல மட்டும்தான் இருக்கு.

கிட்டத்தட்ட 500 ஏக்கர் தரிசு நிலம் கல்லூர் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல பொறம்போக்கா நம்ம அரிசி மில் பக்கத்துல கிடக்கு.அது நம் பரம்பரைச் சொத்து என்று என் தந்தை கூறியிருந்த போதும் அதற்கான எந்த பத்திரமும் நம்மிடம் இல்லை.

அரசாங்கத்தில் பெரிய லெவல்ல யாரையாவது புடிச்சா நம்ம பேர்ல பத்திரமா மாத்திக்க வாய்ப்புண்டு..
இது எல்லாமே உனக்கே உனக்கு மட்டும்தான்.
உன்அண்ணங்களுக்கெல்லாம் கிடையாது."

" சரி நீ இன்னும் உன் கோரிக்கையை சொல்லவே இல்ல."

"சொல்றேன்.நீ உன் அமெரிக்க
எதிர்காலக் கனவைக் கொஞ்சம் மறந்து நம்ம ஊருக்கு வந்து விட வேண்டும். இந்த சொத்துகளை பார்த்துக் கொள்ள வேண்டும். இதை நம்பி நூறு பேருக்கு மேல் இந்த ஊரில் இருக்கிறார்கள் என்பதால். பதினைந்து வருஷம் நீ பார்த்துக் கொண்டால் போதும். இப்ப உன் வயசு இருபத்திஞ்சு. உன் . நாற்பது வயது வரை பார்த்துக் கொள்ள வேண்டும்.
உன்னிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்து விட்டு நான் மிருநாளினியுடன் பிரான்ஸ் போகிறேன். அவளுடைய கணவனாகவும் ஒரு சிறந்த ஓவியனாகவும் மாறும் கனவுடன்.

15 வருஷம் முடிந்ததும் நான் திரும்பி வந்து விடுகிறேன். உன் நாற்பதாவது வயதில் உன் பாரத்தைத் திரும்ப எடுத்துக் கொள்கிறேன்.
அப்பொழுது நீ விரும்பினால் இந்த பொறுப்பை எனக்கு திருப்பி அளி க்கலாம்.பின் உன் எதிர்காலத்தை உன் இஷ்டப்படி அமைத்துக் கொள்ளலாம்.
இல்லையென்றால் நீயே இங்கிருந்து தொடர்வதாக இருந்தால் நான் உன்னை விட்டு விலகி விடுவேன்.

எது எப்படி ஆனாலும் சொத்துக்கள் முழுவதையும் உன் பெயருக்கு உடனே இப்பொழுதே மாற்றிக் கொடுத்து விடுகிறேன். எனக்காக இந்த உதவி பண்ணுவாயா மகனே?"

" ஐ ஆல்வேஸ் லவ்ட் யூ பாதர். உங்கள் நிலைமை எனக்கு புரிகிறது. கடமை உணர்ச்சியும் புரிகிறது. நீங்களாக என்னிடம் எதுவும் இதுவரை கேட்டதில்லை. இப்போது கேட்டிருக்கிறீர்கள். அவகாசம் வேண்டும். நாளை சொல்கிறேன்."

" சரி முகுந்த் . நாளை நீ சரி என்று சொல்லிவிட்டால் அது என் கடைசி
மகனின் மிகப்பெரிய தியாகம்.
அமெரிக்காவில் இப்போது உன்னை யாராவது ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளக் காத்துக் கொண்டிருக்கிறாளா.?"

"கவலைப்படாதீர்கள் அப்பா. நாளை நான் ஒருவேளை தியாகம் செய்தால் அதைத் தடுக்க இன்றைய தேதியில் அமெரிக்காவில் அத்தகைய. எந்தப் பெண்ணும் இல்லை." என்று கூறி முகுந்த் சிரித்தான்.

அடுத்த நாள் காலையில் எழுந்து வானமாமலையுடன்..சரி..என்று சொல்லி விட்டான்
அவனைக் கட்டித் தழுவிக் கொண்டார் வானமாமலை.

"இன்னொரு விஷயம்.
இந்த 15 வருஷ பீரியட்ல நீயும் நானும்பேசிக் கொள்ளலாம். தவறில்லை.ஆனால் நம்முடைய ஒப்பந்தத்தை மீறக்கூடாது. நீ இங்கே தான். நான் பிரான்சிலோ வேறு எங்கோ தான். சரியா.?"

"மிகச் சரி"

"அப்ப நாளைக்கே ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ்ல போய் சொத்தை உன் பேருக்கு மாத்திடறேன்.

ரொம்ப தேங்க்ஸ்ப்பா முகுந்த். ஒரு வாரத்துக்கு முன்னால தான் உன்னுடைய அண்ணன்கள் இரண்டு பேரையும் இந்த விஷயத்தில் கேட்டுப் பார்த்தேன். முடியவே முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.
இந்திய மூலையில் ஒரு கிராமத்தில் இருக்கும் இந்த சொத்து எதுவும் தங்களுக்குத் தேவை இல்லை
என்றும் சொல்லிவிட்டார்கள்.

நான் கொஞ்சமும் எதிர்பாராதபடி என் செல்ல மகனான நீ இங்கு இப்போது அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறாய். என் கோரிக்கையையும் ஏற்றுக் கொண்டிருக்கிறாய்.ரொம்ப நன்றி.
நான் மிருநா விடம் சொல்லி விடுகிறேன். " என்று சொல்லிப் பறந்தார்.

வருஷம் 2022 ஜூலை 2:

முகுந்த் குரூப் ஆஃப் டிஸ்டிலரீஸ் தலைவர் முகுந்த் போரூரில் தன் எட்டு மாடிக் கட்டிடத்து வாசலில் வந்து நின்ற ஃபெராரி காரில் இருந்து இறங்கினான்.பணியாட்கள் புடை சூழ லிப்டில் ஏறி எட்டாம் மாடியில் சேர்மன் அறையில் நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்தான்.

லேப்டாப்பை எடுத்து திறந்தான். அப்போது தான் அப்பாவிடம் இருந்து ஒரு மெயில் வந்திருந்தது.

டியர் முகுந்த்

இன்றோடு அப்பாவின் பொறுப்பை நீ வாங்கிக்கொண்டு 14 வருடங்கள் பதினோரு மாசங்கள் ஆகிவிட்டது. நம் ஒப்பந்தம் முடிய இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு. நானும், உன் சித்தியும் உனக்கு ரொம்ப கடமைப்பட்டு இருக்கிறோம்.கடந்த 15 வருடங்கள் எங்களுக்கு ஒளி மயமாக, ஓவிய மயமானது உன்னால் தான் . நானும் உன் சித்தியைப்போல் ஒரு நல்ல ஓவியனாக பாரிசில் இன்று அறியப்படுகிறேன். ஆனால் எல்லா நல்ல விஷயங்களும் ஒரு முடிவுக்கு வர வேண்டும் இல்லையா?.அடுத்த மாதம் நான் இந்தியா திரும்பி உன்னிடமிருந்து பொறுப்புகளை வாங்கிக்கொள்ள வேண்டும் என்றால், சந்தோஷத்துடன் செய்கிறேன்.

உன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் எங்கள் நிறைந்த அன்பு.
பதிலை எதிர்பார்க்கிறேன்.


உன் அப்பா.

அரை மணி நேரம் யோசித்துப் பின் அப்பாவுக்கு பதில் எழுதினான் முகுந்த்.

அன்புள்ள அப்பாவுக்கு.

.நீங்களும் மிருநாளினி சித்தியும் சுகம் என்று புரிந்து கொண்டேன்.

இந்த 15 வருடங்களாக என் தொழில் முறையாக உங்களிடம் எதுவுமே பேசவில்லை. அது நம் ஒப்பந்தத்தை பாதிக்கலாம் என்பதால்..

இன்று நான் தமிழ்நாட்டில் மதிக்கப்படும் ஒரு பெரிய தொழில் அதிபர். ஆறு சாராய ஆலைகள், சூரிய ஒளி மின்சார ஆலைகள். சூப்பர் மார்க்கெட்கள்,ஏற்றுமதி இறக்குமதி .

முக்கியமான மந்திரியின் மாப்பிள்ளை.அன்பான மனைவி. இரு குழந்தைகள் .

பதினைந்து வருடங்களுக்கு முன் உங்களிடம் இருந்து நம் ஊர் பொறுப்பை நான் வாங்கிய போது ஒன்றுமே புரியவில்லை. தட்டித் தடுமாறிக் கற்றுக்கொண்டேன்.

வாய்க்கும் கைக்கும் தான் வருமானம் சரியாக இருந்தது.

நீங்கள் சொன்ன அரிசி மில் பக்கத்தில் 500 ஏக்கர் பொறம்போக்கு தரிசு நிலம் பற்றி ஒரு ஐடியா வந்தது.
பொதுப் பணித்துறை அமைச்சரை அணுகி,அந்த நிலத்தை என் பெயருக்கு மாற்றி கொடுத்தால் சாராய ஆலை ஆரம்பிக்கலாம் என்றும் அவருக்கும் பங்கு உண்டு என்றும் சொல்ல அமைச்சர் செய்து கொடுத்தார். என்னிடம் எதையோ ஸ்பெஷல் ஆக கண்டுபிடித்த அவர் கூடவே அவர் பெண்ணையும் திருமணம் செய்து கொடுத்து சாராய ஆலைக்கு பைனான்ஸ் பண்ணினார்.சூரிய ஒளி மின் ஆலைக்கும் சேர்த்து.மற்றவை சரித்திரம்.

அப்பா! உங்கள் பழைய தொழில் மற்றும் விவசாயம் எல்லாம் நன்கு நடக்கிறது. ஒரு மாதத்திற்கு பின் விருப்பம் இருந்தால் நீங்கள் அவற்றை திருப்பி எடுத்துக் கொள்ளலாம்.நான் வேறு பெரிய நிலைக்கு உயர்ந்து விட்டேன்.


அப்படி உங்களுக்குத் திருப்பி எடுத்துக்கொள்ள விருப்பம் இல்லை என்றால் அதற்கு ஈடாக நான் உங்களுக்கு அளிக்கும் சிறிய தொகையைப் பெற்றுக்கொள்ளவும். ஒரு உண்மையை...நான் முன்பு உங்களிடமிருந்து மறைத்ததை... இப்போது உங்களிடம் சொல்ல வேண்டும். உங்களிடம் செய்த ஒப்பந்தத்தில் நான் எந்தத் தியாகமும் செய்யவில்லை. படிப்பில் நான் என் அண்ணன்களைப் போல் இல்லை. உங்களைப் போல் ரொம்ப சுமார் ரகம் தான்.

அமெரிக்காவில் மேல்படிப்பைச் சரியாக முடிக்காமல் பல வெளியே சொல்ல முடியாத பிரச்சினைகளில் மாட்டிக்கொண்டு இந்தியாவுக்கு திரும்பி ஓடி வந்தவன் தான் நான்.உங்களுடன் சேர்ந்து விவசாயம் செய்யலாமா,. அது எனக்கு சுதந்திரமாக, சரியாக வருமா, அல்லது வேற ஏதாவது வேலை தேடலாமா, என்று யோசித்துக் கொண்டிருந்த எனக்கு தங்கத் தட்டில் வைத்து இந்த வாய்ப்பைக் கொடுத்தீர்கள். நன்றி. என்னை ஒரு பெரிய தியாகி என்று வேறுஎண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்! பாவம்!

உங்களுக்கு திரும்பி இங்கு வரும் எண்ணம் இல்லை என்றால் நான் உங்களுக்கு கொடுக்க இருக்கும் மூன்று மில்லியன் யூரோக்களை தயவுசெய்து வாங்கிக்கொள்ளவும்.
எப்படி உங்களுக்கு இந்தப் பணத்தை அனுப்புவது என்பதை சட்டப்படிச் செய்யலாம்.

உங்கள் கதை போல் தான் என் கதையும். உங்கள் உதாரணம் தான் என் உதாரணமும்.

படித்துறையில் அமர்ந்த நான் மீனுக்கு பயந்து காலைத் தண்ணீரில் நுழைக்கலாமா வேண்டாமா எனக் குழம்பி இருந்தபோது பொரி வீசி மீன்களை மடை மாற்றம் செய்து விட்டீர்கள். ரொம்ப நன்றிப்பா.

உங்கள் முகுந்த்