
எங்கெல்லாம் கிருஷ்ண மிருகம் (Black Buck) - கருப்பு மான் இயல்பாக வாழ்கின்றதோ, அந்த இடமெல்லாம் தவம் செய்வதற்கும் யாகம் செய்வதற்கும் ஏற்ற இடமாகும். இதை யாக்யவல்க்கிய மகரிஷி அவருடைய யாக்யவல்க்கிய ஸ்ம்ருதியில் கூறுகிறார். இந்த கிருஷ்ண மிருகம் நமது பாரத திருநாட்டில் அனைத்து இடங்களிலும் இருக்கிறது. இந்த வாக்கியத்தின்படி நமது பாரத நாடு முழுவதுமே தவம் செய்வதற்கும் யாகம் செய்வதற்கும் ஏற்ற விதமாக இருக்கிறது.
இதனாலேயே, தேவர்களும் பாரத பூமியில் இறங்கி தவம் செய்வர். முக்கியமாக, பண்டைய கோயில்களின் ஸ்தல புராணங்களில் வரம் வேண்டியோ அல்லது செய்த பிழை பொருத்தாள சிவனையும் விஷ்ணுவையும் வேண்டி பல்லாண்டு தவமிருந்து தமது நிலையில் உய்ததாக இருக்கும். அங்கிருக்கும் மூலவர் விக்கிரங்கள் தவத்தை மெச்சி நேரில் வந்து தடுத்தாட் கொண்டமைக்கு சாட்சியாக இருக்கும். அருகிலிருக்கும் தீர்த்தங்கள் தவமியற்றியவரால் வெட்டப்பட்டதாக இருக்கும். இன்றும் ஆன்மீக அன்பர்கள் அதில் புனித நீராடுவதைக் காணலாம்.
அந்த வகையில் இந்த கட்டுரையில் சூரியனார் பாரதத்தில் எங்கெங்கு கோயில் கொண்டுள்ளார் அதன் தற்போதைய நிலையென்ன என்பதை இங்கு தொகுத்துள்ளேன்.
நமது பாரத நாட்டின் நான்கு எல்லைகள் என்று நாம் கூறுவது வடக்கே இமயமலை தெற்கே குமரிமுனை கிழக்கே வங்காள விரிகுடா மேற்கே அரபிக்கடல் என்பதே ஆகும். அதை வைத்து தான் இப்போது நாம் ஒரு முக்கியமான விஷயத்தை பார்க்க போகிறோம்.
மார்தாண்ட சூரியன் கோயில்
கொனார்க் சூரியன் கோயில்
சூரியனார் கோயில்
மொதெரா சூரியன் கோயில்
மேலே உள்ள கோவில்கள் அனைத்திற்கும் சூரியன் கோவில் என்ற ஒற்றுமையை தவிர வேறு பல ஒற்றுமைகளும் உள்ளது. சூரியனார் கோவில் தவிர மற்ற கோவில்கள் அனைத்திலும் 48 சன்னதிகளுக்கு குறையாமல் சன்னதிகள் உண்டு. சூரியனார் கோவில் தவிர மற்ற கோவில்கள் ஹொய்சாள அல்லது கலிங்க கட்டிடக்கலையாகவே இருக்கும். சூரியனார் கோவில் தவிர மற்ற கோவில்கள் சிகர கட்டடக்கலையே சார்ந்து இருக்கும். சூரியனார் கோவில் தவிர மற்ற கோவில்கள் ஏதோ ஒரு முஸ்லிம் மன்னனால் அழிக்கப்பட்டிருக்கும்.
மேற்கூறியதைத்தவிர இதைத் இவற்றிடையே உள்ள ஒரு பெரிய ஒற்றுமை தான் இப்போது நாம் பார்க்கப்போவது.
மார்தாண்ட சூரியன் கோயில் - காஷ்மீர் - பாரதத்தின் வடக்கு எல்லை - கோவில் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது.
கொனார்க் சூரியன் கோயில் - ஒடிஸா - பாரதத்தின் கிழக்கு எல்லை - கோவில் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது.
சூரியனார் கோவில் - தமிழ்நாடு - பாரதத்தின் தெற்கு எல்லை - இங்கு சூரியனே இருப்பதாக ஐதீகம் இருப்பதால் இங்கு சூரிய கதிர்கள் உள்ளே வருவதில்லை.
மொதெரா சூரியன் கோயில் - குஜராத் - பாரதத்தின் மேற்கு எல்லை - உத்ராயணம் மற்றும் தட்சிணாயனம் அதாவது தை மற்றும் ஆடி மாதத்தின் முதல் நாள் மட்டும் கோவிலில் உள்ள சூரிய பகவான் மீது கதிர்கள் விழும்.
இதைத்தவிர சூரிய கதிர்கள் கோயிலுக்குள் வரக்கூடிய பாரதத்தில் உள்ள பழமை வாய்ந்த சூரியன் கோவில்கள் பற்றி இதோ:
கதார்மல் சூரியன் கோயில் - உத்தராகண்ட் - வடக்கு பாரதம் - கோவிலில் உள்ள முக்கியமான கதவுகள் சிலைகள் மற்றும் சில பொருட்களை நமது அரசாங்கம் மியூசியத்திற்கு எடுத்துச் சென்றதால் சூரிய வெளிச்சம் சரியாக விழுவதில்லை.
தியோ சூரியன் கோயில் - பீகார் - கிழக்கு பாரதம் - முற்றிலும் அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டதால் சூரியன் கதிர்கள் விழக்கூடிய நாள் நமக்கு சரிவர தெரியவில்லை.
தக்ஷினார்க்க சூரியன் கோவில் - பீகார் - கிழக்கு பாரதம் - தக்ஷிணாயனத்தின் முதல் நாளில் கோவிலில் உள்ள சூரிய பகவான் மீது கதிர்கள் விழும்.
உத்தரார்க்க சூரியன் கோவில் - பீகார் - கிழக்கு பாரதம் - உத்தராயணத்தின் முதல் நாளில் கோவிலில் உள்ள சூரிய பகவான் மீது கதிர்கள் விழும்.
உனாவ் பாலாஜி சூரியன் கோயில் - மத்திய பிரதேசம் - மத்திய பாரதம் - கோவில் பலமுறை இடித்து மீண்டும் கட்டப்பட்டதால் கட்டட முறை மாறி இப்பொழுது சூரியன் கோயிலுக்குள் விழுவதில்லை.
ஶ்ரீ சூரிய பஹார் சூரியன் கோயில் - அஸ்ஸாம் - கிழக்கு பாரதம் - கோவில் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. வருடத்தில் நான்கு நாட்கள் சூரிய கதிர்கள் கோயிலுக்குள் விழுந்ததாக கல்வெட்டு தகவல்கள் மட்டுமே உள்ளது.
அரசவல்லி சூரியன் கோயில் - ஆந்திர பிரதேசம் - தெற்கு பாரதம் - ரத சப்தமி அன்று கோவிலில் உள்ள சூரிய பகவான் மீது கதிர்கள் விழும்.
நவ்லகா - குஜராத் - மேற்கு பாரதம் - மிகுதியாக உடைந்து போய் சில வருடங்களுக்கு முன்பே மீண்டும் கட்டப்பட்டதால் இங்கும் சூரிய ஒளி சரியாக விழுவதில்லை.
ஒரு காலத்தில் பாரதம் முழுவதும் சூரிய வழிபாடு மிகவும் பிரசித்தியாக நடந்திருக்கிறது. சூரிய வழிபாடு செய்வதற்கு ‘சௌரம்’ என்று ஒரு மதமே இருந்திருக்கிறது. ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட ஷண்மத ஸ்தாபனங்களில் இந்த சௌரம் ஒன்று அறிந்திருப்பீர்கள்.
பிற்காலத்தில் அயல் நாட்டு படையெடுப்பாலும், ஆங்கிலேயர்களின் மெத்தனத்தினாலும் பல்வேறு காலகட்டங்களில் இந்த கோவில்கள் சிதிலமடைந்து மண்ணோடு மண்ணானது.
பொதுவாக சூரியனுக்கு உருவாக்கப்படும் கோவில்கள், சூரிய பகவானே மேலிருந்து பார்க்க வேண்டும் என்பதற்காக நாம் இன்று Sky Scrapers என்று கூறும் பல அடி உயர கட்டிடங்களை போன்று கோவில்கள் அமைக்கப்படும். இப்படிப்பட்ட மிகப்பெரிய கோயில்கள் மிகுந்த கலை நுணுக்கங்களுடனும் உருவாக்கப்பட்டது. அதுபோல சூரிய பகவானுடைய விக்கிரகங்கள் பொதுவாக தங்கத்தினாலே செய்யப்படும். இப்படி இந்த கட்டிடங்களும் இதற்குள் இருக்கும் விக்கிரகங்களும் தூரத்தில் இருக்கும் மனிதர்களை கூட தன்னிடம் இழுக்கும். அதனாலேயே இந்த கோவில்கள் இடிக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் உள்ளன. அதேபோல் சூரிய கோயில்களில் நேரம் பார்ப்பதற்கான கருவிகளை சூரிய ரதத்தில் இருக்கும் ஒற்றை சக்கரத்தில் உருவாக்குவார்கள். அதுவே இன்றைய நவீன கடிகாரங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. பொதுவாக பஞ்சபூதங்கள் என்று கூறப்படும் ஐந்து விதமான பொருட்களில் ஏதேனும் ஒன்றின் அருகிலேயே கோவிலை உருவாக்குவார்கள். உதாரணமாக, நாம் மேலே பார்த்த பல கோயில்கள் மலைகளிலும், கடல் அருகிலும், ஆற்றுப்படுகைகள் மீதுமே இருக்கின்றது. இது மற்ற தெய்வ கோவில்களில் இருந்து மாறுபட்ட ஒரு விஷயமாகும்.
அதேபோல கோனார்க் கோவிலில் 52 டன் கனமுடைய இயற்கை காந்தம்(Lodestone) இருந்ததாகவும், அதன் மூலமாக கர்ப்ப கிரகத்தில் இருந்த சூரிய பகவான் எப்பொழுதும் காற்றிலேயே மிதந்து கொண்டிருந்ததாகவும், சூரியனுடைய ஓட்டத்திற்கு ஏற்ப அந்த சிலையும் அந்த திசை நோக்கி திரும்பியதாகவும் கதைகள் உள்ளது. இந்த காந்தத்தினால் போர்ச்சுகீசிய கப்பல்கள் கரையை நோக்கி இழுக்கப்பட்டதாகவும் அவர்களுடைய compass சரியாக வேலை செய்யாததாலும் அவர்கள் இந்த காந்தத்தையும் சூரிய பகவானுடைய சிலையையும் தூக்கிச் சென்றதாக பழைய வரலாற்றுச் செய்திகள் கூறுகிறது. என்னதான் சூரிய கோயில்களை இடிக்க பார்த்தாலும் பல கோயில்கள் முழுவதுமாக இடிக்கப்படாமல் இடித்தவர்களுக்கு தோல்வியை கொடுத்துள்ளது. அவர்கள் முடிந்தவரை கோவில் இடித்துவிட்டு கோயிலுக்குள் இருந்த செல்வங்களை எடுத்துக் கொண்டு சென்று விட்டனர். மீதி உள்ள எச்சங்களை நாம் இன்று கூட பிரமிப்புடன் பார்க்கக்கூடிய வகையில் தான் அவர்கள் கோயில்களில் உருவாக்கியுள்ளார்கள்.
உங்கள் பார்வைக்காக கீழே சில படங்களை கீழே பகிர்ந்து உள்ளேன்.








Leave a comment
Upload