தொடர்கள்
ஆன்மீகம்
ஆனந்தத்தை அள்ளி தரும் அட்சய திருதியை…!! ​​​​​​​-மீனாசேகர்.

20230321151846371.jpg

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை திரிதியை நாளை 'அட்சய திருதியை’ திருநாளாக நாம் கொண்டாடுகின்றோம். இன்று
அட்­சய திரு­தியை திரு­நாள். 'அட்­ச­யம்' என்­றால் தேயாமல், குறை­யாமல் வள­ர்வது என்று பொருள். இந்­நன்னாளில் வாங்­கப்­படும் எந்­தப் பொரு­ளும் அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி போல் பல மடங்கு பெரு­கும் என்பதும் நம்­பிக்கை. இன்றைய தினம் தொடங்­கப்­படும் எந்­த­வொரு முயற்­சி­யும் தொடர்ச்­சி­யாக வளர்ந்து நன்­மை­யைக் கொடுக்­கும் என்­கிறது சாஸ்­தி­ரம். இன்று இறைவனை முழு மனதோடு வழிபட வேண்டும் என்று ஆன்மீக அன்பர்கள் தெரிவிக்கின்றனர்.

அட்சய திருதியை பற்றிய புராணத்தில் கூறும் பெரும் சிறப்புகள்:
பிரம்மா படைக்கும் தொழிலை ஆரம்பித்தது இந்த நாளில்தான்.
திருமாலின் அவதாரமான பரசுராமர் அவதரித்ததும் அட்சய திரிதியையில்தான்.
ஸ்ரீ அன்னபூரணியிடம் சிவபெருமான் தமது பிட்சைப் பாத்திரம் நிரம்பும் அளவு பிட்சைப் பெற்றது இந்த நாளில்தான்.
கிருஷ்ண பகவானுக்கு, அவல் கொடுத்து குசேலன் அனைத்து ஐஸ்வர்யங்களைப் பெற்றதும் இந்த நன்னாளில்தான்.
பஞ்ச பாண்டவர்கள் சூரிய தேவனிடமிருந்து அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரத்தைப் பெற்றதும் இந்நன்னாளே.
திரௌபதியின் மானம் காக்க ஸ்ரீகிருஷ்ணர் ஆடையை வளரச் செய்ததும் அட்சய திருதியை நாளன்றுதான்.
குபேரன், லட்சுமி தேவியை வணங்கி, செல்வத்தைப் பெற்ற தினமும் இன்றுதான்.
அட்சய திருதியை நாளில் தான் திரேதா யுகம் தொடங்கியதாகப் புராணங்கள் கூறுகிறது.
பகீரதன் தவம் செய்து கங்கையைப் பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான்
அட்சய திருதியை அன்று தான் வேத வியாசர் மகாபாரதம் எழுதத் தொடங்கினார்.

அட்சய திருதியை நாளில் செய்ய வேண்டியவை:
அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும். அட்சய திருதியை நாளில் படிப்பைத் தொடங்குவது, மற்றவர்களுக்கு உதவி செய்வது நல்ல பலனளிக்கும்.
தங்கம், வெள்ளி, வைர நகைகள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகும். இதைத்தவிரப் பூமி பூஜை போடுவதற்கும் புதிய தொழில் தொடங்குவதற்கும் இந்த நாள் ஏற்றது.
இந்து சாஸ்திரங்கள் படி, அட்சய திருதியை என்பது வாங்குவதற்கு மட்டுமல்ல, தானம் செய்வதற்கும் மிகவும் சிறந்த நாள். கஷ்டத்தில் இருக்கும், ஏழை மக்களுக்கு அட்சய திருதியை அன்று நம்மால் முடிந்ததை தானம் செய்யலாம்.
அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாகக் கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாகப் பெருகும்.
அட்சய திருதியை நாளில் பிதுர்க்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். அப்படிச் செய்வதன் மூலம் அவர்களது அருளாசியைப் பெற்றுச் சிறப்பாக வாழலாம்.

அட்சய திரிதியை அன்று நாம் என்ன வாங்கலாம் ?
அட்சய திருதியை நன்னாளில் தங்கம் மட்டும்தான் வாங்க வேண்டும் என்ற ஒரு தவறான கருத்து உலவி வருகிறது. இந்நாளில் நாம் செய்யக்கூடிய அனைத்து செயல்களுமே பன்மடங்காகத் திரும்பக் கிடைக்கும் என்பதே உண்மையான பொருளாகும். ஆம், இந்நாளில் நாம் செய்யும் தான தர்மங்கள், நற்செயல்கள் அனைத்துமே பல மடங்காக நமக்குத் திரும்பக் கிடைக்கும்.
அட்சய திரிதியை அன்று மஹாலட்சுமி வாசம் செய்யும் பொருட்கள் எதை வேண்டுமானாலும் வாங்கலாம். அது தங்கம், வெள்ளி மட்டுமே இருக்க வேண்டும் என்பதல்ல. பச்சரிசி, வெல்லம், உப்பு, மஞ்சள் ஆகியவற்றையும் நாம் வாங்கலாம்.. இதைத்தவிர புதிய வாகனம், புதிய ஆடைகள் வாங்கச் சிறந்த நாள்.
தங்கம். வெள்ளி வாங்க இயலாதவர்கள் ஒரு பாக்கெட் கல்உப்பு மட்டுமாவது வாங்கலாம்.

வழிபாடுகள்:
அட்சய திருதியை அன்று லட்சுமி குபேர பூஜையைச் செய்ய ஐஸ்வர்யம் பெருகும் என்றும், இயலாதவர்கள், "ஓம் ஐஸ்வரேஸ்வராய நம:" என்று கூறினாலே போதும் என்கிறார் திருமூலர்.
அட்சய திருதியை நாளில், வீட்டில் குலதெய்வ, இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையறையில் சிறிய தொகையை வைத்து வழிபாடு செய்யலாம்.

தொட்டதெல்லாம் துலங்கும் இந்த நன்னாளில் வெறும் பொருள் சேர்க்கையை மட்டும் மனதில் கொள்ளாமல் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் மற்றும் வசதியற்றவர்களுக்கு நம்மால் முடிந்த தான தர்மங்களைச் செய்வதால் நம் வருங்கால சந்ததியினர் செழித்தோங்கி சிறப்புருவர்.

ஆனந்தத்தை அள்ளி தரும் அட்சய திரிதியையில் அழியாத செல்வமான புண்ணியங்களை நாம் சேகரிப்போம்…!!