தொடர்கள்
கவர் ஸ்டோரி
தண்டவாள நினைவுகள் - ராம்

20230322081549370.jpeg

இன்று ஹாங்காங் எம்.டி.ஆர் அல்லது சீனாவில் பின்னிப் பின்னிப் போகும் தண்டவாளங்களைப் பார்க்கும் போது சினிமா ஃபிளாஷ் பேக் போல நினைவுகள் பின்னோக்கிப் போகும். ஒவ்வொரு முறையும்.

திருநெல்வேலி வயக்காட்டுத் தெருவில் இருக்கிறது எங்கள் தண்டவாள நினைவுகள்.

சின்ன குடியிருப்புக் பகுதி தான்.

அங்கே ஒரு நீண்ட ஒரு தெரு. தெருவெங்கும் சங்கிலி கோர்த்தது போல வீடுகள். அங்கே தெரு முடிவில் இருக்கும் அந்த தண்டவாளம். ஆளெல்லாம் கிடையாது.

ஊரெங்கும் கேட்கும் இரயில் இஞ்சினின் பலத்த ஹாரன் தான் கேட். அந்த வயக்காட்டு தெருவில் இருக்கும் சின்ன வயது நண்பிகள் உமா, உஷா, சுதா மூன்று சகோதரிகள் இந்த தண்டவாள கதைக்கு முக்கியமல்ல.

கோடை விடுமுறை அல்லது வார இறுதி விடுமுறைகளில் இந்த தண்டவாளம் தான் இன்னொரு நண்பன்.

20230322081613254.jpeg

வீட்டிலிருந்து சுட்டுக் கொண்டு போன பத்து பைசாவை தண்டவாளத்தில் வைத்து விட்டு அது மேல் இரயில் ஏறி இறங்கியதும் பத்து பைசா மினி தோசை சைசில் தகடாக மாறும் அதிசயத்தை நண்பர்களோடு குதூகலித்த நாட்கள் அவை.

அது போலவே எங்கிருந்தோ பொறுக்கிக் கொண்டு வந்த இரும்புத் துண்டை தண்டவாளத்தின் பக்கவாட்டில் வைப்போம். "எல ரயிலு போய் முடிஞ்சவுடனே பாருல.... அது அப்படியே காந்தமாயிரும்ல.."

காந்தம் ஆனதேயில்லை. அது ஒரு வேளை நமக்குத் தான் ராசியில்லை போல என்று நினைத்துக் கொள்வேன்.

திருநெல்வேலியிலிருந்து கன்யாகுமரி, மற்றும் திருச்செந்தூர் செல்லும் இரயில்கள் ஜங்ஷன் தாண்டி இரண்டாகப் பிரியும். பின்னாளில் அது அகல ரயில்பாதையாகவும் செய்தார்கள்.

எந்த பெரிய எக்ஸ்பிரஸ் இரயில் கொம்பனும் எங்கள் வயக்காட்டு தெரு வரும் போது பம்மித்தான் வர வேண்டும். ஆளில்லாத லெவல் கிராசிங் ஆயிற்றே....

நாங்கள் இரயில் அங்கே வருவதிலிருந்து வயக்காட்டு தெருவை தாண்டும் வரை இங்கும் அங்கும் ஓடுவோம்.

20230322081705670.jpeg

(தாண்டி விளையாடிய இடம். இன்று....)

அதில் ஒரு திரில்.

வீர சாகசம். இப்போது நினைத்தால் பயமாக இருக்கிறது. ஆனால் அந்த வயதில் பயம் என்பதேயில்லை.

ஒரு நாள் வயதான முதியவர் ஒருவர் எங்களை அழைத்து கடுமையாக திட்டியது நினைவிருக்கிறது.

இவருக்கு என்ன போச்சு நம்ம விளையாடினா என்று நினைத்திருந்த காலம். ஆனால் அது போன்ற பெரியவர்கள் முகம் தெரியாவிட்டாலும், அடுத்த வீட்டு குழந்தைகள் மேல் அக்கறையுள்ள காலம் அது.

அவருக்கு தெரியுமா வயக்காட்டு தெருவில் வீர சாகசங்கள் செய்வதன் "உள்நோக்கம்" என்னவென்று.....

திருச்செந்தூர் செல்லும் தாமிரபரணி பாலத்திலிருந்து ரயில் வரும் வரை காத்திருந்து தாமிரபரணி ஆற்றில் குதிப்பது அடுத்த லெவல் வீர சாகசம். நீச்சல் தெரியாத என்னைப் போன்ற அப்புராணிகளுக்கு அந்த சிறுவர்களைப் பார்க்கும் போது சூப்பர் மேன் போல தெரிவார்கள். வரிசையாக நின்று கொண்டு இரயில் வரும் அந்த கடைசி தருணத்தில் தொப் தொப் தொப் தொப்... என்று தண்ணீர் பட்டு தெறிக்கும்.

அதைப் பார்ப்பதே ஒரு குஷி. இன்றும் குதிக்கிறார்களா, அதற்கு வாய்ப்பு இருக்கிறதா தெரியவில்லை.

எங்கள் நண்பனின் அப்பா இரயில் என்ஜின் டிரைவர். அதனால் அவருடைய டூட்டியில் ஷண்டிங் என்று சொல்வார்கள். தூரத்திற்கு இரயிலை ஓட்டிச் சென்று என்ஜினை ஒரு திரும்பும் பெரிய இடத்திற்கு சென்று அதை திசை மாற்றுவோம்.

அதை நாங்களும் கூட இருந்து சந்தோஷமாக திருப்புவோம்.

ஜங்ஷனில் நிற்கும் இரயில் பெட்டிக்குள் ஏறி கழிப்பறையை பயமின்றி கழித்த நாட்கள். வண்டி எந்த நேரத்தில் கிளப்புவான் தெரியாது... ஆனால் அந்த திரில் நிமிடங்கள்... சரியாக இரயில் புறப்படும் நேரம் ஓடும் வண்டியிலிருந்து இறங்கும் உத்தி....ஒரு வேளை வண்டி புறப்பட்டு வேறு ஊருக்கு போயிருந்தால்... அதெல்லாம் இப்போது நினைப்பது போல அன்று நினைத்துப் பார்த்தது கூட இல்லை. அவ்வளவு திமிர்.

மொபைல் போன் கிடையாது. ஒரு தகவல் தொடர்பு வசதி கிடையாது. வீட்டை விட்டு வெளியே இறங்கினால் நாம் வீட்டுக்கு போகும் நேரம் தான் கணக்கு.

எங்க இருக்க எப்ப வருவ... எவ்வளவு நேரம் ஆகும், லொகேஷன் ஷேர் பண்ணு இப்படி எந்த தடைகளும் இல்லாத நாட்கள். ஆஹா.....

தண்டவாளத்தில் காது வைத்து தூரத்தில் வரும் இரயிலை கணித்திருக்கிறோம். இதில் என் நண்பர்கள் தான் கில்லி. எல இந்த தண்டவாளத்தில தான் இப்ப இரயில் வரும் என்பார்கள். மிகச் சரியாக அதில் வரும். இந்த தொழில்நுட்பம் மட்டும் என் காதுகளுக்கு வசமாகவில்லை.

ஜங்ஷனில் இரண்டு தண்டவாளங்கள் பிரியும் என்று சொன்னேன் அல்லவா... அங்கு நடுவில் சர்வ சாதாரணமாக நடந்து போவோம்... சில சமயங்களில் இரண்டு தண்டவாளங்களிலும் ஒரே சமயத்தில் இரண்டு இரயில் போகும். இரண்டு இரயில்களும் கூஊஊஊஉ என்று ஒரேசமயத்தில் ஹாரன் அடித்துக் கொண்டு போவதில் ஒருவருக்கொருவர் உற்சாகம் கரைபுரண்டு ஓடும்.

20230322082304823.jpeg

எங்களுக்கு அதை விட. அந்த இரயில்களையே நாங்கள் தான் இயக்குவது போல ஒரு குஷி.

அதிலும் இரண்டு இரயில்களிலும் இருக்கும் ஆட்கள் எங்களுக்கு கையசைத்து டாட்டா காட்டி விட்டால் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

இந்த இடத்தில் ஆபத்தும் இல்லாமல் இல்லை. ஒரு வயதான தாத்தா பாட்டி இப்படி இரண்டு தண்டவாள பாதைகளுக்கு நடுவே நடந்து வரும் போது ஒரு நாள் இப்படி சத்தமாக ஹாரன் அடிக்க அவர்கள் இருவரும் பயந்து போய் இரண்டு பக்கங்களும் ஓட, தாத்தாவும் பாட்டியும் இரண்டு பக்க தண்டவாளங்களில் இரயிலில் அடிபட்டு இறந்து போனதும் நடந்தது. இதற்குப் பின் அந்த இடத்திற்கு செல்ல எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

இதெல்லாம் நான்காம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு வரை கோடை விடுமுறை தோறும் அன்றாடம் மிக சாதாரணமாக நடந்த தண்டவாள தினங்கள். சுற்றி சுற்றி தண்டவாளங்களும் இரயில்களும் எங்கள் மனதில் ஆக்கிரமித்துள்ளன.....

ஆறாம் வகுப்பில் தான் அவன் பெயர் மறந்து போனது. சதீஷாக இருக்கலாம். நினைவில்லை.

மிகவும் நெருக்கமானான்.

ஒரு நாள் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். பல விளையாட்டுக்கள். பல கதைகள். எங்கள் வீட்டில் அவனிடம் கேட்டார்கள். ஏண்டா உங்கப்பா அம்மா எல்லோரும் எங்கே இருக்கிறார்கள். சொன்னான்.

தாத்தா பாட்டி ? இல்லையா.

இருந்தா மாமா.. போன வருஷம் ரெண்டு பேரும் ஜங்ஷன் கிட்ட தண்டவாளத்துக்கு நடுவுல நடந்து வரும் போது இரண்டு பக்கமும் டிரெயின் வந்துடுத்து. அந்த சத்தத்தில பயந்து போய் இரண்டு பேரும் வேற வேற பக்கம் ஓடிருக்கா.... பாவம்... டிரெயின்ல ரெண்டு பேரும் ஆளுக்கொரு டிராக்ல டிரெயின்ல அடிபட்டு...........அங்கியே........

சதீஷின் கண்களில் மீண்டும் தெரிந்தது அந்த வலி. எனக்கும் அந்த ஹாரன் சத்தம் ஒலித்தது.

தண்டவாள நினைவுகள் !!!!

(இந்த வீடியோவை உற்று நோக்கினால் உங்களுக்கும் சில இரயில் நினைவுகள் வந்தே தீரும்...)