
கோடை துவங்கிவிட்டாலே அனைவரும் உற்று பார்த்து கொண்டிருப்பது மலை வாசஸ்தலங்களை தான் .
அதிலும் ஊட்டி என்றாலே ஒரு தனி அலாதி அழகுதான் .
வழக்கமாக ஊட்டி கோடை சீசன் துவக்கம் பக்தி பரவசமுடன் என்பது ஒரு சிறப்பான ஒன்று .
ஊட்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் சித்திரை தேர் திருவிழா கோலாகலமாக ஒரு மாதம் நடைபெற்று கடந்த செவ்வாய் கிழமை பெரிய தேர் திருவிழா நடைபெற்றது .
ஊட்டியில் உள்ள மாரியம்மன் கோயில் மிகவும் முக்கியம் வாய்ந்தது .தெய்வங்களான மாரியம்மனும் காளியம்மனும் ஒரே பீடத்தில் அமர்ந்திருப்பது மிக சிறப்பான ஒன்று .

உலகத்தில் இது போல கோயில் நேபாளிலும் ஊட்டியிலும் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
ஊட்டி தேர் களை கட்ட கட்ட ஊட்டி வாசிகளுக்கு ஒருவித உட்சாகம் ஏற்படும் சிறுவர் முதல் பெரியோர் வரை மதத்திற்கு அப்பால் அனைவரும் விசிட் அடிப்பது வழக்கம் .
பெரிய தேர் மதியம் 1.45 மணிக்கு வடம் பிடிப்பது வழக்கம் இந்த வருடமும் அதே நேரத்திற்கு தேர் வடம்பிடித்து இழுக்க பட்டது .
மாவட்ட ஆட்சியர் அம்ரித் அவருடைய துணைவியார் மற்றும் நீலகிரி எஸ் .பி .பிரபாகரன் வடம் பிடித்து தேரை இழுத்து துவக்கி வைத்தனர் .ஏராளமான பக்தர்கள் குவிந்து பக்தி கோஷம் போட்டனர் .
தேர் ஸ்லொவ் மோஷனில் நகர்ந்து வந்தது .
பக்தர்கள் வரிசையில் நின்று வழிபட்டனர் .
ஊட்டி மார்க்கெட் பகுதி கோயிலை சுற்றி மெயின் பசார் கமர்ஷியல் சாலை லோயர் பசார் பகுதி முழுவதும் சந்தை போல கடைகள் குவிந்திருந்தன .
அன்னூர் சத்தியமங்கலம் பகுதியில் இருந்து வந்திருந்த முறுக்கு அல்வா சிப்ஸ் என்று ஏராளமான பலகார ஐட்டம்கள் குவிந்து இருக்க தேரை தரிசித்த வண்ணம் அல்வா முறுக்கை ருசித்து கொண்டிருந்தார்கள் பக்தர்கள் .
ஊட்டி மலைச்சாரல் கவிஞர்கள் நாகராஜ் மற்றும் அமுதவல்லி கோயில் மற்றும் தேரை பற்றி வர்ணனை கொடுத்துக்கொண்டிருந்தது தேர் திருவிழாவுக்கு மெருகேறிக்கொண்டிருந்தது .
ஏகப்பட்ட பல்லூன் மற்றும் குழந்தைகளை கவர்ந்த விளையாட்டு பொருள்கள் நம் கண்ணையும் கவர்ந்து இழுத்தது .
வடநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குங்குமங்கள் அழகாக குவிக்க பட்டிருந்தது .
இரண்டு அதிதீவிர பக்தர்கள் நாக்கில் வேல் குத்தி கொண்டு முதுகில் அலகு குத்திக்கொண்டு குட்டி தேரை அந்த கூட்ட நெரிசலிலும் எந்த சலனமும் இல்லாமல் இழுத்து கொண்டிருந்தனர்.

பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருக்க மார்வாடி கடைகள் மட்டும் ஜரூராக எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் பிசினஸில் மூழ்கியிருந்தனர் .
ஊட்டி வாசிகள் குவிந்த வண்ணம் இருக்க வேலூரில் இருந்து வந்த கோயில் குருக்கள் தன் குடும்பத்துடன் சுற்றுலா வந்து மார்க்கெட் பக்கம் வர அவருக்கு தேர் திருவிழா என்று தெரியவில்லை .

முன்னாள் நகர் மன்ற தலைவி லலிதா தனபால் தன் தோழியுடன் தேரை தரிசிக்க வலம் வந்துகொண்டிருந்தார் , அவரிடம் கேட்ட போது , " கடந்த முப்பது வருடமாக தவறாமல் தேர் திருவிழாவில் கலந்து கொள்கிறேன் .கொரோனா காலத்தில் தேர் திருவிழா நடக்கவில்லை அதனால் என் நண்பிகளுடன் கோயிலுக்கு வந்து பூட்டின கோயிலை தரிசித்து விட்டு பின் தேர் நகரும் பாதை முழுவதும் வலம் வந்து அன்னையிடம் பிராதித்தோம் , " அம்மா இந்த கொரோனா மறைந்து நிம்மதியான காலம் வரவேண்டும் மீண்டும் நீங்கள் நகர்வலம் வரவேண்டும்" என்று பிராத்திப்போம் இந்த வருடம் அருமையாக நகர் வலம் வந்துள்ளார்". என்று கூறினார் .
தேர் ஊட்டி நகரை சுற்றி அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு கோயிலை வந்தடைந்தது .
இந்த தேரை காண விடிய விடிய பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தார்கள் .
பக்தர்களை கட்டுப்படுத்த காவல் துறையினர் விடிய விடிய நகர்ந்து கொண்டிருந்தனர்.
பாரம்பரிய வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டி தேர் தேர்த்திருவிழா கோடை சீசனை துவக்கும் ஒரு முக்கிய அடையாளம்.

Leave a comment
Upload