தொடர்கள்
வலையங்கம்
வேண்டாம் இந்த  விபரீத விளையாட்டு

2023072520574495.jpg

தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்ட முறையை உயர்கல்வித்துறை நடப்பு கல்வி ஆண்டில் அமல் படுத்தி உள்ளது. இதற்கு தன்னாட்சிக் கல்லூரிகள் பெரும்பாலானவை எதிர்ப்பு தெரிவிக்கிறது. உயர் கல்வித்துறை அமைச்சரை தன்னாட்சிக் கல்லூரி பிரதிநிதிகள் சந்தித்து புது பாடத்திட்டத்தில் உள்ள குறைகளைச் சுட்டி காட்டினார்கள். இதனை தொடர்ந்து உயர்கல்வித்துறை தன்னாட்சிக் கல்லூரிகள் பொதுப்பாடத்திட்டத்தில் தங்கள் விருப்பம் போல் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று சுற்றறிக்கை அனுப்பியது. குறைபாடுகள் என்று சுட்டிக் காட்டியதை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு மட்டும் விலக்கு தந்துவிட்டு அரசு கல்லூரிகளில் பொதுப் பாடத்திட்டத்தை அமல் செய்வது எந்த வகையில் நியாயம் குறைபாடுகள் உள்ள பொதுப் பாடத்திட்டத்தை அரசு கல்லூரி மாணவர்கள் பயின்றால் அவர்கள் எதிர்காலம் என்னவாகும். இது பற்றி உயர் கல்வித் துறை ஏன் யோசிக்கவில்லை. ஆனால், ஆளுநர் தமிழக அரசின் பொதுப்பாடத்திட்டத்தை அரசு கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி கல்லூரிகள் உட்பட யாரும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். கூடவே உங்கள் கல்விக் குழுவால் வடிவமைக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களை நீங்கள் நடைமுறைப்படுத்தலாம் என்றும் தெரிவித்திருக்கிறார் ஆளுநர்.

ஏற்கனவே துணைவேந்தர்களை உயர் கல்வித்துறை அமைச்சர் அழைத்து ஆலோசனை நடத்தினால் உடனே வேந்தர் என்ற முறையில் ஆளுநரும் துணைவேந்தர்களை அழைத்து ஆலோசனை நடத்துகிறார். அமைச்சர் ஆளுநர் இருவருக்கும் இடையே உள்ள அதிகார சண்டையில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடுவது எந்த வகையிலும் நியாயமில்லை உயர்கல்வி என்பது இளைஞர்களுக்கான நுழைவு வாசல். எனவே உங்கள் அதிகார சண்டைக்கு இளைஞர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தாதீர்கள். வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு.