
“தனியா உட்கார்ந்துண்டு என்னடா பண்ணிக்கிட்டிருக்க?” — உள்ளே நுழையும் போதே, நக்கலாய்க் கேட்டேன் நான் .
“சும்மா இருடா. ஒரு பாட்டுக்கு மியூசிக் போட முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்.”
“பாட யாரும் இல்ல, பக்க வாத்தியம் எதுவும் இல்ல... தனியா மியூசிக் போடுறாராம்! போட்டு முடி, அப்புறம் கேட்கிறேன்,” நண்பனிடம் சொல்லி, நான் நகர்ந்தேன்.
அவன் வார்த்தைகள் என் மனதை சட்டென்று பின்னோக்கி இழுக்க, பழைய நினைவுக்குள் நுழைந்தேன்.
"நாளை மாலை மூன்று மணிக்கு கம்போசிங், தவறாம வந்துடு," அவசரமாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினார் ராமானுஜம்.
அவர் எங்கள் நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர். ஹார்மோனியப் பெட்டியின் கட்டைகளில் அவர் விரல்கள், எப்போதும் நர்தனமாடிக் கொண்டிருக்கும். சினிமாவில் முயன்று தோற்றவர்.
அந்நாட்களில் 'ஆல் இந்தியா ரேடியோ' 15 நிமிட 'தொழிலாளர் நிகழ்ச்சி' வழங்கும். இந்த முறை எங்கள் நிறுவனத்திற்கு வாய்ப்புக் கிடைத்தது.
நான் சென்றதும், ஹார்மோனியத்தில் மெட்டை வாசித்துக் காட்டினார் ராமானுஜம்.
"என்ன சப்ஜெக்ட் சார்?" என்றேன்.
" முக்கோண படம் போட்டு, மூலைக்கு மூலை 'நாமிருவர் நமக்கிருவர்'னு போஸ்டர் ஒட்டியிருக்காங்களே, அது தான் பா சப்ஜெக்ட்” என்றார்.
அவர் வாசித்த இசைக்கு, என் வரிகளைச் சொன்னேன்:
“சின்ன சின்ன சின்ன சின்ன குடும்பத்திலே, எங்கும் சிங்காரம் ஒய்யாரம் இருக்கும்...”
"ஆஹா!" என்று கைதட்டி, வேகமாய் வாசித்தார். அடுத்த வரியையும் எழுதினேன்:
“எண்ணில் ரெண்டு எண்ணில் அங்கு இருக்கும், அதில் என் நாளும் நம் வாழ்வு சிறக்கும்...”
உற்சாகத்தில் மீதி வரிகளையும் எழுதி முடித்தேன்.
ஒன்..டு..த்ரீ..ஃபோர்…. ராமானுஜத்தின் ஒத்திகை,
மீண்டும்,மீண்டும் மூச்சு விடாமல் நடந்தது .
மூன்றாவது நாள் இறுதியில்,
கம்பெனி இசைக்குழுவுடன், சுந்தர் தன் வெண்கலக் குரலில் பாடி, ரெகார்டிங் முடிந்தது. நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாளை, அகில இந்திய வானொலி அறிவித்தது.
என் கிராமத்து உறவினர்கள் மத்தியில் அமர்ந்து அதைக் கேட்க ஆசைப்பட்டேன். வீடு வீடாய் வி.ஜி.பன்னீர்தாஸ் தவணை முறையில், ரேடியோ விற்ற காலம்.
என் கிராமத்திற்கு அந்த வசதி எட்டவில்லை. என் கையில் ஒரு டிரான்சிஸ்டருடன் சென்றிருந்தேன். நண்பர்கள்,உறவினர் எல்லோரும் ஒன்று கூட, நடுவில் நான் அமர்ந்தேன்.
பகல் மணி பன்னிரண்டு .
"வானொலி நேயர்களே!" — நிலையத்தார் அழைத்தனர்.
"தொழிலாளர் நிகழ்ச்சியில்..." என்று அறிவிப்பு வந்த போது கிர்ர்ர்…..கிர்ர்ர் , என சத்தம் எழுப்பி, டிரான்சிஸ்டர் சிக்னலைத் தவறவிட்டது.
நாகேஷ் பாணியில் டிரான்சிஸ்டரை தட்டித் தட்டிப் பார்த்தேன். எதற்கும் பலனில்லை. அந்த 15 நிமிடங்களும் நரகமாய் நகர்ந்தன.
திடீரென உயிர் பெற்ற டிரான்சிஸ்டர்,
"இதுவரை தொழிலாளர்கள் வழங்கிய நிகழ்ச்சியைக் கேட்டு மகிழ்ந்தீர்கள்..." என்றுச் சொல்லி, எங்களை அதிர வைத்தது .
என் பாட்டைக் கேட்க முடியவில்லை. நான் தேம்பி அழத் தொடங்கினேன்.
“சரி வுட்ரா பரவாயில்ல. அடுத்த முறை பார்த்துக்கலாம்”
நண்பர்கள் ஆறுதல் சொன்னார்கள். அன்று ஒரு மியூசிக் உருவாவதும், ஒலிபரப்பாவதும் அத்தனை சுலபமல்ல.
மொபைல் போனின் அதிர்வில், பழைய நினைவிலிருந்து மீண்டேன்.
“என்னடா மொபைலை வச்சுண்டு வித்தை காட்டுறேன்ன? முடிச்சுட்டயா?” என் நண்பனின் பக்கம் திரும்பினேன்
அவன் மொபைல் ஃபோன் திரையைத் தட்ட, நொடிப் பொழுதில் மூன்று வித ட்யூன்களில் அந்த ஃபோன், இசைத்துக் காட்டியது.
ஆச்சரியத்தில் குதித்த நான், “எப்படிடா?” என்றேன்.
அது தான் விந்தை.
பாடியது யார்?
தெரியாது.
இசைக் கலவை,ராகம் ? யார் இயக்கியது.
“எல்லாம் A.I (செயற்கை நுண்ணறிவு) தந்த ராகம்!” என்றான்.
இதுவும் ஒரு விந்தை தான்.
இருந்தும் என் மனம் கனத்தது. என்னதான் A.I,..நொடிப் பொழுதில் இசை அமைத்தாலும்…
மனித உழைப்பின் “உயிர்” அதில் கலந்து வருமா ?.

Leave a comment
Upload