
கண்ணதாசன் பிறந்தநாள் 24 ஜூன்,1927. அதிலும் வாரது பிறந்த நாள் நூற்றாண்டு விழா. டபுள் மகிழ்ச்சி தானே மிகும்.
அவரோடு ஏற்பட்ட சந்திப்புகளை ஃப்ளாஷ்பேக்கில் பார்க்கிறேன்.
சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த சிறுகூடல் பட்டியில் பிறந்தவர். பெரியப்பாவால் சுவீகாரம் எடுக்கப்பட்டார். அதனால் பள்ளிக்கூடபடிப்பு அருமையான முறையில் கிடைத்தும் அதில் விருப்பமில்லாமல் எட்டாவதுடன் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
நான் 1962 முதல் சினிமாபார்க்க ஆரம்பித்த காலங்களில் கண்ணதாசன் பாடல்களான மலர்ந்தும் மலராத, போன்ற பாடல்களால் ஈர்க்கப்பட்டு கவிஞரை எப்படியாவது சந்திக்க ஆசைப்பட்டேன்.
வேலூரில் பள்ளிக்கூட மாணவனாக இருந்த போது நானும் என் இளவலும் கோட்டை மைதானத்தில் சனி, ஞாயிறுகளில் நூலகத்தில் இருந்து நேராக ஒரு நடைப்பயிற்சி.
அப்போது பிளாட்பாரகடையில் கண்ணதாசன் எழுதிய கதை புத்தகம் பார்த்தேன். வாங்க ஆசை. விலை 4 அணா. கையில் காசு கிடையாது. புத்தகத்தை எடுத்துப்பார்த்து திரும்ப வைத்தேன். கடைக்காரர், “தம்பி 4 அணா கொடுத்து வாங்கு”, என்றவரிடம், “பணம் இல்லை” நாளை வருவதாக சொல்லி வீட்டுக்குப் போய் அப்பா மூடை பார்த்துக்கேட்க நினைத்தேன்.
கேட்டேன். உடனே கிடைத்தது திட்டு.
அப்பா மறுநாள் ஆபீஸ் போகும்போது அம்மாவிடம் எட்டணா கொடுத்து, “நல்ல புத்தகமாகவாங்கச்
சொல்” என்றபடியே, அதன்படி, மாலை பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் நேராக பிளாட்பாரம் கடைநோக்கி பயணம்.
இரண்டு கண்ணதாசன் கதைகள் வாங்கிவந்து நானும் இளவலும் படித்து விட்டுத்தான் தூங்கினோம். காலை பார்த்தால் அப்பா படித்துக்கொண்டிருந்தார். நல்லபுத்தகம் என்றார். அப்புறம் தான் தெரிந்தது அவரும், அவருடைய ரெவின்யூ யூனியனில் கதை எழுதியவர் என்று.
இப்போது மாதிரி அப்பொதல்லாம் பாக்கெட் மணி கேட்டால் அடி தான்விழும்.
பள்ளிக்கூடபடிப்பு முடித்து காஞ்சீபுரம் பச்சையப்பன் கல்லூரி பியூசி சேர்ந்தேன்.
தமிழ் பாட லெக்சரர் மாணவர்களிடம் உங்களுக்குப்பிடித்த கவிஞர் பற்றிய கட்டுரை அடுத்த திங்கள் கொடுக்க உத்திரவிட நான் உடனே அன்று மாலை இரண்டு 40பக்க நோட்புக் வாங்கி ஒரு நோட்டில் பாரதியார் பற்றிய கட்டுரை.
அடுத்த நோட்டில் கவிஞர் கண்ணதாசன் பற்றிய கட்டுரை.
திங்கள் கிழமை எல்லோரிடமும் கட்டுரை கேட்க நான்மட்டுமே நோட்புக் மற்ற எல்லோரும் பேப்பரில் எழுதித் தந்தனர். மொத்த மாணவர்கள் 40. ஆனால், கட்டுரைகள் 41!!!! குழம்பிவிட்டார் ஆசிரியர்.
பிறகு விசாரிக்க ஆரம்பிக்க நான் எழுந்து நின்று உண்மையை சொன்னேன்.
அதாவது பாரதியார் பற்றிய கட்டுரை வலது கையாலும் கவிஞர் பற்றிய கட்டுரை இடது கையாலும் எழுதினேன். பாராட்டி பிறகு ஆசிரியர் அறையில் வந்து பார்க்க சொன்னார்.
போய்ப் பார்த்ததும், “கவிஞரைப்பார்க்க ஆசையா! என்றார். “ஆமாம்” என்றதும், கல்லூரி யூனியன் தலைவரைக்கூப்பிட்டுப்பேசினார்.
மறுநாள் சென்னை நோக்கி கவிஞரிடம் கூட்டத்தில் கலந்து கொள்ள தேதி வாங்க அனுப்பப்பட்டேன்.
அப்போது கவிஞர் தி.நகரில் உள்ள ஹென்ஸ்மென் ரோட்டில் வசித்தார்.
என் உறவினர் மேற்கு மாம்பலவாசி அங்கே போய் விட்டு, கவிஞர் வீட்டில் யாரிடம் கடிதம் கொடுப்பது, பதில் வேறு வேண்டுமே என்று யோசித்த நிலையில் கவிஞர் வீட்டில் இருந்து வெளியே வர, காரில் ஏறுவதற்கு முன் வணக்கம் சொல்லிவிட்டுக் கடிதம் கொடுக்க, வாங்கி படித்த கவிஞர், உதவியாளரிடம் ஏதோ சொல்ல, “சரி தம்பி! நீ நாளை காலை வா! என்றார்.
மறுநாள் கவிஞர் வீட்டுக்குச் சென்று பதில் கடிதம் வாங்கிக் கொண்டு கல்லூரியில் கொடுத்துவிட்டேன்.
அதன் பிறகு, கூட்டம் நடத்த அழைப்பிதழ் தயாரானதும் அதையும் என்னிடம் தர நான் நேரில் பார்த்து அவரிடம் கொடுத்தேன்.
வெகு அருகாமையில் அவரைப்பார்த்தேன். சந்தன கலர் சட்டை, வேட்டி, வாசனை செண்ட்.
“நீ என்ன படிக்கிறாய்?, நீ கல்லூரி யூனியன் பொறுப்பில் இருக்கிறாயா?” என்றார். “இல்லை” என்றதற்கு, “என்னை பார்க்க ஒரு சாக்கா?” என்றார் சிரித்துக்கொண்டே
.
பட்டபடிப்பு படித்த போதும் மூன்று ஆண்டுகளில் கல்லூரிக்கு வந்தார்.
பட்டபடிப்பு முடித்து வேலை தேடி சிங்காரச் சென்னை பயணம். ஒரு நாள் கவிஞரை அவர் வீட்டில் சந்தித்தேன். உடனே யார் என்றதற்கு காஞ்சீபுரம் என்றதும் ஒ கல்லூரி மாணவன், வேலை தேடி சென்னையா? என்றார்.
பிறகு கவிதா ஹோட்டல் அழைத்துப் போய் பேச்சு.
மறுநாள் வரச்சொல்லி, ஏவி.எம், ஜெமினி ஸ்டூடியோ சூட்டிங் அவருடைய நண்பர்களைச் சந்தித்தேன்.
“சினிமாவுக்கு வராதே!’ என்று எனக்கு அட்வைஸ்.
“எனக்கு என்ன மதம் பிடிக்கும் தெரியுமா?” என்றதற்கான பதிலையும் அவரே சொன்னார்
"தாமதம்"
அவர் யாரையாவது திட்டி அவச்சொல் சொன்னால் நடந்து விடும். ஒரு சினிமா கம்பெனி அவருடைய பாடலுக்கு பணம் தராததை போனில் கூப்பிட்டு திட்ட, சினிமா ஷூட்டிங்கில் போட்ட செட் எரிந்து சாம்பலானது.
அவர் ஒரு சமயம் அவருடைய பையனுக்காக ஸ்கூல் பீஸ் கட்ட போனபோது தலைமை ஆசிரியரின் ரூமில் எழுதிய வாசகம் ரொம்ப பிடித்ததாம். அது இதுதான்
"ஒன்றே செய்"
"நன்றே செய்"
"இன்றே செய்"
அதன் மூலமாக சில நல்லது நடந்தது என்றார், நான் நிரந்தரமானவன் என்ற சொல்லுக்கு சொந்தக்காரர்.

Leave a comment
Upload