
திண்ணையில் உட்கார்ந்திருந்த காந்திப்பாட்டி "யாரடி அது, சீதா மகள் சிந்தாமணிதானே?" என்று கேட்கவும் "ஆமாம் பாட்டி" என்று நின்றாள் சிந்தாமணி.
“ஏம்மா நீ என் பேரன் காலேஜ்ல தானே படிக்கறே? இப்ப லீவா?” என்று கேட்டாள் பாட்டி.
"ஆமாம் பாட்டி அவங்க மூணாவது வருஷம். நான் இப்பதான் சேர்ந்திருக்கேன். காலைல போகணும் " என்று பெருமையாக பதில் சொன்னாள் சிந்தாமணி.
"மதன் ஒரு புத்தகத்தை விட்டுவிட்டு போய் விட்டான். அவனிடம் கொடுக்க முடியுமா? என்று கேட்கவும் தலையாட்டியவளை "உள்ளே வா" என்று எழுந்தாள் பாட்டி.
"என்ன படிப்போம்மா. இம்மாம் பெரிய புத்தகம் எல்லாம் படித்தாகணுமாம்" என்று அந்த புத்தகத்தை எடுத்து கொடுத்தாள்.
அதைப் பார்த்ததும் சிந்தாமணிக்கு சிரிப்பு வந்தது. ஆனால் அடக்கிக் கொண்டாள்- பாட்டியின் வாய்க்கு பயந்து- ஆமாம் பாட்டியிடம் பேரனைப் பற்றி யாராவது புகார் சொன்னால் கூச்சல் போட்டு உண்டு இல்லை என்று ஆக்கி விடுவாள். அவளைப் பொறுத்தவரைக்கும் அவள் யசோதா; பேரன் மதன் கண்ணன்.
"இந்த புத்தகத்தை புதுசா வாங்கினா 3000 ஆகும்னு ஆயிரம் ரூபாய்க்கு பழசை வாங்கி இருக்கான். பணக் கஷ்டம் புரிந்தவன். இப்போ இதுக்கு நோட்ஸ் வாங்கணும்னு 2000 ரூபாய் கேட்ருக்கான். அதையும் கொடுத்துவிடு" என்று அலமாரியிலிருந்து பணத்தை எடுத்தாள்.
"பாட்டி, பணமும் வேண்டாம். இந்தப் புத்தகமும் வேண்டாம். இந்த புத்தகம், நோட்ஸ் எல்லாம் என்கிட்டே இருக்கு. இந்த வருஷம் எனக்கு தேவையில்லை. உங்க பேரன்கிட்ட நான் கொடுத்து விடுகிறேன். பிறகு வாங்கிக்கிறேன்" என்றவளை "தங்கமான பொண்ணு" என்று கன்னத்தில் செல்லமாக தட்டினாள் பாட்டி.
அன்று காலேஜ் கேண்டீனில் நண்பர்களோடு அரட்டையடித்துக் கொண்டிருந்த மதனிடம் சென்ற சிந்தாமணி "மதன், உங்களிடம் தனியா பேசணும்" என்றதும் நண்பன் ஒருவன் "ஒரு சீனியரை பெயர் சொல்லிக் கூப்பிட என்ன தைரியம்?" என்றான். அவனை அலட்சியமாக பார்த்துவிட்டு மீண்டும் "மதன், ஊர்ல உங்க பாட்டியைப் பார்த்தேன். அது விஷயமா தனியா பேசணும்" என்றாள்.
"பரவாயில்ல. இவங்க எல்லாம் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். இங்கேயே சொல்லு" என்ற மதனிடம் "சரி உங்க பாட்டி சொன்ன டிக்சனரி மேட்டர் நாளை நோட்டீஸ் போர்டில் வரும்" என்றபடி நகர்ந்தாள்.
"ஏய் நில்லு நில்லு" என்று பின்னால் ஓடிவந்த மதன் அவளை கேண்டினுக்கு வெளியே ஒதுக்குப்புறமாக அழைத்துச் சென்றான்.
15 நிமிடம் சென்று திரும்பி வந்த மதனிடம் "என்னடா முதல் பந்தில பௌல்டான பேட்ஸ்மேன் மாதிரி வர்ற! அப்படி என்னடா சொன்னா அந்த ஃபர்ஸ்ட் இயர் பொண்ணு?" என்று கிண்டல் செய்தனர் நண்பர்கள். மதனோ பதிலேதும் சொல்லவில்லை.
அடுத்த வாரத்தில் ஒரு நாள் இரவு 10 மணி.
அஸைன்மென்ட் எழுதிக் கொண்டிருந்த மதனிடம் ரூம் மேட் ரஞ்சன் "என்னடா இது ஃபர்ஸ்ட் இயர் அசைன்மென்ட் எழுதுகிறாய்? யாருக்காக? காதலிக்காகவா?" என்று கேட்டதும் மழுப்பலாக சிரித்தான். "சிந்தாமணியின் பிளாக்மெயிலுக்கு பயந்து" என்று சொல்லவும் முடியவில்லை. ஆனால் அதுவே அவர்கள் நெருங்கி பழகுவதற்கு வாய்ப்பாகிவிட்டது.
அன்றிலிருந்து கிளாஸ் கட் பண்ணிவிட்டு நண்பர்களோடு ஊர் சுற்றுவது, சினிமாவுக்கு போவது எல்லாம் நின்று விட்டது. ஊதாரித்தனமாக செலவு செய்ய பாட்டியிடம் ஏமாற்றி பணம் கேட்பதும் நின்றுவிட்டது.
விளைவு -- ரேங்கில் தேர்வு. கேம்பஸ் இன்டர்வியூவில் நல்ல கம்பெனியில் வேலை.
கண்டிப்பான தோழியாக வந்த சிந்தாமணி இப்போது மிஸஸ் சிந்தாமணி மதன்.
"அம்மா, அப்பா ஹோம் ஒர்க் சொல்லித் தர மாட்டாராம்" என்ற ஆறு வயது மகள் புவனாவிடம் "சொல்லித் தரல்லைன்னா டிக்சனரி கதை சொல்ல வேண்டியிருக்கும்" என்றாள் சிந்தாமணி சிரித்தபடி.
"சரி சரி. ஹோம் ஒர்க் கொண்டு வா" என்ற மதனிடம் "ஏன்பா டிக்சனரின்னா பயப்படுற?" என்று கேட்டாள் மகள் புவனா.
"இங்க வா கண்ணு. நான் சொல்றேன் அந்த கதையை” என்று கட்டிலில் படுத்திருந்த காந்திப்பாட்டி அழைத்தாள்.
"அன்று டிக்சனரிக்கு நோட்ஸ் வாங்கணும்னு பாட்டியை ஏமாற்ற முயன்ற எனக்கு உங்க அம்மாவோடு ஆயுள் தண்டனை" என்ற மதனின் மைண்ட் வாய்ஸ் சிந்தாமணிக்கும் கேட்டது.
"தண்டனை இருவருக்குந்தான். ஆனால் ஏ கிளாஸ் ஜெயில்" என்று சிந்தாமணி சொல்லவும் இருவரும் சிரித்தனர்.
விவரம் புரியாமல் மகள் புவனாவும் சிரித்தாள்.

Leave a comment
Upload