தொடர்கள்
கதை
பரிகாரம் - பா. அய்யாசாமி

20260527080537429.jpeg

பண்டிகைக்கும் இந்த கரண்ட்டுக்கும் என்ன சம்பந்தமோ?! தெரியலை, பண்டிகை நெருங்கினாலே அடிக்கடி ப்யூஸ் போயிடும் என நொந்துக்கொண்டு EB லைன்மேனுக்கு போன் செய்தார் அய்யாசாமி.

அம்மா..பண்டிகை வருது, செலவு நிறைய இருக்கு, ஐயாயிரம் ரூபாய் கடனாக கொடுத்தீங்கனா தேவலை என ருக்குவிடம் கேட்டாள் வீட்டில் வேலை செய்யும் கோமதி.

என்ன ஐயாயிரமா ? உன் சம்பளமே இங்கே 2000/- தானே, இதைப் போய் அவரிடம் கேட்டால் அவர் கோபித்துக்கொண்டு உன்னையை வேலையை விட்டே நிறுத்திடுவாரு என்று பதிலுரைத்தாள் ருக்கு.

பார்த்து செய்யுங்கம்மா, வறுமை அதனால் கேட்கிறேன் என்றதும் மனதிறங்கியது, ஆனாலும் ஏனோ தர மனமில்லை ருக்குவிற்கு.

சார் பியூஸ் போட்டாச்சு, செக் பண்ணுங்க, AC யைப் போட்டுப்பாருங்கள் என்று வீட்டினுள் வந்து நின்ற லைன் மேனுக்கு நன்றி சொல்லி வழியனுப்பி திரும்பினார் அய்யாசாமி.

சார் தீபாவளி வருது, ஏதாவது.. பார்த்து... என்று இழுத்தார் லைன் மேன்.

இது உங்க கடமை சார். நாங்க கரண்ட் யூஸ் பண்ணினாத்தான் மீட்டர் ஓடும், அதை ஓட வைக்கத்தான் உங்களை நாங்க கூப்பிடறோம், போயிட்டு வாங்க என்றார்.

குளித்து முடித்து வந்த அய்யாசாமி எதையோ தேடிக்கொண்டிருந்தார்.

என்ன இது ஆச்சரியமாக இருக்கு, இங்க இருந்த ருத்ராட்ச மாலையைக் காணும் என்றார்.

காணோமா! ஒழுங்கா ஒரு இடத்திலே வச்சாதானே, கழட்டி அப்படியே டேபிள் மேலே வைப்பேள், இல்லைனா, சாவி மாட்டுகிற இடத்திலே தொங்கும்,பொறுப்பே கிடையாது என வசைப்பாடினாள் ருக்கு.

காலையிலே இருந்தது, என்ன மாயமோ தெரியலை என தவித்தனர் இருவரும், இரண்டு சவரன் தங்க கொப்பிப் போட்ட ருத்ராட்ச மாலையாச்சே என நினெக்கும் போதெல்லாம் தங்க விலைதான் ஞாபகம் வந்து வயிற்றில் புளிகரைத்தது அய்யாசாமிக்கு.

கோமதி எடுத்திருப்பாளோ ? என அய்யாசாமி கேட்டதும், சும்மா யார் மேலேயாவது குத்தம் சொல்லாதீங்கோ, நல்லா தேடுங்கோ என்றாள்.

அந்த லைன் மேன் வீட்டின் உள்ளே வந்தாரே, அவர் எடுத்திருப்பாரா என்றாள் ருக்கு

நான்தான் கூடவே இருந்தேனே, என்றார் அய்யாசாமி.

எங்க, உங்களைத்தான் AC போடச்சொல்லி ரூம்முக்கு அனுப்பி்ட்டாரே என்றதும் வியர்த்துவிட்டது, நன்றாக ஏமார்ந்துவிட்டோம் என்ற கவலையில் பரபரப்பானது வீடு.

எனக்கென்னவோ கோமதி மேலே ஒரு டவுட் வருது என்று மீண்டும் சொன்ன அய்யாசாமியிடம்,அவள் அப்படியில்லை, ஏதாவது வேண்டுமானால் என்னிடம் கேட்பாள், இன்று கூட ரூபாய் ஐயாயிரம் கேட்டாள், இல்லை என்று மறுத்து விட்டேன் என்றாள் ருக்கு.

அதான்,அவளே எடுத்துண்டுட்டா என்றார் அய்யாசாமி.

சந்தேகத் தொற்று கொஞ்சம் கொஞ்சமாக பரவி ருக்குவை மெல்லத் தொட்டது.

ஆமாண்ணா... என்னைக்கும் இல்லாமல் இன்று பாத்ரூம் யூஸ் பண்ணிக்கிறேன் என்று கோமதி கேட்டாள் என ருக்கு சொன்னதும்,

அப்போ அவதான் எடுத்திருக்கணும்,உள்ளே போய் ஒளிச்சு வச்சிருக்கணும் என தீர்மானமாகச் சொன்னார் அய்யாசாமி.

சந்தேகப்பேய் இருவரையும் ஆட்கொண்டதில் சமையல் நின்றுப்போனது, பூசை நி்ன்றுப்போனது, ஆனால் வீடு சுத்தமானது, முன்னே காணாமல் போனதாக நினைத்திருந்த பவள மோதிரம்,வங்கி பாஸ் புக் ஆகியன கிடைத்தன.

எந்த வேலை செய்தாலும் அந்த நினைப்பே வந்து ஆட்டிவைத்தது இருவரையும்எங்குப்போனது அந்த மாலை?

விடுங்கோ உங்களுக்கு இன்றைக்கு சந்திராஷ்டமம், அண்டாவிலே கிடந்தாலும் கண்ணுக்குப் புலப்படாது, குளித்து சாமிகிட்டே வேண்டிக்கோங்கோ, யாருகிட்டே போனாலும், நல்ல விதமாக அது பயன்பட்டு அவர்கள் நன்றாக இருக்கணும்னு என்றாள் ருக்கு.

சந்தியாவந்தனம் செய்ய பஞ்சபாத்திரம் எடுக்க பூசை மாடத்திற்குச் சென்றார், கண்ணில் தென்பட்டது மாலை. நேற்றுக் காலை செய்த பின் கழட்டி பாத்திரத்தில் வைத்ததை மறந்துப் போயிருந்தார் அய்யாசாமி.

கிடைச்சுடுத்து ருக்கு! என சந்தோசமாக கத்தினாலும்,மனசுக்குள் ஒரு நெருடல் இருந்தது.

“ இதற்குத்தான் தினமும் மூன்று வேளையும் சந்தியாவந்தனம் செய்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது என்றாள்.

செத்த நேரம் நம் உடைமைப்பொருள் தொலைந்து கிடைத்ததே இத்தனை வலியைத் தருகிறதே என்றவள்,

சே! அநாவசியமாக கோமதியைப் போய் சந்தேகப்பட்டுவிட்டோமே என்ன மனசு இது என்ன தன்னையே நொந்து கண்ணீர் விட்டாள் ருக்கு.

ஆமாம் ருக்கு, பாரு நான் கூட அந்த லைன்மேன் மேலே சந்தேகப் பட்டுட்டேன் என பரிதாபம் கூட்டினார்.

பொருள் திரும்பக்கிடைத்த பின்னும் இருவரிடத்திலும் இனம்புரியாத ஏதோ ஒன்று வருத்தியது.

கோமதியை வீட்டிற்கு வரும்படி கூப்பிட்ட ருக்குவிடம்,நானும் லைன் மேனைக்கூப்பிடறேன் என்றவர் சந்தேகப்பட்டதை
அவர்களிடம் சொல்லி மன்னிப்பு கேட்பதுதான் நமக்கு ஆறுதலாக இருக்கும் என்றார்.

தப்புண்ணா..நாம சந்தேகித்ததை அவாள்கிட்டே சொன்னேள்னா மிகவும் வருத்தப்படுவார்கள் என்றாள்.

பின்னே ஏன் அவர்களை கூப்பிட்டாய் என்றவரிடம்,

நாம் செய்த தப்பைத்தப்பு என ஒத்துக்கொண்டு இனி அப்படி அவசரப்பட்டு யார் மீதும் பழிப் போடமல் இருந்தாலே போதுமானதுண்ணா.. பரிகாரமாக அவள் கேட்ட 5000/- ரூபாயை தீபாவளிப் போனசாக நேர்மைக்குப் பரிசாக கொடுக்கப் போகிறேன் என்றாள்.

நானும் இந்த பட்டாசுகள் மற்றும் இனிப்புகளை லைன்மேனுக்கு வந்ததும் கொடுத்துவிடுகிறேன் என்றார் மகிழ்ச்சியோடு.