தொடர்கள்
தொடர்கள்
முகிழும் நாமங்கள் 11 - ஜி.ஏ.பிரபா

20260526233408449.jpeg

​உ

11 ) கோடீரீஸ்வர வல்லபா

ஈக்ஷித்ரீ க்ஷண ஸ்ருஷ்டாண்ட கோடிரீஸ்வர வல்லபா I

ஈடிதா சேச்வரார்த்தாங்க சரீரேசாதி தேவதா II

​இந்த பிரபஞ்சமே ஸ்ரீ லலிதாம்பாளின் கட்டளைப் படிதான் நடக்கிறது. தெய்வங்களின் ரூபம் வெவ்வேறு என்றாலும் சக்தி ஒன்றுதான். அம்பிகையே இந்தப் பிரபஞ்ச இயக்கத்திற்கு சாட்சியாய் இருப்பவள். நடக்கும் ஒவ்வொன்றுக்கும் மூன்று சாட்சிகள் என்பார்கள். சந்திர, சூரியர்கள், மனசாட்சி. அந்த மனசாட்சியின் வடிவமாக அம்பிகையே இருக்கிறாள்.

​நான் உன் மனசாட்சியாக இருக்கிறேன் என்கிறான் கீதையில் கண்ணன். நினைத்த நேரத்தில் க்ஷண காலத்தில் பிரம்மாண்டமான உலகைச் சிருஷ்டிப்பவள். இதையே லலிதா நாமம் அநேக கோடி பிரும்மாண்ட ஜனனீ என்கிறது அவளை.

​ஈஸ்வரனை பதியாக உடையவள். அவரின் உடலில் பாதியாக இருப்பவள் அம்பிகை. பரசிவத்தின் பாதியாக இருப்பவள். எந்தப் பரதேவதை, உன் சரீரத்தில் பாதியோ, அந்த மங்கள ஸ்வரூபிணீ உலகுக்கே மருந்து போன்றவள் , உனக்கும் அவளே மருந்தாகிறாள் என்கிறது ஸ்ரீருத்ரம். உயிர்மெய் எழுத்தாக விளங்குபவர்கள் அம்மையப்பன்

​அவளின் கடாக்ஷம் எதையும் கொடுக்க வல்லது.

​இதையே ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர்.

​“ஈத்ருக் விதாம் யதவ த்ருஷ்டிரிதோதிக வா

​நாத்யாபி கர்ண மதிவர்த்திதும் ஈஸ்வரீயம்” என்கிறார்.

வேதங்கள், உபநிஷத்துகளால் கூட அவளை முழுதாகப் பூஜிக்க முடியாது. இங்கு அவர் உபநிஷத்துகளை காடு என்கிறார். அதனால் நிலவு போன்ற உன் கடாக்ஷத்தை அங்கு வீசி நீ ஏன் வீணாக்க வேண்டும்?. சம்சார தாபத்தினால் வருந்துபவர் மீது வீசினால் பலனுண்டே! என்று வினவுகிறார்.

​அவளின் அருட் கருணை, சம்சார சாகரத்தில் உழல்கிற அனைவரின் மீதும் விழுவதால், நெருப்பாய்த் தகிக்கும் அந்த வேதனையில் இருந்து அவர்கள் மீண்டு வருவார்கள். அவளின் கருணையை விட நம்மை மீட்கும் சக்தி எதற்கு உண்டு?

​அப்பையா தீட்சிதரின் பேரன் நீலகண்ட தீட்சிதர். இவருக்கு எட்டு வயதாக இருக்கையில் ஒருமுறை தாத்தா, பேரனிடம் கேட்கிறார்.

​“ஆபதி கிம்கரணீயம்”- என்று. ஆபத்து வந்தால் என்ன செய்ய வேண்டும்? என்று. அதற்குக் குழந்தை சொல்கிறது, “ஸ்மரணாயாம் சரண யுகளம் அம்பாயா” என்கிறது. அதாவது அம்பிகையின் பாதார விந்தங்களை சரணடைய வேண்டும் என்று. அத்துடன் நிற்கவில்லை அப்பையா தீட்சிதர்.

​“தத் ஸ்மரணம் கிம் குருதே?” என்று மீண்டும் வினவுகிறார். அப்படிச் செய்தால் என்ன ஆகும்? என்பது வினா. பட்டென்று நீலகண்ட குழந்தை கூறுகிறது.”பிரம்மாதீன் பி இங்கரீ குருதே” என்று. அதாவது அப்படிச் சரணடைந்தால் பிரம்மாதி தேவர்களும் சேவகர்கள் ஆவார்கள் என்கிறார்.

​அம்பிகையைச் சரணடைந்து விட்டால் அவளே அனைத்துக்கும் பொறுப்பாகி விடுகிறாள். அவளிடம் நம் வேண்டுதல் எல்லாம் உன்னையே நினைந்து உருகும் உள்ளம் வேண்டும் என்று பிராத்தனை செய்வதுதான். இதையும் நீலகண்ட தீட்சிதர் தன் ஆனந்த சாகரஸ்தவம் என்ற நூலில்

​“த்வத் பாதபக்தி, ரஹிதோம் மம மாஸ்து வம்ச:

​த்வத் சேவயா விரஹிதம் மம மாஸ்து சாயு” என்று வேண்டுகிறார்.

​அம்பிகே அடுத்ததாக எனக்கு எந்தப் பிறவி வேண்டுமானாலும் வரலாம். எங்கு வேண்டுமானாலும் பிறக்கலாம். அது என் கையில் இல்லை. ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள். உன்மேல் பக்தியில்லாத வம்சத்தில் என்னைப் பிறக்க வைக்காதே” என்று வேண்டுகிறார்.

நம் அனைவரின் வேண்டுதலும் அதுதானே.

​அவளுக்குத் தேவை மந்திரங்களோ, பூஜை, விரதங்களோ இல்லை. மனப்பூர்வமான பக்தி. அவள் இருக்கிறாள் என்ற நம்பிக்கை.

​என்மீது நம்பிக்கை உள்ளவனை அவன் எங்கிருந்தாலும், இரவு பகல் என்றில்லாமல் நான் அனைத்துக் காப்பேன் என்கிறாள் தேவி பாகவதத்தில் ஈஸ்வரி.

​அவளுக்கும் நமக்கும் விலக்க முடியாத பந்தம் இருக்கிறது. தாய்-பிள்ளை உறவு. குழந்தைகள் தாயை வெறுக்கலாம். விலகி விடலாம். ஆனால் தாய் எப்பவும் தன் குழந்தைகளை விலக்கவோ, வெறுக்க மாட்டாள்.

​நாம் எந்த தெய்வத்தை வணங்கினாலும் அது அவளைத்தான் சென்று சேர்க்கிறது. எனவே நேரடியாக அவள் பாதத்தையே பிடித்துக் கொண்டால் போதும். இந்தத் துன்பக் கடலிலிருந்து மீண்டு விடலாம். நாம் என்ன தவறு செய்தாலும், அவள் நம் காதைப் பிடித்து இழுத்து தன் பக்கத்தில் அமர்த்திக் கொள்வாள்.

அவளைத் தவிர வேறு யாரிடம் நாம் அடங்க முடியும்!!!